முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மிஷிமா- தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்? (1)

எனக்கு வாழ்க்கைக் கதைகளைப் படிக்க எப்போதுமே விருப்பம் இருந்ததுண்டு. அதன் நேர்மை, சுதந்திரம், தீவிரத்தன்மையை சிலநேரம் புனைவினால் கூட அடைய முடியாது. இங்கு நான் ரெண்டாயிரத்தின் பிற்பகுதி வரை கிழக்குப் பதிப்பகம் அதிகமாய் வெளியிட்ட டெம்பிளேட் வாழ்க்கைக் கதைகளையும் குறிப்பிட வேண்டும். நீங்கள் 2-3 மணிநேரங்களில் வேகமாய் சரளமாய் ஒருவரது வாழ்க்கையை அறிய விரும்பினால் இத்தகைய நூல்களை அலமாரியில் இருந்து உருவி 2-மினிட் நூடுல்ஸ் போல உட்கொள்ளலாம். ஒருநாள் மாலை “குரு” படம் பார்க்க செல்லுமுன் மதியம் அவசரமாய் கிழக்குப் பதிப்பகம் போய் அம்பானியின் வாழ்க்கைக் கதையை வாங்கி வருகிற வழியிலேயே படித்து படம் துவங்கும் போது சரியாய் கடைசிப் பக்கம் எட்டி, பிறகு அதன் ஒளியில் படத்தைப் பார்த்தது நினைவுள்ளது. சொக்கன் எழுதிய இத்தகைய நூல்கள் அப்போது என் விருப்பப்பட்டியலில் இருந்தன. உதாரணமாய், “சார்லி சாப்ளின்”, “சச்சின்: ஒரு புயலின் பூர்வகதை” ஆகியவற்றை குறிப்பிடலாம். சந்திரபாபு பற்றி முகில் எழுதிய “கண்ணீரும் பிரபாகரனும்”, வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை சித்தரிக்கும் செல்லமுத்து குப்புசாமியின் “பிரபாகரன்: ஒரு வாழ்க்கை” ஆகிய நூல்களும் கிழக்கு வெளியிட்ட இந்த வகையான எளிய உணர்ச்சிகரமான வாழ்க்கைக் கதைகளில் உடனடியாய் நினைவுக்கு வருபவை. ஆனால் ஜனரஞ்சக வாசிப்புக்கான இப்படியான நூல்கள் ஆங்கிலத்தில் இன்னும் சிறப்பாய் தகவல் செறிவுடன் அதிகாரபூர்வ ஆவணங்களின் பின்னணியில் எழுதப்படுகின்றன. தமிழில் அப்படியான புத்தகம் எனக் குறிப்பிடுவதானால் சுதாங்கனின் “எம்.ஜி.ஆர் கொலைமுயற்சி வழக்கு” (கிழக்கு வெளியீடு) நூலை சொல்லலாம். சுவாரஸ்யமும் வியப்பும் இன்றி இதைப் படிக்க முடியாது. பாரதியார் கவிதைகளின் பதிப்புரிமை மீதான வழக்குகள், அதைச் சுற்றிய போராட்டங்களின் வரலாற்றை ஆர்வமூட்டும் வகையில் பேசும் நூலான ஆ. இரா வெங்கடாசலபதியின் “பாரதி: கவிஞனும் காப்புரிமையும்” நூலை இவ்வகையில் இதை விட நல்ல புத்தகம் என சொல்லலாம். 

எஸ்.ராமகிருஷ்ணனின் “எனதருமை டால்ஸ்டாய்”, “செகாவ் வாழ்கிறார்” போன்ற புத்தகங்கள் புனைவுமொழியில் உணர்வுபூர்வமாய், விமர்சனப்பார்வையுடன் எழுதப்பட்ட வேறுவகை வாழ்க்கைக்கதைகள்.
தொ.மு.சி ரகுநாதனின் “புதுமைப்பித்தன் வரலாறு” இந்த வகைமைகளில் சுலபத்தில் மாட்டாத நினைவுக்குறிப்பும் தரவுகளும் கலந்து உருவான மிக நல்ல புத்தகம். மற்றொருவர் குறித்த நினைவுக்குறிப்பு வகைமையில் கமலா புதுமைப்பித்தன் எழுதிய “புதுமைப்பித்தனின் சம்சார பந்தம்” முக்கியமானது.

வாழ்க்கைக் கதையை எழுதுவது, சில நேரம், பார்வையற்ற ஒருவர் வாகன நெருக்கடி நடுவே சாலையை கடப்பது போல. கொஞ்சம் பிசகினால் ஆபத்து. அதுவும், விமர்சனபூர்வமான வாழ்க்கைக்கதைகளில். அவை புறவயமான வரலாற்றுப் பிரதிகள் அல்ல. எழுத்தாளனின் கற்பனை, அவத்தானிப்பு, அலசல், விவாதங்கள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் ஆய்வுக்குட்பட்ட ஆளுமையின் தரவுகளுடன் இணைந்து உருவாவதே விமர்சனபூர்வ வாழ்க்கைக் கதை. இதில் 25% புனைவும் விமர்சனமும் இழையோடும். சில அம்சங்கள் சொல்லப்படாமல் அல்லது அதிக கவனம் பெறாமல் போகும். உ.தா., தமிழில் ஜெயமோகன் கவிஞர் ராஜமார்த்தாண்டனுக்கு எழுதிய அஞ்சலிக் கட்டுரை. மற்றொரு உதாரணம் அவர் சு.ராவின் வாழ்க்கையை (தன் பார்வையில் துண்டுத்துண்டாய் சித்தரித்து) விரிவான இலக்கிய விமர்சனம் மற்றும் தனது பிடிவாதமான நிலைப்பாடுகள் சிலவற்றை முன்னிறுத்தி எழுதிய “சு.ரா: நினைவின் நதியில்”நூலும் முக்கியமானது. ஜி.நாகராஜன் பற்றிய சு.ரா மற்றும் சி.மோகனின் நினைவுக்குறிப்புகள் மற்றும் சுருக்கமான வாழ்க்கைக் கதைகள், மற்றும் கிருஷ்ணன் நம்பி பற்றின சு.ராவின் குறுநூல் ஆகியவற்றில் விமர்சனம் மிக மெல்லியதாய், கண்ணுக்குப் படாதபடி இழையோடும். நான் புரூஸ் குறித்து எழுதிய நூல் “சண்டையிடாத சண்டை வீரன்” நிச்சயம் விமர்சனபூர்வ வாழ்க்கைக்கதையே. 

இந்த விமர்சன பூர்வ வாழ்க்கைக் கதை பின்புலத்தில் நான் இங்கு அறிமுகப்படுத்த விரும்பும் ஒரு ஆங்கில நூல் டேமியன் பிளானகன் எழுதிய “Yukio Mishima”.
 Reaction Books பதிப்பகத்தின் Critical Series எனும் வரிசையில் இந்நூல் வருகிறது. இதே வரிசையில் சார்த்தர், தஸ்தாவஸ்கி, பூக்கோ, ஜேம்ஸ் ஜாய்ஸ் ஆகியோர் குறித்த சில நூல்கள் வந்துள்ளன. நான் இவ்வருடம் படித்த மிகச்சிறந்த நூல் இது தான் எனப் படுகிறது. வரலாற்றுபூர்வ பிசிறற்ற ஆய்வு பின்புலம், மிஷிமாவின் இலக்கிய பங்களிப்பு குறித்த சரியான புரிதல், ஆழமான உளவியல் பார்வை, லேசான தத்துவ தொனி ஆகியவை இந்நூலின் சிறப்பம்சங்கள். இவற்றை விட முக்கியமாய் பரபரவென போகும் எழுத்து நடை, வாழ்க்கைக் கதையை பலவீனப்படுத்தும் தகவல்பூர்வ தொகுப்புகளை சரளமாய் கோர்வையாய் தொகுத்துள்ள விதம், விடாமல் பற்றி நெளிந்து போகும் காட்டுத் தீ போன்ற ஒரு மொழி இந்நூலை

 ஒரு நல்ல நாவலுக்கு கிட்டத்தட்ட இணையாக கருத வைக்கின்றன. உளவியல் பரிச்சயம் உள்ளவர்களுக்கு இந்நூல் இன்னும் சுவாரஸ்யம் தரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...