முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அசுரன் - “வெக்கையில்” இருந்து “காட்பாதர்”, “பாட்ஷா” மற்றும் ஸ்பேகெட்டி வெஸ்டெர்னுக்கு (2)


நாவலின் பெண் பாத்திரங்களில் குறிப்பாக அம்மாவின் பாத்திரம் எவ்வளவு வலிமையானது, வன்மம் மிக்கது எனப் பார்த்தால் நமக்கு இந்த வெறிகொண்ட அம்மன் யாரென புரிந்து போகும். அதாவது பூமணியின் நோக்கில், அடக்கப்பட்ட வன்மம் ஒவ்வொருவரின் நரம்பிலும் ஓடுகிறது. ஆனால் இது (சிக்மண்ட் பிராயிட் சொல்லுகிற) அடக்கப்பட்ட காமம் ஏற்படுத்தும் வன்மம் அல்ல. இது பெண்ணின் வன்மம். இது திரௌபதி மகாபாரதத்தில் காட்டும் வன்மம். மகாபாரத்தின் நாட்டார் கிளைகதைகளில் ஒன்றை தேவ்தத் பட்டாநாயக்  தனதுஜெயாநூலில் பேசுகிறார் - இதில் திரௌபதி சக்தி வாய்ந்த பராசக்தியின் வடிவம். மனித வடிவில் உலவும் பெண் நெருப்பு. அவள் போரை நடத்தி பல்லாயிரம் உயிர்களை பலிகொண்ட தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டு மட்டுமே பாண்டவர்க்ளின் பொது மனைவியாக உள்ளாள். ஒருநாள் இரவில் பாண்டவர்களை தனியாக அழைத்து செல்லும் கிருஷ்ணர் பராசக்தி வடிவில் திரௌபதி ஒரு மரத்தின் கீழ் இருக்க பல நூறு சிறுதெய்வங்கள் ஏவல் புரிவதை காட்டுகிறார். நீங்கள் இவளுக்காக பழிவாங்க போர் புரியவில்லை; இவள் தான் உங்களை நடத்துகிறாள்; இவள் தனியாகவே உலகை எரித்து பஸ்மமாக்குவாள்; நீங்கள் வெறும் அற்ப மானிடர்கள் என கிருஷ்ணர் புரியவைக்கிறார். திரௌபதியின் கோபத்தைக் கண்டு எரிச்சலடைவதை பாண்டவர்கள் அத்தோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.


நமது தொல்கதைகளில் பெண்வடிவம் இப்படித் தான் இயற்கையின் அடங்காத ஆங்காரத்தின் புறத்தோற்றமாக காணப்பட்டது. பூமணியின் நாவலிலும் பெண்கள் இப்படித் தான் ஆண்களின் அக்னியை வளர்க்கிறவள். தன் மகனுக்காக பழிவாங்க முதலில் புறப்படுகிறவள் அம்மா தான். அவளை அமைதிப்படுத்தவே அவளது அண்ணனும் கணவனும் புறப்படுகிறார்கள். அவர்களால் முடியாத போது எதிர்பாராத சந்தர்பத்தில் சிதம்பரம் பழிவாங்கத் தயாராகிறான். அவன் குண்டு தயாரிக்கும் போது அதற்காக பசைகாய்ச்சி கொடுப்பவள் அம்மா தான். நிலத்துக்கான, அடக்கப்பட்ட செக்ஸ் உணர்ச்சிக்கான முதிராத மனங்களின் போர்வெறி என பூமணி வன்முறை விழைவை பார்ப்பதில்லை

நிலத்தை பாதுகாப்பது என்பது இங்கு ஒரு பொருட்டு மட்டுமே. சாதி ஒடுக்குமுறையையும் வன்முறைக்கான காரணமாக பூமணி இங்கு துல்லியமாக ஐயமேயின்றி முன்வைப்பதில்லை. (ஆனால் வெற்றிமாறன் தன் படத்தில், கதையை எளிதாக்கும் பொருட்டு சாதி, குடும்பச்சண்டை, வில்லனின் கொடூரம் ஆகியவறை பிரதானப்படுத்துகிறார்.) பூமணி சித்தரிப்பது நோக்கம் கொண்ட வன்முறை அல்ல - நோக்கம் இருப்பதாக நம்பு, வன்முறைக்கான வன்முறை. ஒரு சம்சாரியாக தான் பிழைக்க ஆரம்பத்தில் கொலை செய்து ஜெயிலுக்குப் போக சிவசாமி கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறான் என்றாலும் ஒரு கட்டத்தில் மகனும் அப்பாவும் தாம் செய்த கொலைகளை, செய்யவிருக்கும் கொலைகளை ஒரு தர்மயுத்தமாக காணத் தொடங்குகிறார்கள். திரும்பத் திரும்ப அவர்கள் கேட்பது ஏன் நீதி மற்றும் சட்ட அமைப்புகள் பணம் படைத்தவர்களை தட்டிக் கேட்பதில்லை, ஆகையால் வீரமுள்ளவர்கள் தட்டிக் கேட்க வேண்டும், அதற்காக ஏன் கொலை செய்யக் கூடாது என்பது. பூமணி இதை நியாயப்படுத்துவது இல்லை - அவர் சிதம்பரத்தின் தரப்பை, அவன் தரப்பின் வழி அவனது அப்பாவின் மனநிலையை காட்டுகிறார். ஆகையால் கவனமாக சாதி, சமூக நிலை தனது பார்வையை பூமணி எங்குமே பதிவு செய்வதில்லை. குழப்பங்களும் சுயமுரண்களுமே இலக்கிய படைப்புகளை ஆழமாக்கும். ஆகையால் கதாபாத்திரத்தின் நிலையற்ற மனப்போக்கை கதையாக்கி, எந்த ஒரு பிரச்சாரத்தையும் முன்னெடுக்காமல், பூமணி இதைபெட்ரோ பரோமோவுக்குஅருகில் வரத்தக்க ஒரு நாவலாக்குகிறார். (ஆனால் சினிமா எப்போதும் எளிய சிக்கலற்ற கதைகூறலை வழங்க வேண்டும் என்பதால் வெற்றிமாறன் இந்த முன்னுக்குப்பின் முரணான போக்குகளை தவிர்த்து விடுகிறார்.)
அதாவதுவெக்கைஒரு தலித் நாவலோ, சமூக விமர்சன (போராளி) நாவலோ அல்ல - சமூக ஒடுக்குமுறைகளை தனது சிக்கல்களில் ஒன்றாக பாவிக்கும் ஒரு உளவியல் நாவல் இது. (ஆனால் வெற்றிமாறன் தன் கதையில் சாதிப்போராட்டம், சமூக விமர்சனம் ஆகியவற்றை பிரதானமாக்கி மக்களுக்கு இதை நுகர சுலபமாக்குகிறார்.)

இந்நாவலில் வன்மம் என்பது ஒரு நதியாக எங்கிருந்தோ தோன்றி முடிவுறாமல் பாய்ந்தபடி இருக்கிறது; அதில் சில நீச்சலடிக்கிறார்கள். சிலர் அதில் மூழ்கி சாகிறார்கள். சிலர் அதில் இருந்து ரத்த சகதியுடன் வெளியேறுகிறார்கள். பூமணி இந்த ரத்த ஆறு எங்கிருந்து ஏன் தோன்றுகிறது எனும் ஒழுக்கவியல் கேள்விகளை எழுப்புவதில்லை. (ஆனால் வெற்றிமாறன் படம் முழுக்க வன்முறையை கொண்டாடி விட்டுதேவர் மகன்பாணியில் வீரம் அல்ல படிப்பே முக்கியம் என திடீரென சிவசாமி வழியாக அறிவுரைக்கிறார்; ஆனால் படத்தில் வேறெங்கும் சிவசாமி தன் மகனை படிக்க தூண்டுவதில்லை; அவன் படிப்பை பாதியில் நிறுத்திய போதும் அவர் கண்டிப்பதில்லை. இது திரைக்கதையில் ஒரு லாஜிக் பிழை.)
நாவலில் ஒரு சின்னப்பையனான சிதம்பரம் தன் அண்ணனின் கொலையை (படத்தில் வருவது போல) நேரில் பார்ப்பதில்லை. ஆனால் அண்ணனின் சிதைந்த பிணம் அவனுக்குள் ஒரு பொறியை கிளப்புகிறது; அவன் பள்ளிக்குப் போவதை நிறுத்தி ஆடுமேய்ப்பது, பழிவாங்குவது குறித்து கற்பனை பண்ணுவது என மற்றொரு மனிதனாக மாறுகிறான். அவனுக்கான ஆன்ம பலமாக அவன் தாய் இருக்கிறாள். (அதாவது தாய் திரௌபதியாகவும்அண்ணன் முருகன் சிதைக்கப்பட்டு கொல்லப்படுவது அபிமன்யுவின் படுகொலையாகவும் வருகிறது).
நாவலின் முடிவில் சிதம்பரம் தான் ஜெயிலில் இருந்து திரும்பிய பின் தன் பகைவர்களை முழுக்க அழிக்கப் போவதாக சூளுரைக்கிறான்:
உள்ளருந்து வெளிய வந்துக்கிறேன். ஒவ்வொருத்தன் தலையையும் கோயிலுக்கு முன்னால் உருளும்.” (பக்கம் 203)
அதன் பிறகு அவர்களுக்கு ஆயுதங்களை (அருவாள் மற்றும் கைவெடிகுண்டுகள்) தாம் திரும்ப வரும் வரை எங்கே மறைத்து வைப்பது என கேள்வி எழுகிறது.
அவன் ஐயாவை நெருங்கினான்.
ஆயுதங்களை எங்க வைக்கிறது.’
மாமாகிட்ட குடுத்துறணும். கொண்டு போயிருவாரு.’
அருவாள நல்லா தொவஞ்சு பதம்புடிச்சு வச்சிருக்கச் சொல்லணும்.’” (பக்கங்கள் 203-204)
அதன் பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் சரணடைய ஒரு காரில் ஏறுவதற்காக ஓடுகிறார்கள்.


(நாவலின் இந்த முடிவு முக்கியமானது. ஏனென்றால் இது நமக்கு மகாபாரத்தில் ஓரிடத்தை நினைவுபடுத்துகிறது. பாண்டவர்கள் வனத்தில் பதுங்கி இருந்த பின்னர் நாட்டில் மாறுவேடமிட்டு மறைந்து வாழப் போகும் முன் ஒரு மரத்தின் கீழே தம் ஆயுதங்களை பதுக்கி வைப்பார்கள். திரும்ப வந்து அதே ஆயுதங்களைக் கொண்டு தான் கௌரவர்களை கொல்லப் போகிறார்கள். இங்கிருந்து நாம் ஒட்டுமொத்த கதையையும் மகாபாரதக்கதையாக, ஒரு நவீன தொன்ம மீளுருவாக்கமாக வாசிக்க முடியும். ஆனால் வெற்றிமாறன் இந்த இதிகாச கோணத்தையும் நாவலின் துவக்கத்தில் சுடலையில் எலும்பு பொறுக்கும் சுடலைமாடனை சிதம்பரம் காணும் இடத்தில் வரும் தொன்மம் தரும் சாத்தியங்களையும் உதாசீனித்து விடுகிறார்.) 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...