ஹெரால்ட் புளூம் பற்றின கேள்வி பதிலின் தொடர்ச்சி
கேள்வி: அப்படியானால், (கதையை கதையாக மட்டுமே படிக்க வேண்டுமெனில்) விமர்சனம் என்பது கதைக்குள் ஆரம்பித்து கதைக்குள் மட்டுமே முடிந்துவிடும் இல்லையா ?
கதையாக மட்டுமே அணுகினால், இலக்கியத்தில் பிற துறைகளின் தேவை என்பதே இல்லாமல் ஆகிவிடுகிறதே ? (பாலராம கிருஷ்ணன்)
பதில்: விமர்சனத்தை இரு விதமாக அணுகலாம். அ) வாசிப்பனுபவத்தில் கண்டடைந்ததை முன்வைப்பது; இதில் முடிந்தளவுக்கு எந்தவொரு முன்முடிவுகளை கேங்ஸ்டர் படத்தில் சட்சட்டென துப்பாக்கி நீட்டுவதைப் போல எடுத்து நீட்டாதிருப்பது. இந்த வகை விமர்சனங்களில் ஆகச்சிறந்தவை ஒரு பிரதியை தெளிவாக்காமல் மேலும் சிக்கலாக்கி அது எதையும் தெள்ளத்தெளிவாக திடமாக சொல்வதில்லை, தன்னையே மறுத்து, தன்னுடனே முரண்படுவதாக ஒரு பிரதி எப்படி உள்ளது எனக் காட்டுவது. தெரிதா தனது கட்டுரைகளில் இதை செய்கிறார். இது விமர்சனத்தை இலக்கியத்தின் தரத்துக்கு எடுத்துச் செல்லும்.
ஆ) உளவியல், சமூகவியல், வரலாறு, தத்துவம் மற்றும் விமர்சனக் கோட்பாடுகளையும் படைப்பாளி குறித்த பல தொன்மங்களையும் வைத்து (புதுமைப்பித்தன், ஆத்மாநாம், தலித் படைப்பாளிகள் போன்றோருக்கு இது நடந்துள்ளது) பிரதியை விரிவாக்கி படிப்பது. இது சோற்றில் குழம்பை ஊற்றி குழைத்து அடிப்பதைப் போல. சோற்றின் சுவையை, குணத்தை மாற்றி அதை மற்றொன்றாக ஆக்கி சாப்பிடுகிறீர்கள். சிலர் விஸ்கியின் கடுப்பு பிடிக்கவில்லை என அதில் ஸ்பிரைட், பெப்ஸி ஊற்றி மடக்கென குடிப்பது போன்றும் இது இருக்கிறது.
“பிற துறைகள்” என்பவை இலக்கியத்தை வெளிச்சமாக்குவதற்கான கைவிளக்குகள் அல்ல. அவையும் கதையாடல்கள் தாம். உதாரணமாக, ஜெயமோகனின் “விஷ்ணுபுரத்தை” நீங்கள் சுதந்திரத்துக்குப் பின்பான இந்திய அரசியலை விமர்சிக்கும், பகடி செய்யும் ஒரு மிகுகற்பனைப் படைப்பாக, நீதிக்கதையாக வாசிக்கலாம். அது சுவாரஸ்யமாகவும் இருக்கும். நான் மறுக்கவில்லை. ஆனால் இங்கு நாம் வாசிப்பது வரலாற்றையா இலக்கியத்தையா? இரண்டையும். இந்த வரலாறு என்பது நாம் நேரடியாக அனுபவித்து புலனக்ள் வழியாக கண்டறிந்ததா? இல்லை. இந்த வரலாறும் ஒரு எழுதப்பட்ட பிரதி அல்லது கதையாக பலமுறை பேசப்பட்ட ஒரு சம்பவம். இப்போது நாம் ஒரு பிரதியின் மீது மற்றொன்றை வைக்கிறோம். இப்போது வரலாற்றின் சுவாரஸ்யம் நமக்கு அந்த பிரதியின் சுவாரஸ்யமாக தவறாகத் தெரிகிறது.
நீங்கள் படுக்கையில் கிடக்கும் உங்கள் மொபைல் போன் மீது தலையணையை தெரியாமல் வைத்து விடும் போது என்னாகிறது? தலையணை பெரிதாக முன்பு இருக்கிறது, ஆனால் மொபைல் மறைந்து விடுகிறது. வரலாறு இங்கே ஒரு தலையணை போல வந்து நாவலை மறைத்து விடுகிறது. நல்ல வாசிப்பு என்பது இந்த மொபைல் இப்போது படுக்கைவிரிப்புக்குள் மேலும் ஒளிந்து கொண்டிருப்பதைக் காட்டுவது.
வரலாற்றை நீங்கள் பயன்படுத்தும் போதும் அது எப்போது நல்ல வாசிப்பு ஆகிறது தெரியுமா?
சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய வரலாற்றை மீளுருவாக்கம் செய்யும் நாவலின் அத்தியாயங்களை வரலாற்றெழுத்தியலாக, ஒரு புது பிரதியாக எடுத்துக் கொண்டு அதில் மேலும் தோன்றுகிற இருண்மையை, சிடுக்குகள், முரண்கள், பகுத்து கூறவே முடியாத இடங்களை நாம் கண்டடைகிற போது தான். ஆனால் நாம் “பிற துறைகளை” இலக்கிய பிரதியை தெளிவுபடுத்த எடுத்து பயன்படுத்தும் போது அது மனநலம் இல்லாத ஒருவருக்கு நிறைய மாத்திரைகள் கொடுத்து மந்தநிலையில் வைத்து “இப்போது பாருங்கள் அவர் கத்துவதோ பிரச்சனை பண்ணுவதோ இல்லை. நார்மலாகி விட்டார்” என சொல்வதைப் போன்றது.
மேற்சொன்ன தவறுகளை ஒரு விமர்சகனாக நானும் செய்திருக்கிறேன், பலமுறை. ஆனால் என்னை விட அதிகமாக நமது விமர்சகர்கள் உலகம் முழுக்க இந்த அபத்தத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் விமர்சகர்கள் அல்ல இலக்கிய விரோதிகள்.
நீங்கள் ஒன்றை கவனித்திருக்கிறீர்களா - ஒரு படைப்பாளியிடம் அவரது படைப்பை லாஜிக்கலாக தெளிவாக அலசி முன்வைக்கும் போது அவர் தன் நெஞ்சில் யாரோ ஈட்டியை பாய்ச்சியதைப் போல உணர்வார். காரணம் இது தான்.
- ஆர். அபிலாஷ்

Comments