முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விமர்சகன் ஒரு படைப்பாளியின் நெஞ்சில் பாய்ச்சும் ஈட்டி


ஹெரால்ட் புளூம் பற்றின கேள்வி பதிலின் தொடர்ச்சி



கேள்வி: அப்படியானால், (கதையை கதையாக மட்டுமே படிக்க வேண்டுமெனில்) விமர்சனம் என்பது கதைக்குள் ஆரம்பித்து கதைக்குள் மட்டுமே முடிந்துவிடும் இல்லையா ?
கதையாக மட்டுமே அணுகினால், இலக்கியத்தில் பிற துறைகளின் தேவை என்பதே இல்லாமல் ஆகிவிடுகிறதே ? (பாலராம கிருஷ்ணன்)

பதில்: விமர்சனத்தை இரு விதமாக அணுகலாம். ) வாசிப்பனுபவத்தில் கண்டடைந்ததை முன்வைப்பது; இதில் முடிந்தளவுக்கு எந்தவொரு முன்முடிவுகளை கேங்ஸ்டர் படத்தில் சட்சட்டென துப்பாக்கி நீட்டுவதைப் போல எடுத்து நீட்டாதிருப்பது. இந்த வகை விமர்சனங்களில் ஆகச்சிறந்தவை ஒரு பிரதியை தெளிவாக்காமல் மேலும் சிக்கலாக்கி அது எதையும் தெள்ளத்தெளிவாக திடமாக சொல்வதில்லை, தன்னையே மறுத்து, தன்னுடனே முரண்படுவதாக ஒரு பிரதி எப்படி உள்ளது எனக் காட்டுவது. தெரிதா தனது கட்டுரைகளில் இதை செய்கிறார். இது விமர்சனத்தை இலக்கியத்தின் தரத்துக்கு எடுத்துச் செல்லும்.

) உளவியல், சமூகவியல், வரலாறு, தத்துவம் மற்றும் விமர்சனக் கோட்பாடுகளையும் படைப்பாளி குறித்த பல தொன்மங்களையும் வைத்து (புதுமைப்பித்தன், ஆத்மாநாம், தலித் படைப்பாளிகள் போன்றோருக்கு இது நடந்துள்ளது) பிரதியை விரிவாக்கி படிப்பது. இது சோற்றில் குழம்பை ஊற்றி குழைத்து அடிப்பதைப் போல. சோற்றின் சுவையை, குணத்தை மாற்றி அதை மற்றொன்றாக ஆக்கி சாப்பிடுகிறீர்கள். சிலர் விஸ்கியின் கடுப்பு பிடிக்கவில்லை என அதில் ஸ்பிரைட், பெப்ஸி ஊற்றி மடக்கென குடிப்பது போன்றும் இது இருக்கிறது
பிற துறைகள்என்பவை இலக்கியத்தை வெளிச்சமாக்குவதற்கான கைவிளக்குகள் அல்ல. அவையும் கதையாடல்கள் தாம். உதாரணமாக, ஜெயமோகனின்விஷ்ணுபுரத்தைநீங்கள் சுதந்திரத்துக்குப் பின்பான இந்திய அரசியலை விமர்சிக்கும், பகடி செய்யும் ஒரு மிகுகற்பனைப் படைப்பாக, நீதிக்கதையாக வாசிக்கலாம். அது சுவாரஸ்யமாகவும் இருக்கும். நான் மறுக்கவில்லை. ஆனால் இங்கு நாம் வாசிப்பது வரலாற்றையா இலக்கியத்தையா? இரண்டையும். இந்த வரலாறு என்பது நாம் நேரடியாக அனுபவித்து புலனக்ள் வழியாக கண்டறிந்ததா? இல்லை. இந்த வரலாறும் ஒரு எழுதப்பட்ட பிரதி அல்லது கதையாக பலமுறை பேசப்பட்ட ஒரு சம்பவம். இப்போது நாம் ஒரு பிரதியின் மீது மற்றொன்றை வைக்கிறோம். இப்போது வரலாற்றின் சுவாரஸ்யம் நமக்கு அந்த பிரதியின் சுவாரஸ்யமாக தவறாகத் தெரிகிறது.
நீங்கள் படுக்கையில் கிடக்கும் உங்கள் மொபைல் போன் மீது தலையணையை தெரியாமல் வைத்து விடும் போது என்னாகிறது? தலையணை பெரிதாக முன்பு இருக்கிறது, ஆனால் மொபைல் மறைந்து விடுகிறது. வரலாறு இங்கே ஒரு தலையணை போல வந்து நாவலை மறைத்து விடுகிறது. நல்ல வாசிப்பு என்பது இந்த மொபைல் இப்போது படுக்கைவிரிப்புக்குள் மேலும் ஒளிந்து கொண்டிருப்பதைக் காட்டுவது
வரலாற்றை நீங்கள் பயன்படுத்தும் போதும் அது எப்போது நல்ல வாசிப்பு ஆகிறது தெரியுமா?
சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய வரலாற்றை மீளுருவாக்கம் செய்யும் நாவலின் அத்தியாயங்களை வரலாற்றெழுத்தியலாக, ஒரு புது பிரதியாக எடுத்துக் கொண்டு அதில் மேலும் தோன்றுகிற இருண்மையை, சிடுக்குகள், முரண்கள், பகுத்து கூறவே முடியாத இடங்களை நாம் கண்டடைகிற போது தான். ஆனால் நாம்பிற துறைகளைஇலக்கிய பிரதியை தெளிவுபடுத்த எடுத்து பயன்படுத்தும் போது அது மனநலம் இல்லாத ஒருவருக்கு நிறைய மாத்திரைகள் கொடுத்து மந்தநிலையில் வைத்துஇப்போது பாருங்கள் அவர் கத்துவதோ பிரச்சனை பண்ணுவதோ இல்லை. நார்மலாகி விட்டார்என சொல்வதைப் போன்றது
மேற்சொன்ன தவறுகளை ஒரு விமர்சகனாக நானும் செய்திருக்கிறேன், பலமுறை. ஆனால் என்னை விட அதிகமாக நமது விமர்சகர்கள் உலகம் முழுக்க இந்த அபத்தத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் விமர்சகர்கள் அல்ல இலக்கிய விரோதிகள்
நீங்கள் ஒன்றை கவனித்திருக்கிறீர்களா - ஒரு படைப்பாளியிடம் அவரது படைப்பை லாஜிக்கலாக தெளிவாக அலசி முன்வைக்கும் போது அவர் தன் நெஞ்சில் யாரோ ஈட்டியை பாய்ச்சியதைப் போல உணர்வார். காரணம் இது தான்.

  • ஆர். அபிலாஷ் 

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
விமர்சனங்கள் படைப்பாளனைகூர்மைப்படுத்துகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...