முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அடிமைகளின் உடல்மொழியும் அதிகாரத்தின் உடல்மொழியும் (2)


ஆச்சரியமாக தோற்றமளவிலான கலகத்தை பொறுத்தமட்டில் ஆண்களே முதலில் காயடிக்கப்பட்ட முகமற்றவர்களாகிறார்கள். ஆனால் பெண்கள் தொடர்ந்து உடையிலும் செயல்களிலும் தம்மை வெளிப்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்வப்போது கால் மேல் கால் இடுவதற்காக தண்டனைகள், கண்டனங்களுக்கும் அவர்கள் ஆளானாலும் ஒருவித ஒழுங்குக்கு வராத தோற்றம் கொண்டவர்கள் அவர்களே. ஆண்களின் ஆடை வண்ணங்களைப் பாருங்கள் - ஒன்று இரண்டு நிறங்களுக்கு உள்ளாகவே சீருடை போல சட்டை, கால்சராய்களை அணிவார்கள். கடைகளிலும் அவர்களுக்கு என்று தனித்துவமான வண்ணக்கலவைகள், வடிவங்கள், ஸ்டைலான பாணிகளில் உடைகள் அதிகம் வருவதில்லை. ஆனாலும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏராளமாக மாறுபட்ட ஆடைகள் கிடைக்கிறன. (இதனாலேயே ஆடைகளைத் தேர்வதில் பெண்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.) மேற்குடன் ஒப்பிடுகையில், வேலையிடங்களில் பெண் ஊழியர்களின் தோற்றத்தில் ஒரு அடையாளமின்மையை, ஒற்றைத்தன்மையை வலியுறுத்த இந்தியாவின் நிர்வாகங்களால் முடியவில்லை

உதாரணமாக சேலையை எடுத்துக் கொள்ளுங்கள். சுடிதாருடன் ஒப்பிடுகையில் பெண்ணுடம்பை மறைப்பதை விட வெளிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஆடை சேலை. பெண்ணுடலில் பாலுணர்வைத் தூண்டும் இடங்களை கவனமாக இது பிரதானப்படுத்துகிறது; லேசாய் காற்றடித்தால், அணிகிறவள் கவனமின்றி இருந்தால் உடல் பாகங்களை வெளிச்சமிட வைக்கும் ஆடை இது. ஒரு பக்கம் தம்மை பேரழகியாக மாற்றினாலும் அது கோருகிற கவனம், அதை அணிய எடுத்துக் கொள்ளும் நேரம், அது ஒரு சூழலில் ஏற்படுத்தும் ஈர்ப்பு, அதன் வெக்கை, உறுத்தும் ஆண் கண்களின் எரிச்சலுணர்வு என பெண்கள் அலுவலகங்களில் அணிய விரும்பாத ஆடையாகவும் சேலை உள்ளதுஆனால் அதற்கு மாற்றும் இல்லை.
 ஒரு அலுவகத்திலோ அல்லது கல்லூரி வகுப்பிலோ பாருங்கள் - பெண்கள் தம்மிடம் ஏராளமான வண்ணங்களை, பரபரப்பை, பலவித அலங்காரங்களின் கவன ஈர்ப்பை / களைப்பை, நான் தனி, நான் தனி என கோரும் உடல்மொழியை, நான் தனியானவள் அல்ல, நான் தனியாளவள் அல்ல என கூடவே கோருகிற உடல் முனைப்பை கவனிக்கலாம்.
கிட்டத்தட்ட எல்லா கல்லூரிகளிலும் மாணவிகள் மீது கடும் ஆடைக்கட்டுப்பாடுகள் உண்டு. துப்பட்டாவை எப்படி அணிய வேண்டும், சுடிதார் டாப்பின் நீளம் எந்தளவுக்கு இருக்க வேண்டும், எத்தகைய செருப்பு அணியலாம், இந்த ஆடையுடன் அவர்கள் எப்படி அமர வேண்டும் (காலை அகட்டி அமரக் கூடாது, எகிறி குதித்து ஓடக் கூடாது, குனிந்து மார்புப் பிளவை காண்பிக்கக் கூடாது).  
மாணவிகளில் ஒரு பகுதியினர் இந்த ஆடைக்கட்டுப்பாடுகளை விதவிதமாக கேலிக்கூத்தாக்குகிறார்கள். சிலர் துப்பட்டா அணிந்து வந்து வகுப்பை அடைந்ததும் அதை கழற்றி வைப்பார்கள். சிலர் சுடிதார் கால்சராய்க்குப் பதில் கவர்ச்சியான லெக்கின்ஸ் அணிவார்கள். இறுக்கமான டாப்ஸ் அணிவார்கள். சிலர் வெள்ளை டாப்ஸுக்கு கறுப்பு பிரா அணிவார்கள். உயரமான குதிகால் கொண்ட செருப்பணிவார்கள். கூந்தலை வண்ணமடிப்பார்கள். சில பெண்கள் அடுத்த கட்டத்துக்கு சென்று கழுத்தில் டாட்டூ அணிவார்கள். அடிப்பது போல உதட்டுச்சாயம் பூசிக் கொள்வார்கள். நிர்வாகங்கள் இப்பெண்களுடன் மல்லுக்கட்டியே களைத்துப் போகின்றன.
 சில கல்லூரி மாணவிகள் ஆண் ஆசிரியர்களை கலவரமாக்க தாழ்வான கழுத்து கொண்ட இறுக்கமான டாப்ஸை அணிந்து வந்து முன்னிருக்கையில் அமர்ந்து சற்றே குனிந்த நிலையில் சந்தேகங்களைக் கேட்பார்கள். பார்வையை கீழே இறக்காத ஆண் ஆசிரியர்கள் இந்த தேர்வில் ஜெயித்து விட்டார்கள் எனப் பொருள். ஒருமுறை இறக்கி விட்டால் பிறகு அந்த ஆசிரியர் மீதான மரியாதையை இழந்து விடுவார்கள். அவர்களை கேலி செய்வதுடன் தொடர்ந்து அவர்களுக்கு பரீட்சை வைத்துக் கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் அந்த ஆசிரியர் ஒரு கேலிச்சித்திரம் ஆகி விடுவார். ஆனால் கழுத்துக்குக் கீழே பொருட்படுத்தாத ஆசிரியரிடம் இப்பெண்கள் நிமிர்ந்த நிலையில் இயல்பாகப் பேசுவார்கள். ஒழுக்கவாதத்தை போதிக்கும் ஆண் நிர்வாகிகளுக்கும் இந்த மாணவிகள் தேர்வு வைத்து தோற்கடிப்பதுண்டு. இவர்களை சமாளிப்பது எப்படி எனப் புரியாத நிலையில் நிர்வாகமும் அதிகார மையமும் இவர்களை கூடுதலாக கண்காணிக்கிறது, மேலும் கராறான கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

ஏன் ஆண்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லையென்றால் ஆண்களுக்கு குறைந்தபட்சமான ஆடை சுதந்திரமே இல்லை, ஆடையை கொண்டு கலகம் பண்ணும் எந்த சாத்தியங்களும் இல்லை என்பதாலே. ஒரு ஆண் மூக்குத்தி அணிய முடியுமா இல்லை கழுத்தில் விதவிதமான மாலைகள் அணிய முடியுமா
ஒரு பெண் பொட்டு வைப்பது நெற்றியை அழகாக்க மட்டுமல்ல, கருவிழிகளை நோக்கி பார்வையை திருப்பவும் தான்; மூக்குத்தி என்பது மூக்கை அழகாக்க அல்ல - அது ஒரு பெண்ணின் மூக்கை நேர்த்தியாக்கும் மூக்குத்தி ஆணின் பார்வையை அதற்குக் கீழே உள்ள அந்த அழகான உதட்டை நோக்கித் தள்ளி விடுகிறது; மாலைகள் கழுத்தை மின்ன செய்வதுடன் கீழே உள்ள மார்புகளை நோக்கியும் ஆண் மனத்தை நழுவ விடுகிறது; ஒரு பெண்ணின் கைவளையலைக் காணும் நீங்கள் அது எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் உங்கள் மனமும் சென்று அலைகழிவதை உணர்கிறீர்கள். மனித தனித்துவத்தின் மிகப்பெரிய ஆயுதம் பாலியல் தான் - இந்த பாலியலை மிக ஆற்றலானதாக்கும் பல ஆயுதங்களை சமூகம் ஒரு பெண்ணுக்கு வழங்குகிறது.
 இதையே அழகிய உதடு கொண்ட, மீசை வைத்த, விரிந்த மார்பும், வலுவான பைசப்ஸும், முறுக்கேறிய முழங்கையும், ஒடுங்கிய இடுப்பும் கொண்ட ஒரு ஆணுக்கு வழங்குவதில்லை. நமது சங்க இலக்கியத்தில் ஆண்கள், பெண்களுக்கு இணையாக, பலவித அணிகலன்கள் அணிபவராக இருந்தனர் எனும் சேதி வருகிறது; ஆனால் எந்திரமயமாக்கலுக்குப் பிறகு ஆண்கள் கூட்டங்கூட்டமாக வேலைக்கு செல்லும் வரலாற்றுச் சூழலில் இந்த பழக்கம் அறவே ஆண்களை விட்டுப் போய் விட்டது. ஆண்கள் தம் பாலியல் அதிகாரத்தை பணம், சமூக அந்தஸ்து, சாதி பெருமிதம், இவற்றை வைத்து சதா வீராப்பாக திரிவது என உடம்பில் இருந்து அரூபமான, நிலையற்ற சமூக இருப்பிடம் அடகு வைத்து விட்டான். அவன் தன் பாலியல் உடம்பை அதற்கு தொடர்பில்லாத, இணையில்லாத பல அற்ப விசயங்களாக உருமாற்றி விட, உடம்பின் மீதான அக்கறை அவனுக்கு வெகுவாக குறைந்து போனது

ஒரு பெண் தன்னை ஒரு தனித்த இருப்பாக பார்க்கும் போது ஆணோ தன்னை மொத்த ஆண் கூட்டத்தின் ஒரு பகுதியாக காண்கிறான். அதனாலே அவன்சிங்கம்லஎன இல்லாத மீசையை முறுக்கி, கூம்பின நெஞ்சை விடைத்து என பலவீனமாக கோருகிறான். சாதித்தலைவர்கள், சினிமா ஹீரோக்கள் என யார் பின்னாவது திரிந்து தன்னை பலமாக காட்ட தவிக்கிறான். கடந்த அரை நூற்றாண்டில் ஆண்கள் கைவிடப்பட்டது போல பெண்கள் கைவிடப்படவில்லை என உளவியலாளர் ஷாலினி ஒரு பேட்டியில் சொல்கிறார். பெண்ணின் பூப்படைதலை சமூகம் ஒரு விழாவாக கொண்டாடும் போது ஆணின்பூப்படைதலைஅது பொருட்படுத்துவதே இல்லை (ஏனென்றால் ஆணின் பாலுடல் சமூக அதிகார விழைவின் பகுதியாக மாற்றப்பட்டு விட்டது; அவனுக்கென, அவன் உடலுக்கென, ஒரு தனித்த மதிப்பு இல்லை). பாலுறவுக்கு தயாரான பெண்ணுடன் அனுபவங்களைப் பகிர்தல், அவளுக்கு வழிகாட்டுதல், அவளை அரவணைத்தல் என மூத்த உறவுக்கார பெண்கள் திரளும் போது ஒரு பதின்வயது ஆண் திசையறியாமல் தனித்து விடப் படுகிறான். அவனது ஆண்மை பிம்பம் முழுக்க கற்பனையாலும் வெற்றுப் பெருமைகளாலும் நிரம்புகிறது. அவனுக்கு தன் உடம்பை அழகாக, வலுவாக, கம்பீரமாக உருவாக்கவோ தன் மொழியை கூர்மையான திறன்படைத்ததாக மேம்படுத்தவோ தெரிவதில்லை. ஒரு பெண்ணுடன் உரையாடவோ அவளைக் கவரும் விதம் தன் உடம்பை முன்வைக்கவோ தன் மீது விழும் பார்வைகளைப் பொருட்படுத்தவோ தெரியாதவனாக அவன் வளர்கிறான்.
இதனாலே உடல்மொழியைப் பொறுத்தமட்டில் அதிகாரத்துடன் உடனடியாய் அடிபணியும் அடிமையாகவோ அல்லது தேவையற்று முரண்படும் வெடுக்கான இளவட்டமாகவோ அவன் மாறுகிறான் - அவன் பயன்படுத்தப்படுகிறான், அழிக்கப்படுகிறான், அலைகழிக்கப்படுகிறான். ஆனால் பெண்களோ சமூக அதிகாரத்துக்கு உடன்பட்டவாறே தொடர்ந்து அதை நுட்பமாய் எதிர்க்கவோ முறியடிக்கவோ தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் (இதில் விதிவிலக்கான பெண்களும் இருக்கிறார்கள் தாம்).

பகுதி மூன்றைப் படிக்க:
https://thiruttusavi.blogspot.com/2019/11/3.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...