முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐந்து வருடக் கணக்கு



என் வெளிவாழ்க்கையை (கல்வி, வேலை, எழுத்து, வாய்ப்புகள், முன்னேற்றம், புகழ்) பொறுத்தமட்டில் ஒரு ஐந்து வருடக் கணக்கு இருக்கிறது என நினைக்கிறேன் - சில வருடங்கள் பிடிக்காத விசயங்களை பல்லைக் கடித்த படி சகிக்க வேண்டி இருக்கும். முயற்சிகளுக்கு பலன் பெரிதாய் இருக்காது. முக்கியமாக ஏதோ சிறையில் அடைபட்ட உணர்வு இருக்கும். விருப்பமில்லாத ஆட்களுடன் விருப்பமில்லாத வகையில் வேலை செய்ய வேண்டி இருக்கும். அல்லது எந்திரத்தனமாய் ஒரு சின்ன அடி கூட மாற்றி வைக்க முடியாத செக்கிழுக்கும் வேளையாக இருக்கும். எந்த திசையிலும் தப்பிச் செல்ல வாய்ப்பிருக்காது. எதிர்காலத்தில் மாற்றம் வரும் என்பதே என்னை அப்போது தக்க வைக்கும் சிந்தனையாக இருக்கும்.


பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான ஒரு ஐந்து வருடங்கள் எனக்கு அப்படி அமைந்தன. அதன் பிறகு கல்லூரிக்கு படிக்க சென்றதுமே அத்தனைக் காலமும் அடக்கி வைத்திருந்த உற்சாகம் பீறிட்டுக் கிளம்பியது. தினம் தினம் வண்ணமயமானது. நிறைய புது மனிதர்களை சந்திக்க புது அனுபவங்களை அடைய முடிந்தது. அந்த ஐந்து வருடங்கள் முடிந்த பின் மீண்டும் நான் ஐந்து வருடங்கள் செக்கில் மாட்டிக் கொண்டேன். தினமும் எழுத முயல்வேன். ஆனால் பதிப்பிக்க வாய்ப்போ தன்னம்பிக்கையோ இராது. வேலையிலும் நிம்மதியோ திருப்தியோ இராது. தேவையில்லாமல் தொடர்ந்து தவறான முடிவுகள் எடுத்து தவறான வேலையிடங்களில் மாட்டி அழிவேன். அதன் பிறகு ஒருநாள் என் அதிர்ஷ்டம் மாறியது. நிறைய எழுத, பிரசுரிக்க ஆரம்பித்தேன். வேலையை மாற்றினேன். எம்.பில், முனைவர் பட்ட ஆய்வு என சேர்ந்தேன். புத்தகங்கள் வெளியிட்டேன். டிவி ஊடகத்தில் அதிகம் பங்கு பெற்றேன். வாழ்க்கை ரொம்ப பரபரப்பாகியது. நிறைய புது நண்பர்களை ஒவ்வொரு வாரமும் சந்தித்தேன். முந்தின ஐந்து வருடங்கள் எழுத முடியாததற்கு சேர்த்து இப்போது இரவு முழுக்க தூங்காமல் எழுதினேன். எதைத் தொட்டாலும் துலங்கியது. சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கிடைத்தது. மூன்று நாவல்கள் உள்ளிட்டு பதினெட்டு புத்தகங்கள் எழுதினேன். நான் என் கால் நூற்றாண்டு வாழ்க்கையில் விரும்பின அனைத்தையும் கூடுதலாகவே அடைந்தேன். இந்த முறை ஐந்து வருடங்கள் கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக நீடித்தது. அடுத்து மீண்டும் என் வாழ்க்கை செக்குக்கு திரும்பியது.
இப்போது எழுத்திலோ வேலையிலோ புதிதாக எதையும் செய்வதில்லை, சவால்கள் இல்லை, புதுமை இல்லை, அதே ஒரு சில பேரை திரும்பத் திரும்பப் பார்த்து பேசி அவர்களுடனே முரண்பட்டு ஒன்றுபட்டு அழுது சிரித்து ஒரு துளி அழுக்கு நீரில் அடைபட்ட பாக்டீரியா போல ஒரு வாழ்க்கை. புதுப்புதிதாய் சந்திக்க யாருமில்லை. (நிறைய மாணவர்கள் வந்து போனாலும் அவர்களுடன் நட்பு பாராட்ட முடியாதே). ஊடகத்தில் பங்கேற்க முடியாது. என் மண்ணில் நடக்கிற எதனோடு பங்குபெற, நேரடியாய் உணர, அறிய முடியாது. இலக்கிய கூட்டங்கள் இல்லை, உரையாடல்கள் இல்லை. என் எழுத்திலும் மிக வித்தியாசமாக சவாலாய் எதையும் செய்வதில்லையே எனும் வருத்தமும் உண்டு. எவ்வளவு முயன்றாலும் நான்காவது நாவலை எழுதி முடிக்க முடியவில்லை. நாவல் என்றில்லை நீண்ட கால உழைப்பை கோரும் எந்த புத்தகத்திலும் ஈடுபடும் திறனை இழந்து விட்டது போல இருக்கிறது. இரண்டரை வருடங்கள் ஓடி விட்டன. மேற்சொன்ன கணக்குப்படி அடுத்த இரண்டரை ஆண்டுகளில் என் வாழ்க்கையில் மீண்டும் ஒரு மலர்ச்சி, வசந்தம், விடுதலை வர வேண்டும்
அதுவரை நான் நம்பிக்கை இழக்காமல், முனைப்புடன் இருக்க வேண்டும். இந்த வறட்சிக் காலத்தில் பண்ண முடிகிற வேலைகளை ஒழுங்காக செய்ய வேண்டும்.

நண்பர்களே! இப்படியான சில வருட சுழற்சி உங்களது வாழ்விலும் உண்டா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...