முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாதி வழியில் இறங்கி விடும் எழுத்தாளர்கள்



சில எழுத்தாளர்கள் எழுதுவதை பாதியில் நிறுத்தி விடுவதைப் பற்றி மூத்த கவிஞரான ஒரு நண்பரிடம் உரையாடும் போது அவர் ஒரு சுவாரஸ்யமான அவதானத்தை வைத்தார் - “நாம் அன்றாட வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவதால் எழுதுவதை நிறுத்துவதில்லை, எழுதுவதை நிறுத்துவதற்காக இந்த பிரச்சனைகளை ஒரு சாக்காக பயன்படுத்துகிறோம்.” எனக்கு ஊரில் ஒரு நண்பர் இருந்தார். நாகர்கோயிலில் இருந்து தக்கலைக்கோ அல்லது கன்னியாகுமரிக்கோ அவருடன் அடிக்கடி பேருந்தில் பயணிப்பேன். இலக்கியம், கலை, அரசியல் என பேசிக் கொண்டு செல்வோம். ஒரே பிரச்சனை டிக்கெட் எடுத்த நிறுத்தத்தில் ஒருநாளும் இறங்க மாட்டார் - ஏதாவது ஒரு இடத்தில் திடீரென இறங்கி விட்டு அங்கு யாரையாவது பார்க்கலாம் என்பார். பிறகு அங்கிருந்து ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு ஏற்கனவே திட்டமிட்டிருந்த இடத்துக்கு செல்வோம். “ஏண்ணெ இப்படி பண்றிங்க?” என ஒவ்வொரு முறையும் கேட்பேன். அவரது பதில்நினைச்ச எடத்துக்கு போறதில என்ன ஒரு இது இருக்கிடே. எதிர்பார்க்காத மாரி ஏதாவது நடக்கணும். தினமும் டக்குன்னு ஒரு புது விசயத்தை பண்ணனும். நாம என்ன பண்ணுவோமுன்னு யாருக்கும் பிடிபடக் கூடாது கேட்டியா?” தினமும் ஒன்றையே திரும்பத் திரும்ப பண்ணுவது ரொம்ப அலுப்பானது என்பதை பின்னர் மத்திய வயதில் தான் நான் புரிந்து கொண்டேன்


எழுத்தாளனான பிறகு என் சக எழுத்தாளர்களில் பலருக்கு எழுதுவது பற்றி கனவு காண்பதில் உள்ள விருப்பம் எழுதுவதில் இல்லை என்பதை, சில நேரம் கனவைக் கூட துறந்து விட்டு சம்மந்தமில்லாத புது சாகசங்களை நாடிச் செல்லும் அதீத கோணங்கித் தனங்களை அவர்கள் கொள்வதை கவனித்திருக்கிறேன். அற்ப விசயங்களுக்காக பெரிய சண்டைகளை இட்டு மூர்க்கமாகிறவர்களை, அதை வருடகணக்காய் நினைவில் வைத்திருப்பவர்களைக் கண்டிருக்கிறேன். பேஸ்புக் வந்த பிறகு பலர் எழுதுவதும் அதிகமாகி இருக்கிறது. குறிப்பாய் அபுனைவு எழுதும் தயக்கம் பலருக்கும் உடைபட்டிருக்கிறது. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மனம் குவித்து அதையே தொடர்ந்து செய்யும் திறனை பலரும் இழந்திருக்கிறார்கள். பேஸ்புக்கில் எழுதியபடியே தாம் ஒரு எழுத்தாளனாய் இயங்க முடியவில்லை என நினைக்கிற பலரையும் கவனிக்கிறேன். அன்றில் இருந்து இன்று வரை நமக்கு ஒரே பிரச்சனை தான் எனத் தோன்றுகிறது - எழுத்து கட்டற்ற ஒன்றுக்கான பாய்ச்சல், ஆனால் இலக்குக்குறி என ஒன்று தெரிந்து போனால் கட்டுண்டு போகிறோம். கட்டை அறுக்க முடியாமல் நாம் அந்த செயலில் இருந்தே பாதியில் இறங்கி செல்கிறோம்

நீங்கள் ஒரு அபாரமான கவிதையை ஒரு மின்னல் வரியுடன் துவங்குகிறீர்கள், ஆனால் அடுத்தடுத்து இருள் வந்து கவிகிறது. ஒரு பிரமாதமான கதைக்கரு கதையாக வளரும் போது மூட்டமாகி விடக் கூடும்; அல்லது அதை எழுதும் நிகழ்முறை (process) அலுப்பாக சிரமமாக ஒரு கட்டம் வரை இருக்கலாம். நீங்கள் ஒரு நாவல் குறித்து கனவு காண்பதை விட அதை ஒன்றிரண்டு வருடங்கள் சுமப்பது ஆயிரம் மடங்கு அவநம்பிக்கையும் குழப்பங்களும் கூடிய அனுபவம். அது மட்டுமல்ல சுயமதிப்பீடு சார்ந்த நெருக்கடி எழுத்தாள வாழ்க்கையை கொடுமையாக்குகிறது. தன் காதலை வெளிப்படுத்தினால் அதன் அழகு பாழாகி விடும் என எண்ணும் ஒரு பெண்ணைப் போல இருக்கிறான் ஒரு எழுத்தாளன். சிலரோ சில வருடங்கள் தொடர்ந்து நாவல், கதைகள் என உச்சம் தொட்டு விட்டுகண்டெக்டர் நிப்பாட்டுங்க, ஆள் இறங்கணும்என கூவி குதித்து இறங்கி ஓடுவிடுவார்கள். அதன் பிறகு அவர்கள் திரும்ப எழுத வந்தாலும் பழைய மும்முரத்துடன் இயங்குவது மிகவும் சிரமம். சிலருக்கு குடும்ப பிரச்சனைகள் இடையூறாகும்

மற்றொரு காரணமும் உண்டு - எழுத்து அவர்களுடைய ஆர்வங்களில் ஒன்றாக இருக்கும், அது அவர்களை செலுத்தும் ஒற்றை லட்சியமாக இராது. நன்றாகப் பாடுவார்கள், வேலையில் சிறப்பார்கள், ஊர் சுற்றுவார்கள், விளையாடுவார்கள், அதோடு கொஞ்சம் எழுதவும் செய்வார்கள். என்ன பிரச்சனை என்றால் எழுதுவதும் நன்றாகவே இருக்கும். இவர்களிடம்தினமும் எழுதுங்க, தொடர்ந்து புத்தகங்கள் கொண்டு வாங்கஎன்றால் அவர்களுக்கு அது பாரமாக இருக்கும். இத்தகையோர் கொஞ்ச நாள் எழுதி விட்டு வேறேதாவது ஒரு நிறுத்தத்தில் இறங்கி விட்டு திரும்பவும் பழைய இடத்துக்கே வந்து சேர்வார்கள். இலக்கியத்தோடே இருந்த படி அதில் முழுமையாக ஈடுபட முடியாமல் தவிப்பார்கள்நாவல் எழுதும் கலையை கற்பிக்கும் போது நான் இத்தகையோரை மாணவர்களிடம் அதிகமும் காண்கிறேன் - எழுதுவதும் எழுத்தாளனாய் இருப்பதும் இருவேறு விசயங்கள் என அந்த மூத்த எழுத்தாள நண்பர் என்னிடம் குறிப்பிட்டார்



 எழுத்து ஒரு துன்பம் என ஏற்ற பின் அது இன்பமாகிறது. ஆனால் அப்படி ஏற்பது மனித இயல்பல்ல; உடனடி இன்பமளிக்கும் காரியங்களுக்காக செயலாற்றியே நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் எப்படியோ ஏற்றுக் கொண்டு விட்டால் அது நம்மை கட்டற்ற இருப்பாக்குகிறது. ஆனால் கட்டற்றுப் போக ஒவ்வொரு முறையும் நாம் நமது கைகால்களை சங்கிலியால் கட்டிக் கொண்டு எழுத்துக்குள் முடங்கி கிடக்க வேண்டி இருக்கிறது. எழுத்தாளனாய் இருப்பதன் மிகப்பெரிய உள்முரண் இது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.