Dissent (எதிர்ப்போக்கு) கருத்தரங்கு நாளை மறுநாள் எங்கள் பல்கலையில் நடக்கிறது. நாடக இயக்குநரும் பெண்ணியவாதியுமான மங்கை அரசு சிறப்புரை வழங்குகிறார்.
அதன் பிறகு இரண்டு விவாத அரங்குகள் - ஒன்று, மாற்றுத்திறனாளிகள் பற்றியது; அதில் மாற்றுத்திறனாளிகள் குறித்து எழுதியும் போராடியும் வரும் கல்வியாளர்களான ஷில்பா ஆனந்த், மீனு பம்பானி ஆகியோருடன் நானும் பங்கேற்கிறேன். இந்த கருத்தரங்கை நான் ஒருங்கிணைக்கிறேன் என்பதால் எந்த அரங்கிலும் தனியாகப் பேச வேண்டாம் எனத் தான் நினைத்தேன். ஆனால் பாருங்கள் அரங்கில் பேச மாற்றுத்திறனாளி படைப்பாளிகள் யாரும் கிடைக்கவில்லை. சரி போகட்டும் எனக்கு கொஞ்சம் கூட்டத்துடன் நானே ஒரு பங்கேற்பாளனாகி விட்டேன். என்னுடைய “கால்கள்” நாவல் குறித்து, ஒருவர் சொந்த பிரச்சனையை புனைவில் கொண்டு வருவதன் சிக்கல்கள் பற்றி பேசலாம் என இருக்கிறேன். இந்த அரங்கை பேராசிரியர் சந்தோஷ் நெறியாள்கை செய்கிறார்; அவர் எங்கள் பல்கலையில் மாற்றுத்திறனாளிகள் இலக்கியம் பற்றி வகுப்பெடுப்பவர்.
அடுத்த விவாத அரங்கு தலித் சினிமா குறித்து - இதில் ஸ்டாலின் ராஜாங்கம், திவ்ய பாரதி (கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர்) மற்றும் பேராசிரியர் அருள் மணி (சினிமா ஆய்வாளர்) கலந்து கொள்கிறார்கள். தலித் நாடகங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ஜோஷ்வா நெறியாள்கை செய்கிறார்.
இந்த இரு அரங்குகளும் முடிந்த பிறகு மதிய உணவு. மில்லெட் மாமா எனப்படும் சிறுதானிய உணவகம் ஒன்றினால் இது அளிக்கப்படுகிறது - சுவையான ஆரோக்கியமான அட்டகாசமான சாப்பாடு.
மதியம் ஒன்றரை முதல் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்படும். சுமார் நாற்பது கட்டுரைகள் - தத்துவம், சினிமா, ஊடகம், நாடகம், ஓவியம், சமூகம், அரசியல், பாலினம், மாற்றுத்திறனாளிகள், இலக்கியம், இசை, சூழலியல் என பல்வேறு தலைப்புகளில் இந்த ஆய்வுக்கட்டுரை அரங்குகளைப் பிரித்திருக்கிறோம்; இந்த அரங்குகள் நான்கு இடங்களில் ஒரே சமயம் நடக்கின்றன. ஆழமான வித்தியாசமான பல கட்டுரைகள் வந்திருக்கின்றன. உதாரணமாக டேவிட் வெஸ்லி வடிவேலுவின் உடல்மொழி குறித்து எழுதியுள்ள கட்டுரையை சொல்லலாம். Standup comedy, விளையாட்டு பற்றி சினிமாவில் பயிற்சியாளரின் அதிகாரம் செயல்படுவது, பெண்ணியத்தை தெரிதாவின் கண்ணோட்டத்தில் அலசுவது போன்ற புதுமையான விசயங்களைப் பேசும் கட்டுரைகள் சிலவற்றையும் குறிப்பிடலாம். நான் நாகார்ஜுனரின் பௌத்த தத்துவம் (மாயாவாதம்) பற்றி ஒரு கட்டுரை வாசிக்கிறேன். நாலே முக்காலுக்கு கருத்தரங்கு முடிவுக்கு வருகிறது.

கருத்துகள்