முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்வர் ரஷீதின் Trance



இந்நேரம் அன்வர் ரஷீத் இயக்கத்தில் வெளியான “Trance” படத்தை கன்னாபின்னாவெனப் பாராட்டுகிற பல பேஸ்புக் பதிவுகளை படித்திருப்பீர்கள். ஆனால் நானும் இவர்களுடன் சேர்ந்து அல்லேயுயா எனக் கூவாமல் உண்மையை சொல்லி விடுகிறேன் - இப்படம் சுவாரஸ்யமானது, ஆனால் அதன் திரைக்கதை பிழையானது. மிகப்பெரிய ஓட்டை திரைக்கதையில் இருப்பதாலே அதன் இரண்டாம் பகுதி ரசிகர்களுக்கு அலுப்பூட்டுகிறது, புத்திசாலித்தனமான கிளைமேக்ஸ் மனதைத் தொடாமல் போகிறது.


டிரான்ஸ்மல்டி மில்லியன் ஜெபக்கூட்ட கார்ப்பரேட் அமைப்புகளை பகடி செய்யும், அம்பலப்படுத்தும் படம். நம்மூரில் சொல்வதானால் பால் தினகரனைப் போன்றோரை போலிகளாக சித்தரிக்க முயல்கிறது. “காதலா காதலாபடத்தில் போதகர் ஒருவர் முடமானவரை ஆண்டவர் குணப்படுத்துவதாய் நாடகம் போட்டு மக்களை ஏமாற்றும் காட்சி வரும். அதன் படோபமான ஒருமணி நேர நீட்சி தான்டிரான்ஸின்முதல் பாதி.
 அவநம்பிக்கைகளின் அழுத்தம் தாளாமல் போகும் ஒருவன் என்ன செய்வான்? ஒன்று, நொறுங்கிப் போய் அழிவான். அல்லது எதிர்முனைக்கு சென்று சென்று தன்னம்பிக்கையை போலியாக உண்டுபண்ணி அதனால் மேலெழலாம் என நினைப்பான். அடுத்து, அவன் இதையே மற்றவர்களுக்கும் போதிக்க எண்ணுவான். ஒரு தன்னம்பிக்கை போதகராக விரும்புவான். எப்படி பல மனநல மருத்துவர்கள் மனச்சிக்கல்களுடன் இருக்கிறார்களோ அப்படியே பாஸிட்டிங் சிந்தனை பற்றி பிரஸ்தாபிக்கும் வெற்றிச்சிந்தனையாளர்களும் தோல்வியைக் கண்டு ஓடுகிறவர்களே. பகத் பாஸிலின் விஜு பாத்திரம் இப்படியான ஒருவனே.

 அவனது வாழ்வில் அம்மா மற்றும் தம்பியின் தற்கொலைகள் அடுத்தடுத்து அவனை மனச்சோர்வுக்கு தள்ளுகின்றன. ஆனாலும் அவன் துணிச்சலுடன் மீண்டு வருகிறான். அவனது போலித்தனத்துக்கு மத்தியில் இந்த நிஜ உயிர்த்துடிப்பான ஆளுமை நிஜமானது. நம்மை ஈர்ப்பது. முதல் இருபது நிமிடங்களில் வரும் இந்த கதாபாத்திரத்தை நிறுவும் காட்சிகள் அழகானவை. அடுத்து ஒரு பெரும் கார்ப்பரேட் நிறுவனம் அவனை வேலைக்கெடுத்து பாஸ்டர் ஜோஷ்வா கார்ல்டனாக உருமாற்றுகிறார்கள். பாஸ்டர் ஜோஷ்வாவாக அவன் உலகப்புகழ் அடைகிறான். நிறைய பணம் சம்பாதிக்கிறான். அவனது மனநிலை சீரழிந்து அவன் தளர்ந்திடாதிருக்கும் பொருட்டு கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள் அவனுக்கு போதை மாத்திரைகளை அளிக்கிறார்கள். அவனது மனநிலையை இது முழுமையாக சீரழிக்கத் தொடங்குகிறது. அவன் தன்னை மெல்ல மெல்ல கடவுளாக நினைக்கத் தொடங்குகிறான்
டிரான்ஸில்இந்த பகுதி - கார்ப்பரேட் நிறுவனத்துக்குள் அவன் பாஸ்டராக பயிற்சி பெறும் பகுதிதான் சுவாரஸ்யமானது. ஆனால் இதுதான் திரைக்கதையின் பெரிய ஓட்டையாகவும் உள்ளது. இது கதையை மற்றொரு டிராக்கில் இழுத்து சென்று விடுகிறது. அந்த ஓட்டை என்ன?
ஒரு திரைக்கதையின் மையப்பாத்திரமான ஹீரோவுக்கு என்று ஒரு தேவை, விழைவு, நோக்கம் இருக்கும், அதுவே கிளைமேக்ஸில் நிறைவுபெறும் என ராபர்ட் மெக்கீ சொல்கிறார். இந்த படத்தின் ஹீரோவுக்கு அது தன்னுடைய துயரங்களில் இருந்து விடுதலை பெற்று, புகழடைந்து வாழ்வில் மேம்படுவது. படத்தின் இறுதி வரை அவன் முழுமையாக இந்த இலக்கை அடைவதோ அதற்காக முயல்வதோ இல்லை. பாஸ்டர் ஆன பின்னர் அவன் தன்னை மறந்து ஒரு போலியான பிரச்சாரகன் ஆகிறான், அப்போது அவன் இலக்கு தன் நிறுவனத்தின் போலித்தனங்களை உணர்ந்து அவற்றை அம்பலப்படுத்துவதாகிறது. இது ஆரம்ப பகுதியில் வரும் அவனது தேவையில் (துன்பத்தில் இருந்து விடுபட்டு வாழ்வில் புகழடைய வேண்டும்) இருந்து முரணாகிறது. ஒரு கட்டத்தில் இந்த படம் எதைப் பேசுகிறது, நாயகனுக்கு என்னதான் வேண்டும் எனும் குழப்பம் நமக்கு ஏற்படுகிறது. அதே போல கிளைமேக்ஸில் நமது ஹீரோ முதிர்ச்சியடைகிறாரா அல்லது பைத்தியமாகத்தான் எஞ்சுகிறாரா என்பதிலும் தெளிவில்லை. இது தான் அந்த பெரிய ஓட்டை. இதனால் தான் இப்படம் பெரிய அளவில் வணிக வெற்றி பெறவில்லை என நினைக்கிறேன்

இதையும் மீறி மூன்று விசயங்களுக்காக இப்படத்தைக் கொண்டாடலாம்
1) பகத் பாஸிலின் அபாரமான நடிப்பு.
2) நவீன காலத்தில் மதம் ஒரு மிகப்பெரிய போதைப்பொருளாக மாற்றப்படுவதை இப்படம் பேசுவது.
3) காட்சி மொழி - துவக்கத்தில் இருந்தே உருவகமாக வண்ண மீன்கள் வருகின்றன. தன் அம்மா இறந்த பின் தம்பிக்கு மனம் பிசகிட அவனை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வேலை செய்ய புறப்படுகிறான் சின்ன வயது நாயகன். அப்போது தம்பி ஜன்னலைப் பற்றிக் கொண்டு கத்த அண்ணன் வண்ண மீன்களை பிளாஸ்டிக் பையில் கொண்டு வந்து காட்டி அவனை மகிழ்ச்சிப்படுத்துகிறான். படம் முழுக்க இப்படி வண்ண மீன்கள் வந்து கொண்டே இருக்கின்றன - செயற்கையான பாதுகாப்புக்குள், போலியான நம்பிக்கைகளுக்குள் மனிதனை பூட்டி வைப்பதற்கான உருவகமாக. தம்பியை முதலில் விஜு ஒரு வண்ணமீனாகப் பூட்டி வைக்கிறான். அடுத்து விஜுவை அந்த கார்ப்பரேட் நிறுவனம் பாஸ்டராக்கி வண்ணமீனாக்குகிறார்கள். இறுதியில் நாயகி ஆம்ஸ்டர்டாமில் கண்ணாடிக்குள் இருந்து உடலைக்காட்டி சம்பாதிக்கும் அழகியாக வேலை செய்கிறாள் என குறிப்பாகக் காட்டுகிறார்கள். அவளை அங்கு அவன் காண செல்லும் போது அவள் ஓடி வந்து (தன் விடுதலையை குறிக்கும் வண்ணம்) ஒரு கண்ணாடியை ஓங்கிக் குத்தி உடைக்கிறாள். அத்துடன் படம் முடிகிறது. அது அவள் தனது கண்ணாடிக்குடுவை உடைத்து வெளிவந்து விட்டாள் என்பதை காட்சிவழியாக காட்டுகிறது. இந்த காட்சிபூர்வமான சரடு ரசிக்கத்தக்க ஒன்று.  

படத்தின் உருவாக்கத்திலும் நடிப்பிலும் செலுத்திய அக்கறையை திரைக்கதையை நேர்த்தியாக்குவதிலும் செலுத்தி இருந்தால் இது ஒரு கிளாசிக் ஆகியிருக்கும்.

கருத்துகள்

Sivakumar இவ்வாறு கூறியுள்ளார்…
As per the article, the screenplay is flawed since the motive or the purpose of the hero (becoming rich and popular) is not in line with his final act of exposing the villain gang. But the same seems to happen in Mudhalvan too, where the hero was never interested in becoming a CM nor doing social services. He is just a common man contended with his job and family right? Did not we see it as a transformation and root for him?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...