மோடியின் அரசியல் குறித்த நல்லதொரு கட்டுரை இது. கட்டுரையாளரின் வாதங்களில் பெரும்பாலும் சரியானவை, ஒன்றைத் தவிர - மக்களிடையே, ஏழைகளிடையே மோடியின் புகழ் மங்குவதாய், பிம்பம் சரிவதாய் நான் நம்பவில்லை. மோடியின் மக்கள் ஆதரவு ஏறி இறங்கி வருகிறது. நம்மை விட அவர் இதை நன்றாக அறிவார்.
எப்படி ஒரு படம் தோல்வியடைந்ததும் ரஜினி தன் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை இழப்பதில்லையோ மோடியும் ஒரே நாளில் மக்களால் வெறுக்கப்படப் போவதில்லை. அவரால் ஆயிரம் பேரைக் கொன்று விட்டுக்கூட மக்களின் நாயகன் எனப் பெயரெடுக்க முடியும் (அவர் அப்படி செய்வார் என நான் கூறவில்லை). காங்கிரஸ் அரசு மக்கள் நலப்பணிகள், நிவாரண உதவிகளை இது போன்ற அழிவுக்காலங்களில் செய்யத் தயங்காது. அரசு கொடுக்கும் இடத்திலும் மக்கள் வாங்கும் இடத்திலும் இருந்த காலம் அது. ஆனால் இன்று மக்களின் சமூக உளவியல் மாறி விட்டது - அவர்களுக்கு தமக்கு நிவாரணம் அளித்து பிரச்சனைகளைத் தீர்ப்பவர்களை அல்ல கனவு காண வண்ணத்திரைகளை எழுப்பி ஒளிர விடுபவர்களையே பிடிக்கிறது. ஏழ்மையை குறைப்பவரை விட ஏழ்மையில் இருந்து நீ எழுந்து வர கைகொடுக்கிறேன், நீயாக எழுந்து வா என உத்வேகத்துடன் பேசுகிறவர்களையே பிடிக்கும் - தன் கையை ஏழை நோக்கி ஒருபோதும் அவர் நீட்ட மாட்டார் என்றாலும்.
இன்றைய வாக்காளன் மோடி தன்னை சமமாக கருதிப் பேசுகிறார் என்பதற்காகவே பூரித்துப் போகிறான். இந்தியாவை புத்துருவாக்கும் வாய்ப்பை மோடி தனக்குத் தருகிறார் என நினைக்கையில் அவன் மனம் நெகிழ்கிறது. அவர் ஒருநாளும் அத்தகைய திட்டங்களை நிறைவேற்றவோ இலக்குகளை அடைய முயலவோ மாட்டார் என்றாலும் கூட அவன் அதை பொருட்படுத்த மாட்டான். மோடிக்கும் மற்ற தலைவர்களுக்குமான வித்தியாசம் இது - தேசத்தை காப்பாற்றுகிற, உயர்த்துகிற பணியை, அதன் பொறுப்பை மோடி குடிமக்களின் தோளில் சுமத்துகிறார். மக்கள் ஒரே நாளில் தாம் உன்னத நிலையை அடைந்ததாய் எண்ணி பூரிக்கிறார்கள். ஒவ்வொரு வாக்காளனும் தானும் பிரதமரும் ஒன்றே என நம்பும்படி அவர் பிரச்சாரம் செய்கிறார். வேறு எந்த தலைவருக்கும் இந்த நுட்பம், இந்த ரகசியம் தெரியாது. டமானிடைசேஷன், கொரோனாவின் போதான அரசின் கருணையற்ற அணுகுமுறை என ஒவ்வொன்றின் போதும் ஒரு பக்கம் குடிமக்கள் கடும் துன்பங்களை அனுபவித்தபடியே அதற்குக் காரணமான தம் பிரதமரை தெய்வமென வணங்குகிறார்கள். சொந்த ஊருக்கு செல்ல பல்லாயிரம் மைல்கள் மக்கள் நடந்தே சாகும் போதும் தம் பிரதமரின் நிழலைத் தொட்டு வணங்குகிறார்கள். இப்போது தேர்தல் நடந்தால் மோடி அதே எண்ணிக்கையுடன் வென்று ஆட்சியமைப்பார் என உறுதிபடக் கூறுவேன். மோடி விரும்பினால் அடுத்த கால் நூற்றாண்டு காலம் இந்த தேசத்தை ஆளலாம். (என்ன அமித் ஷா தான் மனமுடைந்து போவார்)
இது போன்ற கட்டுரைகளில் சொல்லபடும் கருத்துக்கள் சரியே என்றாலும், மோடி மக்களிடையே தன் ஆதரவை இழக்கிறார் என்பது போன்ற இந்த ஊகங்களை நான் நம்பவே மாட்டேன். மக்கள் மாறினால் ஒழிய இந்நிலை மாறாது!
கருத்துகள்