முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் (1)




அண்மையில் வாசிப்பு குறித்து நான் எழுதிய கட்டுரைக்கு போகன் சங்கர் செய்த ஒரு எதிர்வினையில் தொல்படிமங்களுக்கு இலக்கியத்தில் உள்ள முக்கியமான இடத்தைப் பற்றி கீழ்வருமாறு பேசுகிறார். நான் அவருடன் ஓரளவுக்கு உடன்படுகிறேன், ஆனால் நிறையவே முரண்படுகிறேன் என்பதால் அவரது மேற்கோளையே இந்த கட்டுரையின் துவக்கமாகக் கொள்கிறேன்


நல்ல வாசிப்பு என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.அன்னோஜனின் கதைக்கு சர்வோத்தமன் சடகோபன் அன்னோஜன் தனது கதையை ஒரு தொன்மத்துடன் இணைத்து முடிக்கவில்லை என்று கவனித்திருந்தார்.ஜெயமோகனை ஆதர்சமாகக் கொண்டவர் அன்னோஜன் எனும்போது இது முக்கியமான ஒரு விலகலாகும்.ஜெயமோகன் இந்த தொன் படிமங்களை அதிகம் பயன்படுத்துகிறவர்.நான் அவற்றை தலை கீழாக்கி பயன்படுத்துவதுண்டு.இந்த தொன் படிமங்களை உடைக்கிறேன் பேர்வழி என்று எதிர்க்கதைகள் விடுகிறவர் கதைகளில் கூட இந்த தொன் படிமங்கள் கருங்குரங்குத் தைலம் போல அந்தர்யாமியாய் இருக்கின்றன.நவீன காலத்தின் சிக்கல்களை இப்படி தொல் படிமங்களோடு இணைத்துப் பார்க்கும் தன்மையை flintstonian tendency என்கிறார்கள். இது Flintstones என்கிற கார்ட்டூன் தொடரிலிருந்து வந்த சொல்.இதில் கற்கால மனிதர்கள் நிகழ்காலப் பிரச்சினைகளோடு உலாவுகிறார்கள்.இது போன்ற விஷயங்களை கவனிக்கிற வாசகர் எழுத்தாளனுக்கு கிடைப்பது அதிர்ஷ்டம்.”
- போகன் சங்கர் 

போகனின் இந்த நோக்குடன் நான் ஓரளவுக்கு உடன்படுவேன் - ஒரே சிக்கல் அவர்வாசகர்” / “வாசிப்புஎன வருமிடத்தெல்லாம்விமர்சகர்” / “விமர்சனம்என மாற்றினால் இது என் பார்வை ஆகிடும். ஆனால் போகன் ஒப்புக்கொள்ள மாட்டார். அவர் வாசிப்பு அனுபவத்தை ஒரு பிரக்ஞைபூர்வமான, அறிவார்ந்த அவதானிப்பாக கருதுகிறார். ஒரு உதாரணம் தருவதானால் நீங்கள் உங்கள் வீட்டை அடைந்து கதவைத் தட்டிட உங்கள் மனைவி வந்து கதவைத் திறக்கிறார். உங்களுக்கு அது உங்கள் மனைவி என யோசிக்காமலே தெரியும். வேறேதாவது ஒரு பெண் வந்து திறந்து விட்டால்ஆர்வமாகி’ “யார் இவள்?” என யோசிப்பீர்கள். கதவு தானே திறக்கப்பட்டது போல உள்ளே நுழைவீர்கள். மனைவியின் இருப்பு ஒருவருக்கு பழகிப் பழகி அவர் இருந்தபடியே இல்லாமல் ஆகிறார். (-மனைவி ஆகிறார்.) தொல்படிமங்கள் இப்படித்தான் நமக்குள் செயல்படுகின்றன. உடலெங்கும் சாம்பலைப் பூசிய சுடலையாக சிவன் ஒரு காட்சியில், ஒரு கவிதையில் தோன்றினால் அது யார் எனக் கேட்காமலே, “அடையாளம் காணமலேநீங்கள் அந்த காட்சிக்குள், கவிதைக்குள் நுழைந்து விடுவீர்கள் (மனைவியைநீ யார்?” எனக் கேட்காமல் வீட்டுக்குள் நுழைவதைப் போல). வாசிப்பில் முழுக்க மூழ்கிவிட்ட பிறகு அந்த சுடலை வேறொரு உணர்வுநிலையாக உங்கள் ஆழ்மனத்தின் கண்களால் உணரப்படும். அடுத்து அது ஒரு புலனனுபவமாக உங்கள் உடம்பால் உணரப்படும். அதுவே வாசிப்பின் உச்சம். இதற்கு நீங்கள் இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை. ஒரு முஸ்லீமோ கிறித்துவரோ கூட ஆழ்ந்த வாசிப்பில் இந்த பேருருவைக் கண்டுகொள்வார்.

வீட்டுக்குள் சென்றதும் எப்படி வீடு வீடல்லாமலும், மனைவி மனைவியல்லாமலும் ஆகிறாரோ அப்படியே ஒரு பிரதியும் அதனுள் தோன்றும் தொல்படிமமும் உருமாறுகிறது. ஆனால் இதே தொல்படிமத்தை நீங்கள் பிரக்ஞைபூர்வமாய் பகுத்தறிய முயன்றால் அது வாகன ஹெட்லைட்டைக் கண்டு உறைந்து நின்ற முயலைப் போலாகி விடும். உயிரற்று உணர்வற்று வெறும் சடலமாக.

 இந்த வித்தியாசத்தைப் புரிய மற்றொரு உதாரணம் தருகிறேன்: நீங்கள் உங்கள் காதலியுடன் உலலாசமாக ஒரு அறையில் இருக்கும் போது சட்டென கதவு திறக்கப்படுகிறது. ஒரு வெடிகுண்டைப் போல அங்கு உங்கள் மனைவி நுழைகிறார். அப்போது உங்கள் மனம்ஐயோ மனைவிஎனச் சொல்லும், ஏதோ உங்களுக்கு அது ஏற்கனவே தெரியாதது போல. (ஆனால் காதலியுடன் இருக்கும்போதுஐயோ காதலிஎன கண்டுகொள்ளாது.) ஏனென்றால் அப்போது ஒரு இருமை தோன்றுகிறது - காதலியுடன் இருக்கும் நீங்கள், காதலியுடன் இருக்கும் மணமான நீங்கள் என இரண்டு நபர்கள் ஆகிறீர்கள். இரண்டையும் ஒரே சமயம் எதிர்கொள்ள முடியாமல் அந்த கணம் தவிப்பீர்கள். அப்போது நீங்கள் இந்த இருவரையும் கவனித்து உணர்கிற ஒரு மூன்றாவது நபராக (ஜெ.கிருஷ்ணமூர்த்தி சொல்வதைப் போலபார்க்கிறவராக”) மாறுகிறீர்கள். இது உங்கள் அவஸ்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. (இப்போது உங்கள் மனைவியின் கண்களின் வழி இவை அத்தனையையும் உங்களால் பார்க்க முடிந்தால் இந்த மூன்று பேர்களும் மறைந்து நீங்கள் ஒருவராகி விடுவீர்கள்; அவஸ்தையும் நீங்கி விடும்.)

 ஒரு கதையை உக்கிரமான மனநிலையில் நின்று வாசித்து வெளிவரும் நீங்கள் நடப்பு வாழ்க்கையுடன் இணங்க இப்படித்தான் சற்று தடுமாறுவீர்கள். (அடுத்து அதை மறந்து விடுவீர்கள்.) ஏனென்றால் அங்கும் இலக்கியப் பிரதியுடன் ஒன்று கலந்த நீங்கள் - நடப்புலகில் தனியாக இருக்கும் நீங்கள் என ஒரு இருமை தோன்றுகிறது. ஆனால் சில நாட்கள் கழித்து அந்த பிரதியை நினைவில் மீட்டு அறிவார்ந்து பகுத்தறிந்து ஒரு நண்பரிடம் பேசும் போது நீங்கள் இந்த தடுமாற்றத்தைக் கடக்க ஒரு நல்ல உத்தியை கண்டடைந்து விட்டீர்கள் - மியூசியத்தில் காட்சிப்படுத்தப்பட்ட தொல்பொருட்களைப் போல உங்கள் அனுபவத்தை மாற்றி விட்டீர்கள். அதைக் கொண்டு பதப்படுத்தி விட்டீர்கள். அப்போது நீங்கள் ஒரு தொல்படிமம் தோன்றும் கதையைப் படித்திருந்தாலும் அதைப் பற்றி பேசும் போது அக்கதையில் உள்ள தொல்படிமத்தை அல்ல உங்கள் நம்பிக்கைகளுக்கு உடன்படுகிற ஒரு தொல்படிமத்தையே தோண்டி எடுத்து தருகிறீர்கள். இரண்டும் வேறு வேறு
சில இலக்கிய உதாரணங்கள் தருகிறேன்:
மகேஸ்வதா தேவியின்திரௌபதிசிறுகதை மாவோயிச போராட்டத்தை மாகாபாரத தொன்மப் பின்னணியில் வைத்து ஒரு பெண்ணின் பார்வையில் சித்தரிப்பது. அதை ஒரு மார்க்ஸிஸ்ட் படிப்பது, ஒரு காவலதிகாரி வாசிப்பது, அது எழுதப்பட்ட மொழியில் ஒருவர் படிப்பது, மொழியாக்கத்தில் படிப்பது, அரசதிகாரத்தின் தரப்பில் இருந்து ஒரு படிப்பது, தென்னிந்தியாவில் இருந்து ஒருவர் படிப்பது, ஒரு ஆண் படிப்பது, ஒரு பெண் படிப்பது எல்லாம் ஒரே சமயம் ஒன்றாகவும் மற்றொரு சமயம் வேறுவேறாகவும் இருக்கும். ஆனால் அதை உணர்வுரீதியாகப் படித்தால் அதில் வரும் திரௌபதி உங்களுக்குள் எழுப்புகிற உணர்வுகள் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கும். அதை நீங்கள் சுலபத்தில் பகுத்தறிய முடியாது. நம்முடைய நினைவின் சரடுகளில் எங்கோ தொலைந்து போன ஒரு பெண்ணை அங்கு காண்கிறோம். அப்பெண் ஒரு ஆணாகவும் பெண்ணாகவும் நமக்குத் தோன்றலாம். அக்கதையை ஒடுக்கப்படும் போராளி-ஒடுக்குகிற அரச படைகள் எனும் இருமையை கடந்து நாம் வாசிக்கலாம். அப்போது நாம் காணும் திரௌபதி மகாபாரத திரௌபதி அல்ல. அவள் வேறொரு பெண். ஒரு ஆதிப்பெண். நாம் இந்த மண்ணில் தோன்றுமுன்பே தோன்றியவள். பாலின வேறுபாட்டைக் கடந்தவள். இருமையை மீறியவள். சொல்லப் போனால் மகேஸ்வதா தேவி இப்படி நேரடியாக தலைப்பில் குறிப்பிடவில்லை என்றாலும்அவளைநாம் கதைக்குள் கண்டுகொள்வோம். ஆனால் அக்கதையில் இருந்து வெளிவந்த பிறகு நாம்தெளிவாகஇவளைதிரௌபதியாகஅடையாளம் காண்கிறோம் - அதாவது நாம் பூடகமாய் உணர்ச்சிகரமாய் உணர்ந்த ஒருத்தியை இப்போது தூல வடிவில் கொண்டு வரும் பொருட்டுதிரௌபதிஎன அழைக்கிறோம். அடுத்து நாம் முற்போக்கா, பிற்போக்கா, அரச பயங்கரவாத ஆதரவாளரா, எதிர்ப்பாளரா, பெண்ணியவாதியா என்பதைப் பொறுத்து நாம் பேச்சிலோ விமர்சனத்திலோ முன்வைக்கும் நம்திரௌபதிமாறுபடுவாள். பயங்கரவாத எதிர்ப்பு திரௌபதி, பெண்ணிய திரௌபதி, சாதாரணப் பெண்ணான திரௌபதி, குடும்பப் பெண் திரௌபதி, சக்தி வடிவான திரௌபதி என இப்படி. எனக்கும் போகனுக்கும் உள்ள வித்தியாசம் அவர் இந்த இரு திரௌபதிகளும் (ஆதி அரூப வடிவமும் தூலமான தர்க்க ஒழுங்கு கொண்ட வடிவமும்) ஒன்று என்கிறார், நான் இவர்கள் இருவரும் வேறுவேறு என்கிறேன். அவர் இப்படி அடையாளம் காணும் வாசகரை ஒரு எழுத்தாளன் அடைவது அதிர்ஷ்டம் என்கிறார், நான் அது ஒரு துரதிஷ்டம் என்கிறேன். இந்தக் கதையைப் படித்து உருகுகிற, ஏன் இப்படி ஒரு கதையினால் நெகிழ்ந்து தானற்றுப் போகிறோம் என உணராமலே உணர்கிற அந்த வாசகரை சந்திக்க முடிந்தால் மட்டுமே அது அதிர்ஷ்டம் என்கிறேன்

கருத்துகள்