முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊழல் குற்றச்சாட்டுகள் ஏன் மோடி மீது ஒட்டுவதில்லை? (2)



ஓஷோ, சத்யசாய் பாபா, அமிர்தானந்த மயி துவங்கி நித்தியானதா, ஜக்கி வாசுதேவ், ஶ்ரீஶ்ரீ வரை இந்தியாவின் மிகப்பெரும் செல்வந்தர்களாக மாறிய சாமியார்கள், ஆனால் எந்த பக்தனும் இந்த பணம் எப்படி உங்களிடம் வந்தது, ஒரு துறவிக்கு எதற்கு இவ்வளவு சொத்து என வினவவில்லை. இவர்களுக்கு குடும்பமில்லை, இந்த சொத்து முழுக்க ஒரு ஆன்மீக அமைப்புக்கு சொந்தமானது, இந்த அமைப்பு இந்துமதத்தின் பொது சொத்து, இந்துக்களாக தாம் அனைவருக்கும் பொதுவானது, சாமியார் காலமானதும் அது இந்து மதத்துக்குத் திரும்பி விடும் என பக்தர்கள் கற்பனை பண்ணுகிறார்கள். ஜக்கி வாசுதேவ் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து ஜெயமோகன் எழுதியிருந்த கட்டுரையிலும் இதே மனநிலையைத் தான் வெளிப்படுத்தியிருந்தார்; பெரும்படிப்பாளரான, அறிவாளியான ஜெயமோகனாலே கார்ப்பரேட் மதத்தலைவர்களின் பெருஞ்செல்வம் தனிச்சொத்தே அன்றி சமூகத்துக்குப் பொதுவானதல்ல எனும் இந்த எளிய உண்மையை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் எளிய பாமர மக்களின் கதியை கற்பனை செய்து பாருங்கள். இந்த மேம்போக்கான மரபான பொது உளவியலே தமது பணத்தை, நகைகளை சாமியார்களின் காலடியில் கொண்டு போய் வைக்க இந்த பக்தர்களைத் தூண்டுகிறது. கங்கையில் அஸ்தியைக் கரைப்பதைப் போல அல்லது மூழ்கி தம் பாவங்களைக் கரைப்பதைப் போல இந்த நன்கொடையை அவர்கள் பார்க்கிறார்கள். இந்திய தொல்மனம் குறியீடுகளால் சிந்திக்கக் கூடியது. சாமியார்களின் சொத்துமதிப்பை பகுத்தறிவாளர்கள் விமர்சிக்கும் போது பக்தர்களுக்கு கொலைவெறி வருவதும் இதனாலே.  


நான் தந்துள்ள பட்டியலில் ஒரு பெயர் பொருந்தாமல் பிதுங்கி நிற்கும். ஏற்கனவே கவனித்திருப்பீர்கள் - நமதுஅத்தனைக்கும் ஆசைப்படுஜக்கி தான். அவர் மணமானவர். நானறிந்து அவரது மகள் (அவரும் மணமானவரே) ஆசிரமத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறார். பூஜ்யத்தில் இருந்து இன்று ஜக்கி சொந்தமாய் ஹெலிகாப்டரில் வந்திறங்கும், வெளிநாட்டுக் கார்களில் பறக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 1100 கோடி. ஆனால் பக்தர்கள் (நமது தமிழ் எழுத்தாளர்களில் சிலரையும் சேர்த்தே) இதை ஜக்கியின் பணமாகப் பார்ப்பதில்லை. இத்தனைக்கும் அவர் தன்னை மரபான சாமியாராகக் காட்டிக் கொள்வதில்லை. வாழ்க்கையைக் கொண்டாடினால் தப்பில்லை என்பதே அவரது கொள்கை (ஆனால் அவரது ஆசிமரத்தில் துறவிகள் மணமுடிக்கவோ செல்வச்செழிப்புடன் இருக்கவோ கூடாது). ஜக்கியின் வெற்றி ஒன்றைக் காட்டுகிறது - நீங்கள் சாமியாராக இருக்கும்பட்சத்தில் அனைத்தையும் துறக்காவிடிலும், மலைமலையாக பணத்தைக் குவித்து அதன் உச்சியில் கால்மேல் காலிட்டு அமர்ந்து கொண்டாலும் இந்திய மனம் உங்களை ஒரு துறவியாகவே புரிந்து கொள்ளும். ஜக்கியைப் போன்றே சாமியாருக்கும் லௌகீகவாதிக்கும் இடைப்பட்ட வெளியை ஆக்கிரமிக்கும் மற்றொரு பெருந்தலைவர் நமது ஜி


ஜிக்கும் அதானிக்கும் உள்ள பினாமி தொடர்பு வெளிப்படையானது, ஆனால் மக்கள் (1) அவர் திருமணமானாலும் பிரம்மச்சாரி (ஜக்கியைப் போன்றே) என்பதால் அவரது பினாமி சொத்துக்களை, அவரது செல்வசெழிப்பான தோற்றத்தை அவருடைய ஊழலாகப் பார்ப்பதில்லை. (2) அடுத்து ஜக்கியைப் போன்றே ஜி ஒரு இடைநிலை துறவியாகத் தோன்றுகிறார் - அவர் வசம் கோடானுகோடிக்கு சொத்தும் இந்தியாவை நினைத்த போது திகைக்க வைக்கும் சர்வாதிகாரமும் உள்ளது, ஆனால் அவரது பிம்பத்தில் இந்த வளமும் அதிகாரமும் ஒட்டுவதில்லை; அதே போலத்தான், தாமரை இலை நீர்த்துளிகளாக, வழக்கமான அரசியல்வாதி / தலைவர் / பிரதமர் பிம்பம் அவர் மீது ஒட்டியும் ஒட்டாமல் இருக்கிறது. நான் அவரது பினாமி சொத்துக்குவிப்பு பற்றி பேசும் போதே அதை சுலபத்தில் நிரூபிக்க முடியாது என்றும் புரிந்து கொள்கிறேன் - அவர் தனக்கென மாடமாளிகளைகளை எழுப்புவதில்லை, அவர் தன் நண்பர்களின் மாடமாளிகளைகளில் குடியிருப்பார் (காந்தியைப் போன்று); அவர் சொந்தமாக ஜெட் விமானம் வைத்துக் கொள்வதில்லை, தன் நண்பர்களில் ஜெட் விமானங்களை பயன்படுத்துவார். அவரது மனைவி, சகோதர சகோதரியருடன் அவர் தன் சொத்து, அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில்லை. அவரது தாய் இன்னமும் ஒரு எளிய இல்லத்தில்தான் வசிக்கிறார். இது சற்று வினோதம் ஆனால் உண்மை - ஒரு கலைஞனோ, நடிகனோ, ஏன் ஒரு அரசியல் தலைவரோ கூட ஜி செய்ததைப் போல தன் மனைவியை விலக்கி வைத்து அதற்கு தகுந்த காரணத்தை வழங்காமல் இப்படி தனித்து அனாதையாக வாழ விட்டிருந்தால் அதை மக்கள் மன்னித்திருக்க மாட்டார்கள். ஆனால் ஜி மனைவியை தான் விட்டு விலகி வாழ்ந்த காலம் முழுக்க தான் ஒரு துறவியாகதவம்புரிந்து வந்ததாகக் கூறுவதால் மக்கள் உடனே மனம் கனிந்து, நெகிழ்ந்து அவரை வணங்குகிறார்கள். இதுவே ஒருவர் கணவராகவும் சாமியாராகவும் ஒரே சமயம் இருப்பதன் சிறப்பு - நீங்கள் இரண்டிலுமே சீரியஸாக இருக்க வேண்டாம், அவப்பெயர் வராது. ஒரு படத்தில் கவுண்டமணி இப்படி சாமியார் வேடத்தில் ஊர் திரும்பும் ஒரு குடும்பஸ்தன் பாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தக் காட்சியைப் பார்த்தால் சிரித்து சிரித்து புரையேறும். நிஜவாழ்வில் இது வேடிக்கை அல்ல மிக சீரியஸான ஒரு விசயம். ஊரில் நான் இத்தகையை மனிதர்களைப் பார்த்திருக்கிறேன் - மக்கள் இவர்களை விழுந்து வணங்குவார்கள். ஒரு பணக்காரன் தனது தாயை குடிசையில் வாழ விடுகிறான் என்றால் மக்களை அதை மிகப்பெரிய குரூரம் என நினைப்பார்கள். ஆனால் ஜி அதை செய்யும் போதுஎவ்வளவு அற்புதமான மக்கள் தலைவர் இவர்என நாம் பெருமிதம் கொள்கிறோம், வாழ்த்துகிறோம்

ஆனால் ஜி இதை திட்டமிட்டு செய்வதாய் நான் நம்பவில்லை. இயல்பிலேயே அவருக்கு இது அமைந்து விட்டது. ஜி பிற இந்தியர்களைப் போல அன்றி தன் குடும்ப உறவினர்களுடன் ஒட்டி உறவாடுவதில் என்றுமே ஆர்வம் காட்டியதில்லை; ஆரம்பத்தில் தன்னை கரசேவக்காகக் காட்டிக் கொண்டார், பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பு கிடைத்ததும் அதுவாக மட்டுமே தன்னை காட்டிக் கொண்டார். மேடையில் தன் குடும்பத்தினர் அலங்கரிக்கத் தோன்றுவது அவர் வாழ்வில் என்றுமே இருந்ததில்லை. அவர் குஜராத் முதல்வர் ஆன பின்னர், இந்திய பிரதமர் ஆன பின்னர் இதை தன் லௌகீகத் துறவி பிம்பத்தை வளர்க்க மிக சாமர்த்தியமாக பயன்படுத்தினார்; கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் அவர் பதின்வயதிலேயே துறவு மேற்கொண்டு இமயமலையில் ஞானம் தேடித் திரிந்து பின்னர் தேசப்பற்றின் காரணமாக அரசியல் எனும் மற்றொரு துறவுக்கு வந்த கதையை சொல்லாமல் விடுவதில்லை. ஆரம்பத்தில் இருந்தே குடும்பத்துடன், உறவுகளுடன் அவருக்கு உளவியல் ரீதியாக ஒரு ஒவ்வாமை இருந்துள்ளது என நினைக்கிறேன். திருமணமான நிலையில் அவர் தன் மனைவியை கைவிட்டது, எங்குமே அவரைக் குறிப்பிடாமல் இருப்பது ஒருவிதத்தில் அநியாயமே. ஆனால் இந்த அநீதி கூட அவருக்கு அனுகூலமாக மாறியுள்ளது.


இங்கு மற்றொரு கேள்வி எழுகிறது. என்னுடைய இந்த விளக்கத்துடன் பொருந்திப் போகாத ஒரு அரசியல் ஆளுமை, தலைவர் இருக்கிறார் - மாயாவதி? ஏன் மாயாவதிக்கு தன் படோபமான, சுயமுன்னெடுப்பு அரசியலுக்கு, சொத்து சேர்ப்புக்கு மாயாவதிக்குக் கிடைத்த அவப்பெயர், எதிர்மறை விமர்சனம் ஜிக்கு கிடைப்பதில்லை? ஜெயலலிதாவுக்கும் சசிகலா குடும்பத்துக்குமான தொடர்பே அவர் மீது ஏற்பட்ட மக்கள் கோபத்துக்குக் காரணம் என்றோம். மாயாவதிக்குத் தான் குடும்பமே இல்லையே. ஏன் அவரும் ஜியைப் போல மக்களால் கொஞ்சி சீராட்டப்படுவதில்லை? இங்கு தான் ஜி வெறுமனே ஒரு பிரம்மச்சாரி அல்ல அவர் கிட்டத்தட்ட ஒரு சாமியாராக பார்க்கப்படுகிற மதத்தலைவர் என்பதை கவனிக்க வேண்டும். மாயாவதி ஒருவேளை தன்னை அமிர்தானந்த மயியைப் போல வடிவமைத்திருந்தால் அவர் தன்னுடைய ஆயிரம் சிலைகளை .பி எங்கும் நிறுவினாலும், வைர மாலைகள் கழுத்தெங்கும் அணிந்து கொண்டாலும் மக்கள் அதை கேள்வின்றி, விமர்சனமின்றி ஏற்றுக் கொண்டிருப்பார்கள். (என்ன, அது தலித் அரசியலை சாக்கடையில் தள்ளியிருக்கும்!)


இதிலிருந்து எதிர்கால அரசியல் தலைவர்கள் பெற்றுக் கொள்ள ஒரு முக்கிய பாடம் உள்ளது

1) ஊழல் செய்வது, அதிகாரத்தைக் குவிப்பது, பல்வேறு குற்றங்களுக்குத் துணை போவது இன்றைய கார்ப்பரேட்மய அரசியல் களத்தில் தவிர்க்க முடியாதது; ஆனால் திருமணம் செய்யாதீர்கள். கட்சிகள் தமது எதிர்காலத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது அவர் பிரம்மச்சாரியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

2) மணமானவர் என்றால் குடும்பத்துடன் பொதுவெளியில் காட்சி அளிப்பது, தான் பெருக்கின சொத்தை, தனது செல்வாக்கை அவர்கள் பகிங்கரமாய் பயன்படுத்துவதை அனுமதிக்காதீர்கள் (நேருவில் இருந்து மன்மோகன் சிங், கேஜ்ரிவால் வரை பல உதாரணங்கள்).

3) அப்படியே ஒரு குடும்ப வாரிசாக நீங்கள் இருந்தால் நேரடி அரசியல் களத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் ஆட்சியில் இருக்க விரும்பும் காலம் வரை உங்கள் சொந்த நிறுவனங்கள், சொத்துக்களை வெளிப்படையாக நிர்வகிக்க உங்கள் மனைவி, குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்

4) ஒரு கார்ப்பரேட் சாமியாருடன் கைகோர்த்து உங்களை ஒரு கடவுள் அவதாரமாக கட்டமையுங்கள். அதன் பின் நீங்கள் என்ன செய்தாலும் மக்கள் கைகொட்டி / கைவணங்கி ஏற்றுக் கொள்வார்கள்.


நம் மக்களுக்கு ஊழல் ஒரு பிரச்சனையே அல்ல, குடும்பம் மட்டுமே! கண்ணதாசன் ஏற்கனவே சொல்லியிருக்கிறார் - “மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்!” அவ்வாக்கை பின்பற்றி நீங்கள் தெய்வமாகி விட்டால் முறையற்ற சொத்து, தவறான நிர்வாகம், குடும்ப அரசியல் கூட மக்களுக்கு பொருட்டாக இருக்காது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...