முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் (3)

ரஷ்ய விமர்சகர் பக்தின்

நான் இங்கு விவாதித்து நிறுவ முயல்வது அத்தனையும் ஏற்கனவே நமது தத்துவ மரபில் இருக்கிறது. ஒருவேளை ஜெ.மோ, போகன் மற்றும் அவர்களை ஒத்த பிறரும் மேற்கத்திய லௌகீக, விஞ்ஞானபூர்வ மரபினால் பாதிக்கப்பட்டு, வாசிப்பை ஒரு நிரூபணம் சார்ந்த பருண்மையான செயல்முறையாக காணலாம். தத்துவத்தில் இந்த முரணை logos vs mythos என்பார்கள். லோகோஸ் என்றால் அனுபவத்தை ஒரு பார்முலாவாக சுருக்குவது, எதையும் தூலமாகக் கண்டு நிரூபித்தாலே உண்டு என சொல்வது. அதிலிருந்து தான் விஞ்ஞானம் தோன்றியது. மித்தோஸ் என்பது மானுட அனுபவம் அதன் ஆழமான நிலையில், வாழ்வது மட்டுமே, அது நிரூபிக்க முடியாதது, மொழியின் கட்டமைப்புகளைக் கடந்தது எனக் காண்பது. அதில் இருந்து இலக்கியமும் கலைகளும் சில தத்துவ மரபுகளும் தோன்றின. தத்துவத்தில் அரிஸ்டாட்டில், விட்ஜென்ஸைன் போன்றோர் லோகோஸ் அணியை சேர்ந்தவர்கள். கீர்க்கெகாட், நீட்சே, சார்த், ஹைடெக்கர் ஆகியோர், இலக்கிய விமர்சனத்தில் தெரிதா, பக்தின் போன்றவர்கள் மித்தோஸ் அணியில் பிரதானமானவர்கள். தத்துவத்தில் பின்னர் இது பகுப்பாய்வு தத்துவம் (analytic philosophy) vs. மீமெய்யியல் (metaphysics) என இரு எதிரெதிர் படைகளாக ஆயுதமேந்தி நின்றன


ஆனால் இந்திய தத்துவ மரபில் இந்த பிரிவினை என்றுமே இருந்ததில்லை - நாம் பிரக்ஞை குறித்த விசாரணை என்பது உடலையும் பருண்மையான இந்த உலகையும் அறியும் போதே சாத்தியமாகும், இரண்டும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவை என நம்பினோம். ஆகையாலே அறிவார்ந்த தரப்புக்கு வாசிப்பில் ஜெ.மோ, போகன் போன்றோர் கொடுக்கிற மிதமிஞ்சிய இந்த முக்கியத்துவம் மேற்கத்திய மரபின், அவர்கள் ஆங்கிலம் வழி பெற்ற அந்நிய தாக்கத்தினால், அதன்ஹேங் ஓவரினால்தானோ எனத் தோன்றுகிறது. குறிப்பாக, ஜெயமோகனுக்கு இளமையில் பரிச்சயமான மார்க்ஸியத்தின் நீட்சியான cultural materialismத்தின் தாக்கம் இன்றும் உண்டு, வாழ்க்கையை வரலாற்று விசைகளால், தர்க்கவிதிகளால் இயங்கும் ஒரு பிரம்மாண்ட எந்திரமாகப் பார்க்கிறார் (அவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மார்க்ஸியர்களை சாடினாலும்) என்பது வருந்தத்தக்கது.

 மீண்டும் உங்கள்பூர்வநிலத்துக்குமீளுங்கள் என இவர்களை நோக்கி கரத்தை நீட்டி விரும்புகிறேன். இந்த நிலத்தில் வாழ்வதும் உணர்வதும் சிந்திப்பதும் ஒன்றுடன் ஒன்று பின்னியவை. இதை அவர்கள் தனித்தனியாக பிரித்துப் பார்ப்பதேவாசகன் அறிவார்ந்து கவனித்துப் படிக்க வேண்டும், கராறாக தெளிவாகப் பேச வேண்டும்எனும் கோரிக்கையாகிறது. ஆனால் கீதையில் அர்ஜுனனுக்கு ஞானத்தை கிருஷ்ணர் அளிக்கும் போதுஇன்னின்ன புத்தகங்களை முதலில் படித்து விட்டு வாஎனக் கூறுவதில்லை. புத்தக அறிவுக்கு மிதமிஞ்சிய இடமளிப்பதே மேற்கத்திய மரபின் போக்கு. கிருஷ்ணர்நீ பகுத்துணர்ந்து சிந்திக்காதே, வாழ், வாழ்வது மட்டுமே ஞானம்என்கிறார். இதன் நீட்சியாகவே நான் வாசிப்பையும் காண்கிறேன். சாப்பிடுவது, நடனமாடுவது, பாடுவது, புணர்வது போன்ற ஒரு செயலே வாசிப்பதும். அதற்கு மூளை தேவையென்றாலும் அது மூளையால் நிகழ்த்தப்பட வேண்டியது அல்ல

மூளையால் வாசித்து மொழியில் அதை தெளிவாக பகுத்தறிகிறவன் வறட்டு, அறிவியல்பூர்வ வாசகன். கண்களால் பார்த்து உடலால் வாசிக்கிறவன், சொற்களை உணர்வுகளால், பௌதீகமாய் அனுபவிக்கிறவனே அசல் வாசகன். எப்படி வாழ்வதில் படிநிலை, உயர்வு தாழ்வு இல்லையோ அப்படியேவாசிப்பதிலும்இல்லை. மொழி எனும் ஒரு கருவி மூலம் நாம் இந்த அனுபவத்தை உடம்பில் ஏற்றி உடம்பின் பகுதியாக பார்க்கிறோம்; தொல்படிமத்தை ஒரு கருத்துருவாக அல்ல புலனுணர்வாகவே காண்கிறோம் - அதுதான் அசலான வாசிப்பு. இந்திய வாசிப்பு என்பது ஒரு கொண்டாட்டம், ஒரு ரசனை, ஒரு புலனின்ப நுகர்தல். அதனால் தான் தொல்காப்பியர் ஒரு படைப்பை அறியும் முறையை மெய்ப்பாடு என்றார்; அவர் சொற்களுக்குள் இருக்கும் கருத்துருவை, உணர்ச்சிக் கட்டமைப்பை புலனுணர்வாக முன்வைக்கிறார். இந்த மரபில் இருந்து வந்ததாலே நாம் ஆதியில் சங்கக்கவிதைகளை படிக்கவில்லை, நிகழ்த்தினோம், நமது இயற்கைச் சூழலின், திணையின், பகுதியாக கவிதையைப் பார்த்தோம். அப்போது நிகழ்த்துபவன் சொல்லும் கவிதையை பார்வையாளன் பார்வையால் கண்டு காதால் கேட்டு அதை தன் உடம்பாகவே பாவித்து அறிந்தான். அங்கு அவனுக்கும் நிகழ்த்து கலைஞனுக்கும் கவிதைக்குமான எல்லைகள் மறைந்து மூன்றும் ஒன்றானது. இன்று நாம் கண்களால் படிக்கும் செயற்கையான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாலும் நம்மால் ரசனையை பகுத்தறிவை மீறிய ஒரு பித்துநிலைக்கு சென்று கவிதையை உள்வாங்க முடிகிறது, அது உரக்க வாசிக்கப்படும் போது, ஒரு பெருங்கூட்டத்தின் நாவில் அச்சொற்கள் ஒரே சமயம் திரண்டு வரும் போது. ஒரு கவிதை வாசகனை நாம் தனியாக இருந்து ஆய்வு மேற்கொள்ளும் ஒரு அறிவியல் வாசகனைப் போல தனிமைக்குள் தள்ளி மனதுக்குள் வாசிக்கத் தூண்டும் போது, வாசிப்பை ஒரு கூட்டு செயலில் இருந்து தனித்த செயல்முறையாகக் காணும் போது நாம் கவிதையைக் கொல்கிறோம். ஒரு வாசகனுக்கு இன்னின்ன தகுதிகள் வேண்டும், அவன் எழுத்தாளனிடம் இப்படி நடந்து கொள்ள வேண்டும் எனக் கோரும் போதே நாம் வாசகனை கூட்டுச்செயல்பாட்டில் இருந்து துண்டித்து தனிமைப்படுத்திக் வேலயை தொடங்கி விடுகிறோம். இந்த பூர்வ நிலத்தில் கால் பதித்து நிற்கும் வாசகன் தனியன் அல்ல. அவன் காமத்தைப் படிக்கையில் இச்சையை தன் உடலில் உணர்கிறவன், இசையைப் பற்றிப் படிக்கையில் அதைத் தன் காதில் கேட்பவன், ஒரு நாவலின் பாத்திரங்கள் தன்னுடன் கூடவே வாழ்வதாக உணர்பவன், அவர்களை தொட்டுணர முடிபவன், அவர்களின் அகச்சிக்கல்களை தனதாக அறிபவன், அதற்காக வருந்தி அழுகிறவன், இவையெல்லாம் சொற்களில் வைக்கப்பட்டால் பொய்யாகத் தெரிகின்றன எனப் புரிந்தவன். அவனுக்காகவே நான் பேசுகிறேன். “மோகமுள்ளில் யமுனா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்?” என பகுப்பாய்ந்து அவன் அறிய மாட்டான், அவளாக தானே மாறி அவன் அதை உணர்வுநிலையில் வைத்து அறிவான். ஒரு நல்ல நாவலாசிரியனின் ஒவ்வொரு பாத்திரத்தின் மன அமைப்பும் அதனளவில் முழுக்க சரியாக, முழுமையாக இருப்பதனால் அவன் முன்னுக்குப் பின் முரணான பல மனிதர்களாக வாசிப்பினூடே தானும் உருமாறுகிறான்; ஒரே சமயம் உடைந்த பல மனிதர்களாகிறான் (மிகைல் பக்தின் இதை diologism என்கிறார்). அவன் நுண்பிரதியை ஒரு கரண்டியில் எடுத்து அளந்து பார்ப்பதில்லை. அவன் படித்து விட்டு தத்துபித்தென்று உளறலாம், கோபப்படலாம், எரிச்சலடையலாம், அதன் பொருள் அவனுக்கே தெரியாமல் போகலாம். அவன் நினைப்பதொன்று, சொல்வது மற்றொன்றாக ஆகலாம். அவனது சொற்களுக்கு நேரடியாக தர்க்கபூர்வமான பொருளோ ஒழுங்கோ இராது. இன்னும் (மேற்கத்திய) பகுப்பாய்வு மரபினால் கெட்டு சீரழியாத இந்த எளிய, களங்கமில்லாத வாசகனுக்காகத்தான் பேசுகிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.