இருட்டில் ஒரு விளக்கை ஏந்தி செல்பவனே ஆசிரியன் - விளக்கை ஏந்தும் போதே அவனுக்கும் வெளிச்சம் கிடைக்கிறது. ஆக, பேசும் போது அவனுக்கும் அறிவு கிடைக்கிறது, ஆசிரியனாக அவனுக்கு அதற்கு முன்பு எந்த அறிவும் இல்லை, மொழியே (விளக்கு) அதை சாத்தியமாக்குகிறது. இந்த இடத்தில் ஒரு ஆசிரியன் வேண்டுவதெல்லாம் மற்றொரு விளக்கில் ஒளியேற்றிக்கொண்டு இரு கரங்கள் அவனுடன் வர வேண்டும், அக்கரங்களுடன் மேலும் பல நூறு ஒளிக்கரங்கள் இணைய வேண்டும் என்பதே.
இதனாலே நவீன கல்வியியலில் உள்ள கற்றலின் நோக்கம், பயன் போன்ற சொல்லாக்கங்கள் எனக்கு அருவருப்பாக உள்ளன. கல்வியை ஒரு மளிகைக்கடை அண்ணாச்சியைப் போலக் காணும் இவர்களை நான் எதிர்க்கிறேன், கல்வியின் முழுமுதல் எதிரிகள் இவர்களே, இவர்களாலே நம் சமூகம் விளங்காமல் இருட்டில் உழல்கிறது.
நான் வெளிச்சம் எனக் குறிப்பிட்டேன் அல்லவா, வெளிச்சம் தோன்றி விட்டால் அங்கு நீங்கள் உங்களுக்கான ஒளிவிளக்கை ஏற்படுத்தாவிடினும் அந்த வெளிச்சம் உங்களை விட்டு மறையாது, அது உங்களுக்கு பயன்படும். ‘சராசரி’ மாணவர்கள், ‘அக்கறையற்ற’ மாணவர்களை இப்படி தம்மையறியாது சில துளிகள் வெளிச்சத்தில் மெல்ல மெல்ல வாழத் தொடங்குபவர்களாகவே பார்க்கிறேன். அந்த சில துளிகள் ஒளிமழையாகும் ஒருநாள்.
அதனால் என் வகுப்பில் மாணவர்கள் ஒரே சமயம் கண்கள் ஒளிர கவனிக்காவிடினும் நான் சோர்வடைய மாட்டேன். பேசப்படுகிற எதுவும் வீணல்ல என்பது என் நம்பிக்கை. நான் தேர்வுக்காக படிப்பிக்கவில்லை. என் நோக்கம் தேர்வு போன்ற அற்பங்களைத் தாண்டியது, மகத்தானது.
இந்த நோக்கு எனக்குக் கிடைத்தது என் பதின்வயது கலை இலக்கியப் பெருமன்ற (மார்க்ஸிய) உரையாடல்களில் இருந்து, பின்னாளில் சிறுபத்திரிகை வட்டத்தில் கிடைத்த ஆளுமைகளின் பரிச்சயங்களில் இருந்துமே. அவர்கள் நான்கு பேர் சேர்ந்து சமூகத்தை, கலாச்சாரத்தை, இலக்கியத்தை, தத்துவத்தை, உலகத்தை, உலகத்தைக் கடந்த அறிவைப் பற்றியெல்லாம் பேசுவார்கள், தம்மை பல கோடி பேர் கேட்காவிட்டாலும் அச்சொற்கள் நிச்சயம் போய் சேரும் என நம்பினார்கள். அந்நம்பிக்கைகள் பொய்க்கவில்லை என்பதை இன்று காண்கிறோம். பேஸ்புக், யுடியூப் வந்த பின்னரும் நாம் சிறுகூட்டமே. இந்த சிறுவட்டத்தில் பேசுவதே தமிழ் சமூகம் முழுக்க வெவ்வேறு வடிவங்களில் போய் சேர்கிறது. எல்லாருக்கும் ஒரே சமயம் ஒரே மாதிரி போய் சேய்வது குப்பையாக மட்டுமே இருக்கும், போதனையால் யாருக்கும் பயனில்லை.
இதை நான் இங்கு கூறக் காரணம் அண்மையில் பத்ரி சேஷாத்ரி ஆன்லைன் வகுப்புகளில் தனக்கு ஏற்படும் ஏமாற்றங்கள் குறித்து எழுதியிருந்ததே. என் அணுகுமுறை முழுக்க வேறு - அது ஒரு ஆசிரியனாக என் சித்தாந்தத்தில் இருந்து வருவது. ஆசிரியன்-மாணவன்-அறிவு வளர்ச்சி-விவாதம்-சமூக முன்னேற்றம்-சமத்துவம்-விடுதலை எனும் சங்கிலித்தொடருக்குள்ளே கல்வி வர முடியும். அது ஒரு மகத்தான பயணம், சமூகப் பங்களிப்பு, அங்கு தனிமனிதர்கள், அவர்களின் தனிப்பட்ட பயன்பாடு முக்கியமே அல்ல. மேற்சொன்ன சங்கிலித்தொடருக்குள் வராத எந்த அறிவும் ஆபத்தானது, அவசியமற்றது.

கருத்துகள்
நான் உங்களுடைய அருகாமை ஆளுமைகள் பற்றிய காணொளியை கேட்டேன். அதிலும் நீங்கள் கலை இலக்கிய பெருமன்றத்தை பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். கலை இல்லகிய பெருமன்றத்தை பற்றி நான் மேலும் தெரிந்துகொள்ள விழைகிறேன். நேரம் இருப்பின் குறிப்பு தரவும்
நன்றி
மன்னன்,
சிதம்பரம்
thirumannan@gmail.com