எழுத்துப் பதிவுகளின் காலம் முடிவுக்கு வருகிறது எனத் தோன்றுகிறது. அண்மையில் அதிஷாவிடம் பேசும் போது இதையே வலியுறுத்தினார், “நாமெல்லாம் பத்து வருஷம் லேட்டு” என்றார். காணொளிகள் அதிகம் பேரை போய்ச் சேர்கிறது என்பதை விட, அது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே முக்கியம். அண்ணா, கலைஞர் இருவருமே, அவர்கள் வகுத்துக் கொண்ட எல்லைக்குள், நல்ல எழுத்தாளர்கள், ஆனால் மேடைப்பேச்சின் ஊடாகத் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களுக்குப் பின்னால் தோன்றின சமூக ஆளுமைகளும் இப்படித்தான். பேசிப் பேசி ஒருவர் பிரதமரே ஆகி விட்டார். நிம்மி அக்கா டிவியில் பேசி கவர்ந்தே நிதியமைச்சர் ஆனார். பேச்சுத்திறன் இல்லாததாலே மற்றொருவராக ஈடு கொடுக்க முடியாமல், குற்றவுணர்வால் தன் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவே மறுக்கிறார். எஸ்.ரா தன் பேச்சுத்திறனால் அடைந்த புகழ் எழுத்துக்குக் கிடைத்ததை விட பல மடங்கு அதிகம். மனுஷ்யபுத்திரன் என்றால் எல்லாருக்கும் தெரிய வந்தது டிவியினாலே. உணர்ச்சிப்பிழம்பாகப் பேசும் பவா. செல்லத்துரையையும் குறிப்பிட வேண்டும். உப்புமா கிளறுவதைப் பற்றி அவர் பேசினால் கூட பல்லாயிரம் பேர் முகவாயில் கையை வைத்து அசந்து போய் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஜெயமோகன், சாரு உள்ளிட்ட வேறு பல நல்ல பேச்சாளர்களும் எழுத்துலகில் உண்டு. அவர்கள் கொத்தாய் காணொளிகளுக்கு நகரும் தொலைவில் இல்லை.
எத்தனையோ சாமான்யர்கள் பத்து நிமிடங்கள் யுடியூபில் பேசி வி.ஐ.பிகள் ஆகி விடுகிறார்கள். இங்கு பிளாகும், பின்னர் பேஸ்புக்கும் சூறாவளியாய் சுழன்ற போது கூட சிறு சிறு குழுக்களுக்கு உள்ளாகத்தான் நட்சத்திரங்கள் தோன்றினார்கள். ஒரு குறிப்பிட்ட குழுவில் பிரமுகராக இருப்பவர் மற்றொரு குழுவில் தெரியப்படாமல் இருப்பார்கள். இந்த பத்தி கட்டி பிரபலம் ஆவதெல்லாம் யுடியூபில் அதிகம் இல்லை. அங்கு ஒருவர் பிரபலம் என்றால் எல்லாருக்கும் தெரிந்திருக்கும் - அதாவது ஓரளவுக்கு பரவலாக சமையல், கிசுகிசு, பேட்டி, செய்திகள் கவனிப்போருக்கு. கிட்டத்தட்ட டிவியைப் போலத்தான்.
இன்னொரு சுவாரஸ்யம் இந்த காணொளி பிரபலங்கள் ஏதாவது ஒரு துறையில் விபரம் தெரிந்த நிபுணர்களாக இருக்க வேண்டியதில்லை - பேஸ்புக்கில், பிளாகில் இது அவசியம், இல்லையென்றால் முட்டை வாங்க நேரிடும். ஆனால் காணொளியில் அந்த சரளம், ஒழுக்கு, உடல்மொழி, குரல், அதன் உயிர் தான் முக்கியம், தகவல் இரண்டாம் பட்சமே. சீண்டலாகக் கேள்வி கேட்பதை விடுத்து மதனுக்கு என்ன தெரியும் சொல்லுங்கள்; ரெண்டு நிமிட வீடியோ முடிவில் த்தூ த்தூ என முத்தாய்ப்பாக முடிப்பதை விட சூர்யா தேவிக்கு என்னத் தெரியும் சொல்லுங்கள். எந்தளவுக்கு நீங்கள் நிபுணத்துவம் இல்லாமல் சாதாரணமாக இருக்கிறீர்கள் அது உங்களுக்கு அனுகூலமாகும். நாம் முழுவதுமாக காணொளிப் பதிவுகளுக்கு நகரும் போது பேஸ்புக்கில் உள்ள தகவல் நேர்த்தி, ஆழம் கூட இல்லாமல் ஆகும் என்பது வருத்தத்துக்குரியதே, ஆனால் ஒருவேளை ஆழமான பார்வை கொண்ட சிந்தனையாளர்கள் அங்கு போகும் போகும் ஒரு மாற்றம் ஏற்படலாம்.
காணொளி என்பது படிக்க விருப்பமற்றவர்களுக்கான ஊடகம், அதனாலே நிறைய பேரிடம் போய் சேர்கிறது என ஒரு பார்வை உண்டு. ஆனால் பல லட்சம் பேர் படிக்கிற பரபரப்புக் கட்டுரைகளும் உண்டு என அனுபவத்திலே கண்டிருக்கிறேன். நிறைய பேர்களைப் போய் சேர்ப்பதில் டிவீட்டும் சளைத்ததில்லை. ஆனால் காணொளியின் சிறப்பு அது ஏற்படுத்தும் தாக்கம் - எப்படி விளக்குவதெனத் தெரியவில்லை, மற்ற வடிவங்களை விட இது அந்தரங்கமாக, உணர்வுரீதியாக நெருக்கமாக இருக்கிறது. நான் எழுதிய கட்டுரைகளை நினைவில் வைத்திருப்போர் உண்டு, ஆனால் பேசும் போது அதைவிட பல ஆயிரம் பேர் உணர்வு உணர்வுரீதியாகத் தாக்கம் பெற்று மனம் நெகிழ்ந்து என்னிடம் வந்து பேசுகிறார்கள். நான் முன்பு விஜய் டிவியில் ஒரு விவாத நிகழ்ச்சியில் (“பெரிதினும் பெரிது கேள்”) சிறப்பு விருந்தினராக சென்று போட்டியாளர்களை மதிப்பீடு செய்தேன். அப்போது அங்கு போட்டியிட்ட ஒரு இளைஞன் பின்பு கல்லூரியில் என்னிடம் மாணவனாக வந்து சேர்ந்து முதல் நாளே தன்னை அந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தினான். மற்றொரு மாணவன் பள்ளியில் படிக்கும் போது நான் அங்கு பேசச் சென்றிருந்தேன். அவனும் கல்லூரி வந்த பின் அதை மறக்காமல் குறிப்பிட்டு என்னிடம் நட்பானான். அண்மையில் நான் லைவ்வில் இருமுறை பேசிய போது கிடைத்த உணர்ச்சிகரமான ஆதரவும் இப்படியானதே.
இதற்கு ஒரு மரபான காரணம் உண்டு:
பேச்சின் தாக்கம் கிட்டத்தட்ட சினிமாவைப் போல. நமது சங்கக்கவிதைகளும் கூட நாடக அரங்கப் பிரதிகளே, தலைவன் என், தலைவி, தோழி இவர்கள் திரும்ப திரும்ப தோன்றக்காரணம் இதுவே ஒரு பார்வை உண்டு. அதன் பிறகு காப்பியங்களும் பக்தர்களால் வீட்டில் வைத்து பாடப்பட்டன. அதன் பிறகு பலவித கவிதை வடிவங்கள் கவிதை ஒழுங்குடனே தோன்றின - பாரதி, பாரதிதாசன், வானம்பாடி கவிஞர்கள் வரை. காஸெட் வந்து வீடு வீடாய் சினிமா பாடல்கள் போன பின்னர் இந்த கவிதைகளுக்கு, இசைப்பாடல்களுக்கு இடமில்லாமல் போயின. அதன் பின், தமிழர்களுக்கு கவிதை என்றாலே சினிமாப் பாட்டுத்தான். கவிதைக்கு நிகழ்த்து வடிவங்களுக்குமான தொடர்பைக் குறிக்கவே இவ்வளவும் சொன்னேன் - அதுதான் இப்போது யுடியூபில் வந்து நிற்கிறது. நம்மைப் போன்ற சிறுபான்மையினர் தாம் ஒரு பிரதியை வாழ்வின் நிகழ்த்தலில், நாடகீயத்தில் இருந்து விடுவித்து வைத்து படிப்பவர்களாக இருந்து வருகிறோம். வெகுமக்களின் மரபு பல்லாயிரம் வருடங்களாகவே இதற்கு நேர்மாறானது. ஒரு சிறிய செய்தியைக் கூட ஒரு செய்திக் காட்சியாக அல்லாமல் ஒருவர் அந்தரங்க தொனியில் முன்வைப்பதை, விவாதிப்பதை விரும்பும் மனம் ரொம்பப் பழையது, பல்லாயிரம் ஆண்டு பழையது. சங்கப்பாடல்களை நாடகமாய் கண்டு களித்த அரை-பழங்குடியினருக்கும் வேறுபல செய்திகளை வாழ்க்கைப்பதிவுகளை அதே போல அந்தரங்கமாய் நிகழ்த்தப்பட்டு காணும் யுடியூப் பயனர்களுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இத்தனை ஆயிரம் வருடங்களாக நாம் அப்படியே இருக்கிறோம்!

Comments
https://www.kolandha.com/2020/06/amusing-ourselves-to-death.html