முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இது காணொளிகளின் காலம்


எழுத்துப் பதிவுகளின் காலம் முடிவுக்கு வருகிறது எனத் தோன்றுகிறது. அண்மையில் அதிஷாவிடம் பேசும் போது இதையே வலியுறுத்தினார், “நாமெல்லாம் பத்து வருஷம் லேட்டுஎன்றார். காணொளிகள் அதிகம் பேரை போய்ச் சேர்கிறது என்பதை விட, அது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே முக்கியம். அண்ணா, கலைஞர் இருவருமே, அவர்கள் வகுத்துக் கொண்ட எல்லைக்குள், நல்ல எழுத்தாளர்கள், ஆனால் மேடைப்பேச்சின் ஊடாகத் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களுக்குப் பின்னால் தோன்றின சமூக ஆளுமைகளும் இப்படித்தான். பேசிப் பேசி ஒருவர் பிரதமரே ஆகி விட்டார். நிம்மி அக்கா டிவியில் பேசி கவர்ந்தே நிதியமைச்சர் ஆனார். பேச்சுத்திறன் இல்லாததாலே மற்றொருவராக ஈடு கொடுக்க முடியாமல், குற்றவுணர்வால் தன் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவே மறுக்கிறார். எஸ்.ரா தன் பேச்சுத்திறனால் அடைந்த புகழ் எழுத்துக்குக் கிடைத்ததை விட பல மடங்கு அதிகம். மனுஷ்யபுத்திரன் என்றால் எல்லாருக்கும் தெரிய வந்தது டிவியினாலே. உணர்ச்சிப்பிழம்பாகப் பேசும் பவா. செல்லத்துரையையும் குறிப்பிட வேண்டும். உப்புமா கிளறுவதைப் பற்றி அவர் பேசினால் கூட பல்லாயிரம் பேர் முகவாயில் கையை வைத்து அசந்து போய் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஜெயமோகன், சாரு உள்ளிட்ட வேறு பல நல்ல பேச்சாளர்களும் எழுத்துலகில் உண்டு. அவர்கள் கொத்தாய் காணொளிகளுக்கு நகரும் தொலைவில் இல்லை.


 எத்தனையோ சாமான்யர்கள் பத்து நிமிடங்கள் யுடியூபில் பேசி வி..பிகள் ஆகி விடுகிறார்கள். இங்கு பிளாகும், பின்னர் பேஸ்புக்கும் சூறாவளியாய் சுழன்ற போது கூட சிறு சிறு குழுக்களுக்கு உள்ளாகத்தான் நட்சத்திரங்கள் தோன்றினார்கள். ஒரு குறிப்பிட்ட குழுவில் பிரமுகராக இருப்பவர் மற்றொரு குழுவில் தெரியப்படாமல் இருப்பார்கள். இந்த பத்தி கட்டி பிரபலம் ஆவதெல்லாம் யுடியூபில் அதிகம் இல்லை. அங்கு ஒருவர் பிரபலம் என்றால் எல்லாருக்கும் தெரிந்திருக்கும் - அதாவது ஓரளவுக்கு பரவலாக சமையல், கிசுகிசு, பேட்டி, செய்திகள் கவனிப்போருக்கு. கிட்டத்தட்ட டிவியைப் போலத்தான்.

 இன்னொரு சுவாரஸ்யம் இந்த காணொளி பிரபலங்கள் ஏதாவது ஒரு துறையில் விபரம் தெரிந்த நிபுணர்களாக இருக்க வேண்டியதில்லை - பேஸ்புக்கில், பிளாகில் இது அவசியம், இல்லையென்றால் முட்டை வாங்க நேரிடும். ஆனால் காணொளியில் அந்த சரளம், ஒழுக்கு, உடல்மொழி, குரல், அதன் உயிர் தான் முக்கியம், தகவல் இரண்டாம் பட்சமே. சீண்டலாகக் கேள்வி கேட்பதை விடுத்து மதனுக்கு என்ன தெரியும் சொல்லுங்கள்; ரெண்டு நிமிட வீடியோ முடிவில் த்தூ த்தூ என முத்தாய்ப்பாக முடிப்பதை விட சூர்யா தேவிக்கு என்னத் தெரியும் சொல்லுங்கள். எந்தளவுக்கு நீங்கள் நிபுணத்துவம் இல்லாமல் சாதாரணமாக இருக்கிறீர்கள் அது உங்களுக்கு அனுகூலமாகும். நாம் முழுவதுமாக காணொளிப் பதிவுகளுக்கு நகரும் போது பேஸ்புக்கில் உள்ள தகவல் நேர்த்தி, ஆழம் கூட இல்லாமல் ஆகும் என்பது வருத்தத்துக்குரியதே, ஆனால் ஒருவேளை ஆழமான பார்வை கொண்ட சிந்தனையாளர்கள் அங்கு போகும் போகும் ஒரு மாற்றம் ஏற்படலாம்.


காணொளி என்பது படிக்க விருப்பமற்றவர்களுக்கான ஊடகம், அதனாலே நிறைய பேரிடம் போய் சேர்கிறது என ஒரு பார்வை உண்டு. ஆனால் பல லட்சம் பேர் படிக்கிற பரபரப்புக் கட்டுரைகளும் உண்டு என அனுபவத்திலே கண்டிருக்கிறேன். நிறைய பேர்களைப் போய் சேர்ப்பதில் டிவீட்டும் சளைத்ததில்லை. ஆனால் காணொளியின் சிறப்பு அது ஏற்படுத்தும் தாக்கம் - எப்படி விளக்குவதெனத் தெரியவில்லை, மற்ற வடிவங்களை விட இது அந்தரங்கமாக, உணர்வுரீதியாக நெருக்கமாக இருக்கிறது. நான் எழுதிய கட்டுரைகளை நினைவில் வைத்திருப்போர் உண்டு, ஆனால் பேசும் போது அதைவிட பல ஆயிரம் பேர் உணர்வு உணர்வுரீதியாகத் தாக்கம் பெற்று மனம் நெகிழ்ந்து என்னிடம் வந்து பேசுகிறார்கள். நான் முன்பு விஜய் டிவியில் ஒரு விவாத நிகழ்ச்சியில் (“பெரிதினும் பெரிது கேள்”) சிறப்பு விருந்தினராக சென்று போட்டியாளர்களை மதிப்பீடு செய்தேன். அப்போது அங்கு போட்டியிட்ட ஒரு இளைஞன் பின்பு கல்லூரியில் என்னிடம் மாணவனாக வந்து சேர்ந்து முதல் நாளே தன்னை அந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தினான். மற்றொரு மாணவன் பள்ளியில் படிக்கும் போது நான் அங்கு பேசச் சென்றிருந்தேன். அவனும் கல்லூரி வந்த பின் அதை மறக்காமல் குறிப்பிட்டு என்னிடம் நட்பானான். அண்மையில் நான் லைவ்வில் இருமுறை பேசிய போது கிடைத்த உணர்ச்சிகரமான ஆதரவும் இப்படியானதே

இதற்கு ஒரு மரபான காரணம் உண்டு:

பேச்சின் தாக்கம் கிட்டத்தட்ட சினிமாவைப் போல. நமது சங்கக்கவிதைகளும் கூட நாடக அரங்கப் பிரதிகளே, தலைவன் என், தலைவி, தோழி இவர்கள் திரும்ப திரும்ப தோன்றக்காரணம் இதுவே  ஒரு பார்வை உண்டு. அதன் பிறகு காப்பியங்களும் பக்தர்களால் வீட்டில் வைத்து பாடப்பட்டன. அதன் பிறகு பலவித கவிதை வடிவங்கள் கவிதை ஒழுங்குடனே தோன்றின - பாரதி, பாரதிதாசன், வானம்பாடி கவிஞர்கள் வரை. காஸெட் வந்து வீடு வீடாய் சினிமா பாடல்கள் போன பின்னர் இந்த கவிதைகளுக்கு, இசைப்பாடல்களுக்கு இடமில்லாமல் போயின. அதன் பின், தமிழர்களுக்கு கவிதை என்றாலே சினிமாப் பாட்டுத்தான். கவிதைக்கு நிகழ்த்து வடிவங்களுக்குமான தொடர்பைக் குறிக்கவே இவ்வளவும் சொன்னேன் - அதுதான் இப்போது யுடியூபில் வந்து நிற்கிறது. நம்மைப் போன்ற சிறுபான்மையினர் தாம் ஒரு பிரதியை வாழ்வின் நிகழ்த்தலில், நாடகீயத்தில் இருந்து விடுவித்து வைத்து படிப்பவர்களாக இருந்து வருகிறோம். வெகுமக்களின் மரபு பல்லாயிரம் வருடங்களாகவே இதற்கு நேர்மாறானது. ஒரு சிறிய செய்தியைக் கூட ஒரு செய்திக் காட்சியாக அல்லாமல் ஒருவர் அந்தரங்க தொனியில் முன்வைப்பதை, விவாதிப்பதை விரும்பும் மனம் ரொம்பப் பழையது, பல்லாயிரம் ஆண்டு பழையது. சங்கப்பாடல்களை நாடகமாய் கண்டு களித்த அரை-பழங்குடியினருக்கும் வேறுபல செய்திகளை வாழ்க்கைப்பதிவுகளை அதே போல அந்தரங்கமாய் நிகழ்த்தப்பட்டு காணும் யுடியூப் பயனர்களுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இத்தனை ஆயிரம் வருடங்களாக நாம் அப்படியே இருக்கிறோம்

கருத்துகள்

SP Harish இவ்வாறு கூறியுள்ளார்…
Blogger Kolandha has also written about this :
https://www.kolandha.com/2020/06/amusing-ourselves-to-death.html

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...