முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“நாராயணா, நாராயணா”



நமது செய்திச்சேனல்கள் தினமும் தேர்தல் பற்றி மட்டுமே விவாதிப்போம், எதைப் பேசினாலும் “கூட்டணி-திமுக-அதிமுக-பாஜக” எனும் மந்திரத்தை ஜெபித்தே ஆவோம் என பிடிவாதம் பிடிக்காமல் இருந்தால் நல்லது. சில விசயங்களை அரசியல் கலக்காமல், அரசியல் செய்யாமல் விவாதித்தால் நல்லது.


 அரியர் மாணவர்களை ஆல்பாஸ் செய்வது பற்றின சர்ச்சை ஒரு உதாரணம் - அதைப் பற்றி பேசும் முன்பு நெறியாளர்களுக்கே தெளிவிருப்பதில்லை, அதிமுகவினர் ஒரு பக்கம் தாம் விதிமுறை பின்பற்றியே முடிவெடுத்திருப்பதாக பக்கம் பக்கமாய் விதிமுறைகளைப் படித்துக்காட்டி அனத்த, எதிர்க்கட்சியினர் இம்முடிவு சரியே ஆனால் பின்பற்றிய முறையை தவறு எனச் சாட, கல்லூரி தாளாளர்கள் நடுவே வந்து உளற இதை எதற்குப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என பார்வையாளர்கள் மண்டையை பிய்க்கிறார்கள். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்களா இல்லையா, இல்லை இது ஒரு டெக்னிக்கலான, பேசித்தீர்க்க வேண்டிய ஒரு அதிகாரமட்ட உள்விவகாரம் மட்டுமேவா அல்லது கூட்டணி அரசியலா என்பதில் முதலில் நெறியாளர் ஒரு முடிவை எடுத்து விட்டு அதை சமூக பாதிப்பு, நீதி, நியாயம் எனும். கண்ணோட்டத்தில் அணுகி கேள்விகளைத் தொடுப்பதே சிறப்பு. ஆனால் அந்த தெளிவெல்லாம் இருப்பதில்லை.

 அல்லது ஒரு பிரச்சனையை நிபுணர்களை வைத்து அரசியல் கலக்காமல் விவாதிக்கலாம். ஆனால் வழுக்கி விழுந்தாலும் அதில் தேர்தல் அரசியலைப் பேச வேண்டும் அஜெண்டாவுடனே நம் ஊடகங்கள் இருக்கின்றன. 


உதாரணத்துக்கு, ஒரு பொருளாதாரப் பிரச்சனையைப் பற்றிப் பேசும் போது இந்த நெறியாளர்கள் ஆட்டோமேட்டிக்காக ஒரு காங்கிரஸ்காரர் / முற்போக்காளர், இரண்டு நேரடி சங்கிகள், பொருளாதா நிபுணர் என்ற பெயரில் நான்காவது சங்கி என களத்தை தயாரிக்கிறார்கள். இந்த பங்கேற்பாளர்களோ பொருளாதாரப் பிரச்சனைகளை மக்களுக்குப் புரிய வைக்காமல் “நீ ஆட்சியில இருந்தப்போ என்ன பண்ணினேன்னு தெரியாதா? / உன் ஆட்சியில தான் ஜிடிபி கோமாவுக்கு போயிருச்சு தெரியாதா?” என மாறி மாறி சக்களத்திச் சண்டை போடுகிறார்கள் - அதுவும் மூன்றுக்கு ஒன்று என ஒரு தரப்பை கும்பலாக ஒரே சமயத்தில் மொத்துகிறார்கள். நெறியாளர் நாரதரைப் போலப் புன்னகைக்கிறார். அல்லது “எனக்கு ஒண்ணும் தெரியாது, நீங்களே அடிச்சு ஒரு முடிவுக்கு வாங்க” என கொளுத்திப் போட்டுவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். அல்லது நிஜமாகவே அவர்கள் விவாதப் பொருளைப் பற்றி போதுமான தயாரிப்போ வாசிப்போ இல்லாமல் இருக்கிறார்கள். அல்லது பாதுகாப்பாக அப்படி தாம் இருப்பதைப் போல ஒரு “அசடன்” பாவனையை புனைகிறார்கள். அவர்களுடைய ஒரே அக்கறை விவாதத்தில் கலந்து கொள்ளுகிற சங்கிகள் தம்மைப் பற்றி தில்லிக்கு புகார் கொடுத்து வேலைக்கு ஆப்பு வைக்கக் கூடாதே ஆண்டவா என இருக்கிறது.


 சரியாகச் சொலவதானால் இன்றைய டி.வி விவாதங்கள் காவல் நிலைய வதைகளைப் போல இருக்கின்றன. ரத்தம் வழியும் லத்தியுடன் மூன்று சங்கிகள், தலைகீழாக தொங்க விடப்பட்ட ‘எதிர்க்கட்சி’ ஆள், தமக்கும் அடி விழுந்து விடுமோ என கைகட்டி ஒதுங்கி நிற்கும் நெறியாளர். இதில் கொடுமையே இந்த சங்கிகள் “எங்களுக்கு ஊடகங்களில் போதுமான இடம் அளிப்பதில்லை, திராவிட சார்புடன் ஊடகவியலாளர்கள் பேசுகிறார்கள்” என லத்தியை சுழற்றிக் கொண்டே அழுவது.

 அதிலும் அடிவாங்குகிற ஏதாவது ஒரு ‘கைதி’ இவர்களைத் திரும்ப கலாய்த்து விட்டால் முகத்தை அஷ்டகோணலாக்குகிறார்கள், தனியாக கத்துகிறார்கள், புலம்புகிறார்கள், சூடுபட்ட பன்றியைப் போல உறுமுகிறார்கள். இதைக் கண்டு நெறியாளர் பீதியடைந்து சங்கிகளை சமாதானப்படுத்த காலில் விழாதக் குறையாக என்னென்னமோ செய்வார். அவர்களை எதிர்க்கேள்வி இன்றி தொடர்ந்து உளற அனுமதிப்பார். யார் பேசினாலும் எப்போது வேண்டுமெனிலும் குறுக்கிடுகிற உரிமையை அளிப்பார். அல்லது  நிகழ்ச்சி நடுவே மறைமுகமாக அவர் தன்னை மிரட்டினாலும் நெறியாளர் புன்னகை சொரிய ‘தாமரையாக’ முகம் மலர்வார்.


தமிழ் டிவி சேனல்களில் நடக்கும் அநேகமாக எல்லா விவாதங்களுக்கும் இவை பொருந்தும். கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்போது தான் நிலைமை ரொம்பவே மோசமாகி இருக்கிறது.


இந்த கொடுமைகளைப் பார்க்கும் போது வனிதா அக்கா-பீட்டர் பால்-எலிசபெத் அக்கா விவகாரம் எல்லாம் மேல் எனத் தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...