முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு எழுத்தாளன் எஸ்.பி.பிக்காக அழலாமா?


நான் ஒரு எழுத்தாளனே. சாரு குறிப்பிடும் அதே தீவிர இலக்கிய மரபை சேர்ந்தவன். ஆனால் நான் ‘தீவிர எழுத்தாளனாக’ ஒரே முகத்தைப் புனைந்து கொண்டிருப்பதை விரும்பவில்லை. எஸ்.பி.பிக்காக மட்டுமல்ல நாளை ஹரிஹரன் காலமானாலும் நான் மனம் உடைந்து போவேன்.



 ஒரு காலத்தில் எழுத்தாளர்கள் மூடி மறைத்தார்கள், ஆனால் இன்று அதற்கான தேவையில்லை என நினைக்கிறோம். எந்த வெகுஜனத் தோய்வும் இன்றி ஒரு எழுத்தாளன் இருக்க முடியும் என நான் நம்பவில்லை. 


 என்னைப் போன்றே இன்றைய எழுத்தாளர்களும், இன்றும் எழுதும் முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரும் யோசிக்கிறார்கள். தீவிரமும் வெகுஜன மனப்பான்மையும் அதனளவில் சாராம்சமவற்றவை எனும் எண்ணம் எனக்குள்ளது. ஒன்றை எடுத்து அணிந்து அலுப்பானால் இன்னொன்றை ஏன் சற்று நேரம் அணியக் கூடாது?

அண்மையில் ஒரு நண்பர் உயிர்மை முன்பு ராஜேஷ் குமார் நாவல்களை வெளியிட்டதைக் குறிப்பிட்டது உலகம் கெட்டுப் போய் விட்டது எனப் புலம்பினார். அப்படியெல்லாம் இலக்கியத் தீண்டாமையை, கடும்போக்கை, தூய்மைவாதத்தை ஏன் பின்பற்ற வேண்டும் என எனக்குத் தோன்றியது.


 வெகுமக்கள் மொழிக்கும் அதற்கான விளையாட்டுத்தனமான அழகு உள்ளது - ஒரு குழந்தை அநிச்சையாக மூக்கை உறிஞ்சுவதைப் போல. அதிலிருந்து ஒன்றை எடுத்து இலக்கியப் பிரதியில் பரிசோதனை பண்ணிப் பார்க்கலாமா என நினைப்பேன். சுரேஷ் குமார் இந்திரஜித் ஒரு திரைப்பாடலை டிவியில் பார்த்த போது கிடைத்த தூண்டுதலில் ஒரு நல்ல கதை எழுதியிருக்கிறார். இசை வெகுஜன மரபில் இருந்து கிடைத்த குறிப்புகளைக் கொண்டு சிறப்பான கவிதைகளைப் படைத்திருக்கிறார். மனுஷ்யபுத்திரனும் செய்திருக்கிறார்.

 அதை விடுங்கள் ஒரு நாளிதழில் வரும் மணமகன் தேவை விளம்பரம் கூட படிக்க சுவாரஸ்யமாக, கற்பனையைக் கிளறுவதாக இருக்கிறது. இன்று கூட ஒன்றைப் படித்தேன் - அதில் “30 வயதான ஆதரவற்ற பெண்ணுக்கு” என ஒரு பிரயோகம்; அதன் பொருள் என்ன? ஏழையா? இளமையைக் கடந்து விட்ட என்றா? அடங்கிப் போகிற பெண் என்றா? ஆனால் இந்த பூடகத்தன்மை நிறைய யோசிக்க வைப்பது. 


ஒரு கவிஞனுக்கு இது போதும், ஒரு நல்ல கவிதையை எழுத.


 மொழியை நான் இப்படித்தான் பார்க்கிறேன். மொழிக்குள் வருகிற ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் உள்ளது; அதன் படி செயல்படுகிறார்கள்; ஒரு வாசகன் அனைத்தையும் படித்துக் கடக்க வேண்டும். அப்போதே வாசிப்பு அட்டகாசமாக இருக்கும்.

 வெகுஜன இசையையும், எஸ்.பி.பியுடனான மனப்பிணைப்பையும் நான் இப்படித்தான் பார்க்கிறேன். அவர் போனதும் என் கண்கள் ஈரமாகின்றன என்றால் ஆகி விட்டுப் போகட்டுமே. அதிலென்ன தவறு? அதை மறைத்தால் தான் தவறு. நான் சினிமாப் பாடல்களைக் கேட்டுக்கொண்டு தான் புனைவெழுதுவேன். நான் கேட்பதற்கும் எழுதுவதற்கும் துளியும் சம்மந்தம் இராது. ஆனால் அந்த இசை தான் - கர்நாடக சங்கீதம் அல்ல - எனக்கு மனக்குவிப்பை வழங்குகிறது. 


இப்படி வெகுஜன ரசனையுடன் இருந்தால் எழுத்தாளனின் தீவிரம் போய் விடுமா? நான் அப்படிச் சொல்ல மாட்டேன். சுத்தமாக உலகக் கவிதை பரிச்சயமே இல்லாமல் அதற்கு இணையான அற்புதமான கவிதைகளை தமிழில் எழுதுகிறவர்களை எனக்குத் தெரியும். உலக இலக்கியத்தை கரைத்து குடித்தாலும் தனித்துவமாக,ஆழமாக எழுதத் தெரியாதவர்களையும் தெரியும். நல்ல எழுத்து எந்தவிதமான வாழ்க்கை நிலைபபாடுகள், கொள்கைகள், ரசனை, நுண்ணுணர்வில் இருந்தும் தோன்றலாம் எனத் தோன்றுகிறது.


அதே நேரத்தில் சாருவின் இந்த விமர்சனத்தின் நியாயத்தையும் புரிந்து கொள்கிறேன். மொத்த தமிழ்கூறு நல்லுலகமே ஒரு வெகுஜனப் பாடகனுக்காக அழுகையில் இது அவசியமில்லை, இதை விட மேலான இசையை நோக்கி அவர்கள் ஏன் செல்லக் கூடாது என அவர் கேட்பது ஒரு முக்கியமான கேள்வி. இப்படி இடித்துரைப்பவர்களும் நமக்கு அவசியம் அல்லவா! இந்த வெகுமக்கள் மனப்பான்மையை வரிப்பதை ஒரு விளையாட்டு என்றல்லாமல் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டு நாம் மூழ்கி விடவும் வாய்ப்புண்டு. சாரு நமக்கு அப்போது தோளில் தட்டி துயிலெழுப்பும் தயக்கமற்ற குரலாக இருக்கிறார். நாம் ஒரு கத்தி என்றால் அது மழுங்கி விடாதிருக்க உதவுகிறவர் சாரு. ஒரு நாணயத்தின் ஒரு பக்கம் நாம் சொல்வது என்றால் மறுபக்கம் அவர் சொல்வது.


சாருவைப் போன்றே ஸ்டிரிக்ட் ஆபீசர் எழுத்தாளராக இருப்பவர் ஜெ.மோ மட்டுமே. அவர் தன்  வீட்டில் டிவியில் சினிமாப் பாடல்களைப் போட மாட்டார், அவை சுத்த அபத்தம் என என்னிடம் ஒருமுறை கூறியிருக்கிறார். மதுக்கொண்டாட்டம், கூத்து, கூப்பாடு எதுவும் அவரது வாழ்வில் இல்லை. ஆனால் சாரு சற்று வித்தியாசமானவர் - அவர் நாளை இப்போது சொல்லியிருப்பதற்கு நேர்மாறாக நடந்து கொள்வார். அவருக்கு என ஒரு நிலையான சிந்தனை, அணுகுமுறை இல்லை. இதை நான் ஒரு நேர்மறையான, அழகான அம்சமாகவே பார்க்கிறேன். சாரு ஒழுகிச் செல்லும் ஒரு நதி. மழைபெய்தால் கலங்கலாகத் தோன்றும், மற்றொரு நாள் தெளிவாக சுழித்தோடும். இரண்டுமே நதி இல்லை. இரண்டுமே சாரு இல்லை.


 இதுவே சாருவுக்கும் ஜெமோவுக்குமான வித்தியாசம். இதனாலே நாம் சாருவை நேசிக்கிறோம்!

கருத்துகள்

తిరుపతి మహేష్ இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கலது பார்வை அருமை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...