முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலக்கியத்தில் சாதி அடையாளம் ஏன் அபத்தமாகிறது?





பிராமண அழகியல் என ஒன்று இல்லைஎன நான் சொன்னது மொழிக்குள் ஒரு ஸ்திரமான, சாரமான, வலுவான வாழ்க்கை நோக்கு ஒன்று சாத்தியமில்லை எனும் ஆழமான பொருளிலே.

 ஒரு பிராமணர் தனது பிராமணத்தன்மையை எழுதினால் அதை யாரும் படிக்கப் போவதில்லை; அவர் அத்தன்மையை உடைப்பதனாலே அதைப் படிக்கிறோம். - .தா., ஒரு பிராமண சடங்கு இருக்கும். அதன் நெறிமுறைகள் பெரிதும் மாறுவதில்லை. ஆனால் நிகழ்த்தப்படும் போது அது ஒவ்வொரு முறையும் புதிதாக இருக்கும் (இதையும் காலத்தில் நமது இருப்பு எப்படி இருக்க முடியும் எனும் ஆழமான பொருளிலே தான் சொல்கிறேன்.) பிராமண மொழி என ஒன்று உண்டெனில் அது பேசப்படும் போதெல்லாம் அதுவாகவும் அதுவல்லாமலும் ஆகிறது. பிராமண மொழியில் எழுதப்படுவதன் இருப்பும் இன்னும் தீவிரமாக இந்தவேற்றுமைக்குஉள்ளாகிறது. ஆக, பிராமணர் -பிராமணர் ஆவதே அவர் பிராமணராக வாழ்வது; பிராமணர் இன்னும் ஆழமாக உக்கிரமாக -பிராமணர் ஆகையிலே அவர் எழுத்தாளராகிறார். அவர் எழுதுவது -பிராமணப் படைப்பு ஆகையிலே அது படைப்பும் ஆகிறது.


 ஒரு சடங்கு நிகழ்த்தப்படும் போது (எழுதுவதும் ஒரு சடங்குதானே?) அது அச்சடங்கின் அடிப்படை அடையாளத்தைக் கடந்து போகும். இந்த அடிப்படை அடையாளம் என ஒன்று இருக்கிறதல்லவா, அது இந்த சடங்கை ஒரு முழுமையான நேர்கோடான செயலாக கற்பனை பண்ணி நாம் உருவாக்கிக் கொள்ளும் ஒன்று. பூணூல் அணியும் சடங்கை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பூணூலைக் கையில் எடுத்து உதறினால் அதன்அடையாளம்உதிரப் போவதில்லை. அது ஒரு கற்பனையான அடையாளம். அதை மீள மீள நிகழ்த்தி பாதுகாக்க வேண்டியுள்ளது. பூணூலை அறுத்து சாக்கடையில் வீசினால் ஒரு பிராமணர் காயப்படலாம் (இல்லாமலும் போகலாம்), ஏனென்றால் பூணூலின் அடையாளம் அதுவாகவே அதில் இல்லை, அதை அணியும் போது அது அதுவாகி மற்ற சமயங்களில் அது மற்றொன்றாகிறது. நிகழ்த்தாத போது அது ஒன்றுமல்லாததாகிறது. அது சாத்தியமே இல்லாததால் அதுநிகழ்வதில்லை’. பூணூலில் ஒரு பூணூல்தனம் தன்னளவில் இருக்கிறதெனில் அவர்கள் அதை அணியவே அவசியமில்லை. சாக்கடையில் கிடக்கும் போதும் கவலைப்பட அவசியமில்லை.

 இதைப் பற்றி டெலூஸ் தனது  Difference and Repetition நூலில் விரிவாகப் பேசுகிறார். ஒன்றுஅதுவாகவேஎப்போதும் இருக்கிறது என நினைப்பது நம்மை பரஸ்பர வெறுப்புக்கு, அங்கிருந்து இருமைக்கு, சாதியம், மதவாதம், சர்வாதிகாரத்துக்கு இட்டுச்செல்கிறது. பிராமணியம், தலித்தியம் என்பதெல்லாம் அடையாள அரசியலுக்க்கான கருத்துருக்கள், ஆனால்வாழப்படும்வாழ்வில் அவை (ஒரு ஆழமான பொருளில்) இல்லை. பிராமணியத்தை, தலித்தியத்தை ஒரு புளியமரத்தில் இருந்து புளியம்பழத்தை உலுக்கிப் பறிப்பது போல வாழ்தலில் இருந்து பறித்தெடுக்க முடியாது. இவை நிகழ்த்தப்படும் பொய்யென அம்பலப்படுத்தாமல், நாமும் தொடர்ந்து இப்பொய்யை நிகழ்த்துவதில் பங்கேற்று, அதை மறைமுகமாக நியாயப்படுத்துகிறோம். நடப்பு அரசியலில் மக்கள் விடுதலைக்கான முயற்சிகளில் இத்தகைய அடையாள அரசியல் நிகழ்த்துதல் அவசியம் என அறிவேன். ஆனால் அவைபொய்என்பதையும் வலியுறுத்துவதும் அவசியம். இல்லையெனில் ஏந்திய வாளாலே நாம் மாண்டு போக நேரிடும்.


அன்றாடத்திலே ஒரு அசலான, சாரமான சாதியம் - அதன் சடங்குகளில் கூட - இல்லாத போது இலக்கியம் எனும் இன்னும் சிக்கலான வெளியில் அது எப்படி தன்னை தக்க வைக்க முடியும்

நான் இதைச் சொன்னதும் ஒரு தரப்பினர் நான் இலக்கியத்தில் பிராமணர்களே இல்லை, எந்த சாதி கதையாடலும் இல்லை எனச் சொன்னதாக மீண்டும் பலூனைப் பறக்க விடுகிறார்கள். (ஏனென்றால் அப்படிப் பேசுவதே அவர்களுக்கு வசதியாக இருக்கிறது.) இலக்கியத்தில் பிராமணர்கள், வெள்ளாளர்கள், முதலியார்கள், துலுக்கர்கள், கிறித்துவர்கள் என பட்டியல் வகுத்தபடியே செல்கிறார்கள். இது ஒரு மேம்போக்கான தளத்தில் நடக்கும் அரசியல் எனத் தெரியாதா? தெரியும் - ஆனால் இது ஒரு விளையாட்டு. இது ஒரு விளையாட்டு மட்டுமே என்றும் எனக்குத் தெரியும்.


ஒரு பிராமணர் ஒரு பிராமணக் கவிதை எழுதுகிறார் என வைப்போம் - அது பிராமணக் கவிதையே எனில் பிராமணர் அல்லாதோருக்கு அது எப்படிப் புரியும்? பிராமணத்துவம் என்பது பிராமணர்களுக்குள் உறைந்திருக்கும் முற்றுமுழுதான சங்கதி எனில் அது எப்படி எனக்கும் உங்களுக்கும் அர்த்தப்பட முடியும்? முடியாது தானே? “ஒரு வேற்றுகிரகவாசி நம் பூமிக்கு வந்து தன் கிரகத்து உணவை சமைத்து உண்கிறார்.” இது சரி எனில் அந்த உணவை நீங்களோ நானோ சாப்பிட முடியாது. சாப்பிட முடியும் எனில் அவர்முற்றுமுழுதாகவேற்றுகிரகவாசி அல்ல. அதே போலத்தான் எழுதப்படுவது பிராமணியம் எனில் அதை நீங்களோ நானோ உள்வாங்க முடியாது. அது நம் கிரகத்து உணவல்ல.


சரி, பிராமணியம் என்பது அனைத்து சாதியினராலும் உள்வாங்கப்படக் கூடியது, ஒவ்வொரு சாதியும் பிராமணியப்பட முடியும், அதனாலே பிராமணப் படைப்புகளை என்னாலும் உங்களாலும் படிக்க முடிகிறது என ஒருவர் இதை நியாயப்படுத்தினார் எனில் அதுவும் அவரது தரப்பையே பலவீனப்படுத்தி விடும் - எந்த சாதியும் பிராமணியப்பட முடியும் எனில் அதுபிராமணியம் பிராமணர்களுக்கானதுஅல்ல எனவாகிறது. ‘பிராமண நிலையும் பிராமணியமும்ஒன்றல்ல என ஆகிறது. இதைத் தான் பிராமணியத்தை வரையறுக்கும் பல அறிஞர்கள் கூறுகிறார்கள், அரைநூற்றாண்டுக்கும் மேலாக. இதை தமிழில் சரியாக புரிந்து கொண்டவர் டி.தருமராஜ் தான். “பார்ப்பனியம்என்பதை இப்படித்தான் அவர் தலைகீழாக்கம் செய்து அதை ஒரு சமூகத்திரளுடன் சாரமாக அடையாளப்படுத்துவதன் அபத்தத்தைக் காட்டினார். அதையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இதே தரப்பினர் தாம் அன்று சாடினர். பார்ப்பனியம் = பார்ப்பனர் என மொட்டையாக இணைப்பதே இவர்களுக்குப் பிழைப்பாகி விட்டது.


 இது ஆண்மை = ஆண்மை, பெண்மை = பெண்கள், பிரியாணித்துவம் = பிரியாணி (?) என்றெல்லாம் பொருத்தங்களை உருவாக்கும் அபத்த நிலைக்கு கொண்டு சென்று நம்மை விடும். இந்த இணையாக்கலின் ஒரு பிரச்சனையை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. 200 ரூபாய்க்கு ஒரு பிரியாணி வாங்குகிறீர்கள். இதனால் 200 ரூ = பிரியாணி என ஆகிடுமா? அல்லது பிரியாணி = 200 ரூ என ஆகுமா? பிரியாணியைக் கொடுத்தால் யாராவது உங்களுக்கு 200 ரூ திருப்பித் தருவார்களா? அல்லது 200 ரூபாயை எடுத்து சால்னாவில் முக்கித் தின்ன முடியுமா? (“மூலதனம்நூலின் துவக்கத்தில் இந்தச் சிக்கலை மார்க்ஸ் பேசுகிறார்.) ரூபாய்க்கே இவ்வளவு ஸ்திரமின்மை இருக்கும் போது சாதியத்துக்கு இருக்காதா?


மேலும் சில கேள்விகள்:

1) பிராமணப் படைப்பு என ஒன்று உண்டெனில், அது பிராமண வாழ்வின், சிந்தனையின் சாரத்தை பிரதிபலிக்கிறது எனில் அதை பிராமணர்களே படிக்க மாட்டார்களே? ஏற்கனவே நன்கு தெரிந்த ஒன்றை, பழகிய ஒன்றை ஏன் திரும்பத் தெரிந்து கொள்ள வேண்டும்? என்னிடம் நிஜ ஆப்பிள் இருக்கையில், பிளாஸ்டிக்கில் செய்த ஆப்பிளைக் கொடுத்தால் சாப்பிடுவேனா?

ஆக, பிராமணப் படைப்பை ஒரு பிராமணன் படிக்கையில் அது பிராமணனைக் கடந்து செல்கிறது. ஏனெனில் நிகழ்த்துதலின் இயல்பே அது தான்.


ஒரு பிராமணன் தன் வாழ்வை எழுதி, அதை மற்றொரு பிராமணன் படிக்க, அதில் பிராமணன்காணாதஒன்று வந்து விடுகிறது. அது அவன் எழுதியதையே முறியடிக்கும் அளவுக்குச் சிக்கலாக அது இருக்கிறது, அது திரியை எரித்து தன்னையே அழிக்கிற ஒரு நெருப்பைப் போல இருக்கிறது. அதுவே படைப்பு எனும் நெருப்பு.


2) சுகுணா திவாகர் தன் பேஸ்புக் பதிவில் இதைப் பற்றி எழுதும் போது லா..ராவால்தோட்டியின் மகன்நாவலை முழுக்கப் படிக்க முடியாதபடிக்கு அது அவரிடம் குமட்டல் உணர்வை ஏற்படுத்தியதற்கு, அதற்குக் காரணம் அவரது சாதியச் சூழலே என சொல்கிறார். சரி, இதை ஒப்புக்கொள்ளலாம் எனில் ஒரு சிக்கல் வருகிறது - நாளைதோட்டியின் மகன்நாவலைப் படிக்கையில் ஒருவருக்கு குமட்டல் உணர்வு வருகிறது என்றால் அவர் லா..ராவாகி விடுவார். குறைந்ததுபிராமணராகிவிடுவார்.

பீயைப் பற்றிப் படிக்கும் குமட்டல் உணர்வு = லா..ரா = பார்ப்பனியம் - இதுதான் உங்க பார்முலா என்றால் பீ மீதான குமட்டல் உணர்வையே பிராமணர்களுக்கு உரித்தானதாக்கினால் அந்த உணர்வு வரும் எவரும் பிராமணரே ஆகிட வேண்டுமே? எனக்குத் தெரிந்து டிவியில் கழிவுகளைக் கண்டால் வாந்தியெடுக்க ஓடுகிறர்கள் பலர் உண்டு. அவர்களில் சிலர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள். இதை எப்படிப் புரிந்து கொள்ள?


சு.ரா இந்நாவலை எப்படிப் படித்து மொழியாக்கினார், வாந்தியெடுத்துக் கொண்டேவா? தகழி சிவசங்கரப்பிள்ளை மலம் அள்ளும் தொழிலை செய்தவரல்ல? அவர் அந்த வாழ்வை சரியாகப் படம்பிடிக்கவில்லை என்று கூடக் குற்றச்சாட்டு உண்டு. இந்த குற்றச்சாட்டு சரியெனில் அவர்வாந்தியெடுத்துக்கொண்டே எழுதினார் என ஆகிடுமே? வாந்தி வரவில்லை எனில் அந்த மலம் அள்ளும் சூழலுக்குள் வாழ்ந்தவர் அவர் என ஆகிடுமா? இந்நாவலை படிக்கிற நாம் ஒவ்வொருவருக்கும் இது பொருந்துமா?


அடுத்து இந்த பார்முலாவையே திருப்பி போட்டால் ஒரு பார்ப்பனருக்கு இந்நாவல் படித்து குமட்டல் உணர்வே வரவில்லை எனில் அவர் பார்ப்பனரே அல்ல என ஆகி விடும். அது மட்டுமல்ல, இதைச் சொல்கிற சுகுணா திவாகரை நாம் ஒரு செப்டிக் டேங்குக்குள் இறக்கினாலோ அதில் இருக்கும் கழிவை அள்ளி சுத்தம்பண்ணக் கேட்டாலோ அவர் நிச்சயமாய் குமட்டிக்கொண்டு ஓடுவார் என்பதில் ஐயமில்லை. இதனால் சுகுணா பிராமணர் ஆகி விடுவாரா? சாதி = சூழல் = உளவியல் என்பது உங்க அனுமானம் எனில் அது எவ்வளவு ஆபத்தானது பாருங்கள். தர்க்கரீதியாகவே எவ்வளவு பிழையானது இப்பார்வை என கவனியுங்கள்.

 

ஆம், இலக்கியம் ஒன்றைச் சொல்கிறது, ஆனால் சொன்னதற்கு நேரெதிரான தர்க்கங்களையும் அழகியலையும் அரசியலையும் கூடவே அது முன்னெடுக்கிறது. அதனாலே அது இலக்கியம்!


குறிப்பு: சுரேஷ் வெங்கடாத்ரியை ஆதரிப்பதோ, அவர் எழுதினவற்றை முழுக்க நியாயப்படுத்துவதோ என் நோக்கம் அல்ல. ‘பிராமணர்களே நம் புலத்தில் இல்லைஎனக் கூறுவதும் அல்ல. நான் சொல்வது முற்றிலும் வேறொரு விசயம் - பிராமணன் எனும் பொது அடையாளம் வாழ்தலின் போது, அதன் ஆழமான பொருளில், உடைபடுகிறது, அதனாலே அவர்கள் மீளமீள அதை நிகழ்த்தி தக்க வைக்க முயன்று, தோற்றுக்கொண்டே வருகிறார்கள் (இது எந்த சாதிக்கும் பொருந்தும்). இதையே எழுத்திலும் முயல்கிறார்கள். தோற்கிறார்கள். தோற்கும்போதெல்லாம் அது சிறந்த எழுத்தாகிறது. ஒரு அசோகமித்திரனோ சு.ராவோ அங்கு உருவாகிறார். இவர்களை பிராமண எழுத்தாளர்கள் என்பதன் பொருள் இவர்கள் மட்டமான எழுத்தாளர்கள் என்பது.

 மற்றொருவரை மத்தியசாதி, தலித் எழுத்தாளர் என நீங்கள் சொல்வதன் பொருளும் அவர்கள்மட்டமானஎழுத்தாளர்கள் என்பதே. நல்ல எழுத்துக்குள் சாதி அதிகாரம் உயிர்க்க முடியாது; அது அங்கு உக்கிரமான தாக்குதலுக்கு, சமரசத்துக்கு உள்ளாகிறது. அது கொல்லப்பட்டு அங்கு ஒரு சூனியம் உருவாகிறது. ஒரு சாதியின் வரலாற்றை, எதார்த்தத்தை, அன்றாடத்தைப் பேசும் படைப்பிலும் பேசப்படும் அது சாகும் போதே அது படைப்பாகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் இமையம் தான் ஒருதலித் எழுத்தாளர்என அறிமுகப்படுத்தபட்ட போது அதை மறுத்துச் சாடினார். ஏனென்றால் அவருக்கு இந்த ஆழமான புரிதல் இருக்கிறது. இளையராஜா ஏன் தன்னை தலித் என கட்டம் கட்டுவதை தொடர்ந்து எதிர்த்து வருகிறார் என்பதையும் நாம் இப்படிப் புரிந்து கொள்ளலாம்.


 எழுத்தை, கலையை சாதி அடைப்புக்குறிக்குள் அடைக்காதீர்கள் என்கிறேன். முடிந்தால், வாழ்க்கையையும் அப்படி அடைக்காதீர்கள் என்கிறேன். அவ்வளவுதாங்க


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...