முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2021 திமுக தேர்தல் அறிக்கை - என் கோரிக்கைகள்

2021 திமுக தேர்தல் அறிக்கையில் நான் எதிர்பார்ப்பவை (நடக்காது எனத் தெரியும், இருந்தாலும் கோரிக்கை வைப்போம். இன்றைய கனவுகளே நாளைய எதார்த்தம்):
1) தமிழகத்தில் ஆர் எஸ்.எஸ்ஸுக்குத் தடை!
2) மது விற்பனை ஒரு நாளைக்கு 2 மணிநேரமாக குறைப்பு.
3) டாஸ்மாக் கடைகளை ஆரம்பத்தில் 50% குறைப்பு. போகப் போக முழுத்தடை. 

4) சாதி / மதக் கலவரங்களைத் தூண்டும் விதமாய் பேசுவதற்கோ, நிகழ்ச்சிகள் நடத்துவதற்கோ தடை.
5) கௌரவக் கொலைகளை ஊக்குவித்து கட்டப்பஞ்சாயத்து நடத்தி, வழக்குகளை தம் சொந்த பணம், வக்கீல்களைக் கொண்டு நீதிமன்றத்தில் நடத்த கட்சிகளுக்குத் தடை. அதையும் மீறி இதில் ஈடுபடுகிறவர்களின் சொத்துக்களை பறித்து வங்கிக் கணக்குகளை முடக்க ஒரு தனிச்சட்டம்.

6) காவல்துறை, ஊழல் ஒழிப்புத் துறை, நீதித்துறை ஆகியவை நேரடியாக மக்களின் கண்காணிப்பின் கீழ் நடைபெற சட்டரீதியான மாற்றம் - ஒவ்வொரு பகுதியிலும் செயல்படும் அதிகாரி, நீதிபதி போன்றோர் சிறப்பாக செயல்படுவதாய் அங்கு அவர்களுடன் புழங்கும் பொதுமக்கள் ஆதரவாய் மதிப்பீடு கருத்துக்கணிப்பின் வழி செய்ய வேண்டும். இதை நடத்த சுதந்திரமான அமைப்பு ஒன்று உருவாக்க வேண்டும். மக்களின் ஆதரவைப் பெறாதோரின் ஊதியம் ரத்தாவதுடன், சொத்துக்களை பறிமுதல் பண்ணவும் இந்த அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அதாவது சட்டம், ஒழுங்கு மக்கள் வசம் இருக்க வேண்டும், பொருளாதார வளர்ச்சியையும் வரிவசூலையும் அரசு பார்த்துக் கொள்ளலாம்.

7) தமிழகம் முழுக்க பல்லாயிரம் கோடிகள் மதிப்பில் கோயில் சொத்துக்கள் உள்ளன. இவை அறநிலையத்துறையின் உதவியுடன் கொள்ளையடிக்கப் படுகின்றன. இவை பொது உடைமை ஆக்கப்பட்டு, மக்கள் நலப்பணிகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.

8) பள்ளிக் கல்வித் திட்டம், திராவிட, பகுத்தறிவு, பொதுவுடைமை கொள்கைகளின்படி, அரசியல்மயப்படுத்தபட வேண்டும். 

9) சாதி மறுப்பு திருமணம் செய்யும் இளைஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்க ஒரு தனிப்பிரிவு காவல்துறைக்குள் உருவாக்கப்பட வேண்டும். 

10) இருவேறு சாதியை சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்து, சாதியற்றவர் என சான்றிதழ் பெறுவோருக்கு கல்வியில், வேலையில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

11) மக்கள் நிலத்தில் ஒரேயடியாய் முதலீடு பண்ணி பணப்புழக்கத்தை முடக்கி, பணவீக்கத்தை ஏற்படுத்தி, நிலத்தின் மதிப்பை எகிற விடுவதை, ரியல் எஸ்டேட் தொழிலை ஒழிக்க, ஒரு நகரத்தில், சிற்றூரில் எல்லா நிலங்களுக்கும், வீடுகளுக்கும் ஒரே பண மதிப்பைக் கொண்டு வர வேண்டும். அதாவது நகரத்தின் மத்தியிலோ புறநகரிலோ, வீட்டுக்கும் கடைக்கும், ஒரே குறைந்தபட்ச வாடகை. எல்லா இடங்களிலும் வீடும், நிலமும் ஒரே விலை. இது மக்கள் ஒன்றாக வாழும் சமத்துவத்தை உறுதி பண்ணும்.

12) பெரும்பணக்காரர்களுக்கு கூடுதல் தொழில் வரி, இவ்வரிப்பணத்தை நிர்வகிக்க தனி வங்கி, இவ்வங்கியின் ஒரே பணி ஏழ்மையில் தவிக்கும் விவசாயிகள் மற்றும் பிற மக்களுக்கு கடன் வழங்குவது. 

13) அரசே நேரடியாய் தொழில்களில் (சினிமா, கட்டுமானம், தொழில்நுட்பம், உற்பத்தி) முதலீடு செய்து லாபம் ஈட்டி வருவாயைக் கூட்ட, அப்பணத்தை நலத்திட்டங்களுக்கு செலவழிக்க வேண்டும். வருமானத்துக்கான டாஸ்மாக் சார்பை அரசு கைவிட இது உதவும்.

14) வைதீகத்துக்கு மாற்றாக அவைதீக மத நிறுவனங்களை தமிழகத்தில் வளர்க்க அரசு முயற்சி எடுத்து, மக்களிடம் புது மதங்களை பரப்புரை செய்ய செலவழிக்க வேண்டும்.இதன் மூலம் போலிச்சாமியார்களை, இந்துத்துவத்தை ஒழிக்கலாம். இந்த அரசுசார் அவைதீக பகுத்தறிவு மதத்திற்கு சிறுபான்மையினரையும் ஈர்க்க முயற்சிகள் முயற்சிகள் எடுக்க வேண்டும்.

15) மத நிறுவனம் நடத்துவோர் சொத்துக்கணக்கை மற்ற நிறுவனத்தாரைப் போலக் காட்டி வருவாய் வந்த வழிகளை நிரூபிக்க வேண்டும். இவர்களுக்கு வருவாய் வரி விதிக்கப்பட வேண்டும்.

16) அனைத்து கிராமங்களிலும் பொது மின்மயானங்களை உருவாக்க வேண்டும்.

17) பெற்றோர் சொத்து பிள்ளைக்கு எனும் முறை ஒழிக்கப்பட வேண்டும். இதன்படி ஒருவர் இறந்ததும் அவரது சொத்து அரசுக்கு சொந்தமாகி, அதன்வழி பொதுமக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படும். ஊழலை, பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைக்க இது பெரிதும் உதவும்.

18) ஜி.எஸ்.டி வரியை செலுத்த முடியாது என அறிவித்து புதுச்சட்டம் இயற்ற வேண்டும். 

19) தனியார் பள்ளிகளில், நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும். 

20) தில்லி, கேரளாவில் போல தனியார் பள்ளிகளுக்கு நிகராக / அவற்றை விட மேலான தரத்தில் அரசுப் பள்ளிகள் இயங்க முதலீடு செய்யப்பட வேண்டும். மக்கள் தம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கத் தயங்குகிற நிலை ஏற்பட வேண்டும்.

21) அனைவருக்கும் ஒரே உணவு திட்டம் -  அம்மா உணவகம் திட்டம் இன்னும் மேம்படுத்தப்பட்டு அனைவருக்கும் இலவச உணவளிக்கும் அன்னசாலைகள் ஒவ்வொரு ஊரிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். அங்கு சுவையான, ஆரோக்கியமான உணவை அளித்து, மக்கள் ஒருமித்து அங்கேயே உண்ணும் நிலை வர வேண்டும். மக்கள் வீட்டில் சமைப்பது நின்று போய், ரேஷன் கடைகளின் தேவையும் இல்லாத நிலை வர வேண்டும். இது சமையலில் இருந்து பெண்களை விடுவித்து வேலைக்கு செல்ல அனுமதிக்கும். இந்த அன்னசாலைகளுக்கான செலவை அரசு சொந்தமாய் தொழில்களில் முதலீடு செய்து ஈட்ட வேண்டும், வரி மூலம் செலவழிக்கலாகாது. 

22) நீர், மண், கனிமங்கள், ஆறு, ஆற்றுமணல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீதான முழு உரிமையும் அந்தந்த பகுதிவாழ் மக்களிடம் - அரசிடம் அல்ல - இருக்க வேண்டும். அவை பொதுசொத்து. அவற்றை ஊர் சபையினர் நிர்வகிக்க வேண்டும். இவற்றை சுரண்டி சம்பாதிக்கும் தொழில்கள் மீது தடை விதிக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...