முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“புத்தம் புதுக் காலை” (அமேசான் பிரைம் - OTT வெளியீடு)



 ஐந்து குறும்படங்களையும் படங்களையும் பார்த்தேன். பலரும் சொல்வதைப் போல பழமை வீச்சம், தேய்வழக்குகள் அதிகம். எனக்கு அதை விட இப்படங்களின் திரைக்கதை அவசரமாய் உருவாக்கப்பட்டதைப் போலத் தோன்றுகிறது. ஓரளவுக்கு நன்றாக வந்த Coffee, Anyone? கூட கிளைமேக்ஸை கோட்டை விட்டதை போலத் தோன்றுகிறது. அப்படத்தைப் பற்றி முதலில் சொல்லுகிறேன்.


சுஹாசினி எழுதி இயக்கிய இப்படத்தில் மற்ற படங்களை விட திரைக்கதை மேலாக இருக்கிறது. மூன்று சகோதரிகளின் வாழ்வில் வரும் சிறிய நெருக்கடிகள், அதை அவர்கள் ஒரே சம்பவத்தின் - அம்மா கோமாவுக்கு சென்று, வீட்டில் வைத்து அப்பாவால் கவனிக்கப்பட்டு, அதிசயமாய் மீண்டு வருவது - பின்னணியில் எப்படி வெற்றிகொள்கிறார்கள் என்பதே ஒற்றை வரி. சகோதரிகளாக வரும் சுஹாசினி, அனுஹாசன், ஸ்ருதிஹாசனின் வாழ்க்கைப் பின்னணி, அடிப்படையான இயல்புகள், வாழ்க்கைப் பிரச்சனைகள் தெளிவாக சொல்லப்பட்டு விடுகிறன. இங்கிலாந்தில் வாழும் சுஹாசினிக்கு தன் மகனை போதுமான அளவுக்கு கவனிக்க முடியவில்லை, அவனுக்கு டிஸ்லெக்ஸியா எனும் ஆற்றல் குறைபாடு உள்ளது எனும் குற்றவுணர்வு, அனுவுக்கு நீண்ட கால முயற்சிக்குப் பின்னரும் மகப்பேறு இல்லை எனும் இயலாமை, ஸ்ருதிக்கு தன் விருப்பங்களை தாய் புரிந்து கொண்டு ஆதரிக்கவில்லை எனும் கோபம். உறவுகள் மீதான புரிதல்கள், வாழ்க்கை மீதான நம்பிக்கை, குடும்பத்தின் மீதான பாசம் தோன்றி இவர்கள் நெருக்கடியை கடப்பதே கதை. இதை ஒரு வசனத்தின் மூலம் சாதிக்கிறார்கள் என்பது நம்பும்படியாய் இல்லையென்றால் படத்தில் ஓரளவுக்கு இதை சமாளித்து விடுகிறார்கள். இறுதிக் காட்சியில் அம்மா கோமாவில் இருந்து முழுமையாய் மீண்டும் தனக்கு ஒரு கப் காப்பி வேண்டும் எனக் கேட்பதை பார்வையாளனுக்கு இன்னும் திருப்தி ஏற்படும்படி அமைத்திருக்கலாம் - அம்மாவின் நிலை மோசமாகி பின்னர் எதிர்பாராமல் சீராவதைப் போல அல்லது வேறு விதங்களில் (தேய்வழக்குதான், ஆனால் வேலை செய்யும்.).

இப்படத்தின் ஒளிப்பதிவு, framing, blocking மற்ற படங்களை விட சிறப்பாக உள்ளது. அதாவது மணிரத்னம் ஸ்டைலில், ஒவ்வொரு கடையும் கண்ணில் ஒத்திக்கொள்ளலாம் என்பதைப் போல உள்ளது. .தா., சுஹாசினி தன் அம்மாவை வீட்டில் வைத்து, மருத்துவ கவனிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்வதை விரும்பவில்லை; அவர் சற்று எதிர்மறையாக அதிசயங்களில் நம்பிக்கை இல்லாதவராக உள்ளார். இதைக் காட்டுவதற்காக இவர் ஆரம்பத்தில் தோன்றும் காட்சிகளில் சட்டகத்தில் பாதி திறந்த கதவின் பக்கத்தில் நிற்பது போல அமைத்திருக்கிறார்கள். அன்பின் மகத்துவத்தை அவர் புரிந்து கொண்ட பின் அவர் திறந்த சட்டகங்களில் தோன்றுகிறார்.    


 ஸ்ருதி ஐபேட் வழியாக தன் அம்மாவுடன் பேசும் போது அவரது கை மட்டும் சத்தம் வருகிற திசையாக எழுந்து தொட முயலும். இக்காட்சி ஒரு உருவகம் போல உள்ளது - ஒரு சிறு அசைவால் காலம் ஏற்படுத்தும் தொலைவைக் கடந்து எளிதில் அன்பைத் தொட, உணர்த்த முடியும் என்பதற்கான உருவகம். அதை ஒரு நகைமுரணாகவும் (திரையில் தோன்றும் வெர்ச்சுவல் உண்மையை தொட முடியாதே), அவரது ஆசீர்வாதமாகவும் கூட தோன்றுகிறது.


இப்படியான நுணுக்கங்களை மற்ற படங்களில் காண முடியவில்லை. ஒரே குறை நீளமான வசனங்கள். வசனங்களைக் குறைத்தால் படத்தை இன்னும் சிக்கனமாக பண்ணியிருக்கலாம்.


கார்த்திக் சுப்புராஜின் Miracle ஒரு வித்தியாசமான சமூகப் பகடி. அவரது படங்களின் டிப்பிக்கலான ஸ்டைல் அம்சங்களும் உண்டு - பழைய பாடல்களை எதிர்பாராத இடங்களில் ஒலிக்க விடுவது, குறைந்த ஒளியில் அதிரடிக் காட்சிகள், அசமந்தமான நகைச்சுவை என. ஒரே குறை உணர்ச்சி ஆழம் இல்லாதது. படம் முடியும் போது கிளைமேக்ஸ் நம்மை ஆச்சரியப்படுத்துகிறதே ஒழிய திருப்தி அளிக்கவில்லை. சமூகப் பகடி எனும் போது ஒரு சமூகத்தீமையை சித்தரித்து, அதனால் ஏற்படுகிற பாதிக்களை சுருக்கமாய் காட்டி இறுதியில் வில்லன் தமாஷாக இழப்பை சந்தித்து பல்ப் வாங்குவதாய் காட்டலாம். இதில் வில்லனுக்கு இழப்பு நேரும் போது அவன் அதனால் வருத்தப்படுகிறானா இல்லையா, அவன் சாமியாரா அல்லது வட்டிக்கு விட்டு, மக்களை வாட்டி சம்பாதிக்கிற கொடூரனா என்பது தெளிவாக இல்லை. (எல்லா கார்த்திக் சுப்புராஜ் படங்களையும் போல இதிலும் வில்லன் யார், ஹீரோ யார் எனும் குழப்பம் உள்ளது.) கிளைமேக்ஸ்நேரம்”, “சூப்பர் டீலக்ஸ்போன்ற படங்களை நினைவுபடுத்துகிறது.


சுதா கொங்கோராவின்இளமை இதோ இதோரொம்ப பலவீனமான திரைக்கதையைக் கொண்ட படம். பிரதான பாத்திரங்களுக்கு எந்த பெரிய சவால்களும் இல்லை என்பது படத்தை ஆட்டை முழுங்கிய மலைப்பாம்பைப் போல படுக்க வைக்கிறது.

அவரும் நானும் - அவளும் நானும்கௌதம் மேனனின் படம் என என்னால் நம்ப முடியவில்லை. அவரது முத்திரை இல்லாத படம்பேத்தி வீட்டுக்கு வந்ததும் அந்த தாத்தா தன் மனத்தடைகளை கடந்து ஏற்கப் போகிறார் என்பது ஒற்றைவரி. ஆனால் இக்கதை முதல் ஐந்து வினாடிகளுக்குள் முடிந்து போகிறது. அதன் பிறகு முழுக்கவே அழுகைப் படலம் தான். ஆனாலும் சில இடங்கள் நம்மை நெகிழ வைக்கின்றன, எம்.எஸ் பாஸ்கரின் நடிப்பு அவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.


ராஜீவ் மேனனின் Reunion தான் இருப்பதிலே மட்டமான படம் - அது யாருடைய கதை? போதைப் பழக்கத்தில் இருந்து மீள வேண்டிய ஆண்டிரியாவின் கதையா? எனில் ஏன் அவ்வளவு நேரத்தை லீலா சேம்சன், குரு சரணில் வீணடிக்க வேண்டும்? ஆண்டிரியா போதைக்கு அடிமையாகக் காரணம் தன் கலை வாழ்வில் பெரிய வெற்றி பெற முடியவில்லை என்பது. அதுவே அவரது சவால். அதைக் கடப்பதே அவருக்கான அடிப்படை விழைவு. ஆனால் அதை குருசரண் லவ் யூ சொன்னதும், லீலா சேம்சன் அன்புடன் பராமரித்ததும் அவரால் கடந்து விட முடியும் என்பதை நம்ப முடியவில்லை. கிளைமேக்ஸை வேறுவிதமாய் அமைத்திருக்கலாம் - குரோசாவாவின்இகிருபோல.


இக்கதைகளை வீட்டுக்குள் வைத்து எடுத்தது மற்றொரு பிரச்சனை - அது இயல்பாகவே கதைகளை குடும்பத் தளத்துக்குள் முடக்கி விடுகின்றன. இந்த கொரோனா காலத்தில் வெளியே எத்தனையோ பிரச்சனைகள், எதிர்பாரா அனுபவங்கள் ஏற்பட்டதைப் பார்த்தோம். ஊருக்கு நடந்தே போக முயன்று வழியில் செத்துப் போன மக்கள், சிகிச்சைக்காக மாநில எல்லைகளுக்கு, இடையே பாஸ் வாங்கி அலைபாய்ந்த மக்கள், நிறுவனங்களின் ஊழல், மருத்துவர்கள், செவிலியரின் தியாகம், பயணத்தின் போது விடுதியில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு ஆளானவர்கள் சந்தித்த சுவாரஸ்யமான அனுபவங்கள் என சமூகவலைதளங்களிலேயே சினிமாவுக்குப் பொருத்தமான எத்தனையோ முக்கியமான ஒற்றை வரிகளைப் பார்த்தோம். எதிர்காலத்தில் இவ்வகையான கொரோனா கதைகளை இயக்குநர்கள் எடுக்க முயல வேண்டும்.



இந்த 5 படங்களில் முதல் மார்க் வாங்கி பாஸ் ஆகிறவர் சுஹாசினி தான். என்னாலே நம்ப முடியவில்லை! இவ்வளவு நல்ல திரைமொழி சுஹாசினியிடம் உண்டா? உண்மையானமிராக்கிள்இதுதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...