முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வலதுசாரிகள் - வீழ்ச்சியின் மீது வளரும் காளான்கள் (2)



 

இந்தியாவில் முதல் வலதுசாரி பேரலை தோன்றிய போது இரு தேசியங்கள் (இந்தியா-பாகிஸ்தான்) உருக்கொண்டன; இதில் ஒரு தேசியத்திற்கு இரு தலைவர்கள் - ஒருவர் பல கோடி பேரால் அங்கீகரிக்கப்பட்ட காந்தியார். மற்றொர் தன் காலத்தில் பல கோடி பேரால் புறக்கணிக்கப்பட்ட சாவர்க்கர் என ஆஷிஸ் நந்தி சொல்கிறார். இந்த கட்டத்தில், பிரிவினையின் போது முதலில் மக்கள் பரஸ்பரம் கொன்று தணிந்தனர். இறுதியாக காந்தியின் படுகொலை நடந்தது. காங்கிரசுக்குள் வல்லபாய் பட்டேல் வலதுசாரிகளுக்கு ஆதரவான, ஆறுதலான ஒரு செயல்பாட்டாளராக திகழ்ந்தார். ஆர்.எஸ்.எஸ் தற்காலிகமாய் தடை செய்யப்பட்டது. காந்தியின் படுகொலையை உண்மையாக விசாரித்து அசலான குற்றவாளிகளை அடையாளம் காண்பதை காங்கிரஸ் தலைமை தவிர்த்தது. ஏனென்றால் அவர்கள் மத்தியிலும் காந்தியின் அழிவை விரும்பியவர்கள் இருந்தனர். அவரது ரத்த பலி என்பது அந்த காலகட்டத்தின் வேட்டைய ராஜாவை குருதிக்கொடை கொடுக்க அவசியப்பட்டது. அடுத்து ஒரு நீண்ட கால அமைதி நிலவியது. ஆனால் நவபொருளாதார சந்தை இங்கு தோன்றி அதனால் பொருளாதார எழுச்சி ஏற்பட்டது ஒரு வலதுசாரி-சாதக சூழல் இந்தியாவில் தோன்ற காரணமாகியது என்கிறார் ஆஷிஸ் நந்தி தனது A Disowned Father of the Nation: Vinayak Damodar Savarkar and the Demonic and the Seductive in Indian Nationalism எனும் நீள்கட்டுரையில். தொண்ணூறுகளில் காங்கிரஸ் கொண்டு வந்த நவதாராளவாத பொருளாதார அலை ஒரு பக்கம், மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவது மற்றொரு பக்கம் என இந்திய சமூகத் தட்டுகளில் பெரும் படிநிலை மாற்றங்கள் ஏற்பட்டன, பொருளாதார எழுச்சியுடன் அடுத்தடுத்து தோன்றிய வீழ்ச்சி, நிலையற்ற தன்மை, கூட்டுப்பதற்றம், கூட்டுப் பொறாமை, ஸ்திரமின்மை இங்கு சாதிக் கட்சிகள் வலுப்பெற்று ஆட்சி அதிகாரம் பெற, மதவாத அரசியல் எழுச்சி பெற உதவின. தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோரின் எழுச்சி அரசியல் களத்தில் தோன்றிட ராமதாஸ் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பெரும்பான்மை சாதிகள்ஒடுக்கப்பட்டோரால்ஒடுக்கப்படுவதாய் ஒரு கதையாடலை முன்னெடுத்தார்கள். இதன் ஒரு நீட்சியாக தமிழ் சினிமாவில்சின்ன கவுண்டர்”, “எஜமான்”, “தேவர் மகன்போன்ற படங்கள் ஒடுக்கப்படும், அழிக்கப்படும் பெரும்பான்மை சாதிகளின் ஆதரவாக, தன்னிரக்க உணர்வை தோற்றுவித்தது நினைவிருக்கும்; மற்றொரு பக்கம் அத்வானியின் ரத யாத்திரை, காங்கிரஸின் புதிய வல்லபாய் பட்டேலான நரசிம்ம ராவின் உதவியுடன் நடந்த பாபர் மசூதி இடிப்பு, அதை ஒட்டிய கலவரங்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், நகரங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் என அடுத்த வலதுசாரி அலை தோன்றியது. மீண்டும் கங்கா சந்திரமுகியின் சலங்கையை எடுத்தணிந்தாள்.


 இந்த அலையானது, அடுத்தடுத்த பத்தாண்டுகளில் ஒரு பக்கம் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் அம்பலமாகியது, மற்றொரு பக்கம் உலக அரங்கில் தோன்றிய பொருளாதார வீக்கம் இந்திய பொருளாதாரத்தை சரிவை நோக்கித் தள்ளியது, இதன் விளைவாக கொதிப்பு நிலை இங்கு ஒரு உச்சத்துக்கு சென்றது. நம் பிரச்சனைகளுக்கு ஒட்டுமொத்த காரணம் சிறுபான்மையினருக்கு வருடிக் கொடுக்கும் முற்போக்கு அரசியல் என்றும், சிறுபான்மையினர் எதிரி தேசங்களுக்கு துணை போய் இந்திய தேசத்தை அழிக்க, இந்துக்களை ஒழிக்க முனைகிறார்கள் என்றும் ஒரு கதையாடல் பிரச்சாரம் செய்யப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மோடி ஜி தன் நாஜிப்படையினருடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். அதாவது பத்தொன்பதாவது நூற்றாண்டில் இறுதியில் இருந்து இருபதாம் நூற்றாண்டில் முதல் சில பத்தாண்டுகள் வரை ஆங்கிலேய காலனிய அரசு உருவாக்கி பரப்பிய அதே இஸ்லாமியர்-படையெடுப்பாளர்கள்-இந்து விரோதிகள் கதையாடல் இப்போது இந்துத்துவர்களால் பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்டு புதிய மோஸ்தரில் மக்கள் அரங்கில் வைத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

 அந்த சந்தர்பத்தில் இந்திய கூட்டு மனத்துக்கு ஏற்பட்ட கடும் மன அழுத்தம், மனப்பிளவுக்கு ஒரு ஆறுதல் தேவைப்பட்டது. ஒரு வேட்டைய ராஜா தேவைப்பட்டார். அவர் அரை நூற்றாண்டுக்கு முன்பு இங்கு ஒரு பெட்டியில் வைத்து பூட்டப்பட்டிருந்தவரே. ஆனால் ரெண்டாயிரத்துடன் அப்பெட்டி திறக்கப்பட்டு சந்திரமுகியின் பேய் வெளிப்பட்டு அது வேட்டைய ராஜாவைக் காட்டி ஆடிப்பாடத் தொடங்கியது. முதலில் அத்வானி, அடுத்து மோடி-ஷா கூட்டணி என ஒவ்வொருவராக சந்திரமுகியின் அறையைத் திறந்து பேயை விடுவித்தனர். அப்படித் தான் இந்திய வலதுசாரி அரசியலின் இரண்டாம் அலை, இரண்டாவதுரா ரா சரசுக்க ராராஆட்டம் நிகழ்ந்தது.


2) இந்த கட்டத்தில் முற்போக்கு அரசியல் சிந்தனையாளர்களும் அரசியல்கட்சிகளும் செய்த தவறு இதை ஒரு நோய்மை எனப் புரிந்து கொள்ளாமல், அதை குணமாக்க முயலாமல், ஆறுதல்படுத்த எத்தனிக்காமல், பிரபுவைப் போலஎன்ன கொடுமை சார்என புலம்ப ஆரம்பித்ததே. தாம் வேட்டைய ராஜாவுக்கு ஆதரவாக இருப்பதாய் ஒரு சித்தரத்தை வலதுசாரிகள், இந்துத்துவாதிகள் ஏற்படுத்தி பலனடைந்தார்கள். 2014, 2019 இல் காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த போது நாம் கண்ட ஒரு உண்மை மோடி எதிர்ப்பு எப்படி அவருக்கு சாதகமாக முடிந்தது என்பது. ராகுல் காந்தி பணமதிப்பிழப்பு, எல்லைப் பாதுகாப்பு, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து மோடியை விமர்சிக்கும் போதெல்லாம் அது மோடி அரசுக்கு சாதகமாய் மாறியதைப் பார்த்தோம். ராகுல் தலைமையிலான காங்கிரஸ் அரசு இது ஒரு நோய்மை எனப் புரிந்து கொள்ளாததன் விளைவு இது. பெரும்பான்மை மக்கள் அமைதியற்று தவிக்கும் போது அவர்களுக்கு நேர்மறையாகப் பேசி ஆறுதல் அளிக்க வேண்டும். வேறெப்படியெல்லாம் பொருளாதாரத்தை வகுத்து வழிநடத்தி மக்களை தம்மால் காப்பாற்ற முடியும் எனப் பேச வேண்டும். அனைவரையும் அரவணைத்து செல்வதே தம் அரசியல் எனக் காட்ட வேண்டும். வலதுசாரி-இடதுசாரி எனும் இருமையைக் கடந்து செல்ல வேண்டும். மோடியுடையது ஒரு வெகுஜன சிறுபான்மை வெறுப்பரசியல் மட்டுமல்ல, அதைக் கொண்டு பெரும்பான்மை இந்துக்களுக்கு தற்காலிக ஆறுதல்களை அளிக்கும் ஒரு அரசியலும் தான். ஆகையால் இந்தரா ராபுனைவரசியலுக்குள் செல்லாமலே அதற்கு மாற்றாக தம்மை காங்கிரஸார் முன்வைக்க வேண்டும்.

 மாறாக நீங்கள் சிறுபான்மை ஆதரவு அரசியலை எடுத்தால் நீங்கள் வேட்டைய ராஜாவுக்கு ஆதரவாக இருப்பதாய் காட்டி சந்திரமுகியை கோபமடைய வைக்க இந்திய வலதுசாரிகளால் முடியும். சீன ராணுவம் எல்லைக் கடந்து வந்து இந்தியாவை ஆக்கிரமிக்கிறது, இந்திய அரசு கையாலாகாதது எனப் பேசினால் நீங்கள் சீனாவுக்கு (வேட்டைய ராஜாவுக்கு) ஆதரவாகப் பேசுவதாய் மக்களுக்குத் தோன்றும். மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சிப்பது, அவரை திருடர் என அழைப்பது, அவர் கொரோனா டாக் டவுனின் போது மக்களை வதைத்து கொன்றார் எனக் கூறினால் மக்களுக்கோ மோடியை அல்ல நீங்கள் இந்திய தேசியத்தை அவமதிப்பதாகவே தோன்றும். அதற்குப் பதிலாக நேர்மறையான மாற்றம், வளர்ச்சி, ஒற்றுமையை முன்னெடுக்கும் பிரச்சாரங்களை மேற்கொள்வது, மக்களை தொடர்ந்து ஆறுதல்படுத்துவது, ஒரு மாற்று அரசியலைக் காண்பிப்பதே எதிர்க்கட்சியினர் இப்போது செய்ய வேண்டியது. இன்னொன்று, அவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் ஒரு குழந்தைக்கு மனநலம் பாதிக்கப்பட்டால் நீங்கள் அவரை விமர்சிப்பதில், கண்டிப்பதில், நோயைப் பழிப்பதனால் பலனில்லை (அந்த வேலையை விமர்சகர்களிடம் விட்டு விடுங்கள்). மருந்தை கொடுப்பது, அமைதிப்படுத்துவது, கூட இருந்து மென்மையாக கவனித்துக் கொள்வது, மருந்து வேலை செய்து நோய் நீங்கும் வரை காத்திருப்பது தான் பலனளிக்கும். அதே போல சந்திரமுகியை பின்பற்றி மற்றொருரா ராநடனத்தை ஆடவும் நீங்கள் முயலக் கூடாது. அதாவது மோடியைப் போலச் செய்யவும் கூடாது.


 இப்போது காங்கிரஸுக்குத் தேவை ஒரு மாற்று அரசியல், வலதுசாரி, இந்துத்துவ எதிர்ப்பரசியல் அல்ல.


இந்த உத்தியை இம்முறை அமெரிக்க தேர்தலின் போது பைடனின் ஜனநாயகக் கட்சி சிறப்பாக செயல்படுத்தியது - அவர்கள் அமெரிக்க தேசியவாதத்துக்கு ஆதரவாளர்களாக, அதே சமயம் பெரும்பான்மை இனத்தவர் vs சிறுபான்மை இனத்தவர் எனும் கதையாடலுக்குள் பங்கெடுக்காதவர்களாக, அதைக் கடந்த மாற்றம், நம்பிக்கை, சமத்துவம், முன்னேற்றம் ஆகியவற்றைப் பற்றி பேசுகிறவர்களாக தம்மைக் காட்டிக் கொண்டனர். அதனாலே பைடனால் டிரம்பை முறியடித்து அமெரிக்காவின் ஜனாதிபதியாக முடிந்தது. ஆனால் இது ஒரு சமூகக் கூட்டு நோய்மை என்பதால் அதை மெல்ல மெல்லவே அவரால் குணப்படுத்த முடியும். டிரம்பின் ஆதரவாளர்கள் அதிகமாகி உள்ளதும், மிக மோசமான நிர்வாகத்தை வழங்கிய பின்னரும் டிரம்புக்கு வெள்ளையின பெரும்பான்மையினரிடம் பெரும் ஆதரவு இப்போதும் உள்ளதும், தேர்தலில் பைடன் 76,343, 332 வாக்குகளைப் பெற்றிருந்தால், டிரம்போ 71,444, 567 வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்பதும் வலதுசாரி அரசியல் அமெரிக்காவில் இப்போதைக்கு மிகச் சற்று மட்டுமே பின்வாங்கி உள்ளது என்பதைக் காட்டுகிறது. கூட்டு மனநோய் குணமாக இன்னும் பல பத்தாண்டுகள் தேவைப்படலாம். (தற்காலிகமாகத் தான். மற்றொரு வரலாற்றுச் சூழலில் மீண்டும் அது தலையெடுக்கலாம்.)


இந்தியாவில் ஜியின் மிக மோசமான நிர்வாக முடிவுகள், கருணையற்ற நிர்வாகம் எப்படி கொரோனா காலத்தில் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது, சிறுதொழிகளை, ஏழைகளின் வாழ்வுரிமைகளை முழுக்க அழித்தது என்பதைப் பார்த்தோம். ஆனால் இப்போதும் இங்கு மோடி அலை ஓயவில்லை. தற்போது நடந்துள்ள பீகார் தேர்தலில் பாஜக கணிசமான இடங்களை வென்றுள்ளது. இத்தனைக்கும் பீகாரி புலம்பெயர் தொழிலாளர்களே பல ஆயிரம் கிலோமீட்டர்கள் நடந்து உணவின்றி, போக்குவரத்து வசதி இன்றி அதிகமாய் துன்புற்றார்கள். ஆனால் இப்படியான பெரும் துன்பம் ஒரு மக்கள் பரப்பை நிலைகுலைய வைக்கும் போதே வலதுசாரிகளுக்கான ஆதரவும் வினோதமாய் பெருகுவதைப் பார்க்கிறோம். ஏனென்றால் உலகம் முழுக்க எப்போதுமே வலதுசாரிகள் சமூக வீழ்ச்சியின் மீது வளரும் காளான்களே. அது தமது ஆட்சியினால் ஏற்படும் சீர்குலைவாக இருந்தாலும், அதற்குக் காரணம் தமது தேசியத்துக்கு எதிரான பாகிஸ்தான், சீனப் படையெடுப்புகளும், சிறுபான்மை சாதியினரின் மதங்களும் ஒன்று சேர்ந்து உள்ளுக்குள் தொடுக்கும் படையெடுப்புமே என ஒரு வேட்டைய ராஜாவை கட்டமைத்து அவர்கள் அரசியல் லாபத்தை கொய்வார்கள். பீகார் மட்டுமல்ல, உத்தரபிரதேசம், வடகிழக்கு போன்று பொருளாதாரம் வலுவாக இல்லாத எல்லா இடங்களிலும் இந்தரா ராபாடல் பெரும் வெற்றி பெறும். மோடியை வீழ்த்த்த எதிர்க்கட்சியினர் செய்ய வேண்டியது சந்திரமுகியை கிண்டலடிக்காமல், கண்டிக்காமல், விமர்சிக்காமல் அவளுக்கான தீர்வு தம்மிடம் உள்ளது, அது இந்துத்துவர்களின் வன்முறையான, பிற்போக்கான தீர்வை விட மேலான நியாயமான ஒன்று எனப் புரிய வைப்பதே; அப்படி பேசும் போது கங்காவிடம் அவளது அச்சங்கள் மிகையானவை, அவளுடைய பிரச்சனைக்கு நேர்மறையான தீர்வுகள் உண்டு எனக் கூறி, தான் சந்திரமுகி அல்ல கங்கா என மெல்ல மெல்ல நினைவுபடுத்துவதே. அமெரிக்காவில் பைடனைப் போன்றே  பீகார் தேர்தலில் ஆர்.ஜெ.டியின் தேஜஸ்வி யாதவ் கூடரா ராபாடலுக்குள் புகுந்து கூட ஆடாமல், வளர்ச்சி, மாற்றம் குறித்த ஒரு நேர்மறையான பிரச்சாரத்தை மேற்கொண்டார், அதன் விளைவாக அவரது கட்சி 75 இடங்களில் வெற்றி பெற்றதை, அவரது மகாகத்பந்தன் கூட்டணி 110 இடங்களைப் பெற்றதைப் பார்த்தோம். தோல்விதான் என்றாலும் ஒரு நம்பிக்கையூட்டும் தோல்வியாக இது இருக்கிறது. (தபால் ஓட்டுகளை எண்ணுவதில், சில மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு நடக்காதிருந்தால் பாஜக கூட்டணிக்கு இன்னும் நெருக்கமாய் கூடுதல் இடங்களை மகாகத்பந்தன் பெற்றிருக்கும் என்றும் சில விமர்சகர்கள் கூறுகிறார்கள்.)

 தமிழகம் போன்ற பொருளாதார ஸ்திரத்தன்மை கொண்ட, பதற்றமில்லாத ஒரு மாநிலத்தில் சந்திரமுகியை பாஜகவால் தட்டியெழுப்புவது மிகவும் சிரமம், ஆனால் சாத்தியமில்லாதது அல்ல. எந்த மாநிலமும் ஒருநாள் நோய் வாய்ப்படும், அப்போது பேய்பிடிக்கும். ஆனால் எது மருந்து என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும் என்பதை, நோய்மையை ஒரேயடியாய் குணப்படுத்த முடியாது என்பதை இந்த இரு தேர்தல் முடிவுகளும் காட்டுகின்றன.    

பொறுமை, கனிவு, நம்பிக்கையின் பாற்பட்டதாய் இனி வலதுசாரி எதிர்ப்பரசியல் அமையட்டும்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...