முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாகார்ஜுனரை அறிதல் (1)

 நாகார்ஜுனரை ஏன் வாசிக்க வேண்டும்?



அத்வைதமும் வைதிகமும் விவாதிக்கப்பட்ட அளவுக்கு நாகார்ஜுனரின் மையவழி தத்துவம் பேசப்பட்டதில்லை. ஓரளவுக்கு பின்நவீனக் கோட்பாடுகள் இங்கு கவனம் பெற்ற காலத்தில் நாகார்ஜுனர் அங்கங்கே குறிப்பிடப்பட்டார், அவரிடம் உள்ள பின்நவீனக் கூறுகள் விவாதிக்கப்பட்டன என்றாலும் எளிய வகையில் அவர் பொது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வில்லை. ஆகையால் என் நோக்கம் இங்கு ஒரு மகத்தான தத்துவ நூலை எழுதுவதல்ல, ஒரு எளிய அறிமுக நூலை வாசகர்கள் முன்வைப்பதே.


நாகார்ஜுனர் யார்?


நாகார்ஜுனர் கி.பி 150 முதல் 250 வரை வாழ்ந்ததாக நம்பப்படும் ஒரு பௌத்த தத்துவ அறிஞர். இவர் ஆந்திர மாநிலத்தின் குண்டூரில் பிறந்த வாழ்ந்தவர். நளந்தா பல்கலையுடன் தொடர்பில் இருந்தவர். ஆயுர்வேத மருத்துவத்தில் பெயர் பெற்று விளங்கினார் என்றும் சொல்லப்படுகிறது.

பௌத்த தத்துவ மரபில் இவர் மகாயானா தத்துவத்தில் மத்யமகா பள்ளியை சேர்ந்தவர். இவர் பதிமூன்று தத்துவ நூல்களை எழுதியிருந்தாலும் இவற்றில் முக்கியமாய் கருதப்படுவதுமூலமத்யமகாகாரிகா” (மூல-மத்ய-மகா-காரிகா). பௌத்தத்தின் அடிப்படையான தத்துவ நூலாக இதை சிலர் கூறுவதுண்டு. இந்த நூலை வைத்தே நான் இங்கு நாகார்ஜுனரை அறிமுகப்படுத்தப் போவதால் அதைப் பற்றி மேலும் சில விசயங்கள்:

 “மூலமத்யமகாகாரிகா” 27 அத்தியாயங்கள் கொண்ட சூத்திரங்கள் / பாடல்களால் ஆன நூல். நான்கு வரிப் பாடல்கள். உவமை, உருவகம், அலங்காரம், ஜோடனை ஏதும் இல்லாமல் தர்க்கத்தை ஆதாரமாகக் கொண்ட பாடல்கள் இவை. ஒருவிதத்தில் திருக்குறளில் வரும் சில குறள்களை ஒத்தவை - நீங்கள் உரையில்லாமல் முதலில் படிக்கும் போது ஒரே சமயம் எளிதாகவும் குழப்பமாகவும் இருக்கும். ஆனால் படிக்கப் படிக்க ஆடிப்பழகிய கையில் உள்ள சிலம்பம் போல ஆகும். ஒரு கைவிளக்கைப் போல எடுத்து இருட்டின் இடையே நீங்கள் நடக்க இவை உதவும்ஆக இவை படித்து உடனே புரிந்து கொள்ளத்தக்கவை அல்ல. உரை நூல்கள் ஒருவிதத்தில் உதவும். ஆனால் ஓரளவுக்குத் தான் - இந்த பாடல்களை தனியே உட்கார்ந்துப் படிக்காமல் நண்பர்களுடன் சேர்ந்து படிப்பதே நல்ல வழி. அப்படிப் படிக்கும் போது நிறைய கேள்விகளை உங்களுக்குள் கேட்டுக் கொண்டு விவாதிக்க வேண்டும். அப்படி விவாதித்துக் கற்க வேண்டிய தத்துவம் இது. (இதை தத்துவம் எனக் கூற எனக்கு ஒரு தயக்கம் உள்ளது. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்.)


 நானும் எனது நண்பனான ஆயுஷும் அப்படித்தான் சேர்ந்து இந்நூலை படித்தோம். நாங்கள் போகுமிடமெல்லாம் இதை விவாதித்தோம். நாகார்ஜுனரின் வாதங்களை நாங்கள் எதிரே காணும் செயல்களில் எல்லாம் பரிசீலித்தே அதைப் புரிந்து கொள்ள முயன்றோம் - ஒரு பெண் எதிரே வந்தால் நாகார்ஜுனர் குறிப்பிடும் காட்சி என அவளது தோற்றத்தைப் புரிந்து கொள்ளலாமா, எனில் அங்கு சாரம் அல்லது சாரமின்மை எப்படித் தோன்றுகிறது எனக் கேட்டுக் கொள்வோம். ஒரு குழந்தை ஓடி வருவதைப் பார்த்தால் அதன் நகர்வு எப்படி நகர்வாக நமக்குத் தோன்றுகிறது, அப்படித் தோன்ற வைக்கும் கட்டமைப்பின் சாரம் என்ன என விசாரித்து, ஆம் குழந்தை ஓடி வருகிறது, ஆனால் அதை அதனளவில் ஓட்டமாகக் காண முடியாது என அவதானித்தோம். இந்த விவாதங்கள் எங்களுக்கு மிகுந்த உவகையைத் தந்தன. நாகார்ஜுனரைப் படிக்கையில் நாங்கள் சீரியசான முகத்துடன் இருந்ததாக நினைவில்லை - சார்லி சாப்ளினைப் பார்ப்பதைப் போலத்தான் நாகார்ஜுனர் தன் எதிர்த்தரப்பை வாதிட்டு முறியடிப்பதைக் கண்டோம், வேடிக்கையாக, ஜாலியாக, இறுக்கமான சிந்தனைகளில் இருந்து எங்களைத் தளர்த்தும் ஒரு கருவியாக. நாங்கள் அதற்கு முன்பு பிளேட்டோவில் இருந்து ஹைடெக்கர், தெரிதா வரை பலவித தத்துவங்களை வாசிக்கும் போது கவனத்துடன், தீவிரத்துடன் அறிய வேண்டும் எனும் முனைப்பே இருந்தது; ஆனால் நாகார்ஜுனர் இவர்களுக்கு நேரெதிரானவர் (ஓரளவு சாகரடீஸுடன் ஒப்பிடத் தக்கவர்.) இதுதான் எனது அடுத்த கருத்து.


நாகார்ஜுனர் ஒரு தத்துவக் கட்டமைப்பை உருவாக்கியவர் அல்ல, அவர் வாழ்க்கையை நோக்குவதற்கான தர்க்கத்தை, முறைமையை, சித்தாந்தத்தை உருவாக்கியவர் அல்ல. அத்தகைய கட்டமைப்புகளை உடைத்து நொறுக்கியவர். நாகார்ஜுனரைப் பற்றி நினைக்கையில் என் மனதில் எழும் சித்திரம் இது: தெருவில் ஒருவர் வெள்ளை சட்டை, ஜரிகை வேட்டி அணிந்து கம்பீரமாக நடந்து வருகிறார். மக்கள் அவரைக் கண்டு வியக்கிறார்கள், ரசிக்கிறார்கள், பெண்கள் ஆசைப்படுகிறார்கள், ஆண்கள் பொறாமை கொள்கிறார்கள். அப்போது எங்கிருந்தோ ஒரு சின்னப் பையன் தோன்றி எதிர்பாராத நேரத்தில் அவரது வேட்டியை உருவி விட்டு ஓடி விடுகிறான். வியந்தவர்கள், ரசித்தவர்கள், ஆசைப்பட்டவர்கள், பொறாமைப்பட்டவர்கள் எல்லாரும் இப்போது சிரிக்கிறார்கள். இந்தக் குழந்தை தான் நாகார்ஜுனர். எனக்குத் தெரிந்து ஒரு சாராம்சமான கருத்துநிலையை வலியுறுத்தும் எந்த தத்துவவாதியும் நாகார்ஜுனரின் கேள்விகளின் முன், தர்க்கவீச்சின் முன் நிற்க முடியாது. நானும் ஆயுஷும் மார்க்ஸியவாதத்தை நாகார்ஜுனர் வழி அணுக முடியுமா என முயன்று அது எப்படி பெரும் தோல்வியாக முடியும் என உணர்ந்தோம். பிராயிட், லகான் போன்றோரின் உளவியலோ, ஸிஸெக்கின் பின்நவீன உளவியல் தத்துவமோ நாகார்ஜுனர் முன் நிற்க முடியாது. இந்திய தத்துவத்தில் அத்வைதம், த்வைதம், சமணத்தின் அநேகாந்தவாதம் போன்றவையும் அப்படியே நாகார்ஜுனரின் வாதங்களின் முன் தோற்றோடி விடும். ஏனெனில் மேலே நான் குறிப்பிடுபவை சிந்தனைப் பள்ளிகள் - தர்க்கரீதியாக ஒரு தரிசனத்தை, வாழ்க்கை நோக்கை வடிவமைக்க, பழுதற்ற கட்டமைப்பாக தம்மை உருவாக்க முயன்றவை. செங்கல், சிமிண்டால் வீட்டைக் கட்டுவதைப் போல சிந்தனை அமைப்பு உருவாக்கியவை. ஆனால் செங்கல் கட்டுமானம் எப்படி ஒரு சூழலில் வலுவாகவும் மற்றொரு சூழலில் வலுவற்று உடைந்து குலைவதாக இருக்குமோ இந்த தத்துவங்களும் அப்படியே. இத்தத்துவங்களில் ஒவ்வொரு கருதுகோளும் ஏதோ ஒரு விதத்தில் நமதுஅடிப்படையானமுன்னறி (a priori) நம்பிக்கையை (அதாவது ஏற்கனவே ஒன்று உள்ளது எனும் தோரணை: “நான் சிந்திக்கிறேன், அதனால் இருக்கிறேன்என்பது ஒரு கோரல், ஆனால் இந்தநான்எப்படி அதனளவில் நானாக முடியும், முடியாதெனில் அதெப்படி சிந்தனை செய்ய முடியும் போன்ற கேள்விகளை எழுப்பாமல் எல்லாம் அதனளவில் இருக்கின்றன என நம்புவதே முன்னெறி நம்பிக்கை.) கோருகின்றன. இந்த முன்னறி நம்பிக்கைகளின் அடித்தளத்தை தத்துவங்கள் விசாரிப்பதில்லை. இவை தத்துவத்தின் அஸ்திவாரம் எனலாம்இந்த அஸ்திவாரத்தை வெடிவைத்து தகர்ப்பதுதான் நாகார்ஜுனரின் வாத முறை


அவர் இதை ஏன் செய்கிறார்?

இந்த உலகின் கோரல்கள், சிந்தனைகள், கருத்தாக்கங்கள், நிலைகள், பார்வைகள், பொருட்கள் என ஒவ்வொன்றும் சாரமற்றவை என்பது நாகார்ஜுனரின் நோக்கு (சூனியவாயம்). சொல்லப் போனால் இந்த நோக்கே, அதாவது சூனியவாதமே, சாரமற்றது என நாகார்ஜுனர்மூலமத்யமகாகாரிகாநூலின் இறுதியில் சொல்கிறார். அதாவதுஇன்மையேஇன்மைதான் என்கிறார்


கருத்துகள்

சுந்தரம் சின்னுசாமி இவ்வாறு கூறியுள்ளார்…
Waiting
Krishna Punaivu இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான அறிமுகம் உங்கள் மூலம் மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது.நன்றி
Moorthy இவ்வாறு கூறியுள்ளார்…
Excellent sir
Zenbalu இவ்வாறு கூறியுள்ளார்…
சிறப்பு. தொடர்ந்து பயணிப்போம். பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
நன்றி. வணக்கம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...