நாகார்ஜுனரை ஏன் வாசிக்க வேண்டும்?
அத்வைதமும் வைதிகமும் விவாதிக்கப்பட்ட அளவுக்கு நாகார்ஜுனரின் மையவழி தத்துவம் பேசப்பட்டதில்லை. ஓரளவுக்கு பின்நவீனக் கோட்பாடுகள் இங்கு கவனம் பெற்ற காலத்தில் நாகார்ஜுனர் அங்கங்கே குறிப்பிடப்பட்டார், அவரிடம் உள்ள பின்நவீனக் கூறுகள் விவாதிக்கப்பட்டன என்றாலும் எளிய வகையில் அவர் பொது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வில்லை. ஆகையால் என் நோக்கம் இங்கு ஒரு மகத்தான தத்துவ நூலை எழுதுவதல்ல, ஒரு எளிய அறிமுக நூலை வாசகர்கள் முன்வைப்பதே.
நாகார்ஜுனர் யார்?
நாகார்ஜுனர் கி.பி 150 முதல் 250 வரை வாழ்ந்ததாக நம்பப்படும் ஒரு பௌத்த தத்துவ அறிஞர். இவர் ஆந்திர மாநிலத்தின் குண்டூரில் பிறந்த வாழ்ந்தவர். நளந்தா பல்கலையுடன் தொடர்பில் இருந்தவர். ஆயுர்வேத மருத்துவத்தில் பெயர் பெற்று விளங்கினார் என்றும் சொல்லப்படுகிறது.
பௌத்த தத்துவ மரபில் இவர் மகாயானா தத்துவத்தில் மத்யமகா பள்ளியை சேர்ந்தவர். இவர் பதிமூன்று தத்துவ நூல்களை எழுதியிருந்தாலும் இவற்றில் முக்கியமாய் கருதப்படுவது “மூலமத்யமகாகாரிகா” (மூல-மத்ய-மகா-காரிகா). பௌத்தத்தின் அடிப்படையான தத்துவ நூலாக இதை சிலர் கூறுவதுண்டு. இந்த நூலை வைத்தே நான் இங்கு நாகார்ஜுனரை அறிமுகப்படுத்தப் போவதால் அதைப் பற்றி மேலும் சில விசயங்கள்:
“மூலமத்யமகாகாரிகா” 27 அத்தியாயங்கள் கொண்ட சூத்திரங்கள் / பாடல்களால் ஆன நூல். நான்கு வரிப் பாடல்கள். உவமை, உருவகம், அலங்காரம், ஜோடனை ஏதும் இல்லாமல் தர்க்கத்தை ஆதாரமாகக் கொண்ட பாடல்கள் இவை. ஒருவிதத்தில் திருக்குறளில் வரும் சில குறள்களை ஒத்தவை - நீங்கள் உரையில்லாமல் முதலில் படிக்கும் போது ஒரே சமயம் எளிதாகவும் குழப்பமாகவும் இருக்கும். ஆனால் படிக்கப் படிக்க ஆடிப்பழகிய கையில் உள்ள சிலம்பம் போல ஆகும். ஒரு கைவிளக்கைப் போல எடுத்து இருட்டின் இடையே நீங்கள் நடக்க இவை உதவும். ஆக இவை படித்து உடனே புரிந்து கொள்ளத்தக்கவை அல்ல. உரை நூல்கள் ஒருவிதத்தில் உதவும். ஆனால் ஓரளவுக்குத் தான் - இந்த பாடல்களை தனியே உட்கார்ந்துப் படிக்காமல் நண்பர்களுடன் சேர்ந்து படிப்பதே நல்ல வழி. அப்படிப் படிக்கும் போது நிறைய கேள்விகளை உங்களுக்குள் கேட்டுக் கொண்டு விவாதிக்க வேண்டும். அப்படி விவாதித்துக் கற்க வேண்டிய தத்துவம் இது. (இதை தத்துவம் எனக் கூற எனக்கு ஒரு தயக்கம் உள்ளது. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்.)
நானும் எனது நண்பனான ஆயுஷும் அப்படித்தான் சேர்ந்து இந்நூலை படித்தோம். நாங்கள் போகுமிடமெல்லாம் இதை விவாதித்தோம். நாகார்ஜுனரின் வாதங்களை நாங்கள் எதிரே காணும் செயல்களில் எல்லாம் பரிசீலித்தே அதைப் புரிந்து கொள்ள முயன்றோம் - ஒரு பெண் எதிரே வந்தால் நாகார்ஜுனர் குறிப்பிடும் காட்சி என அவளது தோற்றத்தைப் புரிந்து கொள்ளலாமா, எனில் அங்கு சாரம் அல்லது சாரமின்மை எப்படித் தோன்றுகிறது எனக் கேட்டுக் கொள்வோம். ஒரு குழந்தை ஓடி வருவதைப் பார்த்தால் அதன் நகர்வு எப்படி நகர்வாக நமக்குத் தோன்றுகிறது, அப்படித் தோன்ற வைக்கும் கட்டமைப்பின் சாரம் என்ன என விசாரித்து, ஆம் குழந்தை ஓடி வருகிறது, ஆனால் அதை அதனளவில் ஓட்டமாகக் காண முடியாது என அவதானித்தோம். இந்த விவாதங்கள் எங்களுக்கு மிகுந்த உவகையைத் தந்தன. நாகார்ஜுனரைப் படிக்கையில் நாங்கள் சீரியசான முகத்துடன் இருந்ததாக நினைவில்லை - சார்லி சாப்ளினைப் பார்ப்பதைப் போலத்தான் நாகார்ஜுனர் தன் எதிர்த்தரப்பை வாதிட்டு முறியடிப்பதைக் கண்டோம், வேடிக்கையாக, ஜாலியாக, இறுக்கமான சிந்தனைகளில் இருந்து எங்களைத் தளர்த்தும் ஒரு கருவியாக. நாங்கள் அதற்கு முன்பு பிளேட்டோவில் இருந்து ஹைடெக்கர், தெரிதா வரை பலவித தத்துவங்களை வாசிக்கும் போது கவனத்துடன், தீவிரத்துடன் அறிய வேண்டும் எனும் முனைப்பே இருந்தது; ஆனால் நாகார்ஜுனர் இவர்களுக்கு நேரெதிரானவர் (ஓரளவு சாகரடீஸுடன் ஒப்பிடத் தக்கவர்.) இதுதான் எனது அடுத்த கருத்து.
நாகார்ஜுனர் ஒரு தத்துவக் கட்டமைப்பை உருவாக்கியவர் அல்ல, அவர் வாழ்க்கையை நோக்குவதற்கான தர்க்கத்தை, முறைமையை, சித்தாந்தத்தை உருவாக்கியவர் அல்ல. அத்தகைய கட்டமைப்புகளை உடைத்து நொறுக்கியவர். நாகார்ஜுனரைப் பற்றி நினைக்கையில் என் மனதில் எழும் சித்திரம் இது: தெருவில் ஒருவர் வெள்ளை சட்டை, ஜரிகை வேட்டி அணிந்து கம்பீரமாக நடந்து வருகிறார். மக்கள் அவரைக் கண்டு வியக்கிறார்கள், ரசிக்கிறார்கள், பெண்கள் ஆசைப்படுகிறார்கள், ஆண்கள் பொறாமை கொள்கிறார்கள். அப்போது எங்கிருந்தோ ஒரு சின்னப் பையன் தோன்றி எதிர்பாராத நேரத்தில் அவரது வேட்டியை உருவி விட்டு ஓடி விடுகிறான். வியந்தவர்கள், ரசித்தவர்கள், ஆசைப்பட்டவர்கள், பொறாமைப்பட்டவர்கள் எல்லாரும் இப்போது சிரிக்கிறார்கள். இந்தக் குழந்தை தான் நாகார்ஜுனர். எனக்குத் தெரிந்து ஒரு சாராம்சமான கருத்துநிலையை வலியுறுத்தும் எந்த தத்துவவாதியும் நாகார்ஜுனரின் கேள்விகளின் முன், தர்க்கவீச்சின் முன் நிற்க முடியாது. நானும் ஆயுஷும் மார்க்ஸியவாதத்தை நாகார்ஜுனர் வழி அணுக முடியுமா என முயன்று அது எப்படி பெரும் தோல்வியாக முடியும் என உணர்ந்தோம். பிராயிட், லகான் போன்றோரின் உளவியலோ, ஸிஸெக்கின் பின்நவீன உளவியல் தத்துவமோ நாகார்ஜுனர் முன் நிற்க முடியாது. இந்திய தத்துவத்தில் அத்வைதம், த்வைதம், சமணத்தின் அநேகாந்தவாதம் போன்றவையும் அப்படியே நாகார்ஜுனரின் வாதங்களின் முன் தோற்றோடி விடும். ஏனெனில் மேலே நான் குறிப்பிடுபவை சிந்தனைப் பள்ளிகள் - தர்க்கரீதியாக ஒரு தரிசனத்தை, வாழ்க்கை நோக்கை வடிவமைக்க, பழுதற்ற கட்டமைப்பாக தம்மை உருவாக்க முயன்றவை. செங்கல், சிமிண்டால் வீட்டைக் கட்டுவதைப் போல சிந்தனை அமைப்பு உருவாக்கியவை. ஆனால் செங்கல் கட்டுமானம் எப்படி ஒரு சூழலில் வலுவாகவும் மற்றொரு சூழலில் வலுவற்று உடைந்து குலைவதாக இருக்குமோ இந்த தத்துவங்களும் அப்படியே. இத்தத்துவங்களில் ஒவ்வொரு கருதுகோளும் ஏதோ ஒரு விதத்தில் நமது ‘அடிப்படையான’ முன்னறி (a priori) நம்பிக்கையை (அதாவது ஏற்கனவே ஒன்று உள்ளது எனும் தோரணை: “நான் சிந்திக்கிறேன், அதனால் இருக்கிறேன்” என்பது ஒரு கோரல், ஆனால் இந்த ‘நான்’ எப்படி அதனளவில் நானாக முடியும், முடியாதெனில் அதெப்படி சிந்தனை செய்ய முடியும் போன்ற கேள்விகளை எழுப்பாமல் எல்லாம் அதனளவில் இருக்கின்றன என நம்புவதே முன்னெறி நம்பிக்கை.) கோருகின்றன. இந்த முன்னறி நம்பிக்கைகளின் அடித்தளத்தை தத்துவங்கள் விசாரிப்பதில்லை. இவை தத்துவத்தின் அஸ்திவாரம் எனலாம். இந்த அஸ்திவாரத்தை வெடிவைத்து தகர்ப்பதுதான் நாகார்ஜுனரின் வாத முறை.
அவர் இதை ஏன் செய்கிறார்?
இந்த உலகின் கோரல்கள், சிந்தனைகள், கருத்தாக்கங்கள், நிலைகள், பார்வைகள், பொருட்கள் என ஒவ்வொன்றும் சாரமற்றவை என்பது நாகார்ஜுனரின் நோக்கு (சூனியவாயம்). சொல்லப் போனால் இந்த நோக்கே, அதாவது சூனியவாதமே, சாரமற்றது என நாகார்ஜுனர் “மூலமத்யமகாகாரிகா” நூலின் இறுதியில் சொல்கிறார். அதாவது ‘இன்மையே’ இன்மைதான் என்கிறார்.

Comments
வாழ்த்துகள்.
நன்றி. வணக்கம்.