முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாகார்ஜுனரை அறிதல் (2)

 நாகார்ஜுனர் ஏன் சாரமின்மையை வலியுறுத்துகிறார்?





நாகார்ஜுனர் அறநெறி, மனப்பக்குவம், உள்ளொளி தரிசனம், வீடுபேறு பற்றியெல்லாம் நேரடியாகப் பேசுவதில்லை (அவை சாரம் கொண்டவையாக இருக்க வேண்டுமே என்பதால்). இதுதான் அவரது சிறப்பு. மொத்த தத்துவமும் இப்படி ஒரு கருத்துநிலையை நோக்கி நகரும் போது நாகார்ஜுனர் நம்மை எதிர் திசையில் கைப்பிடித்து அழைத்து செல்கிறார். ஏனென்றால் வாழ்க்கையின் துயரமே ஒவ்வொரு கருத்துநிலையாக, நாயின் கழுத்தில் சங்கிலி போல, நாம் மாட்டித் திரிவதனால் தான் என அவர் நம்புகிறார். ஆனால் மனிதனால் கருத்துக்களை, நம்பிக்கைகளை, காரணகாரியவாதத்தை உதற முடியாது. ஏனென்றால் அவன் மொழிக்குள் சிறைப்பட்டிருக்கிறான். இந்த உலகம் மொழிவயப்பட்டிருக்கிறது. மொழி என்று நான் வெறும் சொற்களாலான மொழியைச் சொல்லவில்லை. குறியீடுகளால் ஆன உலகைச் சொல்கிறேன். நீங்கள் நிமிர்ந்து வானைப் பார்க்கும் போதுநீங்கள்’, ‘நிமிர்தல்’ ‘பார்த்தல்’, ‘வானம்என ஒவ்வொன்றும் குறியீடே. எப்படி என்கிறீர்களா?

நீங்கள் எனும் போது ஒருவர் உங்களை சுட்டிநீஎனக் குறிக்கும் ஒரு சித்திரம் எழுகிறது. இதுவேநீ” “நான்ஆகும் போது உங்களுக்குள் இருக்கும்நீங்களாகமற்றொரு சித்திரம் எழுகிறது. அப்படியே தான் நிமிர்தல், பார்த்தல் என ஒவ்வொன்றுமே காட்சிபூர்வமாய் நாம்காண்பதாகஇருக்கிறது. ஏன் வீட்டுக்குள் நீங்கள் எகிறி குதித்தோ, நெளிந்து நழுவியோ நுழைவதில்லை. ஏன் திறந்துஉள்ளேசெல்கிறீர்கள்? நீங்கள் மட்டுமல்ல எலியும் வளைக்குள்ளே தான் செல்கிறது, எறும்பு புற்றுக்குள் செல்கிறது. மீன்கூட தனக்கான ஒரு வீட்டை உருவாக்குகிறது, அதனுள் நுழைகிறது, பறவைகள் கிளையில் இலைகள் நடுவே போய் மறைகின்றன. ஒட்டுமொத்தமாய் வீடு எனும் குறியீடு ஒவ்வொரு ஜீவராசிக்குள்ளும் இருக்கிறது. வீடு என்பது மொழியில் செயல்படும் ஒரு குறியீடு. அப்படியே தான்அப்பா”, “அம்மாஎல்லாம். முதலில் அப்பா எனும் குறியீடு நமக்கு அறிமுகமான பின்னர் அப்பாவைப் போன்று பல்வேறு அதிகாரமிக்க மனிதர்கள் நம் வாழ்வுக்குள் வருகிறார்கள், ஒவ்வொருவரையும் மற்றொருவரை சாரமாகக் கொண்டு நாம் உணர்கிறோம். இந்த அப்பாவை நமக்கு அம்மா காட்டித் தரும் முன்னரே அம்மாவின் எதிர்நிலையாக, மற்றமையாக அவர் நம் மனதுக்குள், மொழிக்குள் உருவாகி விடுகிறார். அதனாலேஅப்பாவா?” “அது என்ன?” என நாம் கேட்பதில்லை. “ஆசிரியர்”, “போலீஸ்”, “ரௌடி”, “அறிவாளிகள்”, “பூசாரி”, “மதகுரு”, “மேலாளர்”, “முதலாளி”, “பிரபலம்”, “தலைவர்என ஒவ்வொரு குறியீடாக நமக்கு அறிமுகமாகும் போதும் நாம்இது யார்?” என வியப்பதில்லை. அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். அதுதான் மொழியின் வலிமை. நான் இங்கு குறிப்பிடும் உளவியல் கோணம் லக்கானுடையது. லக்கான் ஒரு பின்னமைப்பியல் உளவியலாளர். லக்கானின் நோக்கும் நாகார்ஜுனரின் நோக்கும் அருகருகில் பயணிப்பவை, இருவருமே உலகம் மொழியால் கட்டப்பட்டது என நம்பினார்கள். ஆனால் நாகார்ஜுனர் அளவுக்கு அனைத்து கருத்துருக்கள், இருப்புகளின் சாரத்தையும் லக்கான் கேள்விக்குட்படுத்துவதில்லை


இப்போது மொழிக்குள் கட்டுண்டிருக்கும் நாம் என்ன செய்ய முடியும்


இந்த மொழியின் சிறைக்குள்ளே அதன் சாவி இருக்கிறது, ஆனால் ஒரு பிரச்சனை - கதவை சாவி கொண்டு திறந்து வெளிவரும் போது நாம் மீண்டும் கதவு மூட மாட்டிக் கொள்கிறோம்.

ஏன் அப்படி?

அமைப்பியல் என்றொரு கோட்பாடு முன்னர் பிரசித்தமாக இருந்தது. அதன்படி ஒரு சொல்லுக்குள் அர்த்தம் இருக்கிறது. இந்த அர்த்தப்பாட்டின் அமைப்பு இப்படி தோன்றுகிறது - “குளிர்ச்சிஎன்பதுக்குள்குளிர்ச்சி-மைஎன ஒன்று இருக்கிறது (இது குளிர்மை அல்ல. குளிர்மைக்குள் ஒருகுளிர்மை-மைஇருக்கிறது). இந்தகுளிர்மை-மையேஅதன் சாரம் எனலாம். இது எப்படி நமக்குப் புலப்படுகிறது, எப்படி நமக்கு உணர்த்தப்படுகிறது? குளிர்ச்சி என்பதே வெறும் குளிர்ச்சி அல்ல, ஒரு புலனுணர்வு. இந்த புலனுணர்வு அடிப்படையில் ஒரு குறிப்பான். அதாவது இது ஒரு திசைகாட்டியைப் போல, சுட்டுவிரலைப் போல குளிர்ச்சி-மையை நோக்கி நம்மை இது இட்டுச் செல்கிறது. குளிர்ச்சி என்பது குறிப்பான் என்றால் குளிர்மை-மை குறிப்பீடு. குளிர்ச்சி-மையை நாம் புரிந்து கொள்வதேகுளிர்ச்சிஎன்பதைக் கேட்கும் போதோ அதைப் படிக்கும் போதோ தான்.

 அடுத்துஐஸ் கட்டி”. இந்த ஐஸ் கட்டியின் தோற்றம் ஒரு குறிப்பான். இதனுள் உறைந்திருப்பதுஐஸ் கட்டி-மை”. இது இல்லாமல் அது இல்லை. இந்த சாரத்தை (குளிர்மை-மை, ஐஸ் கட்டி-மை) அமைப்பியல் ஒரு நிலையற்ற பொருளாகப் பார்க்கிறது. தமிழில் குளிர்ச்சி என்றால் அதுதான் மலையாளத்தில்தணுப்பு”, ஆங்கிலத்தில் “coldness”. இப்படி ஓசைக்கும் அதன் அர்த்தத்துக்கும் நேரடித் தொடர்பில்லை என அமைப்பியல் கூறியது. ஆனால் இந்த சாரம் என்பது அதனளவில் நிலையானது என அது கோரியது. அதாவது குளிர்மை-மை என்பது மொழிக்குள் எப்போதும் உள்ள ஒன்றே. குளிர்மையை நாம் வெம்மை எனும் எதிர்மையைக் கொண்டு வேற்றுமைப்டுத்திப் புரிந்து கொள்கிறோம். அப்படிப் புரிந்து கொண்டாலும் இந்த சாரமானது (குளிர்மை-வெம்மை) உருக்குலைவதில்லை என அது நம்பியது, அல்லது அப்படி உருக்குலையுமா எனக் கேட்க அது முனையவில்லை

இந்த அமைப்பியலை வளர்த்தெடுத்த அறிஞர்களில் பிரதானமானவர் பெர்டினெண்ட் சசூர். அவர் கேட்கத் தவறிய கேள்விகளை, முன்னெடுக்காத தேடலை அடுத்து வந்த தெரிதா, லக்கான் போன்றவர்கள் முன்னெடுத்தார்கள். இது பின்னமைப்பியல் என அறியப்பட்டு பின்நவீனத்துவத்துக்கு அடிகோலிட்டது.


பின்னமைப்பியலாளர்களின் கோட்பாட்டுக்குள் இப்போது நாம் செல்வது இந்த அறிமுகத்தை மிகவும் சிக்கலாக்கும், அதிக நேரமும் பிடிக்கும். அதனால் மிக எளிதாக நான் அதை இப்படி விளக்குகிறேன் - ஐஸ் கிரீம் சாப்பிடுகிறீர்கள். அது ஜில்லென்று இருக்கிறது என்பதை அதுசூடாக இல்லைஎன்பதை வைத்து முரண்படுத்தி அர்த்தப்படுத்துகிறோம் என சசூர் சொல்லுவார். ஆனால் இப்படி வேற்றுமைப்படுத்தி ஒன்றை நாம் அறியும் போது இரு முரணான அர்த்தங்கள் ஒன்றையும் ஒன்று சந்தித்துக் கொள்கின்றன - பெருக்கல், கழித்தல் குறிகளைப் போல. எப்படி + 1 ஒன்றை — 1 உடன் பெருக்கினால் பூஜ்யம் வருமோ அப்படியே இந்த இரு முரணான அர்த்த நிலைகள் கைகுலுக்கும் போது அங்கு இன்மை தோன்றுகிறது. இதுவே ஐஸ் கிரீம் சாப்பிடுவது வெறுமனே குளிர்ச்சியான உணர்வாக அல்லது ஒரு சுகானுபவமாக்குகிறது. மேலும் நுணுகிப் பார்த்தால் ஐஸ் கிரீமுக்குள் விதவிதமான வாசனைகள், இனிப்பு, பால் பொருள், சாக்லேட், வெனிலா, நட்ஸ் போன்ற சங்கதிகள் ஒன்றிணைந்து ஒரு குறிப்பிட்ட சுவையாக நமக்கு அனுபவப்படுகிறது. ஆனால் இது ஒற்றை சுவை அல்ல, ஒன்றோடொன்று பொருந்த முடியாத சங்கதிகள் எப்படியோ பொருத்தமின்மையினாலே பொருந்திப் போகும் நிலை. இது ஒரு மேஜிக். ஒரு சுவையான கற்பிதம். இன்னதென துல்லியமாய் வகைப்படுத்த முடியாத ஒரு புலனின்பம் இது. இந்த சின்னச் சின்ன முரண் சங்கதிகளும் ஐஸ் கிரீமுக்குள் நம் நாவில் புரளும் போது அவை எவையல்லவோ அவற்றுடன் முரண்பட்டு தனித்த சுவையாகின்றன. அதாவது முந்திரியைக் கடிக்கும் போது முந்திரியின்மை அதனுடன் முரணாகிறது. எப்படி? ஐஸ் கிரீமில் அந்த முந்திரி உங்கள் நாவை வந்து அடைவது அது அதுவரை வந்தடையவில்லை என்பதால் தானே. ஆகையால் காலத்தைப் பொறுத்தமட்டில் அதன் இன்மையே அதன் இருப்பைத் தீர்மானிக்கிறது. இப்படி ஒவ்வொரு சங்கதிக்கும் ஒரு ஸ்பூன் ஸ்கிரீமில் நிகழ்கிறது. முந்திரியின் சுவைமுந்திரி-மைஎனும் சாரத்தினால் அல்ல சாரமின்மையாலே தோன்றுகிறது என இவ்வாறு பின்னமைப்பியல் விளக்குகிறது. தெரிதாவின் இந்த சிக்கலான வாதத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள நமக்கு நாகார்ஜுனர் உதவுகிறார். பின்நவீனம் என்றால் என்னவென அறிவதற்கே நாகார்ஜுனர் முதல்படி என்பேன். நமது பூர்வீக தத்துவ மரபில் இருந்து பயணித்தால் மேற்கத்தியவர்களை விட சிறப்பாக நாம் பின்நவீன தத்துவங்களைப் புரிந்து கொள்ள முடியும்.


சரி, இப்போது ஆரம்பத்தில் சொன்ன கதவு உருவகத்துக்கு மீள்வோம்


 கதவு மூடியிருப்பதற்கும் திறந்திருப்பதற்கும் இடையில் ஒரு நிலை இருக்கிறது. (பின்னமைப்பியல் சொல்லும் முந்திரியின் இன்மைக்கும் இருப்புக்கும் இடையிலான நிலை.) அது இருமைக்குள் நாம் மாட்டிக்கொள்ளாது சிறகடித்து மேலே எழுகிற தருணம். .தா., அன்பு என்பதை அன்பாகக் காணாமல் அது வெறுப்பின் மற்றொரு முகம் என உணர்வது. அப்படி உணரும் போது அன்பே இல்லை என நாம் மறுப்புவாதத்துக்குள் செல்வதில்லை - மாறாக அன்பு என்பது அந்த கட்டமைப்புக்குள் இல்லாத ஒன்று, வெறுப்புடன் முரண்படுத்தி புரிந்து கொள்ளத் தேவையில்லாத ஒரு உணர்வுநிலை, உணர்வு என கருத்துடன் எதிர்நிலையாக்கிப் புரிந்து கொள்ள அவசியமில்லாத ஒன்று ... இப்படிவெங்காயத்தை உரித்துக் கொண்டே போகும் போதுஅந்த தருணம் மிக அழகாக மொக்கவிழ்கிறது. அது மொழியில் இருந்து நாம் அடைகிற கால் வினாடி விடுதலை.

இந்தஉத்தியைஇலக்கிய, தத்துவ விமர்சனத்தில் நிகழ்த்திப் பார்த்தவர் தெரிதா. அவர் மொழியின் அடிப்படை விழைவான ஒரு நுட்பத்தை கண்டுபிடிக்கிறார் - மொழி ஒரு தீர்க்கமான அர்த்தத்தை உருவாக்கி நமக்கு நேரடியாக அளிப்பதில்லை, அது முரணான அர்த்தங்களையே நமக்கு அளிக்கிறது, நமது மனதுக்கு நுட்பம் கூடி வரும் போது, ஒரு உன்மத்த நிலையில் இருக்கும் போது, திகைக்கும் போது, நாம் உடையும் போது, உள்ளுக்குள் கலையும் போது, சிரித்து மகிழும் போது இந்த முரண் நமக்கு புலப்படுகிறது - அதாவது தர்க்கபூர்வமாய் அல்ல. நாம் இந்த தீவிர உணர்வு நிலைகளுக்கு, நுட்பமான மனத்திறப்புக்கு ஆளாவதே இந்த அர்த்த முரண்களை எதிர்கொள்வதால் தான். வாசிப்பு எனும் செயல்பாட்டினுள் அவர் இந்த நுட்பத்தை கண்டடைகிறார்

தெரிதாவுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நாகார்ஜுனர் இதை செய்திருக்கிறார். அல்ல, இதை விட மேலாக மொழியின் அடுக்குகளுக்குள், அதன் இருப்புக்குள் பயணித்திருக்கிறார். அவர் வாசிப்பில் என்றல்ல ஒவ்வொரு மூச்சிலும், பிரக்ஞையின் சலனங்கள் ஒவ்வொன்றிலும் அர்த்தங்கள் சார்புநிலையினால் விளைவதை, சாரமற்று இருப்பதை நமக்குக் காட்டுகிறார். உலகின் மிக உன்னதமான தத்துவ விசாரணையாக இது மாறுகிறது.

 

சரி, எதற்காக நாம் நாகார்ஜுனரைப் படிக்க வேண்டும்?

    • மானிட இருப்பு குறித்தான இந்த மகத்தான விசாரணையை அறிவதற்காக.
    • மொழிக்குள் இருந்தபடியே அதன் அபத்தங்களை, இன்மைகளை நாம் பிரக்ஞைபூர்வமாய் உணர்வதற்கு.
    • பின்னமைப்பியலை, பின்நவின தத்துவத்தை இன்னும் சுலபமாக நெருங்க.
    • அப்படி உணர்ந்து மொழியில் இருந்தபடியே நம் கட்டுக்களை அவிழ்த்து சுதந்திரமாக.
    • தர்க்கத்தின் பல உத்திகளைக் கற்க.
    • ஒவ்வொரு கருத்துருவும், நம்பிக்கையையும், சொல்லும் ஒரு கற்பிதம் எனப் புரிந்து அவை தலைகீழாக்கப்படுவதன் கொண்டாட்டத்தில் திளைக்க.


நாகார்ஜுனரை வாசித்துக் கிடைக்கும் அனுபவம் ஜாலியானதே,

ஆனால் நாகார்ஜுனரை வாசிப்பது ஜாலியான அனுபவம் அல்ல, அதற்கு நீங்கள் சற்று மெனெக்கெட வேண்டும். நான் முடிந்தவரையில் நாகார்ஜுனரின் வாதங்களை எளிமைப்படுத்தி விளக்கினாலும் கவனமாக ஆர்வமாக வாசித்தால் மட்டுமே இதனுள் நீங்கள் நுழைய முடியும், பயனடைய முடியும். நெல்லிக்காய் கடிப்பதைப் போல. முதலில் கசக்கும், அடுத்து இனிக்கும். வாங்க எப்படி இதோ நீங்கள் காணும் ஒவ்வொன்றும் இல்லையென விவாதித்து அறிவோம், அடுத்து இந்த இல்லையென்பதே இல்லையெனக் காண்போம். அப்போது உங்கள் உதடுகளில் ஒரு மகிழ்ச்சியான புன்னகை தவழ்ந்தால் அதுவே இந்த புத்தகத்தை எழுதியதற்கு நான் அடையும் மிகப்பெரிய வெகுமதி.

வாங்க ஆரம்பிப்போம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...