முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலித் சிந்தனையாளர்கள் இந்துத்துவ சாயத்தை ஏற்க மறுக்கும் போது என்ன செய்வது?



பத்ரி சேஷாத்திரி அயோத்தி தாஸரின் “இந்திரர் தேச சரித்திரம்” நூலை பகடி செய்து மறுத்து எழுதிய பதிவை படித்த போது எனக்கு ஏற்பட்ட முதற் கேள்வி இதை ஏன் அவர் இப்போது செய்ய வேண்டும் என்பது.

 பதில்:

 தமிழில் உள்ள வைதீக எதிர்ப்பு, பௌத்த-சார்பு, தலித் தரப்பானது திராவிட கதையாடலுடன் கைகோர்ப்பது பத்ரியைப் போன்றவர்களை இயல்பாகவே எரிச்சல்படுத்துகிறது. இதற்கு மாற்றாக அவர்கள் விரும்புவது திராவிட எதிர்ப்பு, மத்திய சாதி எதிர்ப்பு, பிராமண-சார்பு தலித் உரையாடல்கள் மட்டுமே. தமிழில் வலதுசாரி சார்பாளர்கள் சில பத்தாண்டுகள் அத்தகைய எழுத்துக்களை ஊக்கப்படுத்தியதிலேயே ‘பெரியார் ஒரு தலித் விரோதி, தலித்துகளின் சாதிய கீழ்மைகளுக்குக் காரணம் மத்திய சாதிகள் மட்டுமே, அவர்களுக்கு ஒரு பொய்யான முற்போக்கு முகமூடியை அளித்தவர் பெரியார், திராவிட கழகக் கட்சிகள் தொடர்ந்து மத்திய சாதிகளையே ஆதரித்து வந்துள்ளன’ என ஒரு தரப்பினர் பேசத் தொடங்கினர். இது தலித்துகளும் பிராமணர்களும் கூட்டு, மத்திய சாதிகள் எதிரிகள் எனும் ஒரு தேர்தல் அரசியல் சூத்திரம் தமிழகத்தில் தோன்றுவதற்கான களத்தை தயார் செய்தது. ஆனால் ‘துரதிஷ்டவசமாக’ அதை அறுவடை செய்யும் ஆற்றல் கொண்ட கட்சியாக பாஜக இங்கு உருவாக முடியவில்லை. இது அவர்களை மனம் உடைய செய்கிறது.


 என்னதான் முருகன் ஒரு சனாதன ஆதரவு, பிராமண சார்பு தலித் தலைவராக பாஜகவின் முன்னணியில் நின்றாலும் திருமாவா முருகனா எனும் போது மக்கள் திருமா பக்கம் தான் நிற்கிறார்கள். ஏனென்றால் முருகன் ஒரு தமிழ் விரோத வைதீக ‘ஏஜெண்ட்’ என்பது அம்பலமாகி விட்டது. ஏனென்றால் முருகனைப் போன்றவர்கள் சாதிப் பிரச்சனைகள், கலவரங்கள், படுகொலைகள் நிகழ்த்தப்படும் போது அங்கு சென்று போராட்டங்களை நடத்தி மக்கள் சார்பாக நிற்பதில்லை. சாதி ஏற்றத்தாழ்வைப் பற்றி பேசுவார், ஆனால் அதற்கு எதிராக தன் கட்சியை திரட்டி அரசியல் செய்ய முனைய மாட்டார். ஏனென்றால் அது இந்து ஒருங்கிணைப்பை பலவீனப்படுத்தும் என அவரது ஆர்.எஸ்.எஸ் ஆசான்கள் அவரது மூளைக்குள் ஏற்றியிருக்கிறார்கள். இதனாலே என்னதான் “தலித் பிராமின் பாய் பாய்” என ஒரு முழக்கம் இங்கு ஒலித்து கொண்டிருந்தாலும் நடைமுறையில் அதற்கு பெறுமதி இல்லை. 

 

இதில், ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும் - பெரியாரின் சிந்தனைகள் குறிப்பாக அம்பேத்கரியத்தைப் போல தலித்திய சிந்தனைகள் அல்ல, ஆனால் அவை தலித்துகள் அடிமையாக்கப்படுவதற்கு அடிப்படைக் காரணமாக உள்ள வைதீகத்தின் பிடியை நிர்மூலமாக்க முயலும் அனார்க்கிஸ சிந்தனைகள். அதனாலே தமிழின் கணிசமான தலித் சிந்தனையாளர்களிடம் பெரியாரின் தாக்கமும் (இடது சிந்தனைகளின் வீரியமும்) இன்றளவும் உள்ளது. அதுவும் குறிப்பாக, இங்கு அயோத்திதாசர் சொல்லும் பௌத்தத்தை எப்படி பிராமணீயம் விழுங்கி கொண்டது எனும் கதையாடல் கடந்த பத்தாண்டுகளில் அதிகமாய் இங்கு பேசப்படுகிறது. இது ஏற்கனவே தமது “இந்துத்துவ தலித்” புரோஜெக்ட் தோற்றத்தில் கடுப்பில் இருப்பவர்களுக்கு கூடுதல் எரிச்சல் அளிக்கிறது. அவர்கள் விரும்புவது ஒரு இந்து / இந்துத்துவ சார்பு அயோத்திதாஸரை - இந்து-சார்பு அம்பேத்கர் என ஒருவரை அவர்கள் பொய்யாகப் புனைந்ததைப் போன்றே - புனைய வேண்டும் என்பது. அதற்காகவே வைதீகத்துக்கு, பிராமணியத்துக்கு எதிராக அயோத்திதாசர் எழுதியதை தவிர்த்து, அவரது சொல்லாராய்ச்சி எழுத்துக்களை மட்டும் முன்னெடுக்க வேண்டும், முடிந்தளவுக்கு பாதகம் இல்லாமல் அவரை பெரியாரால் இருட்டடிக்கப்பட்ட ஒரு மகத்தான வைதீக ஆதரவு தலித் தலைவராக சித்தரிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால் அவரது திருக்குறள் ஆராய்ச்சி, தீபாவளி போன்ற வெகுமக்கள் பண்டிகைகள் குறித்த ஆராய்ச்சி எல்லாமே வெடிமருந்து கிடங்குகளே. “இந்திர தேச சரித்திரம்” பிராமணர்களை வேஷ பிராமணர்கள் என நேரடியாகவே தாக்குகிறது. ரோஜாவை முள் குத்தாமல் பறிப்பதைப் போல இதில் இருந்து ஒரு பிராமண சார்பு அயோத்திதாசரைக் கிள்ளி விட வேண்டும் என தவிக்கிறார்கள். இந்த தவிப்பின் ஒரு ரத்தத் துளி தான் பத்ரியின் மேற்சொன்ன பகடி.

 இதையே அவர்கள் அம்பேத்கருக்கும் செய்து வருகிறார்கள் - நான் என் மாணவர்களிடம் இந்திய சாதி அமைப்பு பற்றி பேசும் போது தவறாமல் அம்பேத்கரின் Who were the Shudras? நூலின் சுருக்கத்தை அளித்து விவாதிப்பேன். அதில் வரும் அம்பேத்கரின் கருதுகோளும் அயோத்திதாசரின் முடிபும் ஒன்றும் தான்; இருவருமே இன்றுள்ள இந்திய சாதிய ஒடுக்குமுறைகளுக்குக் காரணம் வைதீக இந்து - அவைதீக பௌத்த தரப்புகளுக்கு இடையிலான போரின் முடிவில் வென்ற தரப்பு தோற்ற தரப்பை அடிமைகளாக தக்க வைக்க உருவாக்கிய சனாதன அமைப்பே எனக் கூறுகிறார்கள். அம்பேத்கர் இதற்கு பழங்கால நாடகங்களில் தெரியும் பிராமண விரோத மனப்பான்மையை, நீண்ட காலமாய் சில தலித் சாதிகள் தம் சடங்குகளில் பிராமண பூசாரிகளை பயன்படுத்த மறுத்து வந்ததை ஆதாரமாகக் காட்டுகிறார். அயோத்திதாசர் சொல்லாராய்ச்சி, தொன்மங்களை அலசுவது வழியாக தன் தரப்புக்கு நியாயம் சேர்க்கிறார்.


 இது ஏன் இப்படி என்றால் இருவருக்குமே வேறு வழியில்லை. பழங்கால இந்தியாவின் வரலாற்றை கல்வெட்டுகள், பதிவான ஆவணங்கள் வழியாக கட்டமைப்பது இப்போதைக்கு சாத்தியமல்ல; இந்தியர்களுக்கும் எதையும் நேர்வரிசையான வரலாறாக பதிவு செய்வதை விட தொன்மமாக கற்பித்து அதை தொடர்ந்து தலைகீழாக்கம் செய்வதிலேயே அல்லது அதை வைத்து ஆதிக்கம் செய்வதிலேயே ஆர்வம் அதிகம். அதனாலே மரபான வரலாற்று ஆய்வுகள் இங்கு பெரும் ஆர்வத்துடன் முன்னெடுக்கப்படுவதில்லை, நிறைய வரலாற்று ஆதாரங்கள் ஆராயப்படாமல் காப்பகங்களில் மக்குகின்றன, அல்லது புறக்கணிக்கப்பட்டு அழிகின்றன. மாறாக தொன்மங்களை மீளுருவாக்கம் செய்வதில் ஒட்டுமொத்த சமூகமே பெரும் அக்கறை காட்டுகிறது. 


என்னைப் பொறுத்தமட்டில் இரண்டு விதங்களிலான வரலாற்றெழுத்தும் முக்கியம் - சொல்லப்படாத வரலாற்றை அதிகாரம் இழந்த தரப்பு தொன்மங்கள், கதையாடல்களினூடே தான் மீட்டெடுக்க இயலும். இத்தகைய வரலாற்றெழுத்துக்கு கடந்த அரை நூற்றாண்டில் உலக அரங்கில் பெரும் மதிப்பு ஏற்பட்டுள்ளது. வரலாறே புனைவெனும் போது ஏன் புனைவான மொழியில் வரலாற்றை எழுதக் கூடாது என பின்நவீனம் கேட்கிறது. டி தர்மராஜின் அயோத்திதாசர் குறித்த எழுத்துக்கள் அப்படியானவை. 


அயோத்திதாஸரால் தர முடிகிற ஆதாரங்கள் முழுக்க மொழிக்குள் இருக்கின்றன; நம் கலாச்சார அசைவுகளில் அவை உள்ளன. அதனாலே அவரது கருத்துக்களுக்கு மதிப்பு ஏற்படுகிறது. அவர் பத்ரி சொல்வதைப் போல கப்சா அடிக்கிறார் என்றால் ஏன் அதை இவ்வளவு கவனமாய் எடுத்துக் கொண்டு இங்கே விவாதிக்கிறோம்?

 திருக்குறளை திரிக்குறளாக அவர் ஒரு பௌத்தப் பிரதியாக வாசிக்க முனைவதை படித்தால் அவர் “இந்திரர் தேச சரித்திரத்தை” எழுதுவதன் நியாயம் விளங்கும். திருவள்ளுவர் சைவ, வைணவத் துறவியோ, பிராமணரோ அல்ல என தோற்றக்கதையின் தொன்மத்தைப் பற்றி இன்று நாம் பேசுவதை துவக்கி வைத்தவரே அவர் தான். வள்ளுவர் ஒரு பௌத்த இளவரசர்; சைவர்களும் வைதீகர்களுமாய் அவரை லவுட்டிக்கொண்டு சென்று உருமாற்றம் செய்து விட்டார்கள் என்பது அவரது தரப்பு. அவரிடம் போய் “இதுக்கு ஆதாரமாக வள்ளுவரின்  பிறப்பு சான்றிதழை வைத்திருக்கிறயா மேன்? அவரது பேட்டி இருந்தால் ஆதாரமா காட்டு மேன்?” என வினவினால் செருப்பால் அடிப்பார். வள்ளுவத்தை ஒழுங்காய் படித்தால் அதற்குள்ளாகவே ஆதாரம் இருக்கும் போது எதற்கு நேரடி ஆவண ஆதாரம்?

திருவள்ளுவர் நிஜமாகவே வாழ்ந்தாரா, எப்போது எங்கு பிறந்தார் என்பதற்கு தெளிவான மறுக்க முடியாத சான்றுகள் இல்லை தாம். புத்தர் குறித்தும் இந்த சந்தேகங்கள் உண்டு. அப்படி இருக்கும் போது தொடர்ந்து தொன்ம வழியாக உருவாகி வரும் பாத்திரங்களின் வேர்களை ரொம்ப நோண்டாமல் ஒரு தொன்மத்துக்கு ஈடாக மாற்றுத் தொன்மத்தை அளிப்பதே ஒரே தீர்வு. மேற்கிலும் இப்பிரச்சனை உண்டு - கர்த்தர் வாழ்ந்ததற்கு எந்த சான்றும் இல்லை. ஆனால் கர்த்தரைப் பற்றின கதையாடல்களுடன் உங்களுக்கு உடன்பாடில்லை என்றால் என்ன செய்ய முடியும், விவிலிய பனுவல்களை நம்பியிராமல்? அந்த தரப்பையே நீங்கள் எதிர்க்க நினைக்கும் போது அவர்களின் பிரதிகளையே எடுத்து பயன்படுத்த முடியுமா? இல்லை அத்தனை நூற்றாண்டுகளுக்கு பின்னால் போய் ஆதாரத்தை நோண்டியெடுத்து நிரூபிக்க முடியுமா? அப்படி செய்தால் “இது நம்பிக்கை, இதை பழிக்காதே” என கத்தியை தூக்குவார்கள். அதனாலே நீட்சே ஒரு மாற்று கர்த்தரை உருவாக்கும் நோக்கத்தில் ஜாருதுஷ்டிரனை மீளுருவாக்கினார். நிஜ ஜாருதுஷ்டிரனுக்கும் இவனுக்கும் சம்மந்தம் இல்லை. இவன் எதிர்-ஏசு. எதிர்-ஏசு என்பதாலே இவன் உண்மையான ஏசு என நீட்சே கூறுகிறார். இதுவரை விவிலியம் பேசிய விழுமியங்களை உடைத்தெறிய, ஆழமான மனித இருப்பை உணர வாய்ப்பளிக்கும் புதிய தத்துவம் ஒன்றை உருவாக்கி அதன் தலைவராக ஜாருதுஷ்டிரனை வைக்கிறார். நான் நீட்சேயின் இப்பிரதியை “இந்திரர் தேச சரித்திரத்துக்கு” இணையாக ஒன்றாகப் பார்க்கிறேன். 

இப்படியான பிரதிகளை மரபான வரலாற்று பிரதிகளுக்கு இணையாக வைத்துப் பார்த்து பகடி செய்வது அயோக்கியத்தனம். அப்படியே சான்று வேண்டுமெனில் அயோத்திதாசரின் சொல்லாராய்ச்சிக்கே செல்ல வேண்டும். வேறு வழியில்லை.


முன்பு ஒரு டிவி பேட்டியில் எச். ராஜா “அம்பேத்கர் நீங்கள் திராவிடர்கள் பேசும் ஆரிய படையெடுப்பு கதையை ஏற்கவில்லை தெரியுமா?” என்று சொன்னார். ஆனால் அதே அம்பேத்கர் தனது நூல்களில் வைதீக இந்து மதத்தை கிழித்து தொங்கப் போட்டதை, சாதிக் கொடுமைகளுக்கு அடிப்படையே பிராமணர்களின் பௌத்த வெறுப்பு தான் எனச் சொல்லி இருக்கிறாரே என்றால் வாயைத் திறக்க மாட்டார். வேண்டுமென்றால் அம்பேத்கர் ஒரு பிராமணப் பெண்ணை தானே மணந்தார் என கதையை மாற்ற முயல்வார். இல்லையென்றால் “அம்பேத்கர் இஸ்லாத்தை கண்டித்திருக்கிறார் தெரியுமா?” என அடுத்த குண்டை தூக்கி போட்டு விட்டு கிளம்பி விடுவார். ஆனால் என்னதான் முயன்றாலும் ஒரு சிந்தனையாளரை நீங்கள் டிடெர்ஜெண்ட் போட்டு கழுவி உலர்த்தினாலும் உண்மையை மறைக்க முடியாது. அது ஒருநாள் வெளிவந்தே ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...