புஜாரா பந்துகளை போக விடுவது பார்க்க ஒரு நடத்துநர் பேருந்துக்குள் ஆட்களை விடுவதைப் போல உள்ளது. “போ போ போ ... ரைட்டு ... வழியில நிக்காதே.” பந்து ஆடுதளத்தில் பட்டு துள்ளி தன் பணியை செய்து புஜாராவைக் கடந்து கீப்பருக்கு செல்லும் போது அவர் செய்கிற அந்த கைகளை பெரிதாக தலைக்கு மேல் உயர்த்தி ஏதோ பெரிய ஆபத்தை தவிர்த்து விட்டாற் போல காட்டுகிற சீன் இருக்கிறதல்லவா, அதைக் காண கண்கோடி வேண்டும். என்ன இதெல்லாம் முடிந்த பிறகு வேகப்பந்து விச்சாளர் வியர்த்து களைத்து மூச்சு வாங்கிக் கொண்டிருப்பார், புஜாராவோ “இவன் ஏன் இப்பிடி புஸுபுஸுன்னு மூச்சு விடுறான்?” என கூலாக பார்த்துக் கொண்டிருப்பார்.
இதையே பல நூறு பந்துகளாக போரடிக்காமல், கவனம் பிசகாமல் அவரால் செய்ய முடியும் என்பதே சிறப்பு. வீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் மனம் சோர்ந்து திசையை மாற்றி வீசும் போது யாருக்கும் தெரியாமல் அடித்து ரன் ஓடி அரை சதம் அடித்து விடுவார். தினம் தினம் நூற்றுக்கணக்கான காகிதங்களில் கண்ணை ஓட்டி சில இடங்களில் எதையாவது கிறுக்கி வைத்து, தனக்கு முன்பு வரிசையில் நிற்கிறவர்களை பொருட்படுத்தாமல் சரியாக உணவு இடைவேளையின் போது எழுந்து வினாடி பிசகாமல் திரும்ப அதே இடத்துக்கு வந்து, சரியாக நாள் முடியும் போது கிளம்பி பஸ் பிடித்து வீட்டுக்குப் போய் அடுத்த நாள் அதே நேரத்துக்கு சரியாக வந்து, இந்த வேலைகளை ஒரு கடின காரியம் போல தவறாமல் காட்டிக் கொண்டு மாத சம்பளத்தை சரியாக வாங்கிப் போகும் ஒரு குமாஸ்தாவை நினைவுபடுத்துகிறார். இத்தகைய குமாஸ்தாக்கள் இப்போது வழக்கொழிந்து வருவதாலே நமக்கு புஜாராவைப் பார்க்க ஏதோ சத்யஜித்ரே பட பாத்திரம் போல, பழைய காலத்தில் இருந்து வந்து குதித்ததைப் போலத் தோன்றுகிறது.
ஆனால் புஜாரா ஒரு மாவீரனும் தான்.
ஆஸ்திரேலியாவில் இவரது இந்த அட்றாசிட்டிகளைப் பார்த்து கடுப்பான எதிரணி வேக வீச்சாளர்கள் “குருநாதா” வடிவேலு காமிடி பாணியில் இவரை உயரப்பந்துகளால் தொடர்ந்து தாக்கினார்கள். ஆனால் அப்போது புஜாரா ஓவருக்கு நான்கு பந்துகளை உடம்பில் வாங்கிக் கொண்டு “நீங்க தாக்குவது என் உடலைத் தான் என்னை அல்ல” என அமைதியாக நின்றார். ஒரு கட்டத்தில் அதே வீச்சாளர்கள் இனி கடுப்பாவதில் அர்த்தமில்லை என சரணடைந்து விட்டார்கள். பிறகு அவரைப் புகழ்ந்து பேட்டியெல்லாம் கொடுத்தார்கள்! அதைப் பார்க்க “எம் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா” காமிடி நினைவுக்கு வந்தது.
புஜாரா எனும் அற்புதத்தின் சிறப்பு அது நம்மை முடிவற்று காத்திருக்க வைக்கும் அற்புதம் என்பதே!

கருத்துகள்