சின்ன வயதில் கோடை விடுமுறையில் உறவில் உள்ள என் சகவயது பையன்கள், சிறுமியர் வீட்டுக்கு வரும் போது ரொம்ப குஷியாக இருக்கும், ஆனால் அவர்கள் சில நாட்களில் போய் விடுவார்களே என ஏக்கமும் இன்னொரு பக்கம் இருக்கும். அவர்கள் விடைபெறும் போது ஏற்படுகிற வருத்தத்தில் “எதுக்கு வந்து இப்படி துன்பத்தை கொடுக்கிறார்கள்? இதுக்கு வராமலே இருக்கலாமே!” என மனதுக்குள் புலம்புவேன். பின்பு சென்னையில் 17 வருடங்கள் வாழ்ந்து அது என் சொந்த ஊர் போலான பிறகு இதே எண்ணம் சென்னை குறித்தும் வருகிறது. பெங்களூரில் இருந்து சென்னையில் வந்தால் சில நாட்கள் மனம் உற்சாகத்தில் துள்ளும். கிளம்பும் போது என்னென்னவோ நினைவுகள் வந்து மனம் தளும்பும். இப்படி வலியுடன் திரும்புவதற்கு எந்த உணர்ச்சியும் இல்லாமல் பெங்களூரிலே வாழ்ந்து தொலைக்கலாமே என நொந்து கொள்வேன்.
நான் கேரளத்திற்கு சென்றிருக்கிறேன். அது அநேகமாய் குமரி மாவட்டத்தைப் போன்றே இருக்கும். ஹைதராபாத் வித்தியாசமான ஆனால் அழகான நகரம் என ஒரு சித்திரம் உண்டு. அங்குள்ள உணவு வகைகளும் என மிக மிக பிடித்தமானவை. உணவுகளின் சொர்க்கபுரி அது. அழுகி உதிரும் நகரத்தைப் போலத் தோன்றினாலும் எனக்கு கொல்கொத்தாவை ரொம்ப பிடித்துப் போனது. அந்த ஊர் மக்களிடம் அளவளாவுவது அப்படி ஒரு சிலாக்கியமான அனுபவம். வண்ணமயமான நகரமும் கூட. வடகிழக்கிலும் சுற்றி இருக்கிறேன். அந்த குளிர், அமைதி எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தினாலும் கசப்பு தோன்றவில்லை. ஆனால் பெங்களூர் மட்டுமே நான் வாழ்ந்த நகரங்களில், ஊர்களில் மிக மிக அந்நியமாக எனக்குத் தோன்றுவது. வடகிழக்கை போன்றே இதுவும் மரண அமைதி கொண்ட ஊர். அங்கு போலவே இங்கும் உள்ளூர்க்காரர்கள் உலகில் ஏதோ பொன்னியின் செல்வனில் வரும் சேர ஒற்றர்களைப் போல உலவுகிறார்கள். கன்னடம் தெரியாததால் இங்கு நடக்கும் இலக்கிய நிகழ்வுகளிலும் என்னால் பங்கேற்க இயலவில்லை. எனக்குப் பிடித்த இன்னொரு விசயம் ஒட்டுக் கேட்பது. கூட்டமான இடங்களில் போய் நின்று கொண்டு உரையாடல்களுக்கு காது கொடுப்பேன். சென்னை மக்கள் சத்தமாக தமது கதைகளைப் பேசுவார்கள். கடற்கரையில் தொலைவில் இருந்து பார்த்தாலே சென்னை வாழ் குடும்பங்களின் வாழ்க்கை, செயல்பாடுகள், சிக்கல்கள் தெரிய வரும். ஆனால் பெங்களூர் காப்காவின் “கோட்டை” நாவல் போல இருக்கிறது. இங்கு நான் யாரும் கன்னடத்தில் பரஸ்பரம் பேசிக் கேட்டதில்லை. அது புரியாது என்றாலும் அந்த ஒலியையாவது கேட்கலாம் என்றால் அப்படி அமைதியாக தமக்குள் பேசுகிறார்கள். பெரும்பாலும் அமைதியாக கடந்து விடுகிறார்கள்.
ஒரு உதாரணம் தருகிறேன் - சென்னையில் நான் வசித்த பகுதியில் ஒரு தேநீர்க் கடை. அங்கு மாஸ்டர் மதுரைக்காரர். கடைக்குள் ஒரு சண்டை சேவலை கட்டிப் போட்டிருப்பார். அதை ஸ்பெஷலாக கவனித்துக் கொள்வார். வார இறுதிகளில் அதை எடுத்து கொண்டு சண்டைக்கு கிளம்பி விடுவார். நிறைய கதைகளை என்னிடம் சொல்லுவார். அந்த கடைக்கு வரும் பல விதமான மனிதர்களின் சம்பாஷணைகளை கவனிப்பது தனி அனுபவம். ஒருவர் தனது பெருங்குடியை நிறுத்த மாலை போட்டு கொண்டு வந்து என்னிடம் பேசிக் கொண்டிருக்க அவரது நண்பர்களோ அவரை மரண கலாய் கலாய்த்தது இப்போதும் நினைவுள்ளது. அதை வைத்து ஒரு கட்டுரை எழுதினேன். அதே போலத்தான், டாஸ்மாக் போய் அமர்ந்தால் சில நொடிகளில் யாராவது வந்து ரொம்ப நாள் பழகியதைப் போல நம்மிடம் பேசத் தொடங்குவார்கள். சென்னையில் என் வீட்டுக்கு எதிரே ஒரு கோயில். அங்கே தினமும் ஸ்பீக்கரில் பாட்டு போட்டு அதகளம் பண்ணுவார்கள். (இங்குள்ள கோயில்களோ அநியாய அமைதியில் உறைந்திருக்கும்! எப்போதாவது தமிழ் பாட்டுக்கள் ஒலிக்கும்.) காலை ஆறு மணி துவங்கி அங்கே பிச்சைக்காரர்கள் வந்து அமர்ந்து தம் பணியை ஆரம்பிப்பதை கவனிக்க சுவாரஸ்யமாக இருக்கும். ஒருவர் குடிக்க காசில்லை என்றால் காலையில் இரண்டு மணிநேரம் மட்டும் அவர்களுடன் உட்கார்ந்து கொள்வார். எந்த கூச்சமும் இல்லை. பணம் சேர்ந்ததும் சரக்கடிக்க கிளம்பி விடுவார். அதுவரை கூனிக்குறுகி இருந்தவர் இப்போது ராஜாவாகி விடுவார். அவரைப் போன்றோரை இங்கே மிஸ் பண்ணுகிறேன். இங்கேயும் குடித்து விட்டு குப்பை மீது விழுந்து கிடக்கிறார்கள் என்றாலும் அத்தகையோர் விளிம்புக்கு வெளியே ஒரு விளிம்பில் இருக்கிறார்கள். சென்னையில் போல அவர்கள் மனிதர்களாக இங்கே அனைத்துடனும் கலந்து இங்கே இருப்பதில்லை.
இதையெல்லாம் விடுங்கள், எடப்பாடி எம்.எல்.ஏக்களின் கடிதத்தோடு ஆளுநரைப் பார்க்க சென்ற சந்தர்பத்தில் நான் அப்பகுதியை கடந்து போய்க் கொண்டிருக்கிறேன். அங்குள்ள பரபரப்பைக் கண்டு வியந்து ஒரு போலீஸ்காரரிடம் விசாரிக்க அவர் சொன்ன சங்கதிகள் சுவார்ஸ்யமானவை. தமிழகத்தின் போக்கை மாற்றுகிற சம்பங்கள் நடக்கும் போது சென்னையின் தெருக்களில் அந்த அதிர்வுகளை நேரடியாக உணரலாம். வழியெங்கும் பேனர்கள், ஊர்வலங்கள், கடற்கரையில் நடந்த அந்த ஜல்லிக்கட்டு போரட்டம்; வெள்ளம் வந்த போது, ஜெயலலிதா இறந்த போது நடந்தவை? - என்னவொரு பரபரப்பான வண்ணமயமான நகரம் இல்லையா? ஆனால் இதெல்லாம் நடக்கும் போது ஒருவர் ஐ.சி.யுவில் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது பெங்களூர் வாழ்க்கை. சென்னையில் ஒரு ஸ்டிரைக், தர்ணா என்றால் அதை எங்கிருந்தாலும் உணரலாம். இங்கே செய்தியில் இப்படி ஒன்று நடக்கப் போகிறது எனப் படிப்போம், ஆனால் எந்த அதிர்வும் நடப்பில் இருக்காது. ஐ.டி வாழ்க்கை, குடியைத் தவிர ஒரு அரசியல், கலாச்சார உலகம் இவர்களுக்கு இல்லையா, இல்லை அதெல்லாம் வேறெங்கோ தனியாக நடக்கிறதா தெரியவில்லை.
ஒட்டுமொத்த பெங்களூரையும் அந்நியர்களுக்கு வாடகைக்கு கொடுத்து விட்டு கன்னடர்கள் ஒதுங்கிக் கொண்டு வாழ்வதைப் போலத் தோன்றுகிறது.
அதனாலே எனக்கு இது ஒரு ஊரே இல்லை, ஸோம்பிகளின் நகரம் எனத் தோன்றுகிறது. சென்னை மக்களின் உயிர்ப்பு, கொண்டாட்டம், வெளிப்படையான வாழ்க்கை, எல்லாவற்றிலும் பங்கெடுக்கும் களங்கமின்மை பெங்களூர்வாசிகளிடம் இல்லை. எல்லாவற்றில் இருந்து விடுபட்டு வீடு நோக்கியோ பப்பை நோக்கியோ ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் வசிக்கிற பகுதியில் தேநீர் கடை, மளிகைக் கடை என எங்கே போனாலும் மலையாளிகள் தாம். இல்லாவிட்டால் தமிழர்கள். அதையும் விட்டால் இந்தி பேசும் மக்களை கவனிக்கலாம். ஆனால் அவர்களும் சொந்த ஊரில் இருப்பதைப் போல இங்கு இருப்பதில்லை. வெற்றிமாறன் பட செட்டில் இருந்து அப்படியே கௌதம் மேனன் செட்டிற்கு வந்து விட்டதைப் போல ரொம்ப கௌரவமாக ஸ்டைலாக போலியாக தெரிகிறார்கள்.
இந்த ஊர் ஒரு பெரிய ரயில் நிலையம் போல இருக்கிறது. யார் யாரோ வருகிறார்கள், போகிறார்கள். யாருக்கும் எதனுடனும் ஒட்டுறவு உள்ளதாகத் தெரியவில்லை.
எனக்கு மால்கள், பப்புகள் என்றாலே ஒருவித ஒவ்வாமை உண்டு. மேலும் அவற்று பாதி சம்பளத்தை தாரை வார்க்க வேண்டும். ஒரு எழுத்தாளனாக அதில் எந்த அர்த்தமும் உள்ளதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு அரை இருட்டான, ஏஸி அறையில் பியர் குடித்து பாட்டுக்கு துள்ளுவதற்கு எதற்கு அவ்வளவு செலவு பண்ண பண்ண வேண்டும்? சென்னையில் அதை விட செமையான துள்ளிசையை பிண ஊர்வலங்களின் போது கேட்கலாம், இலவசமாக ரசிக்கலாம், 70-80 ரூபாய்க்கு குவாட்டர் அடித்து விட்டு கலந்தும் கொள்ளலாம். ஆனால் இந்த மக்களோ ஏன் வெள்ளைக்காரன் பாட்டுக்கு ஆட இப்படி பணத்தை வீணடிக்கிறார்கள்? இங்கே யாராவது செத்தால் அப்படியே ஆம்புலன்ஸில் வைத்து சத்தமில்லாமல் எங்கேயோ வைத்து வேகமாய் எரித்து விடுகிறார்கள். ஒரு ஒப்பாரி இல்லை, கூட்டமில்லை, சாலையில் பூக்கள் இல்லை, சோகக் களை இல்லை, மரணத்தை வழியனுப்பும் கொண்டாட்டம் இல்லை. பிறந்த நாள் என்றால் மட்டும் தெருவில் வைத்து கேக் வெட்டி கத்தி கொண்டாடுகிறார்கள். பிறந்தால் மட்டும் தான் சிறப்பா? பிறந்த எவனும் சாக மாட்டானா?
எனக்கு உள்ள ஒரே ஆறுதல் பல்கலைக்கழக வளாகம் தான் - அங்கு சந்திக்கக் கிடைக்கிற உறவுகள் இல்லையென்றால் பரப்பன அக்கிரஹார சிறையில் சசிகலா வாழ்ந்ததைப் போலத் தான் நானும் இருந்திருப்பேன். பெங்களூரில் வாழ்ந்ததில் கிடைத்த ஒரே படிப்பினை லண்டன், நியுயார்க் போன்ற ந்கரங்களில் இந்தியர்கள் எப்படி கூண்டுக்கிளிகளாக உணர்வார்கள் என புரிந்து கொள்ள முடிந்தது. ஒருவேளை எனக்கு சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டாலோ, வெளிநாட்டில் வாழ நேர்ந்தாலோ எந்த அதிர்ச்சியும் ஏற்படாது.
சென்னையில் எனக்கு இருந்த சில மிக மிக முக்கியமான விசயங்களை, மகிழ்ச்சியின் ஊற்றுகளை இங்கே வர நேர்ந்த போது இழந்தது எனது ஏமாற்றத்துக்கு மற்றொரு காரணமாக இருக்கலாம். அதை ஒரு தலைகீழ் மாற்றம் எனலாம். வாழ்க்கையில் எல்லா நம்பிக்கைகளையும் இழந்து போனேன். மிக மிக கசப்பான, யாரைக் கண்டாலும் வெறுக்கிறவனாக மாறிப் போனேன். சென்னையில் இருக்கும் போது நான் 100% இப்படியில்லை என அறிவேன். ஒருவேளை இழந்த வாழ்க்கை குறித்த நினைவேக்கமும் இந்த நகரத்தை இப்படி வெறுக்க வைக்கிறதோ? கடந்த 4 ஆண்டுகளில் எழுத்து மட்டும் இல்லையென்றால் நான் செத்துப் போயிருப்பேன்.
இதனால் தான் ஒவ்வொரு முறை சென்னை வந்து விட்டு திரும்பும் போதும் மக்கள் மத்தியில் இருந்து பிணங்களுக்கு திரும்ப நேர்கிற ஒரு உடற்கூராய்வாளனைப் போல தவித்து போகிறேன். என்னடா வாழ்க்கை இது! எனக்கு மட்டும் ஏன் இப்படித் தோன்றுகிறது? சுஜாதா இங்கே மகிழ்ச்சியாக இருந்தாகவே அவரது கட்டுரைகளில் தெரிகிறது. (ஆனால் சென்னையில் மட்டுமே ஆக்டிவ்வாக பரபப்பாக இருந்தார்.) சி.எஸ்.கே, தமிழவன், பாரதி மணி போன்றோருக்கு எந்த புகாரும் இல்லை. எனில், நான் மட்டும் ஏன் காங்கிரஸ் தலைமையுடன் ராகுல் காந்தி போல இந்த ஊருடன் போராடுகிறேன்?


கருத்துகள்
Please forgive my English. I came to know you are working as English Professor in Bangalore through Charu Blog.
Thanks for this article exactly what you said is 100% correct. I too faced the same problem. Three years before I stayed in Electronic City most of the time in weekend I use to spend in Office only watching Balu Mahendra and Mahendran Sir Films also Sunday afternoon I will to go Hosur by bike and spent time in local market.