நான் முந்தின பதிவொன்றில் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல சாதிக்கும் வசிப்பிடத்துக்கும் ஒரு இணைபிரியா பந்தம் உள்ளது. பல நூற்றாண்டுகளாக நம் மக்கள் சாதி வாரியாக குடியமர்த்தப்பட்டு, குடியமர்ந்தே வாழப் பழகினார்கள். விளைவாக சாதிசனத்துக்குள் அதிகமாக பழகுவது, வியாபார கொடுக்கல் வாங்கல் நிகழ்த்துவது, விழா கொண்டாடுவது, திருமணம் செய்வது என சாதிக்கு ஒரு பௌதீக வடிவத்தை, செயல்நிலையை, நியாயத்தை வழங்கி விட்டோம். தேர்தலிலும் பெரும்பான்மை வாக்காளர்களின் சாதியை சேர்ந்தவரே வேட்பாளராக நியமிக்கப்படுவது இதனாலே நடக்கிறது. நான் வாழ்ந்த தெருவில் ரெண்டு மூன்று மத்திய, உயர் சாதியினரே வாழ்ந்தனர். வெளியே தலித்துகளின் வீடுகள் இருந்தன. அப்போதே அங்கு ஆர்.எஸ்.எஸ் கொடி பறந்தது. நான் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த போது தான் தாழ்த்தப்பட்ட மாணவர்களுடன், இஸ்லாமியருடன் பழகும் வாய்ப்பு கிடைத்து. மதியம் தவறாமல் சத்துணவை வாங்கி சாப்பிடுவதுடன், அதை ஒரு டப்பாவிலும் வாங்கிப் போகும் பிள்ளைகளைக் கண்டேன். என்னருகே இருந்த நண்பர்கள் விடிகாலையில் வாழைத் தோப்புக்கு சென்று கிளைத்து, நீர் பாய்ச்சி விட்டே பள்ளிக்கு கிளம்பி வருவார்கள் எனக் கூறுவதை கேட்டு ஆச்சரியப்பட்டேன். இது என் பார்வையை விசாலப்படுத்தியது. ஏனென்றால் நான் படித்த மேல்நிலைப் பள்ளி ஒரு அரசுப் பள்ளி. ஆரம்ப நிலை படித்ததோ ஒரு இந்துத்துவ மேல்சாதிப் பள்ளி. நான் படித்த ஸ்காட் கல்லூரிக்கும் எம்.ஸி.ஸிக்கும் கூட இதே சாதிய, வர்க்க பேதம் உண்டு. ஒன்றில் கீழ்த்தட்டு மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள் அதிகம் வந்தால் மற்றதில் உயர்தட்டினரும் மலையாளிகளுமே வந்தார்கள். இதைக் கொண்டு எளிதாக நாம் புரிந்து கொள்வது என்னவென்றால் அரசு உருவாக்கும் அமைப்புகளில் கலவையாக எல்லா சாதியினரும் பங்கு கொள்கிறார்கள். ஆனால் தனியார் நடத்தும் அமைப்புகள் மேல்சாதி, மேற்தட்டு மக்களுக்கு மட்டுமானவை. இவை தான் மக்களிடையே பிரிவினையை அதிகமாகி சாதீய வாழ்வியலை இயல்பானதாக நினைக்க வைக்கிறார்கள். நீங்கள் ஒரு பிராமணர் (அல்லது முதலியார், வெள்ளாளர், தேவர்). சின்ன வயதில் இருந்தே உங்கள் சாதிப் பிள்ளைகளுடன் மட்டும் படித்து பழகி வளர்ந்து உங்கள் சாதியினரிடம் சடங்குகளில்,விழாக்களில் மட்டுமே பங்கேற்று இறுதியில் நீங்கள் மணமுடிப்பது, வாழ்வது, வேலை பார்ப்பது எல்லாமே சுயசாதி மக்கள் மத்தியிலே இருந்தால் சாதியை இயல்பாக தமக்குள் வாழ்வதாக மட்டுமே நீங்கள் பார்ப்பீர்கள், இது எப்படி ஒரு சமூகப் பாகுபாட்டை, ஒடுக்குமுறையை, கண்மூடித்தனத்தை வளர்க்கிறது எனப் புரியாது.
நகரத்துக்கு வருவோம். அங்கு சில பகுதிகள் அக்கிரகாரமாகவே இருக்கின்றன. சில பகுதிகளில் மத்திய சாதியினர் தாழ்த்தப்பட்டோருக்கும் இஸ்லாமியருக்கும் வீடு தருவதில்லை. கிராமத்தில் இருந்தே அதே வர்ணாசிரம குடியமர்த்தல் முறை தான் பெரிய அப்பார்ட்மெண்டுகளிலும் உள்ளது. கிராமங்களில் இன்று கோயில், சுடுகாடு ஆகிய பொதுவிடங்களில் தாழ்த்தப்பட்டோர் புழங்க அனுமதி இல்லை. ஒடுக்கப்பட்ட சாதிகள் பினத்தை ஊர் வழியாக எடுத்துப் போக அனுமதி இல்லை. சாதீய வன்முறைகள் இந்த புள்ளியில் தான் ஆரம்பிக்கின்றன.
இவையெல்லாம் நமது சாதீய மனநிலையால் நிகழ்கிறது என நீங்கள் நினைக்கலாம். நான் பொருளாதார, லௌகீக, முதலீட்டிய அமைப்பினால் பிரதானமாய் ஏற்படும் தீய விளைவு இது என நினைக்கிறேன். தனியுரிமை என்பது இதில் ஒரு முக்கிய பங்கு ஆற்றுவதாக நினைக்கிறேன். எதெல்லாம் மக்களால் சொந்தமாக ஆளப்படுகிறதோ அங்கெல்லாம் சாதீயம் தலைவிரித்து ஆடுகிறது. தனியார்மயமாக்கல் கடந்த முப்பதாண்டுகளில் பெரும் எழுச்சி பெற்றதற்கும் சாதீயத்தின் அசுர வளர்ச்சிக்கு, ஒடுக்குமுறைகள், கொடுமைகள், ஆணவப் படுகொலைகள் அதிகமானதுடன் வெளிப்படையாக அங்கீகரிக்கவும் நியாயப்படுத்தப் படுதவற்கும் ஒரு நுட்பமான ஆனால் மறுக்க முடியாத தொடர்பு உள்ளது. நாம் இதை நேர்மாறாக புரிந்து கொண்டோம் - தனியாரில் சாதி ஒழியும், சமத்துவம் ஏற்படும் - என்பது தான் வேடிக்கை.
எப்படி கொரோனா கிருமி வாழ மனித உடல் அவசியமோ அதே போல சாதிக் கிருமிக்கும் நிலம், குடியிருப்பு அமைப்பு, தனியுரிமை அவசியம். முந்தின பதிவில் சொன்னதைப் போல வம்சாவளியாக சொத்து கடத்தப்படுவதும் இதற்கு வலு சேர்க்கிறது. ஆக, அரசு சாதி ஒழிப்பு நடவடிக்கைகளில் பிரதானமாக மெல்ல மெல்ல சில பொருளாதார, நில, குடியிருப்பு சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்:
1) பெரிய தொழில்நிறுவனங்களில் அரசுக்கு பெரும் பங்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
2) பெரும் விவசாய நிலங்களும் பொது நிலமாக இருக்கும்படி - குறைந்த விலையில் தனிநபர்ககளிடம் வாங்கி - மாற்ற வேண்டும். அங்கு விவசாயம், உற்பத்திப் பணிகளை அரசின் தலைமையில், நிர்வாகத்தின் கீழ் மக்கள் செய்யும் நிலையை கொண்டு வர வேண்டும். லாபத்தை அரசு எடுத்துக் கொண்டு சமூக நீதி, மக்கள் நலத்திட்டங்களிலும் மேலும் புதிய தொழில்களிலும் முதலீடு செய்ய வேண்டும். இவ்வளவு படித்த திறமையான மக்கள் ஊழியர்களாக இருக்கும் போது எந்த தனியார் நிறுவனத்தையும் விட ஒரு பொதுத்துறை நிறுவனத்தால் சம்பாதிக்க முடியும். அரசு வங்கிகள் தனியாருக்கு பல்லாயிரம் கோடிகளை இலவசக் கடன் கொடுத்து, அரசின் கட்டுமான திட்டப்பணிகளை கொடுத்து இலவசமாகவே கோடானு கோடிப் பணத்தை ஒரு தனியார் நிறுவனம் சம்பாதிக்க அனுமதிக்க முடியும் என்றால், மத்திய வர்க்க நிலையில் இருந்து எந்த முதலீடும் இல்லாமல் 8-9 வருடங்களில் நாட்டின் முதன்மையான பணக்காரராக (கவனிக்க: அதானி) ஏன் அதை அரசாலே செய்ய முடியாது? டாஸ்மாக் போல இதில் பிற தனியார்களின் தலையிட்டையும் அரசால் கட்டுப்படுத்த முடியும். மொபைல் போன்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதை செய்யத் தேவையான பொருட்கள் சீனாவில் தயாராகின்றன. நம்முடைய தனியார் நிறுவனங்கள் அவற்றை வாங்கி அசெம்பிள் செய்து, மென்பொருளையும் வடிவமைத்து, பிராண்ட் மதிப்பை விளம்பரம் செய்து மிகப்பெரிய லாபம் ஈட்டுகிறது. அரசால் இதை சுலபத்தில் செய்ய முடியும். ஒரு குறிப்பிட்ட விலைப்பட்டியலில் போட்டியாளர்களை சுலபத்தில் கட்டுப்படுத்தி அரசின் பண்டங்களுக்கே தனிமதிப்பை உண்டு பண்ண முடியும். இதன் லாபம் பல வகைகளில் மக்களிடமே திரும்ப வரும் என்பதால் மக்களின் ஆதரவும் பெரிதாக இருக்கும். ஒரு கட்டத்தில் இதைக் கொண்டு அனைத்து வரிகளையும் ரத்து செய்யலாம். இப்போது லாப பணமும் முதலீடும் ஒரு சில சாதியினரிடம் குவிவது முடிவுக்கு வரும். எல்லா நிறுவனங்களிலும் சமத்துவத்துடன் பணியாற்ற முடியும், இட ஒதுக்கீட்டையும் கொண்டு வர முடியும்.
கூடுதலாக வரும் லாபத்தை வைத்து அரசு மக்களின் இடங்களை வாங்கி அங்கு மேலும் பல சமத்துவ குடியிருப்புகளை உருவாக்கலாம். நீண்ட காலத்தில் சாதிக்கு இடமே இல்லாத நிலையை உண்டு பண்ணலாம்.
3) புதிய சமத்துவ நகரங்களில், சிறுநகரங்களில் தெளிவாக ஒவ்வொரு தெருவிலும், அங்குள்ள குடியிருப்புகளிலும், குடியிருப்பின் வீடுகளிலும் மக்கள் சாதிரீதியாக கலந்தே இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கலாம்.
4) அடுத்து மதம் - இந்து, கிறித்துவ, இஸ்லாமிய மத நிறுவனங்களிடம் கணிசமான சமுதாய சொத்துக்கள் குவிந்துள்ளன. இது சாதிய படிநிலையை வலுப்படுத்த உதவுகிறது. அடுத்து இத்தகைய கடவுள்-மைய மதங்களின் அடிப்படை கருத்தான சாராம்சவாதம் சாதீயத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. எப்படி கடவுள் தன்னிரகற்றவர், முதல் முழுமையானவர் என நினைக்கிறீர்களோ அப்படியே உங்களைப் பற்றியும், சாதியைப் பற்றியும் (பால் அடையாளத்தைப் பற்றியும்) நினைக்கிறீர்கள். ஆக சாதியை உடைக்க - ஒரு பேட்டியில் ரவிக்குமார் சொல்வது போல - சனாதனத்தை, சாராம்சவாத கடவுள் நம்பிக்கையும், அதை ஒட்டிய வழிபாட்டுமுறைகள், கருத்தியல்களை உடைக்க வேண்டும்.
மதம் என்பது ஒன்றும் அரூபமான அமைப்பு அல்ல. அதற்கு தனிச்சொத்து அமைப்பும், முதலீடும் அஸ்திவாரமாக் உதவுகிறது. அதனால் தான் நீங்கள் எந்த கோயிலுக்குப் போனாலும் அங்கு உண்டியல் குலுக்குகிறார்கள். அங்கு அந்த கோயிலுக்கு சொந்தமான பெருமளவு நிலபுலன், நிறுவனங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் ஒவ்வொன்றாக பிடுங்காமல் சாதியை வேரோடு பிடுங்க முடியாது.
முதல் வேலையாக மத நிறுவனங்கள் வரியற்ற நன்கொடையின் பெயரில் பெரும்பணத்தை நிதியாகப் பெறுவதை கட்டுப்படுத்த வேண்டும். மத நிறுவனங்களுக்கு தனிச்சொத்தை உரிமை கொள்ள அனுமதி இல்லை என சட்டம் கொண்டு வர வேண்டும். இந்த லாபம் ஈட்டும் தனியார் நிறுவனங்களை (கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், விளைநிலங்கள்) அரசே எடுத்து நடத்தி அங்கு பகுதியின் மக்கள் அனைவரையும் வருமானத்தின் பங்குதாரர்களாக அனுமதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் கோயில்களையும் அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
ஒருவர் மதகுருவாக ஆவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். கடுமையான தத்துவ, மதக்கோட்பாட்டு தேர்வை எழுதி தேறுபவர் மட்டுமே சாமியாராக முடியும், குறைந்தது இவர்கள் உலக தத்துவங்களில் முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் என விதிமுறை கொண்டு வர வேண்டும். இது கணிசமான போலிச்சாமியார்களை களையெடுக்க உதவும். கார்ப்பரேட் சாமியார்களும் துண்டைக் காணோம் என ஓடி விடுவார்கள். ஒரு லட்சம் சம்பாதிக்கும் மருத்துவராக நீட் தேர்வு என்றால் மாதம் பல ஆயிரம் கோடி வரை சம்பாதி முடிகிற சாமியார் தொழிலுக்கு ஏன் ஒரு பொதுத்தேர்வு கூடாது?
அடுத்த கட்டமாக இந்த சனாதன, சாராம்சவாத மதங்களுக்கு மாற்றாக அடையாளங்களுக்கு அப்பாலான, கடவுள் இல்லாத, கண்மூடித்தனமான நம்பிக்கையை வலியுறுத்தாத விவாதங்களுக்கும், தர்க்கத்துக்கும் உட்பட்ட
(பௌத்தம் போன்ற) ஒரு பகுத்தறிவு மதத்தை அரசே நிறுவ வேண்டும். இதற்கான பிரம்மாண்டமான கோயில்களை உருவாக்க வேண்டும். சிறுவயதில் இருந்தே இந்த கடவுளற்ற மதத்தில் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். சாராம்சமான எதையும், அப்பாலைக் கருத்துக்களை ஏற்காதவரக்ளாக இவர்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இது சாதியின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் இறுதி ஆணியாக இருக்கும். யோசித்துப் பாருங்கள் மதகுருமார்கள், பூசாரிகள் இல்லாவிட்டால் எங்கு போய் சாதீய திருமணங்களை நடத்துவார்கள்? சாமி இல்லாவிட்டால் சாதிய பெயர்களை எப்படி குழந்தைகளுக்கு இடுவார்கள்? சொந்த சாதிக்கென கோயில், கோயில் விழாக்கள், சம்பிரதாயங்களை பின்பற்ற கட்டமைப்புகள் இல்லாவிட்டால் சாதியால் எப்படி பிழைத்திருக்க முடியும்? சொந்தக்காரர்களுடன் வாழ முடியாவிட்டால், அவர்களை சாதி விழாக்களில் சந்திக்க முடியாவிட்டால் பலசாதி நண்பர்களே சொந்தம் எனும் நிலை ஏற்படும். வேறு வழியில்லை என்பதால் மக்கள் மெல்ல மெல்ல இதற்கு பழகிக் கொள்வார்கள்.
சுருக்கமாக தனிச்சொத்துக்களை பொதுச்சொத்துக்களாக்கி, தனியாரை பலவீனப்படுத்தி, பொருளாதார ரீதியாக மக்கள் அனைவரும் சமம் எனும் நிலையைக் கொண்டு வந்து, அரசு சம்பாதிக்கும் தொழில் லாபத்தை மக்களுக்கான திட்டங்களில் செலவு செய்து, குடியிருப்பு அமைப்புகளை மாற்றியமைத்து, இறுதியில் மதத்தையும் அரசுடைமையாக்க வேண்டும். சொத்தில் இருந்து ஆரம்பித்து கடவுளின் மரணத்தில், பகுத்தறிவின் பிறப்பில் முடிக்க வேண்டும்.

கருத்துகள்