முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜூலியா அத்தையும் திரைக்கதை எழுத்தாளரும்



“Aunt Julia and the Scriptwriter” பெருவை சேர்ந்த லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் மரியோ வர்கஸ் லோசாவின் தன்வரலாற்று நாவல். 1977இல் வெளியானது. 1950களில் பெருவில் நடக்கும் இக்கதையின் பின்புலமாக எழுத்தாளர் லோசாவின் நிஜவாழ்வு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. ஜுலியா எனும் பெயர் கொண்ட அத்தையை லோசா நிஜமாகவே காதலித்து திருமணம் செய்து விவாகரத்தும் பண்ணினார். ஐம்பதுகளில் வானொலி நாடகங்களுக்கு இருந்த மவுசு, அர்த்தமற்ற அன்றாட வாழ்வை சாகசங்களால், வினோதங்களால், வியப்புகளால், தர்க்க விதிகளுக்கு அப்பாலான கற்பனைகளால் அவை இட்டுநிரப்புகிற ஒரு சூழலை, ஆட்சி மாற்றங்களின் போது சர்வாதிகாரிகள் வந்து போவதை, இதற்கு தொடர்பே இன்றி ஒரு பதின்வயது பையன் தனது காதல், தான் ஒருநாள் எழுத்தாளனாக வேண்டும் எனும் கனவு, தனது ஊடக வேலை என ஒரு சிறிய காறுக்குழிழுக்குள் அடைபட்டிருப்பதை இந்நாவல் சித்தரிக்கிறது.

 

 நான் இதுவரை படித்துள்ள நாவல்களில் மிக அட்டகாசமான கொண்டாட்ட நிகழ்வு என இதைச் சொல்வேன்.

 புனைவெழுதும் கலைக்கு என சில புனித விதிகள் உண்டு. அன்றாட வாழ்வின் எளிய பிடிமானங்களைத் தாண்டி, தர்க்க ஒழுங்கைக் கடந்து கதை செல்லக் கூடாது, ஒரு பாத்திரத்துக்கு என்று அதன் வாழ்வுநிலை, பொருளாதார, சமூக நிலைகள் சார்ந்து ஒரு லட்சியம், நோக்கம் இருக்க வேண்டும், அதன் போக்கிலே கதை செல்ல வேண்டும் என. அது அரசியல் சரித்தனங்களை உடைக்க கூடாது என. எதார்த்த கதைகூறலில் மட்டுமல்ல மார்க்வெஸின் மாய எதார்த்த கதையுலகிலும் இந்த கட்டுப்பெட்டியான நம்பிக்கைகளுக்கு ஒரு இடம் உண்டு. லோசாவின் நாவலோ புனைவெழுத்து, கலை உலகம் குறித்த தொன்மங்களை அனாயசமாக பகடி செய்கிற ஒரு அபூர்வமான படைப்பு. அதே நேரம் ஒரு அத்தியாயத்தை கூட என்னால் சிரிக்காமல் கடக்க முடிந்ததில்லை. சும்மா அமுக்குணித்தனமான சிரிப்பு அல்ல, சத்தமிட்டு சிரிக்காமல் படிக்க முடிந்ததில்லை. அதுவும் யாரோ ஒரு அபத்தமான, கீழான நபரை கேலி செய்து உண்டு பண்ணும் சிரிப்பல்ல, ரொம்ப ரொம்ப அற்பமான ஒன்றை ரொம்ப ரொம்ப சீரியஸாக மனிதர்கள் செய்வதை விவரிக்கையில் தோன்றும் சிரிப்பு. அந்த விதத்தில் ஸ்பானிய இலக்கியத்தின் வைர மணிமகுடம் எனப் போற்றத்தக்க படைப்பானடான் குவிக்சாட்டைஇது நினைவுபடுத்துகிறது. இந்நாவலின் கதைசொல்லியான மரியோ டான்குவிக்சாட்டின் வேலைக்காரனும் துணைவனுமான சான்ச்சோ பான்ஸாவை நினைவுபடுத்துகிறான். டான் குவிக்சாட்டின் இடத்தில் வானொலி நாடகங்களை எழுதுகிற ஒரு பிரசித்தமான பொலீவிய புனைவெழுத்தாளரான பெட்ரோ கமாச்சோ வருகிறார். குவிக்சாட் குதிரையில் பயணம் செல்ல கழுதையில் பின்னாலே சான்ச்சோ பான்ஸா வருவான் இல்லையா அதே போல மாலை வேளையில் பெட்ரோ கமாச்சோ தன் கற்பனை உலகில் சஞ்சரித்தபடி நடைபழக செல்லும் போது கூடவே அவரை நடப்புலகின் ஆபத்துகளில் இருந்து பாதுகாத்தபடி மரியோ செல்வான். பான்ச்சோவைப் போன்றே மரியோவும் பெட்ரோ மீது மிக உயர்ந்த அபிப்ராயம் வைத்திருப்பான், அவருடைய கோமாளித்தனங்களை பகடி செய்யாமல் இரக்கத்துடன் அவரை பார்த்துக் கொள்வான். குவிக்சாட் மெல்ல மெல்ல மனச்சிதைவுக்கு ஆளாவதைப் போன்றே இந்நாவலிலும் பெட்ரோ ஓய்வு ஒழிவற்ற உழைப்பின் விளைவாக தன் நினைவை இழந்து, எதார்த்தத்துகும் கற்பனைக்குமான எல்லைக்கோடுகள் அழிந்த நிலையில், ஒரு மனநல விடுதியில் சேர்க்கப்படுவார்.


இந்த நாவலுக்குள் ஒரு குறிப்பிட்ட அமைப்புமுறை உள்ளது - எதுவொன்று ஒரு அத்தியாயத்தின் துவக்கத்திலோ தொடர்ச்சியாக சில அத்தியாயங்களிலோ மிக முக்கியமானதாக முன்வைக்கப்படுகிறதோ அது அந்த அத்தியாத்தின் முடிவிலோ அடுத்தடுத்த அத்தியாயங்களிலோ தலைகீழாக்கப்படும். .தா., 18 வயதே ஆன மரியோ எனும் இளைஞன் தான் இந்நாவலின் நாயகன். விவாகரத்தாகி பெருவுக்கு வரும் தன் அத்தையான ஜூலியாவுடன் அவனுக்கு காதல் ஏற்படுகிறது. அதுவும் கண்டதும் காதல் அல்ல. பழகிப் பழகி ஒரு கட்டத்தில் அவள் மீது அவனுக்கு பித்தாகிறது. அதுவும் குடும்பத்தில், உறவுகள் மத்தியில் அந்த உறவு இழிவாக காணப்படும், எதிர்ப்புள்ளாகும் எனும் உணர்வே அதைத் தொடர்வதில் ஒரு சாகச உணர்வை இருவருக்கும் தர, அவர்கள் அதற்காகவே காதலிக்கிறார்கள். தி.ஜாமோகமுள்ளில்பாபுவுக்கும் யமுனாவுக்குமான காதலுறவை சித்தரிப்பதில் இருந்து இது வெகுவே மாறானது. பாபுவைப் போல மருகி மருகி உருகி உருகி மரியோ காதலிப்பதில்லை. அவனுக்கு குற்றவுணர்வோ கூச்சமோ இல்லை. தற்செயலாக ஆரம்பிக்கும் ஒரு ஈர்ப்பு ஒரு கட்டத்தில் அவன் வாழ்க்கையையே ஆட்கொள்ளுகிறது, மாற்றியமைக்கிறது. நாவல் முடிகிற போது மரியோ தன் குடும்பத்தை, பெற்றோரை எதிர்த்து ஜூலியாவை திருமணம் செய்து, இறுதியில் அவர்களை சமாதானப்படுத்தி விட்டு தன் மனைவியான ஜூலியாவுடன் பிரான்ஸுக்கு சென்று 8 வருடங்கள் வாழ்ந்து விட்டு பிறகு விவாகரத்து பண்ணிக் கொள்கிறார்கள். விவாகரத்தின் காரணம், ஜூலியாவை அவன் மிஸ் பண்ணுகிறானா, அவளுக்காக ஏங்குகிறானா போன்ற விசயங்களை லோசா சொல்வதில்லை. 99% பக்கங்களையும் ஆக்கிரமிக்க உணர்ச்சிகரமான காதலை ஒரே பத்தியில் முடித்து வைத்து விடுகிறார். இதைத் தான் தலைகீழாக்கம் என்று சொன்னேன். அதே போல, ஜூலியாவை மரியோ காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து அவளை அவன்அத்தைஎனும் அடையாளம் இன்றி தான் பார்ப்பதாக, அவளை தனக்கு இணையான இளம்பெண்ணாக நினைப்பதாக நாம் கருதுவோம். பெரும்பாலும் மனித உளவியல் அப்படியே வேலை செய்யும். “மோகமுள்ளில்பாபுவுக்கு ஒரே சமயம் யமுனாவின் வயதாகும் உடல் மீது ஒரு அதிர்ச்சியும், அதையும் மீறிய அவளது மதமதப்பு மீது ஒரு ஈர்ப்பும் இருந்தபடி இருக்கும். ஆனால் எங்குமே அவளை யமுனா அக்கா என அவன் அழைக்க மாட்டான். ஆனால் லோசாவின் நாவலிலோ மரியோ ஜூலியாவை எப்போதும் அத்தை ஜூலியா என்று தான் அடையாளப்படுத்துவான். திருமணத்துக்குப் பிறகு கூட. நாவலின் இந்த எதிர்-கற்பனாவாதத்தை நான் மிகவும் ரசித்தேன்.


நான் மேலே சொல்லியுள்ள அமைப்புமுறைப்படி தான் நாவலின் இறுதி அத்தியாயத்தில் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பும் மரியோ - எழுத்தாளனாக பெயர் பெற்று, நல்ல நிலையில் இருக்கும் மரியோ - முன்பு மகத்தான படைப்பாளியாக தனது ஆசானாகத் திகழ்ந்த பெட்ரோ மனநல விடுதியில் இருந்து திரும்பி ஒரு கேலிச்சித்திரம் போல வாழ்ந்து கொண்டிருப்பதை, அவருக்கு பழைய வாழ்வு குறித்த எதுவும் நினைவில் இல்லை என்பதைக் காண்கிறான். அப்போது அவன் மனத்தில் தோன்றும் உணர்ச்சிகள் என்னவென்பதையும் லோசா கவனமாக தவிர்த்து விடுகிறார். அத்தை ஜூலியாவைப் போன்றே ஒரு காலத்தில் அவன் மனம் முழுக்க ஆட்கொண்டிருந்த பெட்ரோ எனும் ஆளுமை இப்போது ஒரு நொடியில் மறைந்து விடுகிறார். சில பக்கங்களில் இந்த விசயம் நடந்து முடிந்து விடுகிறது. இந்த வகை கிளைமேக்ஸ் ஒருவித பின்நவீன தன்மை கொண்டது. நிஜத்தில் ஒரு துளி கண்ணீர் இல்லாமல் பேஸ்புக்கில் மட்டும் ஒருவருக்கு உருக உருக அஞ்சலி எழுதி விட்டு, மறுநொடியே அடுத்த பதிவில்வாழ்த்துக்கள் தோழிஎன எழுதுகிறவர்கள் எத்தனையோ பேர் நம்மிடையே இருக்கிறார்கள். இது போலித்தனம் அல்ல, இதுவே இன்றைய உண்மை. இன்றைய உண்மையில் எந்த வீழ்ச்சிக்கும் கிளைமேக்ஸ் இல்லை, கண்ணிமைக்கும் போதான முடிவு மட்டும் உண்டு.


இந்நாவலின் மற்றொரு அமைப்புமுறை மரியோ ஒரு வானொலி நிலையத்தில் பணி செய்வது, அங்கு பெட்ரோவை பின் தொடர்வது, சொந்தமாக கதையெழுத முயன்று அவன் படுதோல்வி அடைவது, அத்தை ஜூலியாவை விரும்பி ரகசிய சந்திப்புகளின் போது சாகசக்காரனாக தன்னை அவன் கருதுவது, காதலுக்கு ஏற்படும் தடைகள், பெட்ரோவின் மனநிறைவு, அத்தை ஜூலியாவை எல்லா தடைகளையும் மீறி அவன் கோமாளித்தனமாக மணம் முடிப்பது என ஒரு பக்கம் கதைசொல்லியின் உலகை எதார்த்த எழுத்துமுறையில் சொல்லுகிறது என்றால் இதற்கு இணை அத்தியாயங்களாக பெட்ரோ எழுதும் வானொலி நாடகங்களின் மீ-எதார்த்த கதைகள் வருகின்றன. இந்த பெட்ரோ அத்தியாயங்கள் தாம் இந்நாவலின் முத்திரையான பக்கங்கள். ஒவ்வொன்றும் ஒரு ரத்தினம். அவற்றுக்காக மட்டுமே இந்நாவலை படிக்கலாம். பெட்ரோவின் அத்தியாயங்களின் நோக்கம் மரியோ அத்தியாயங்களின் எதார்த்த அழகியலை தவிடுபொடியாக்குவது. நடப்புலகில் நிகழப் சாத்தியமிராது எனக் கருதுகிற கதைகளை நம்பும்படியாக சொல்வது, அதை சொல்லிக் கொண்டே நாம் கேட்பது எல்லாம் உண்மையல்ல என உணர்த்தி நமது ஒழுக்க, அற, தர்க்க மதிப்பீடுகளைக் கண்டு நம்மையே சிரிக்க வைப்பது. ஒரு கட்டத்தில் பெட்ரோவுக்கு சித்தம் கலங்க கதாபாத்திரங்கள் ஒரு கதையில் இருந்து இன்னொரு கதைக்குள் உயிர்த்தெழுகிறார்கள். முந்தின கதையில் நடந்த விசயங்கள் அடுத்த கதையில் மாற்றி அமைக்கப்படுகின்றன. கதை என்பதுகதைதான்என இடித்துரைப்பது பெட்ரோ அத்தியாயங்களின் நோக்கமாக உள்ளது.


ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்த இந்நாவலை என் நண்பர்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன். இதை தமிழில் மொழியாக்கினால் ஒரு முக்கிய வரவாக இருக்கும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...