Skip to main content

வைரமுத்துவுக்கு சின்மயியை ஒடுக்கும் அதிகாரம் ஏன் இருக்கவில்லை?




சின்மயி தன்னை வைரமுத்து 2002இல் இருந்து தொடர்ந்து பாலியல் தொந்தரவு பண்ணி வந்தார் என புகார் தெரிவித்த போது அவர் ஏன் அதை இத்தனைக் காலமும் பொறுத்துக் கொண்டார் எனக் கேள்வி வந்தது. அதற்கு அவர் பதிலளிக்கும் போது ஒரு இளம் பாடகியாக தான் சினிமாத் துறைக்கு வந்த போது வைரமுத்து மரியாதைக்குரிய, அதிகாரமிக்க மூத்த பாடலாசிரியராக இருந்தார், அவரை எப்படி தன்னால் அந்த சமயத்தில் பகைத்துக் கொண்டிருக்க முடியும் என பதிலுக்குக் கேட்டார். இதைக் கேட்கையில் நமக்கு உருவாகும் சித்திரம் வைரமுத்து ஒரு அசைக்க முடியாத திரை அதிகார மையம், அவரைப் பகைத்துக் கொண்டு சின்மயியால் பாடகராக முன்வந்திருக்க முடியாது என்பதே. ஆனால் எதார்த்தம் தலைகீழானது. சின்மயி பாடிய படங்களில் 90% படங்களில் வைரமுத்துவுக்கு எந்த பங்கும் இல்லை. அவர் இரு பாடலைக் கூட சேர்த்து அப்படங்களில் எழுதியதில்லை. சின்மயி முன்னுக்கு வரும் காலகட்டம் வைரமுத்துவின் இடம் மெல்ல மெல்ல சினிமாவில் காலியாகி வந்த கட்டம்; முத்துக்குமார், கபிலன், பா.விஜய், யுகபாரதி ஆகியோர் அதிக பாடல் வாய்ப்புகளை பெற்ற இரு பத்தாண்டுகள் அவை. இவர்களிடையே முடிசூடா மன்னனாக முத்துக்குமாரே இருந்தார். சின்மயி பாடிய கணிசமான பாடல்களை எழுதியவர்களில் முதன்மையானவர் முத்துக்குமாரே. அடுத்து பா.விஜய், அதற்கு அடுத்து கபிலன், யுகபாரதி வருகிறார்கள். பாடலாசிரியர்களுக்கு பாடகர்களை தேர்வு செய்யும் அதிகாரம் உள்ளதாக நான் கருதவில்லை. அப்படி இருந்தாலும் வைரமுத்துவுக்கு உள்ளே கால் வைக்க கூட வாய்ப்பில்லை என்பதே எதார்த்தம்.


2002இல் தன் பாடல் வாழ்க்கையை ஆரம்பிக்கிற சின்மயி 2018இல் வைரமுத்து மீது மீ டூ குற்றச்சாட்டுகளை எழுப்பிய 2018ஆம் ஆண்டு வரை 16 ஆண்டுகளில் 228 பாடல்களைப் பாடியிருக்கிறார். இவற்றில் வைரமுத்து எழுதிய பாடல்கள் மொத்தமே  22 தாம். அதாவது சின்மயியின் தொழில் வாழ்வில் 9.6% பாடல்களை மட்டுமே வைரமுத்து எழுதி உள்ளார். 16 வருடங்களில் அவர் வருடத்திற்கு சராசரியாக ஒன்று அல்லது இரண்டு வைரமுத்து பாடல்களுக்குத் தான் பாடியுள்ளார். 


யோசித்துப் பாருங்கள்: சின்மயியின் திரைவாழ்க்கையை காலி பண்ணும் அதிகாரம் படைத்தவராக வைரமுத்து அப்போது இருந்திருந்தால் அவர் ஏன் இவ்வளவு குறைவாக பாடல்களை எழுதியிருக்க வேண்டும்? அவர் ஏன் அந்த அதிகாரத்தைக் கொண்டு முத்துக்குமார், பா.விஜய், யுகபாரதியை காலி பண்ணி விட்டு எல்லா பாடல்களையும் தானே எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது?


இந்த புள்ளிவிபரம் வைரமுத்து தன் திரைப்பாடல் அந்தஸ்து, அதிகாரத்தை பயன்படுத்தி சின்மயியை அச்சுறுத்தி தன்னை புகழவும் காலில் விழவும் அவரால் செய்திருக்க முடிந்தது எனும் குற்றச்சாட்டை பொய்யென்று ஆக்குகிறது. சின்மயி பாடிய படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பைக் கூட பெற முடியாத வைரமுத்துவால் அவரது திரைவாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் அதிகாரத்தை மட்டும் எப்படி கொண்டிருந்திருக்க முடியும்? 


சின்மயிக்கு பாலியல் தொல்லை தர முயலவில்லை என நான் கூறவில்லை. ஆனால் அதற்கு முகாந்திரம் வைரமுத்து அதிகார துஷ்பிரயோகம் பண்ணினது அல்ல என்கிறேன். அந்த காலகட்டத்தில் வைரமுத்துவை விட அதிக புகழும் அதிகாரமும் கவனமும் பெற்றவர்களாக மேற்சொன்ன பாடலாசிரியர்களே இருந்தனர். இன்னொரு விசயம் 2010க்குப் பிறகு ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் தான் வைரமுத்துவும் சின்மயியும் அதிகமாக இணைந்து பணியாற்றுகிறார்கள். ஆனால் அதிலும் வைரமுத்துவிடம் இருந்து ஏ.ஆர் ரஹ்மான் விலகி வேறு பாடலாசிரியர்களுக்கு வாய்ப்பளிக்க ஆரம்பிக்கிறார். தொடர்ந்து வைரமுத்து பாடல்களை சின்மயிக்கு கொடுக்காமல் இருந்தார். அதாவது வைரமுத்துவை ஒதுக்கி விட்டு சின்மயிக்கு அவர் தொடர் வாய்ப்புகளைக் கொடுத்தார். (ஆனால் நமக்கு சின்மயி சொல்வது கேட்க வைரமுத்து ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் சின்மயிக்கு பாடல் வாய்ப்புகள் பறிபோயிருக்கும் எனத் தோன்றும். ஆனால் உண்மை நேர்மாறானது.) ஒரு கட்டத்தில் வைரமுத்து அனைத்து பாடல்களையும் தானே எழுதுவேன் எனும் பிடிவாதத்தை விட்டு இளைய இசையமைப்பாளர்களின் படங்களில் ஒன்றிரண்டு பாடல் கிடைத்தாலே பெரிது எனும் நிலைக்கு வந்து சேர்கிறார். அப்போது சின்மயி தன் புகழின் உச்சத்தில் இருக்கிறார். 


மீண்டும் சொல்கிறேன்: வைரமுத்து தப்பு செய்திருக்கலாம், ஆனால் சின்மயியை தன்னிச்சைப்படி ஆட்டி வைக்கும் அதிகாரம் அவருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. நமக்குத் தெரிந்த அளவில் இல்லை. அவர் தன் பாடல் எழுதும் திறனை வைத்து சின்மயியை ஒடுக்கினார் எனும் வாதத்தில் எந்த முகாந்திரமும் இல்லை என்பது நிரூபணமாகிறது.


அதே நேரம் மற்ற பெண்கள் விசயத்தில் ஒரு புகழ்பெற்ற பாடலாசிரியர் எனும் அளவில் அவருக்கு இருந்த பிம்பத்தைக் கொண்டு அவர்களை தொடர்ந்து தொந்தரவு செய்ய அவர் முனைந்திருக்கலாம். அவருக்கிருந்த ஊடக பலம், தொடர்புகள் அப்பெண்களை வலுவாக எதிர்க்க முடியாதபடி, தமக்குள் புழுங்கும்படி பண்ணி இருக்கலாம்.


இப்பெண்களுக்கு அடையாளம் வெளிப்படுத்த தேவையிராதபடி சட்ட விசாரணைகள் நடத்தி உண்மையென நிரூபணமானால், வைரமுத்துவை நீதிமன்றம் தண்டிக்கலாம். அப்பொறுப்பு அரசுக்கானது. 



Comments

எழுதினால் அத்தனை பாடல்களும் எழுத வேண்டும் என்ற கொள்கை முடிவை வைத்திருந்தார். பெரிய இசை அமைப்பாளர்களுக்கு மட்டும் இம்முடிவுகளில் இருந்து தளர்வு கொடுப்பார்.ஆனால் பாடகிகளை இசை அமைப்பாளர்களிடம் அறிமுகப்படுத்துகிறேன் என்றுதான் சொன்னதாகத்தான் தெரிகிறது. அதிக பிரபலம் இல்லாத இசை அமைப்பாளர்களுக்கு வைரமுத்து எழுதும்போது அவரது பரிந்துரைக்கு பலன் இருக்கும். ரஹ்மானிடம் அறிமுகப் படுத்தலாமே தவிர வாய்ப்பு தர வற்புறுத்த அவரால் இயலாது. சின்மயி விவகாரத்தில் வாய்ப்பு கொடுப்பது பற்றிய பேச்சு எழவில்லை.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...