யாவரும் இணையதளம் வெளியிட்டுள்ள லஷ்மி சரவணகுமார் சிறப்பிதழைப் பார்த்தேன். அதில் அகரமுதல்வன் லஷ்மி சரவணகுமாரிடம் ஒரு சிறப்பான பேட்டியை எடுத்திருக்கிறார். கூர்மையான நியாயமான கேள்விகள். அகரனுக்குப் பாராட்டுக்கள். லஷ்மியின் பேட்டிகளில் முன்பு நிறைய “சவடால்கள்” இருக்கும். இந்த பேட்டியில் அவை குறைந்து முதிர்ச்சியும் கசப்பும் தென்படுகிறது. தொண்ணூறுகளின் மாய எதார்த்த சிறுகதை எழுச்சியில் அக்காலத்தைய இலக்கியக் கோட்பாட்டு விவாதங்கள், மொழியாக்கங்களின் மகத்தான பங்களிப்பை லஷ்மி குறிப்பிட்டிருப்பது சிறப்பானது. ஜெமோவின் புண்ணியத்தால் இன்று இந்த இரண்டு விசயங்களையும் எதிர்மறையாக சித்தரிக்கும் போக்கு அதிகமாகி உள்ள போது லஷ்மி இதை வலியுறுத்தி உள்ளது முக்கியம்.
இந்த சிறப்பிதழ் சார்ந்து எனக்கு ஒரு சிறிய மனக்குறை உள்ளது: லஷ்மி சரவணகுமார் குறித்து விமர்சகர்கள், சக எழுத்தாளர்களிடம் இருந்து கட்டுரைகள் வாங்கி பிரசுரித்திருக்க வேண்டும். அப்போதே இதழ் நியாயமாக, ஆழமாக இருந்திருக்கும். ஒரு சமகால படைப்பாளியை அவருடன் எழுதுபவர்கள், அவருடைய மூத்த படைப்பாளிகள், விமர்சகர்கள் ஆதரிப்பது, அவரைப் பற்றி தம் அபிப்ராயங்களை சொல்வது, விமர்சிப்பது, மறுப்பது என விரிவாக ஆழமாக இருந்திருக்கும். கட்டுரைகள் எழுத அவகாசமில்லாதவர்களிடம் கருத்துக்கள் கேட்டு பிரசுரித்திருக்கலாம். ஆனால் இச்சிறப்பிதழிலோ லஷ்மியின் சில நண்பர்கள், வாசகர்கள் மட்டுமே எழுதியிருக்கிறார்கள். என்னிடம் கேட்டிருந்தால் எழுதியிருப்பேன்.
ஒரு எழுத்தாளனை அனாதையாக வாசகர்கள் மட்டும் பரிசீலிப்பது ஒரு மோசமான சித்திரத்தை ஏற்படுத்துகிறது.
நானும் சர்வோத்தமனும் இன்மை இதழுக்காக நகுலன் சிறப்பிதழ் கொண்டு வந்த போது கட்டுரைகள் கேட்டோம்; முடிந்தளவுக்கு சக எழுத்தாளர்கள், விமர்சகர்களின் கருத்துக்களை கேட்டு வெளியிட்டோம். எனக்கு சாகித்ய அகாடெமி யுவ புரஸ்கார் கிடைத்த போது உயிரெழுத்து இதழில் என்னுடைய விரிவான பேட்டியுடன் விமர்சகர்களின் கட்டுரைகளையும் சுதீர் செந்தில் அண்ணன் கேட்டு வாங்கி வெளியிட்டார். அதுவும் அவ்வளவு குறைவான நேரத்தில் அவர் அதை செய்தார்.
சமகால எழுத்தாளர்களுக்கு சிறப்பிதழ்களை யாரும் வெளியிடாத காலத்தில் லஷ்மிக்கு இதை யாவரும் குழுவினர் செய்திருப்பது பாராட்டத்தக்கது. அவர்களை வாழ்த்துகிறேன். ஆனால் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்பதே என் வருத்தம்.
நான் லஷ்மியின் கேர் டேக்கர் அல்ல. நான் இப்படி “பொங்குவதற்கு” மற்றொரு முக்கிய காரணம் உண்டு: வாசக-எழுத்தாள உலகமாக claustrophobic ஆக இது சுருங்கி விடும் போக்கு ஆபத்தானது. எழுத்தாளர்கள் பரஸ்பரம் விரும்புகிறோமோ, பொறாமைப்படுகிறோமோ, மண்ணில் கிடந்து புரண்டு சட்டையை கிழித்துக் கொள்கிறோமோ அல்லது முத்தம் கொடுக்கிறோமோ, முடிந்தளவுக்கு ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொள்ள வேண்டும். ஒருவரால் மற்றொருவர் தூண்டுதல் பெற்று இன்னும் முனைப்பாக செயல்பட வேண்டும். உடன்பாடில்லாத விசயங்கள், படைப்பில் உள்ள தொழில்நுட்பரீதியான சிக்கல்களை முன்வைத்து விவாதிக்க வேண்டும், முரண்பட வேண்டும், அப்போது தான் இலக்கியம் வளரும். நீ உன் வாசகர்களை வைத்து மகிழ்ச்சியாக இருந்து கொள், நான் உன்னை பொருட்படுத்த மாட்டேன் என ஒரு சக எழுத்தாளனிடம் நாம் சொல்வதான தொனி இருத்தலாகாது. அது நம்மை பின்னுக்கு கொண்டு போய் விடும்.
நான் அவ்வப்போது லஷ்மியின் கதைகளைப் படித்து பொறாமை கொள்வேன். அக்கதைகளை, நாவல்களை நான் கொண்டாடுவேன். சில படைப்புகள் குறித்து எனக்கு மாற்றுக் கருத்துக்கள் உண்டு. இதையெல்லாம் வெளிப்படையாக செய்யவே நான் விரும்புகிறேன். சக எழுத்தாளனின் சாதனைகள் என்னை எந்த விதத்திலும் மட்டுப்படுத்தாது என நம்புகிறேன். மாறாக நல்ல எழுத்தாளர்கள் கூட இருப்பதே எனக்குப் பெருமை, ஊக்கம், அந்த போட்டியுணர்வு அவசியம். அதனாலே 2014இல் எனக்கு யுவ புரஸ்கார் கிடைத்த போது “இந்த ஆண்டு இது எனக்குப் பதில் லஷ்மிக்கு சென்றிருக்க வேண்டும்” என பாராட்டு விழா மேடையில் வைத்து சொன்னேன். அவருக்கு அதற்கடுத்த ஆண்டுகளில் அவருக்கு கொடுக்கவும் செய்தார்கள்.
நாங்கள் படைப்பாளிகள் இப்படித் தான் இணைந்து செயல்பட விரும்புகிறோம். இதை அடுத்தடுத்து இசைக்கோ, மனுஷ்யபுத்திரனுக்கோ, இமையத்துக்கோ, எஸ். செந்தில்குமார், ஷோபாசக்தி, எஸ்.ரா, சாரு, ஜெ.மோவுக்கோ சிறப்பிதழை வெளியிடும் போது பரிசீலிக்க வேண்டும் (இந்த பெயர்களும் உடனடியாக மனத்தில் வருவனவே ஒழிய அறுதியானவை அல்ல). அவ்விதழ்களில் நமது குரல்கள் அத்தனையும் ஒலிக்கட்டும்.

கருத்துகள்