முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை அணி எப்படி 2021 ஐ.பி.எல்லில் மீண்டு வந்தது?




1) ருத்துராஜின் அபாரமான துவக்க ஆட்டம். சென்னை அணியின் மத்திய வரிசைக்கு சுழல் பந்தை அடித்தாடுவதில் ஒரு பிரச்சனை இருந்தது. சுழலுக்கு எதிராக ருத்துராஜின் சராசரிக்கு 60க்கு மேல், ஸ்டிரைக் ரேட்டும் சிறப்பு. அவர் மத்திய ஓவர்களில் சுழலர்களை நாசம் செய்தது வெகுவாக உதவியது. டூப்பிளஸி வேகப்பந்துகளை விளாசினால் ருத்துராஜ் சுழலர்களை கவனித்துக் கொண்டார்.


2) சுழல் பந்தை அடித்து சிதற விட்டதில் 3வது எண்ணில் வந்தாடிய மோயின் அலியும் முக்கியமானவர். இந்தியாவில் இங்கிலாந்து அணி சென்னையில் டெஸ்ட் ஆடிய போது ஐ.பி.எல் ஏலத்துக்கு சில நாட்களே இருந்தது. அதற்கு டிரையல் போல அவர் சிக்ஸர்களாக கடைசி நாளில் விளாசினார். அவரை ஐ.பி.எல்லில் சென்னை அணி தூக்கியது ஒரு மாஸ்டர் ஸ்டுரோக்.


3) ரெய்னாவை சமாதானம் பண்ணி அணிக்குள் அழைத்து வந்தார்கள். அவரும் கிடைத்த ஆட்டங்களில் நன்றாக சுதந்திரமாக அடித்தாடினார். ஓரளவுக்கு தொப்பை குறைந்து, கொஞ்சம் ஒல்லியாகி நல்ல ஆட்டநிலையிலும் இருந்தார். 


4) ருத்துராஜும் மோயின் அலியும் பிரமாதமாக ஆடி ஒரு ஆற்றலைக் கொடுத்த பின் ரெய்னாவுடன் அம்பத்தி ராயுடுவும் நல்ல ஆட்டநிலைக்கு வந்தார்.


5) ஜடேஜா அனேகமாக இந்த சமயத்தில் தான் இந்தியாவுக்காக நல்ல மட்டை ஆட்டநிலைக்கு வந்தார். அவருடைய கீழ்வரிசை சிக்ஸர்களும் சில போட்டிகளில் உதவியதுடன் எதிரணிக்கு எப்போதும் ஒரு அச்சத்தையும் மிச்சம் வைத்தது.


6) மட்டையாட்டம் இப்படி கிளிக் ஆன பின் பந்து வீச்சு பழையபடி நன்றாக தடுத்தாடும் பணியை செய்தது. குறிப்பாக பிராவோ, தாகூரின் மெதுவான பந்துகள் மத்திய ஓவர்களில் வேகமற்ற ஆடுதளங்களில் பல விக்கெட்டுகளை வீழ்த்தின.


7) ரெய்னாவுக்கு காயம்பட்ட பின் அவரிடத்தில் ஆட வந்த உத்தப்பா முதல் பத்து ஓவர்களில் அணியின் ரன் ரேட் உயர வெகுவாக உதவினார். அவர் எந்தளவுக்கு நன்றாக ஆடினார் என்றால் ரெய்னாவுக்கு திரும்ப வர வாய்ப்பே கிடைக்கவில்லை.


8. இப்போதும் வயதானவர்கள் சென்னை அணியில் இருக்கிறார்கள் - ஆனால் முன்பு இருந்தது போல் அதிக எண்ணிக்கையில் இல்லை. ருத்துராஜ், மோயின் அலி, ஜடேஜா, தாகூர், ஹேஸில்வுட், சாஹர் ஆகியோர் இளைஞர்களே. டூப்பிளஸி, தோனி, பிராவோ போன்றோர் வயதானவர்கள் என்றாலும் இப்போதும் சிறந்த களத்தடுப்பாளர்களே. மோசமான உடற்தகுதி கொண்ட, சுமாரான களத்தடுப்பாளர்களான வயதான வீரர்கள் உத்தப்பாவும், ராயுடுவுமே. ஆக போன முறை இந்த உடற்தகுதி, வயோதிகம் எனும் சிக்கலை கவனமாக இம்முறை சரி செய்திருக்கிறார்கள். உள்ளே வந்த வீரர்கள் களத்தில் கொண்டு வந்த துடிப்பு, கவனம், கூர்மை சென்னையை இந்த ஐ.பி.எல்லில் சிறந்த களத்தடுப்பாட்ட அணிகளில் ஒன்றாக்கியது.


9) ஐக்கிய அரபு அமீரகத்திலும் சரி, அதற்கு முன்பு சென்னையிலும் சரி ஆடுதளங்கள் பெரும்பாலும் மெத்தனமானவை. சென்னையின் பந்து வீச்சு இத்தளங்களுக்கென்றே ஆர்டர் கொடுத்து செய்யப்பட்டதைப் போன்று கச்சிதமானது. சென்னையின் மிதவேக வீச்சாளர்களும் சுழலர்களும் ஷார்ட்டாக வைடாக வீச மாட்டார்கள். விக்கெட் எடுப்பதை விட நேராக வீசி ரன்களைக் கட்டுப்படுத்தவும், மெது பந்துகளை அதிகம் வீசவுமே விரும்புவார்கள். மோயின் அலியின் தேர்வு இரண்டாவது சுழல் ஆல்ரவுண்டரை, ஆறாவது பந்து வீச்சாளரை அவர்களுக்கு அளித்தது. இதுவும் அவர்கள் ரொம்ப சமநிலையான அணியாக தோன்ற முக்கிய காரணம்.


10) தோனியின் நிதானமான நடைமுறை அணுகுமுறை, புத்திசாலித்தனம், ஆளுமை ஒரு மிகப்பெரிய சமநிலையை, தன்னம்பிக்கையை இந்த அணிக்கு அளிக்கிறது. சென்னை அணி பாதி என்றால் தோனி மீதி. சென்னை அணி நிர்வாகத்தம் பாராட்ட வேண்டும் - அணி சொதப்பிய போது அவர்கள் பதறாமல் குறைகளை கண்டறிந்து சரி செய்தார்கள். அணியின் மையம் மாறாமல் பார்த்துக் கொண்டார்கள். அது நிர்வாகம் இப்போதும் மூத்த வீரர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது எனும் பிம்பத்தையும் தக்க வைத்தது.


வாழ்த்துகள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...