முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூன்று கதைகள்

 உயிர்மையின் 200வது இதழின் சிறுகதைகளை ஒவ்வொன்றாக படித்து வருகிறேன் (நான் சற்று தாமதமாகத் தான் படிக்க ஆரம்பிப்பேன்.)


இப்போதைக்கு படித்த மூன்று கதைகளில் இமையம் மற்றும் யுவன் சந்திரசேகரின் கதைகளே என்னை கவர்ந்தன.

1) ஜெயமோகனின் “கேளாச்சங்கீதம்” துல்லியமான விவரணைகள், மாந்திரிக தகவல்கள், நாஞ்சில் பேச்சுவழக்கு, உளவியல் என்று களைகட்டினாலும் அது ஒரு குறுநாவலுக்கான கதை என்று தோன்றியது. அதை சிறுகதையாக்க ஜெ.மோவால் முடியவில்லை. 


2) இமையத்தின் “மயானத்தில் பயமில்லை” அவர் முன்பு எழுதியுள்ள நாட்டார் சடங்கு, தெய்வங்கள், சாமி ஏறுவது ஆகிய விசயங்களைப் பேசும் கதைகளைப் போன்றது. இக்கதைகள் கூர்மையான ஒரு முடிவை நோக்கி விர்ரென பயணிக்கும் அவருடைய கச்சிதமான சிறுகதைகளில் இருந்து வேறுபட்டவை. சற்றே தஸ்தாவஸ்கியின் கதை பாணியை ஒத்தவை. தஸ்தாவஸ்கியின் நாவல் உலகில் மாறுபட்ட தனித்துவமான குணாதசியங்கள் கொண்ட மனிதர்கள் வருவார்கள். அவர்கள் தமக்கே உரித்த தனிமையால் பீடிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் பரஸ்பரம் சந்தித்து உரையாடும் போது, ஒரு நெருக்கடியில் இருவரும் பின்னிப்பிணையும் போது அவர்கள் மத்தியில் ஒரு உடைவு ஏற்படும். அப்போது அவர்களுடைய தன்னிலைகளின் எல்லைக்கோடுகள் கரையும். அவர்கள் தாம் இருவேறு உடல்களில் இருக்கும் ஒருவரே என அறிவார்கள். 


இந்த போக்கை நாம் இமையத்தின் சில சிறுகதைகளிலும் காண முடியும் - வெளி, மனிதர்கள், அவர்களுடைய மிகுகற்பனை நம்பிக்கைகள், சடங்குகளில் வெளிப்படும் ஆளுமைகள் எல்லாம் கலந்து ஒன்றாகிட ஒருவித விடுதலை பெறுவார்கள். “மயானத்தில் பயமில்லை” கதையில் மயானத்தில் கொத்தனாருக்கு உதவியாக சாந்து தூக்க வரும் பெண்ணுக்கும் அங்கு பிணங்களை புதைக்கிற பணியை செய்கிற ஒரு பெண்ணுக்குமான உரையாடலில் இன்னதென்று கண்டறிய முடியாத ஒரு மாயம் நிகழ்கிறது. அவர்கள் பரஸ்பரம் அறிகிறார்கள், அப்போது தாம் ஒருவரன்றி வேறில்லை என்று உணர்கிறார்கள், அவ்வளவு தான், அதைத் தாண்டி கதையில் வேறெதுவும் நடப்பதில்லை. ஆனால் அதுவே ஒரு ஆசுவாசமான உணர்வை நமக்கு அளிக்கிறது. 


3) யுவனின் “திகைப்பு” சற்று சிக்கலான, படிக்க சிரமமான கதை, ஆனால் அபாரமான தொழில்நுட்ப லாவகம் கொண்டது, ஒரு கவிதைக்கே உரித்த மீஎதார்த்த தாவல்களைக் கொண்டது, வாசித்த பிறகு நினைத்து நினைத்து சிலாகிக்க வைக்கும் அழகு பொதிந்தது. இதன் கதைக்கருவும் இமையத்தின் கதையினுடையதே. இமையம் உணர்ச்சிகரமாக நாடகீயமாக சித்தரிப்பதை யுவன் புறவயமான விலகலுடன், மாய எதார்த்த ஸ்டைலுடன் செய்திருக்கிறார். கதைக்குள் கதைக்குள் கதை என்பது போல ஒரு மனிதனின் நினைவுக்குள் தோன்றும் ஒரு மனிதனுக்குள் தோன்றும் ஒருவன், இவர்களின் தோற்றத்தின் துவக்கப்புள்ளி அல்சைமைர்ஸ் நோயால் மன ஒழுங்கு குலைந்த ஒருவர் என்று கதையை வடிவமைத்திருக்கிறார் யுவன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...