மரணம் எப்போதும் உயிரோடு இருப்பவர்களின் பிரச்சனை மட்டுமே. மரணித்தவருக்கு வருந்த அவசியமோ அவகாசமோ இருப்பதில்லை. இன்னும் துல்லியமாக சொல்லப் போனால் இது காலம் குறித்த இரங்கல். காலத்தில் இருந்து நழுவி சென்று விட்டவருக்காக காலத்தில் மீந்தவர்கள் சிந்தும் கண்ணீர். ஆனால் கொடுமை என்னவென்றால் இருக்கிற காலத்தை வைத்து நாம் ஒன்றும் உருப்படியாக செய்வதில்லை.
காலம் குறித்து நமக்குள்ளது ஒரு பேராசை. அதாவது அமேசான் செயலியில் நாம் வாங்கும் நோக்கில் கூடையில் சேமித்து வைத்திருக்கும் பொருட்களைப் பார்த்து ஆசைப்படுவது போன்ற ஒன்று. அனுபவிக்காமல் தொடர்ந்து தள்ளிப் போடுவதால் தோன்றும் பேராசை. அனுபவித்தால் தீர்ந்து போகுமோ எனும் பயத்தில் தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு கிளர்ச்சியடையும் ஒருவித வாழ்க்கை. ஒருவருடைய எதிர்பாராத மரணம் நமக்கு ஒரு நோட்டிபிக்கேஷன் போல வந்து சேர நாம் அதிர்ந்து போகிறோம்.
எல்லாரையும் போல நானும் ஒரு இரங்கல் கூட்டத்துக்கு செல்லும் போது மனம் கசிகிறேன். அவர்களைப் பற்றி சில சொற்களையாவது மனதில் உருப்போடுகிறேன். ஆனால் அதே நேரம் இது ஒன்றுமில்லாத ஒன்றைப் பற்றிய கூட்டம் என்றும் நினைவில் கொள்கிறேன்.
கருத்துகள்