எத்தனை வருடங்கள் உருண்டோடி விட்டன!
அப்போது ஜீனோ இவ்வளவு குட்டியாகத் தான் இருந்தான். ஒரு வளர்ப்புப் பிராணிகள் கடையில் ஒரு சிறிய கூண்டில் அவனைப் பார்த்ததும் விரலை விட்டு அவனை சீண்டினேன். அந்த சின்ன பற்களால் என்னை உடனே கடித்து விட்டான். அப்படித்தான் அவனை மிகவும் பிடித்துப் போய் வீட்டுக்கு எடுத்து வந்தேன். அப்போது அவனுக்கு தரையில் நடக்க பயமாக இருக்கும். சுவரோரமாக ஒட்டிக்கொண்டே நடப்பான். என்னுடன் தூங்கி என்னுடன் எழுந்து நான் சாப்பிடுவதை பகிர்ந்து கொண்டு, நான் எழுதும் போதும் இரவெல்லாம் எழுதும் போதும் பக்கத்தில் படுத்து காத்திருந்து, இவன் தூங்க வர மாட்டான் எனத் தோன்றினால் தானாக போர்வைக்குள் பள்ளம் பறித்து கவிழ்ந்து கொண்டு சுகமாக குறட்டை விட்டுத் தூங்கி அப்படியே வளர்ந்து விட்டான்.
நான் எங்கு போனாலும் நானும் வரேன் எனக் கிளம்பி கூடவே தன் கயிறையும் வாயில் கவ்விக் கொண்டு வருவான். நான் வேலையில் இருந்து திரும்பும் நேரம் அவனுக்குத் துல்லியமாகத் தெரியும். சரியாக அந்நேரம் பார்த்து கதவருகே போய் நின்று மோப்பம் பிடித்து நான் இல்லையெனத் தெரிந்தால் கதவைத் திறந்து வெளியே போக முயல்வான், அதுவும் முடியாவிடில் கதவையே நோக்கிக் கொண்டு அமர்ந்திருப்பான் என என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.
இப்படி பல நினைவுகள். அவன் என்னை விட்டுப் போகாதிருக்கட்டும்!
கருத்துகள்