முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரு பாலர் பள்ளிகளின் பிரச்சனை




சின்மயா பள்ளி விவகாரத்தில் அந்த இயல்பியல் ஆசிரியரும் முதல்வரும் கைது செய்யப்பட்டுள்ளது சரியான நடவடிக்கை, அவர்கள் பெயரிலே தவறு. இதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அதே நேரம் இந்த பிரச்சனையை ஊடகத்திலும் சமூகவலைதளத்திலும் பெரும்பாலும் கறுப்பு-வெள்ளையாகவே பார்க்கிறோம் என நினைக்கிறேன். அந்த ஆசிரியரையும் முதல்வரையும் கைது செய்தால், அவர்களை மிருகம் என்று அழைத்தால், மாறு கால், மாறு கை வாங்கினால் பிரச்சனைகள் எதிர்காலத்தில் இது போல எழாது என நம்புகிறோம்.


நான் எட்டாண்டுகளுக்கு மேலாக சில கல்லூரிகளில் பணி செய்திருக்கிறேன். பள்ளி, கல்லூரிகளில் வேலை செய்யும் பல ஆசிரிய நண்பர்களும் எனக்குண்டு. இந்த அனுபவங்கள் வழி நான் இது போன்ற சில கதைகளை அறிந்திருக்கிறேன், ஆனால் இங்கு வெளிப்படையாக அதைப் பற்றி பேச முடியாது. இந்த கோவை மாணவிக்கு நடந்த அவலம் இருபாலின கல்விக்கூடங்களில் தவறாமல் எழும் ஒரு சிக்கலின் மோசமான வடிவமே இது என்று என்னுடைய இதுவரையிலான அனுபவம் எனக்கு சொல்லுகிறது.


சிலர் அந்த ஆசிரியருக்கு உடனடியாக தண்டனை அளித்திருந்தால் அச்சிறுமியை காப்பாற்றி இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனத் தோன்றுகிறது: முதலில், அச்சிறுமி தான் பல நாட்களாக இரவில் தூங்க முடியாமல் தவித்ததாக, மற்ற ஆண்களைப் பார்க்கையில் ஒரு சுய-அருவருப்பு ஏற்பட்டதாக சொல்லி இருக்கிறார். இது அவரை அந்த பள்ளியில் இருந்து மாற்றி வேறு பள்ளியில் சேர்த்த பிறகும் நடந்த சேதி. அவர் மனதளவில் பலவீனமானவர், கூருணர்ச்சி மிக்கவர் (hyper-sensitive), இந்த பாலியல் தாக்குதல் அவரை தடம் பிறழ வைத்த புள்ளியாக இருந்தது என்று தோன்றுகிறது. எனில் போதுமான உளவியல் சிகிச்சை, கவுன்சிலிங் அவருக்கு உதவியிருக்கும். ஒழுங்கு நடவடிக்கை அல்ல.


மாறாக, அந்த ஆசிரியரை முன்கூட்டியே கைது செய்யும் அளவுக்கு இச்சிறுமியின் பெற்றோர் தலையிட்டு புகார் அளித்து முயன்றிருந்தால் (அதை பள்ளி நிர்வாகம் செய்திருக்கும் என நான் நம்பவில்லை, ஒரு லட்சிய உலகில் அது சாத்தியம் என்றாலும்.) அப்பெண்ணுக்கு தன் உயிரை மாய்த்தாவது ஆசிரியரை பழிவாங்க வேண்டும் எனும் தூண்டுதல் இருந்திருக்காது. ஆனாலும் அந்த காயம் அவரை வேறெதாவது ஆபத்தை நோக்கித் தள்ளி இருக்கும்.


அடுத்து நமக்கு இந்த வழக்கு பற்றி 50% மட்டுமே தெரியும் என நினைக்கிறேன். அச்சிறுமியின் தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிப்பட்ட அந்த வேறிரு சிறுமியரின் அப்பா மட்டும் தாத்தாவுக்கு இந்த வழக்கில் உள்ள பங்கு என்ன? ஏன் அவர்கள் இங்கு வருகிறார்கள்?  ஆக ஒன்று வேறு சிலருக்கும் இந்த குற்றத்தில் பங்கிருக்கலாம், அல்லது அச்சிறுமி வேறு சிலராலும் துன்புறுத்தப்பட்டிருக்கலாம். அச்சிறுமியின் தாயார் கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர்கள் இருவரும் ஊரில் அவர்களுடைய வீட்டருகே வாழ்ந்தவர்கள் என்கிறார். எனில் அவள் சிறுவயது முதலே பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி இருந்தாளா?


அந்த சிறுமிக்கும் ஆசிரியருக்கும் ஒரு உறவு ஆரம்பத்தில் இருந்திருக்கிறது. (அவர் வற்புறுத்தி அவளை பைக்கில் அழைத்து சென்றார் எனும் கதையை நான் நம்பவில்லை.) நான் இது போன்ற கேஸ்களை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். ஒன்று ஒரு மென்மையான ரொமான்ஸாக இது முடிந்து போகும், அல்லது இரு தரப்புக்கும் காயம் ஏற்படாமல் வளர்ந்து ஒரு கட்டத்தில் மெல்ல உதிர்ந்து போகும் அல்லது தந்தை-மகள் நிலைக்கு உருமாறும் அல்லது இந்த வழக்கில் போல குரூரமான ஒடுக்குமுறையாகும். அந்த சிறுமியின் பெற்றோர் இதை காவல் நிலையத்திற்கு ஒரு புகாராக எடுத்து செல்லவில்லை என்பது இதனால் தான் என நினைக்கிறேன். பிரச்சனை பள்ளி நிர்வாக அளவில் கொண்டு செல்லப்பட்ட போது “உங்க பொண்ணு மீதும் தப்பு இருக்குதில்ல” என்று தான் மடக்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் 18 வயதுக்கு கீழுள்ள சிறுமியுடன் சம்மதத்துடன் ஒரு உறவை மேற்கொண்டாலும் அது குற்றமே எனும் கணக்கில் கையாண்டிருக்க வேண்டும். சும்மா “முள்ளில் இலை விழுந்தாலும்…” என்கிற லைனில் போயிருக்க கூடாது.


நாம் “இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியர் ஒருவரே இப்படி செய்யலாமோ?” எனும் கணக்கில் கேட்பதில் அர்த்தமில்லை. நடைமுறை வேறு. இருபாலின பள்ளி, கல்லூரிகளில் ஆண் ஆசிரியர்கள் (சில நேரம் பெண் ஆசிரியர்கள்) 14-21 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுடன் சேர்ந்து செயல்பட, இணைந்து பழக வாய்ப்பமையும் போது பல தவறுகள் நடக்கும். ஏனென்றால் ஆசிரியர்கள் பாடம் மட்டும் எடுப்பதில்லை. இன்றைய பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம் போதுமான நேரம் செலவிடுவதில்லை. இப்பிள்ளைகள் தனிமையாக பதற்றமாக இருக்கிறார்கள். ஆக ஆசிரியர்கள் இப்பிள்ளைகளிடம் நண்பர்களாக, வழிகாட்டியாக, நம்பிக்கை ஒளியாக இருக்க வேண்டி வரும். விளைவாக அவர்கள் இப்பிள்ளைகளிடம் மனதளவில் மிகவும் நெருங்கி விடுவார்கள். அப்போது பாலியல் வறட்சி கொண்ட அல்லது தேவை கொண்ட பொறுப்பற்ற ஆசிரியர்கள் ஒரு சிலர் இந்த அண்மையை தவறாக பயன்படுத்துவார்கள். சில நேரம் தம்மை விட பத்து வயது போல அதிகமான, அப்பா ஸ்தானத்தில் இருக்கும், அதே நேரம் ஓரளவுக்கு இளமையான, அதிகாரம் கொண்ட ஆண் ஆசிரியரிடத்து சிறுமியருக்கு ஆர்வம் ஏற்படுவதும் உண்டு. இதுவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். 


சில சிறுமியரைப் பொறுத்தமட்டில் அவர்கள் ஆசிரியருடனான உறவை இடைக்கால ஆறுதலாக கருதுவார்கள், ஆனால் தாம் ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்துப்படும் போது எதிர்ப்பார்கள், எதிர்ப்பையும் மீறி துன்புறுத்தப்படும் போது அது விவகாரம் ஆகி விடும், இப்போது நடந்துள்ளது போல அவலங்களும் நடந்தேறும். 


இதற்குத் தீர்வு ஒழுக்கமான ஆசிரியர்களை மட்டும் நியமிப்பதோ அல்லது பிறழ்வோருக்கு தண்டனை தருவதோ அல்ல. இச்சூழலை ஒரேயடியாக தவிர்ப்பதே. இத் சிலருக்கு பிற்போக்காக தெரிந்தாலும் பரவாயில்லை என்றே சொல்கிறேன். 


கொசு அதிகமாகும் போது என்ன பண்ணுகிறோம்? கொசுக்களை தேடிப்பிடித்து ஒழிக்கிறோமா? இல்லையே. மாறாக, நீர் தேங்காமல் பார்த்துக் கொள்கிறோம். கொசுக்களுக்கு முட்டையிட வாய்ப்பை முழுக்க மறுக்கிறோம். கொசுக்கள் தாமாக ஒழிகின்றன. அதே போல இருபாலார் பள்ளிகளை தவிர்த்து விட்டு ஒரு பாலின பள்ளிகளை நடத்தலாம் என்று நான் சொன்னால் நீங்கள் என்னை பிற்போக்காளன் என்று கரித்துக் கொட்டுவீர்கள். அதனால் இருபாலார் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளை மட்டும் நியமிப்பது இதற்கு ஒரு சிறந்த தீர்வு என்று சொல்கிறேன்.


ஆனால் இதனால் ஆண் ஆசியர்கள் வேலை இழப்பார்கள். அதை ஈடுகட்ட தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 60% இரு பாலாருக்கானதாகவும், 40% ஆண்களுக்கானதாகவும் மாற்றலாம். ஆண் ஆசிரியர்கள் இந்த 40% பள்ளிகளில் பணி செய்யலாம். இவற்றில் இருபாலின பள்ளிகளில் ஆண் மாணவர்களின் சேர்க்கை 30% என்று வைத்து கொண்டால் இரு பாலினத்துக்கும் போதுமான இடம் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.


எதற்கு ஒரு உதிரி கேஸுக்காக இவ்வளவு பெரிய மாற்றம் என நீங்கள் கேட்கலாம். இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து அரும்பி அரும்பி உதிர்ந்து கொண்டிருக்கின்றன, நம் கண்ணுக்கு வருபவை பெரிதாக காட்டுத்தீயாக வளர்ந்து தற்கொலையிலோ புகாரிலோ முடிபவை மட்டுமே. 


சொந்த பாலினத்தை சேர்ந்த மாணாக்கரை கையாள்வதே ஆண் ஆசிரியர்களுக்கும் சுலபமாக இருக்கும். சில நேரங்களில் மாணவிகளை கண்டிக்கையில் அதீத கவனம் கொள்ள நேர்கிறது. ஆசிரியரோ நிர்வாகியோ தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என அவர்கள் பொய் புகார் அளிக்க ரொம்ப நேரமாகாது. இந்த ஆபத்து இருப்பதனாலே நிர்வாகங்கள் இது போன்ற புகார்களை சற்று ஐயத்துடன் எதிர்கொள்ளுகின்றன. நீங்கள் சில வகுப்புகளில் மாணவர்களிடம் பேசிப் பாருங்கள், ஆண் ஆசிரியர் மாணவிகளை மட்டும் சற்று மென்மையாக நடத்துவதாக, தம்மிடம் பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் சொல்லுவார்கள். ஒரு எளிமையான தீர்வு இருக்கும்போது எதற்கு இந்த வம்புகள் எல்லாம்?


மேலும் ஆண் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாடமெடுப்பதால் சிறப்பு அனுகூலங்களும் உள்ளதாக எந்த ஆய்வுகளும் சொல்லவில்லையே?


நான் முடிவெடுக்கும் இடத்தில் இருந்தால் இந்த மாற்றத்தைத் தான் பள்ளி, கல்லூரி அளவில் கொண்டு வருவேன். அதுவே எளிய தீர்வு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...