முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘பார்ப்பனர்கள்’ - சில கேள்வி பதில்கள்


கேள்வி: //பாப்பான் என்பது வசைச் சொல் அன்று. அது தொழிலைக் குறிக்கும் சொல். எனில் பார்ப்பான் என்று அழைப்பதில் என்ன தவறு?//

பதில்: நாம் என்னதான் ஜிலேபி சுற்றினாலும் பார்ப்பனர் என்பதும் வர்ணாசிரம சொல்லே. ஏனென்றால் அதுவும் ஒரு தொழிலைக் குறிக்கிற சொல்லாக கருதப்படுகிறது. தொழிலின் அடிப்படையிலும் சனாதன கொள்கையின் படியும் தானே வர்ணம் உருவாகிறது. ஒரே வித்தியாசம் அது பிராமண எதிர்ப்பு, வைதீக மறுப்பு பிரசாரத்துக்காக பயன்படுத்தப்பட்டு கூர்மை ஏறிப் போன ஒரு சொல். அது ஒரு அரசியல் எதிர்ப்பு சொல்லாகவும், பிராமணர் மீதான கோபத்தை, விமர்சனத்தை காட்டும் சொல்லாகவும் உள்ளது. நான் என் இளவயது முதலே பிராமணர்கள் மீது கோபத்தை காட்டும் போது பிறசாதியினர் பயன்படுத்தும் சொல் அது என கண்டிருக்கிறேன். இன்றும் அதுவே நிலை. எனில் அச்சொல்லை ஒரு பொதுச்சொல்லாக நாம் பயன்படுத்த இயலாது. தமிழகத்தில் வாழும் அத்தனை பிராமணர்களும் பிறரை ஒடுக்கும் நோக்கில் செயல்படவில்லை எனும் போது ஏன் அந்த அரசியல் முனை பொருந்திய சொல்லை அனைவர் மீதும் நாம் ஏவ வேண்டும்? ஆணாக இருப்பதே ஒரு அதிகாரம் என கருதும் பெண்ணியர் உண்டு. அவர்களைப் பொறுத்தமட்டில் எல்லா ஆண்களும் ஆணாதிக்கவாதிகளே. அதைப் போன்ற ஒரு பார்வையே அனைத்து பிராமணரையும் பார்ப்பனர் என அழைப்பதில் செயல்படுகிறது. 

கேள்வி: பார்ப்பனர் என்பது வசைச் சொல்லாக இருக்குமானால், சங்க இலக்கியம் தொடங்கி, பாரதியார் வரையில் அதனைப் பயன்படுத்த்தியிருக்க மாட்டார்கள். எனில் ஒரு தமிழ்ச்சொல்லை பயன்படுத்தினால் என்ன தவறு?

பதில்: அச்சொல் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலான பயன்பாட்டில் மற்றொரு அர்த்தத்தை இன்று பெற்று விட்டதால், அந்த அர்த்தம் எதிர்மறையானது என்பதால், அந்த எதிர்மறையான பொருள் ஒரு சமுதாயத்தை மட்டும் குறிவைப்பது என்பதால், அதை பெரும்பாலான சந்தர்பங்களில் தவிர்ப்பதே நன்று.

கேள்வி: பிராமணர் என அழைப்பது அதன் எதிர்வில் உள்ள சூத்திரர்களை அவமதிப்பதாகாதா? நம் கண்ணைக் கொண்டு நம்மையே குத்துவது ஆகாதா?

பதில்: நாம் இந்து மதத்துக்குள் இருப்பதே தன் கண்ணால் தன்னைக் குத்தும் செயல் தான். பிராமணர் என ஒருவரை அழைப்பதால் மட்டும் அது நேர்வதில்லை. இந்துவாக நீங்கள் உங்களை உணராதவரையில், அவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்ளாத வரையில் ஒருவர் தன்னை பிரம்மனில் இருந்து வருபவர் என்று சொல்லிக் கொள்வதால் உங்களுக்கு எந்த சிக்கலும் இருக்கப் போவதில்லை. அவருடைய பிரம்மன், அவர் வந்துவிட்டுப் போகிறார், என்னுலகில் பிரம்மனோ விஷ்ணுவோ இல்லை என்று நினைக்கலாம். கத்தோலிக்க மதத்தின் படி கருக்கலைப்பு ஒரு பாவம். அது குறித்த கத்தோலிக்கர் இடையே நிறைய விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் மற்ற மதத்தவர்கள் அந்த மதிப்பீட்டை பொருட்படுத்துவதே இல்லையே. அவர்கள் அதற்கு வெளியே இருக்கிறார்கள். பிராமணன் எனும் சொல்லின் சனாதன தோரணையை எதிர்கொள்ள சிறந்த வழி இந்து மதத்தில் இருந்து வெளியேறுவதே. அன்றி பிராமணனை பார்ப்பான் என்று அழைப்பதல்ல. 
மத்திய சாதிகளில் தம்மை சத்திரியர் என்றும், ஆண்ட சாதி என்று கருதுகிறவர்கள் ஏராளம் (அவர்களுடைய சாதிப் பெயருக்குள்ளேயே அப்பொருள் வருவதுண்டு). ஒருவர் ஆள்பவர், பாதுகாவலர், நாயகன் என்றால் மற்ற சாதிகள் அடிமைகளா என்று கேட்கவா போகிறோம்.
 ஒவ்வொரு சாதியும் இங்கு தம்மை தம்மளவில் உயர்ந்தவராக தனித்துவமானவராக கருதுகிறார்கள். அது சனாதனத்தின் நீட்சியே. ஆக, பிராமணர்களை தம் அதிகார உச்சாணிக்கொம்பில் இருந்து கீழே தள்ளி விடுவதால் பிரச்சனை சரியாகப் போவதில்லை. 

இறுதியாக, இதன் அரசியல் அர்த்த அடுக்குகளுக்குள் செல்லாமல் நேரடியாகவே இப்பிரச்சனையை கையாளலாம். ஒரு சாரார் தம்மை காயப்படுத்துவதாக குறிப்பிடும் ஒன்றை நாம் ஏன் செய்ய வேண்டும்? அவர்கள் தம்மை பிராமணர் என்ன அழைப்பது நம்மை காயப்படுத்தினால், நாம் நம்மை ஒரு குறிப்பிட்ட சாதியாக அடையாளப்படுத்துவது நமக்கு கீழுள்ளோரை காயப்படுத்தாதா? எனில் ஒவ்வொருவரும் நமக்கு கீழுள்ள சாதியினர் நம்மை ஒரு மாற்று சாதிப்பெயரால் அழைக்கும் படி சொல்லப் போகிறோமா? இது எங்கே போய் முடியப் போகிறது?

நாம் சொந்த சாதிக்குள் திருமணம் செய்யும் போது, நம் சாதிக்குண்டான தெய்வத்தை வழிபட்டு சடங்குகளை செய்யும் போது இந்த சனாதன அமைப்பை நாம் வலியுறுத்துவதில்லையா? இல்லை என்றால் ஏன் அகமண முறை இவ்வளவு பரவலாக இருக்கிறது? நம்மை யாரும் மாற்றி அழைக்காத போது ஏன் பிராமணரை மட்டும் அவ்வாறு அழைக்க வேண்டும்? ஆம், சனாதன அமைப்பை உருவாக்கியதில் அவர்களுக்கு வரலாற்று பங்கும், இப்போது அதை தக்க வைப்பதில் குறியீட்டுப் பங்கும் உண்டு. ஆனால் அதை ஏற்று அதன் ரத்தமும் சதையுமாக இருப்பவர்கள் அபிராமணர்களே. ஏன் சாதிய பாகுபாட்டை பிராமணர் மட்டுமே பின்பற்றுவது போல நாம் நாம் பாவனை செய்கிறோம்?

பிராமணர்களே இல்லாத ஒரு ஊரில் சாதியம் இருக்காதா? முன்பு புலம்பெயர்ந்து அயல் நாட்டுக்கு சென்றவர்கள் தம்முடன் சாதியையும் கொண்டே போனார்கள். அந்த ஊரில் பிராமணர்கள் இல்லை என்றாலும் பிராமணிய சிந்தனையை இம்மக்கள் தம் நெஞ்சில் ஏந்தி இருந்தார்கள், அதை தம் சடங்குகளில், நம்பிக்கைகளில் உருவேற்றி இருந்தார்கள். நிஜ பிராமணன் இல்லாத ஊரில் ஒரு கற்பனை பிராமணன் முளைத்து விடுகிறான். இது ஏனென்றால் பிராமணன் / பிராமணியம் நம் பண்பாட்டில், மொழியில், தொன்மங்களில், கோயிலை மையமிட்ட சடங்குகளில் சூட்சும்மாக இருக்கிறான். நாம் ரூப வடிவிலான பிராமணனை பழித்துக் கொண்டே அரூப வடிவிலான நெஞ்சில் பிராமணனை சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. 

 இதற்குப் பதிலாக நாம் இந்து மதத்தில் இருந்து வெளியேறி  நவயான / அல்லது நமக்கு விருப்பமுள்ள வகை பௌத்தத்துக்கு சென்று விடலாமே! நாம் என்றால் ஒட்டுமொத்தமாக இந்தியர் அனைவருமே மாற வேண்டும். மொழியில், பண்பாட்டில், நடப்பில் உள்ள வைதீக இந்து அடையாளங்களை முழுக்க சுத்தமாக துடைத்தெறிய வேண்டும். அப்போதே சாதியமைப்பை உடைத்தெறிய முடியும். ஆனால் இச்சூழலிலும் கூட, பெரும்பகுதி இந்தியர் (சிறுபான்மையினரையும் சேர்த்து) பௌத்தம் தழுவினால் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் வரும்.

கேள்வி: ஒரு பிராமணர் சாதி அமைப்பை விட்டு வெளியேறியவராக இருக்கும்பட்சத்தில் அவர் ஏன் தான் பார்ப்பனன் என அழைக்கப்படும் போது புண்பட வேண்டும்?

பதில்: நம் சமூகத்தில் யாரும் அப்படி முழுமையாக சாதியத்தில் இருந்து வெளியேற முடியாது. சாதியத்தில் இருந்து வெளியேறுவது ஒரு பெரும் போராட்டம். நீங்கள் அவைதீக நோக்கை கைவிட்டு சாதியத்தை எதிர்த்தாலும் உங்களுடன் புழங்கும் கணிசமானோர், உங்கள் உறவினர், குடும்பத்தினர் வைதீக நோக்குடன் சாதியத்துக்குள் இருப்பார்கள். அவர்களுடன் உறவாடும் போது அவர்களுடைய “மொழியையே” நீங்கள் பேச நேரும் போது, தற்காலிகமாக ஏனும் அவர்களுடைய சனாதன தர்க்கத்தை வரித்திட நேரும் போது, மீண்டும் அந்த சகதிக்குள் போய் சிக்கிக் கொள்வீர்கள். ஏனென்றால் நாம் சமூகப் பிராணிகள். 
ஒரு பிராமணர் பூணூலை அறுத்தால் மட்டும் அவர் சாதியத்தில் இருந்து விடுபட முடியாது. ஆயிரமாயிரம் தடைகளை இந்த சமூகம் அவர் முன்பு போட்டுக்கொண்டிருக்கும். அவர் இந்தியாவில் இருந்து வெளியேறி, இந்தியாவை, அதன் மொழியை, சிந்தனையை முழுக்க தன் மூளையில் இருந்து துடைத்து அகற்றி, தன் வாழ்வில் பின் ஒருமுறை கூட இந்தியர் ஒருவரைக் கூட சந்திக்காமல், ஒரு இந்திய படத்தைக் கூட பார்க்காமல், இந்தியா குறித்த செய்திகளை கேட்காமல் இருந்தால் மட்டுமே அவரால் முழுமையாக சாதியில் இருந்து வெளியேற முடியும். அதற்கு முதன்மையாக அவர் இந்தியாவே இல்லாத உலகில் வாழ வேண்டும், அவருக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டு நினைவுத்திறனை முழுமையாக இழக்க வேண்டும். அதாவது அவர் புதிதாக ஒரு குழந்தையை போல பிறந்திட வேண்டும். இதெல்லாம் நடக்கிற கதையா சொல்லுங்கள்?
(ஆனால் எதிர்காலத்தில் இந்த இந்தியா வைதீக, சனாதன பண்பாட்டில் இருந்து முழுக்க வெளியேறி சாராம்சமற்ற, கடவுளற்ற, சாதியற்ற, படிநிலையற்ற ஒரு மதத்தை தழுவும் / உருவாக்கும் என நம்புவோம்.)
அதனாலே ஒருவர் முற்போக்கான பிராமணராக இருந்தாலும் தன் சாதியின் பெயரால் விமர்சிக்கப்பட்டால் அச்சாதியுடன் அவர் தன்னை அடையாளப்படுத்த விரும்பாவிடினும் காயப்படுவார்.
அதனாலே நாம் பிராமணியத்தை, வைதீகத்தை எதிர்க்கும் போரில் பிராமணர்களையும் நம்முடன் அழைத்து செல்ல வேண்டும். பழைய வரலாற்றை மறந்து அவர்களை சகோதரத்துவத்துடன் நடத்த வேண்டும்.

கருத்துகள்

silviamary.blogspot.in இவ்வாறு கூறியுள்ளார்…
பிரம்மனிலிருந்து உருவானவர்கள் பிராமணர்கள் என்று பொய்க்கதைகளை புனைந்து கொண்டு அந்தப் பெயரிலேயே தாம் அழைக்கப் படுவதைப் பெருமிதமாக நினைத்துக் கொண்டிருப்பவர்களை, அந்தக் கற்பனைக் கதையை நம்பாதவர்கள் ஏன் அவர்களைப் பிராமணர்கள் என்று அழைத்து அவர்களின் பொய் நம்பிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும். பார்ப்பான் என்பது தொழில் சார்ந்த பெயர். சோதிடம் பார்ப்பான்; நாள் நட்சத்திரம் பார்ப்பான் என்று இன்னும் பலவற்றைப் பார்ப்பவர்களாக அந்தக் காலத்தில் அதைத் தொழிலாக செய்து கொண்டிருந்ததால் தான் அவர்கள் பார்ப்பான் என்று அழைக்கப் படுகிறார்கள். பார்ப்பான் என்பது ஒன்றும் வசைச்சொல் அல்ல. அதுவும் அவர்கள் பார்ப்பனர் என்று மரியாதையாகத் தான் அழைக்கப் படுகிறார்கள். இதில் என்ன பிரச்னை? கால ஓட்டத்தில் எத்தணையோ சொற்கள் சமூகத்தில் அது தொடர்ந்து குறிப்பிட்ட சமயங்களில் பாவிக்கப் பட்டதால் அது அர்த்தம் திரிந்து போயிருக்கலாம். அந்தச் சொற்களுக்கெல்லாம் புதிய சொற்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோமா என்ன? சர்வ சாதாரணமாக அந்தச் சொற்கள் புழக்கத்தில் இருக்கும் போது பார்ப்பான் என்கிற சொல்லை மட்டும் ஏன் புழங்கக் கூடாது? உதாரனத்திற்கு சண்டாளன் என்பது ஒரு சாதியைக் குறிக்கும் சொல் தான். அதை பாவிக்காமல் இருக்கிறோமா? அந்த சாதியினர் தான் அதை பாவிக்கக் கூடாது என்று முறையிடுகிறார்களா? பார்ப்பனர்களுக்கு மட்டும் இதில் எதற்கு சலுகை. அவரவர் வழியில் சொற்களை பயன்படுத்திவிட்டுப் போகட்டுமே....! இதை எல்லாம் பிரச்னை ஆக்கி பார்ப்பனர்களை கரிசனத்துடன் அணுகுவதே அரசியல் அல்லவா? பார்ப்பனர்களுக்கு அவர்களை இழிவு படுத்தாத பிராமணர்கள் என்ற சொல் இருப்பது போல் சண்டாளன், சக்கிலியன், பறையன் என்று பலதரப்பட்ட தலித் ஜாதிகளுக்கும் அவர்களை இழிவு படுத்தாத சொற்களை உருவாக்கி விட்டோமா? தலித் என்ற சொல்லைக் குறிப்பிடாதீர்கள். அது எல்லோரையும் உள்ளடக்கிய பொதுச் சொல். தனித்தனி சாதிகளுக்கான இழிவு படுத்தாத சொற்கள் எதுவும் இன்னும் உருவாக்கப்பட்டதாக தெரியவில்லையே....!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...