முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொடுத்த சம்பளத்தை பின்பக்கமாக வந்து அடித்துப் பிடுங்குகிற காலம்




நண்பர் ஒருவர் கடனட்டை, ஓவர் டிராப்ட் ஆகிய வசதிகளால் தான் மாத சம்பளத்தையும் தாண்டி செலவு செய்கிற, கடனில் மூழ்குகிற நிலையைப் பற்றி எழுதி இருந்தார். ஜிபே, பேடிஎம் போன்ற ஆன்லைனில் பணம் செலுத்தும் செயலிகள் வந்த பின்னர் செலவு கட்டுப்பாட்டை மீறி போவதை கண்கூடாக காண்கிறேன். அதனாலே கடந்த மாதம் செலவுக்கு ஏடிஎம்மில் இருந்து பணமாக எடுத்து வைத்துக் கொண்டு கண்கொத்திப் பாம்பாக செலவை கண்காணிக்கிறேன். ஆனாலும் சுலபமாக இல்லை.

 ஒரு பிரச்சனை நாம் விரும்பாமலே நமது அன்றாட வாழ்வில் பல வசதிகள், விருப்பத்தேர்வுகள் புகுந்து விட்டன என்பது. நான் சிறுவனாக இருக்கையில் இரவுணவு என்றால் கஞ்சியும், மதியம் செய்த ஏதாவது ஒரு பொரியலும் தான். வெரைட்டிக்காக சில பல கிழங்கு பப்படங்கள், ஊறுகாய் இருக்கும். கஞ்சியும் அலுக்கிறது என்றால் பயிறு கஞ்சி, உளுத்தங்கஞ்சி என மாற்றி மாற்றி செய்வோம். இவற்றில் நீக்கமற நிறைகிற பொருள் தேங்காய் மட்டுமே. அப்போது மூன்று ரூபாய்க்கு கொள்முதலில் தேங்காய் விற்றது, கடையில் ஐந்து அல்லது ஆறு ரூபாய். பின்னர் அது பத்து ரூபாயானது. இப்போதோ தேங்காய்க்கே 35-45 ரூ வரை செலவாகிறது. எண்ணெய், காய்கறி என எல்லாவற்றின் விலையும் பலமடங்கு அதிகரித்து விட்டது. கூடவே தினமும் கஞ்சியோ சோற்றையோ மக்களால் உண்ண முடியாது. இரவுணவுக்கு வித்தியாசமாக எதையாவது செய்து பார்ப்போம் எனும் எண்ணம் வளர்ந்து விட்டது. இன்னும் சிலர் தவறாமல் வெளியே போய் சாப்பிடுகிறார்கள். முன்பு கறிக்கடைகளில் மாதம் ஒன்றிரண்டு முறை மக்கள் திரண்டால் சரி, இப்போதோ தினமும் மக்கள் கறி வாங்குகிறார்கள். ஆடைகள் விசயத்திலும் அப்படித்தான்.

 நான் வேலை செய்கிற இடத்தில் தினமும் மூன்று நான்கு சட்டைகளை திரும்பத் திரும்ப அணிகிறவர்கள் என்னைப் போல வெகுசிலரே இருப்பார்கள். பலர் பளபளப்பாக அழகாக ஆடைகளை அணிவார்கள், ஒரு ஆடையை ஒரு மாதத்தில் ஒருமுறைக்கு மேல் அணிய மாட்டார்கள். அவர்களைப் பார்க்க பிறருக்கு ஆசையாகத் தான் இருக்கும், ஆனால் என்னைப் போன்றவர்கள் சதா வேலை குறித்த சிந்தனையிலே இருப்பதால் யார் என்ன அணிந்தால் என்ன என்றே யோசிப்பார்கள். ஆனால் என்றாவது ஒருநாள் புது சட்டை ஒன்றை அணிந்து பாந்தமாக வந்தால் கூடுதலாக யாராவது அழைத்து அன்பாகப் பேசுவார்கள். தோற்றத்துக்கு இவ்வளவு மதிப்பா என்று நாமும் இந்த மயக்கில் விழுந்து கூடுதலாக ஆடைகள் வாங்க செலவு பண்ணத் தொடங்கினால் போச்சு.

 நான் அதிகம் வெறுக்கிற செயலிகளில் ஒன்று ஸொமாட்டோ. தரமற்ற உணவை இரட்டிப்பு விலையில் விற்பதுடன் நம்மை சோம்பேறியுமாக்கி விடுகிறது. என் நண்பர் ஒருவர் வாரத்திற்கு சிலமுறையாவது இந்த செயலியில் ஆம்பூர் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். விலை ரூ 200. ஒருநாள் தற்செயலாக அவர் தான் வசிக்கும் தெருவின் முனைக்கு வந்து எட்டிப் பார்த்த போது அங்கே ஆம்பூர் பிரியாணி கடை உள்ளதையும், ஸொமாட்டோ டெலிவரி ஆளொருவர் அங்கே காத்திருப்பதையும் கண்டார். உள்ளே போய் பிரியாணியின் விலையைக் கேட்டால் அவருக்கு மூச்சே நின்று விடுகிறது - வெறும் ரூ 70. போய் விசாரித்தால் ஆம்பூர்க்காரர் நாங்கள் ஸொமோட்டோவுக்கு அப்படித்தான் விற்கிறோம் என்று சொல்லுகிறார்.  


 முன்பு தல்ஸ்தாய் தனது நாவல்களில் மேற்குடியினரின் பாசாங்கு, பகட்டை, வரவை மீறிய செலவீனங்களை ரசிக்க ரசிக்க பகடி செய்வார். இன்று மேல் மத்திய வர்க்கம் ஒன்று அந்த உயர்குடியினரைப் போன்றே தோன்றி இருக்கிறார்கள். அவர்களுடைய தவிர்க்க முடியாத அன்றாட செலவுகளே பெரும்பகுதி மாத ஊதியத்தை முழுங்கி விடுகிறது. ஓரளவுக்கு சம்பாதிக்கிற மத்திய வர்க்கத்தினர் தம்மையும் அறியாது மேல்மத்திய வர்க்க கோட்டைத் தாண்டி அந்த பக்கம் சென்று விடுவார்கள் என்பதால் யார் வேண்டுமெனிலும் இந்த மாதிரி வாழ்க்கைமுறையை பின்பற்ற வாய்ப்பதிகம். இணையவழி செலவீனங்கள் இதற்கு தோதானவை. நவதாராளவாத சந்தையானது நமது வாழ்க்கைத் தேவைகளை எப்படியெல்லாம்  கட்டமைக்கிறது என்பதைப் பார்க்க வியப்பாக உள்ளது. அது நமது ஆசைகளை தேவைகளாகத் தோன்ற செய்து விட்டது.


இன்று சம்பாதிப்பதை விட பெரிய சவால் அப்பணத்தை நம் கைக்குள் வைத்திருப்பதே. அரசே முன்பு பேடிஎம்முக்கு விளம்பரம் பண்ணி, அதன் பயன்பாட்டை ஊக்குவிக்க பண மதிப்பிழப்பை கொண்டு வந்தது போக இன்று ஊரடங்கின் போது ஸ்மோட்டோவில் இருந்து சாப்பாடு வாங்கிக்கோங்க என்று மறைமுக விளம்பரம் பண்ணுகிறது. ஏன் வீட்டிலே சமைத்து சாப்பிடுங்கள் என அரசு சொல்லுவதில்லை? நமது பணம் செலவாக வேண்டும் என அரசே ஒரு வியாபாரியைப் போல சிந்திக்கிறது; நீங்கள் சேர்த்து வைக்கக் கூடாது என்பதற்கென்றே வங்கியில் இருப்புத்தொகையின் வட்டியை வெகுவாக குறைத்து விடுகிறார்கள், ஏ.டி.எம்மில் இருக்கக் கூடிய பணத்திற்கும் கட்டுப்பாடு கொண்டு வந்து விட்டார்கள்; புழக்கத்திலும் அதிகமாக பணநோட்டு இல்லாமல் பார்க்கிறார்கள். விளைவாக, சில்லறைக்கு பணமில்லை என்று பத்து ரூபாய்க்கு ஜிபே பயன்படுத்துகிறோம். 


இது போதாது என்று தினமும் நம்மை அழைத்து “கடன் வாங்கிக்கோங்க” என்று காலைப்பிடித்து கெஞ்சுகிறார்கள். என் நண்பர்கள் சிலர் ஒரு கோடிக்கு வங்கிக்கடனை வைத்து வீடு வாங்குகிறார்கள். அதை செலுத்தி முடிக்கவே வாழ்நாளில் கால்வாசி போய் விடும். நடுவே வேலை போனால் என்ன செய்வார்கள்? நெடுந்தொலைவு தினமும் வேலைக்காக பயணிக்கும் அலுப்புக்காகவே கடனில் காரும் வாங்குகிறார்கள். என் நண்பர் ஒருவருடைய அப்பாவுக்கு உடல்நலமில்லாமல் ஐ.சி.யுவில் இருக்க நேர்ந்திட அதற்காக வங்கிக்கடன் பெற்றார். ஒரு வாரத்திற்கு மேல் அப்பா ஆஸ்பத்திரியில் இருந்து விட்டு இறந்து போனார். அந்த கடனே அவருக்கு இன்னும் தீரவில்லை. மாதாமாதம் சம்பளம் வர தாமதமானால் அவர் பதற்றமாவதைக் காண பாவமாக இருக்கும்.  இன்னும் சிலரோ கடனில் ஒரு லட்சம் ரூபாய்க்கு டிவி வாங்குகிற கிறுக்குத்தனங்களும் உண்டு.


எனக்கு சில நாட்களாக கார் வாங்க ஆசை எழுகிறது. ஆனால் கடனில் வாங்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். இப்போதுள்ள சம்பளத்தில் நேரடியாகவும் வாங்க முடியாது. சிறந்த வழி இதற்காக கூடுதலாக சம்பாதிக்கிற வழிகளை உண்டு பண்ணி, அந்த கூடுதல் பணத்தை சேர்த்து வைத்து பொறுமையாக எதிர்காலத்தில் வாங்குவது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு மேக்புக் ஏர் வாங்கிட விரும்புகிறேன். அதற்காக கடந்த ஆண்டில் இருந்து ஒன்றிரண்டு கூடுதல் வேலைகளை எடுத்து செய்து வருகிறேன். ஆனால் நான் வாங்க நினைத்த காலத்தில் இருந்தே அதன் விலை அதிகரித்துக் கொண்டு போகிறது. நானோ 96 பட விஜய் சேதுபதியைப் போல த்ரிஷாவுக்கு கிழவியேயானாலும் காதிருக்க தயார் எனும் முடிவில் இருக்கிறேன்.


தேவையற்ற செலவுகளை குறைக்க சில டிப்ஸ்:


1. ஜிபே, பேடி எம் ஆகியவற்றை மிகக் குறைந்த அளவுக்கு பயன்படுத்துவது. ஒரு துறவியின் மனநிலை வாய்க்காதவர்கள் ஒருபோதும் கடனட்டை வாங்காதது.

2. சாதி சனம் வற்புறுத்துகிறது என்பதற்காக திருமணம் போன்ற சடங்குகளுக்கு செலவு பண்ணாது தவிர்ப்பது. 

3. நண்பர்களுடன் வெளியே சாப்பிடப் போகும் போது பில் வந்ததும் “நான் கொடுக்கிறேன்” என்று தாவாமல் இருப்பது. உணவுக்கட்டணத்தை பகிர்ந்து கொள்ளுவது.

4. நண்பர்கள் ஒரு புல்லட் வாங்கினால், வெளிமாநிலங்களுக்கு பயணம் போய் வித்தியாசமான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றியதைப் பார்த்தால் நானும் உடனே இதைப் பண்ணப் போகிறேன், இன்னிக்கே பேராகிளைடிங் பண்ணித்தான் ஆவேன் என்று குதிக்காமல் இருப்பது.

5.  நமக்கு ஆர்வமுள்ள விசயங்களை மட்டுமே பண்ணுவது. எல்லாருக்கும் பொதுவான மகிழ்ச்சி என ஒன்றில்லை என நம்புவது.

6. ரம்மி சூதாட்டத்தில் இருந்து விலகி இருப்பது.

7. குடித்தாலும் தனியாக மட்டும் குடிப்பது.

8. வாசகர்கள், எழுத்தாளர்கள் புத்தகங்களை நினைத்ததும் வாங்காமல் நூலகத்தில் ஒருமுறை தேடிப் பார்ப்பது. நான் கடந்த இரு ஆண்டுகளில் என்னுடைய பல்கலைக்கழக நூலகத்தை சரியாக பயன்படுத்தியதில் பல புத்தகங்களை வாங்காமல் தவிர்த்திருக்கிறேன். சென்னையில் இருக்கையில் தமிழ் புத்தகங்களுக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரு சிறந்த புதையலாக இருந்தது. என்ன அண்மைகால புத்தகங்களை மட்டும் வைத்திருக்க மாட்டார்கள். அந்நூல்களை நண்பர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். (நான் இப்போது என்னைப் பார்க்க வரும் நண்பர்களுக்கு நான் படித்த புத்தகங்களை பரிசாக கொடுத்து விடுகிறேன்.) அல்லாவிடில் விமர்சனம் எழுத ஒப்புக்கொண்டால் அவ்வப்போது இலவசமாகவே புத்தகங்களை அனுப்புவார்கள். நூலகத்தை பயன்படுத்துவதில் ஒரு அனுகூலம் அது அடுத்தவர் காதலிக்கு பாய்பெஸ்டியாக இருப்பதை போன்றது - புத்தகங்களை முழுமையாகப் படிக்க வேண்டியதில்லை, தேவையான அளவுக்குப் படித்து விட்டு கொடுத்து விடலாம். படிக்காமலும் வைத்திருக்கலாம். எந்த நஷ்டமும் இல்லை. 

9. மெடிக்கல் இன்ஷுரன்ஸ் போன்ற போலி முன்னெரிக்கை நடவடிக்கைகளை தவிர்ப்பது. உடலநலமில்லாத போது, பெரிய உயிர்போகும் அவசரம் இல்லாத போது, முடிந்த அளவுக்கு (பல்வலி, கைகால், முதுகு வலி போன்றவற்றுக்கு) அரசு மருத்துவமனைகளை பயன்படுத்துவது. மருந்துகளையும் அங்கேயே வாங்கிக் கொள்வது. எல்.ஐ.ஸி போன்று யானையை குழிவெட்டிப் பிடிக்கிற திட்டங்களில் தவிர்த்து, எந்த ஏஜெண்ட் நம்மிடம் பேச வந்தாலும் உடனே “கஹானி” பாப் பிஸ்வாஸை நினைவில் கொள்வது. நேரடி நெடுங்கால சேமிப்புகளில் பணத்தை போட்டு வைப்பது.

10. எதாவது அதிக செலவாகிற ஒன்றை கட்டாயமாக வாங்க வேண்டும் என்று தோன்றினால் அதை ஒரு மூன்று வாரங்களுக்கு தள்ளிப் போடுவது. பெரும்பாலும் மூன்று வார முடிவில் அதை மறந்திருப்போம். அப்படியே நினைவுக்கு வந்தால் அதற்கான பணத்தை இனி சம்பாதித்து சேர்த்து பின்னரே வாங்க வேண்டும் என முடிவெடுப்பது. இத்தனை தடைகளையும் மீறி அந்த ஆசை உறுதியுடன் உங்கள் கையைப் பிடித்தபடி பின்னாலே வந்தால் அதற்காக கூடுதலாக உழைத்து ஒருநாள் வாங்கியே விடுவது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...