Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மாலனைச் சுற்றியுள்ள வெறுப்பரசியல்



ஒரு எழுத்தாளனுக்கு பல முகங்கள் இருக்கும். அவை அனைத்தும் அவனுடைய எழுத்துடன் தொடர்புள்ளவை அல்ல. ஒரு எழுத்தாளன் தொண்டு செய்பவனாகவோ பொறுக்கியாகவோ பலாத்காரம் பண்ணுகிறவனாகவோ கட்சிக்காரனாகவோ போராளியாகவோ ஆன்மீகவாதியாகவோ இருக்கலாம். வியாபாரியாக கூலி வேலை செய்பவனாக குமாஸ்தாவாக ஆணாக பெண்ணாக இயல்பான உடல்பெற்றவனாக ஊனனாக இருக்கலாம் - இவை எவையும் அவனுடைய எழுத்துடன் சம்மந்தம் கொண்டவை அல்ல. எதனாலும் அவனுக்கு சலுகைகள் தரப்படவோ அவன் பழிக்கப்படவோ அவசியம் இல்லை. அவனுடைய அடையாளங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கலாம். அது அவனுடைய இலக்கிய தகுதியை பாதிக்காது. அப்படி பாதிக்குமெனில் அது இலக்கிய அரசியல், அல்லது இலக்கியம் எனும் அரசியல் மட்டுமே, இலக்கியம் அல்ல.

 மீண்டும் சொல்கிறேன் - இலக்கியத்தில் அரசியல் இல்லை என்பது என் பார்வை அல்ல; இலக்கிய பிரதிக்குள் பல அரசியல் ஊடுபாவல்கள், கதையாடல்கள் இருக்கலாம், ஆனால் அவை நடைமுறை அரசியல் அல்ல. இரண்டுக்கும் பாரித்த வேறுபாடுகள் உள்ளன. ஒரு பிரதிக்குள் ஒலிக்கும் படைப்பாளனின் குரலே அவனுடைய தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் உருவானது எனும் ஒரு பார்வை வெகுமக்கள் தரப்பில் உள்ளது. சில வருடங்களுக்கு முன் நான் விஷ்ணுபுரம் கூட்டத்திற்கு சென்றிருந்த போது அங்கு சிலர் இதன் அடிப்படையில் மட்டுமே ஒரு பிரதியை படிக்க வேன்டும் என வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள் - ஒரு கதையோ நாவலோ ஒரு எழுத்தாளனின் அனுபவம், கருத்து மட்டுமே என அவர்கள் வலுவாக நம்பினார்கள். இன்னொரு பக்கம், இடதுசாரி கருத்தியல் கொண்டோர் சிலரிடமும் இப்பார்வை உள்ளது - “சாணிக் காயிதம்எடுத்த அருண் மாதேஸ்வரனிடம்தமி ஸ்டுடியோயூடியூப் சேனலில் ஒரு பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தார்கள். அதில் பேட்டியாளர்கள் இருவரும் திரும்பத் திரும்ப அருணிடம்வன்முறை சார்ந்து உங்கள் அனுபவத்தைத் தான் படமாக எடுக்கிறீர்களா?” எனக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு அவரும் சலிக்க சலிக்கஅதுக்கு அவசியம் இல்லீங்க, நான் வெளியே பார்ப்பதற்குத் தான் வேறு விதமாக எதிர்வினையாற்றுகிறேன், என் பாத்திரம் நான் அல்லஎனச் சொல்லிக் கொண்டிருந்தார். இது எப்படியான வன்முறை!

 இப்படி படைப்பாளனும் தனிமனிதனும் ஒன்றே என சிந்திப்பது ஒரு மோசமான ஒழுக்கவியல் அரசியலுக்கு நம்மை இட்டுச் செல்லும். ஒரு படைப்பாளி பேசுவது, சித்தரிப்பது அத்தனையையும் அவனுடைய சொந்த ஆளுமை, அடையாளத்துடன் பிணைப்பது அவனை கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கான முயற்சியே அன்றி அப்பாவித்தனமோ அறிவீனமோ அல்ல.


கோட்பாட்டு ரீதியாகவும் இங்கு என் தரப்பை இவ்வாறு விளக்குகிறேன்: தனிமனிதனுக்கு என எந்த ஒரு அடையாளமோ முகமோ இல்லை. அரிஸ்டாட்டில் தனதுகவிதையியல்நூலில் இதை அற்புதமாக விளக்குகிறார். அவர் ஒருவருடைய செயலே அவரது அடையாளம், அவருடைய சொல்லோ சிந்தனையோ அல்ல என்கிறார். அதாவது சொல்லும் சிந்தனையும் கூட ஒரு செயலாகும் போதே அது அடையாளமாகிறது; ஆனால் செயலானது தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பது. நீங்கள் ஒரு போராட்டத்தில் கலந்து கொள்ளும் போது போராளி. நீங்கள் வாழைப்பழத்தை உரித்து தின்னும் போது? நீங்கள் சாலையில் போகும் பெண்ணின் மாரைப் பார்க்கும் போது? நீங்கள் யாரையாவது வன்மத்தில் திட்டும் போது? நீங்கள் சுயமைதுனம் செய்யும் போது? வேலையிடத்தில் தலையாட்டிக் கொண்டு ஒரு அவமானத்தை சகித்துக் கொள்கையில்? ஒரு அநீதியை அனுமதிக்கையில்? இதனால் தான் ஒரு மனிதனின் அடையாளத்தை நிறுவுவதில் அடுத்தவர்களுக்கு எப்போதுமே ஒரு நெருக்கடி, ஒரு தவிப்பு இருக்கிறது, அதனாலே அவர்கள் அவன் மீது ஏதாவது ஒரு முகமூடியை திணித்து விட வேண்டும் எனத் திணிக்கிறார்கள் அவர்கள். ஆனால் அடிப்படையில் மனிதன் தொடர்ந்து முரண்பட்டுக் கொண்டே, எந்த அடையாளத்துக்குள்ளும் நிற்க முடியாதவனே. நியாயமாக நாம் அவனை ஒவ்வொரு சமயமும், ஒரு சந்தர்பத்தில் எப்படி வெளிப்படுகிறானோ அவனை அந்தந்த நேரம், சூழலுக்கு ஏற்ப மட்டுமே மதிப்பிட வேண்டும்  என்கிறார் அரிஸ்டாட்டில். இல்லாவிடில் நாம் கண்காணிப்பு அரசியல் ஈடுபட்டு முத்திரை குத்தி தண்டிக்க விரும்பும் லும்பன் கும்பலாகிறோம். இதுவே பின்நவீனப் பார்வையும் கூட.


நான் இந்த இடத்தில் இருந்தே எந்த இலக்கியவாதியையும் மதிப்பிட விரும்புகிறேன். அவன் இடதுசாரியோ வலதுசாரியோ, நான் அவனை நேசிக்கிறேனோ வெறுக்கிறேனோ அந்த அடிப்படையில் அவனது இலக்கிய தகுதியை முடிவு செய்ய மாட்டேன். இலக்கியம் முழுக்க வேறொரு தளம். அங்கு அவன் இலக்கிய அரசியலாக வெளிப்படுத்தும் கருத்தியலுக்கு நான் உடன்படாவிடினும் அவன் ஏதோ ஒரு விதத்தில் இலக்கியத்துக்கு பங்களித்திருந்தால் நான் அவனை ஏற்கிறேன், மதிக்கிறேன், அல்லது மௌனமாக அங்கீகரிக்கிறேன். இந்த நிலைப்பாட்டில் நின்று தான் நான் சாகித்ய அகாடெமி விருதைப் பெறும் மாலனுக்கு என் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்


அவர் என் மொழிக்கும் பண்பாட்டுக்கும் பங்களித்தவர். நீண்ட காலமாக இங்கு எங்களுடன் நிற்பவர். அவரது நடைமுறை அரசியலை விமர்சித்தாலும் அவரை நாங்கள் இலக்கியவாதிகள் புழுதி வாரித்தூற்றி இகழ மாட்டோம். அவர் எங்களில் ஒருவர். அவரை நான் நேரில் பார்த்தாலும் ஒரு சகமனிதனாகத் தான் நடத்துவேன். துவேஷத்துடன் ஒதுங்கிப் போக மாட்டேன். இந்த நிலைப்பாட்டையே ஜெயமோகன் மீது புளிச்ச மாவு அவமதிப்புகளை நமது சமூகம் முன்னெடுத்த போது நான் முன்வைத்தேன். அவ்வப்போது எஸ்.ரா தூற்றப்படும் போதும் இதையே சொன்னேன் - எல்லாரையும் நடைமுறை அரசியல் சட்டகத்துக்குள் வைக்காதீர்கள். அது உங்களை பாஸிஸ்டுகளாக்கும். இன்று மாலன் சரமாரியாக தாக்குதலுக்கு உள்ளாவதைப் பார்க்கும் போது என் மனம் கசந்து போகிறது. இந்த சமூகவலைதளத்தில் தரம் தாழ்ந்து போவது, உயர்ந்த இடத்தில் நிற்பதில் முழுக்க உங்கள் கையில் தான் இருக்கிறது.


 எனக்கு நன்றாக நினைவிருக்கிறது - நான் பதின்வயதினனாக கலை இலக்கிய பெருமன்ற கூட்டங்களுக்கு செல்லும் போது எங்களுடன் அரசியல் ரீதியாக முழுக்க எதிர்நிலையில் இருப்பவர்களும் எங்கள் கூட்டங்களுக்கு பேச்சாளர்களாக அழைக்கப்படுவார்கள். அவர்களுடன் நாங்கள் கண்ணியமாக, மரியாதையுடன் உரையாடுவோம், முரண்படுவோம், தேநீர் அருந்தி கைகுலுக்கி கலைந்து விடுவோம். அப்படித்தான் கலை இலக்கிய பெருமன்ற களத்தில் தான் நான் முதன்முதலாக ஜெயமோகனை சந்தித்தேன்; மன்றத்தில் உள்ள எவருமே அவருடைய அரசியலை ஏற்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் அவரை மதித்தார்கள். அவர்களில் ஒருவனான நான் ஜெயமோகனின் வாசகன் ஆனேன். அவர்களுடனான உரையாடலின் வழி தான் நான் சு.ராவை அறிந்து அவரிடம் தொடர்ந்து ஒரு நல்லுறவை பேணினேன், நிறைய கற்றுக் கொண்டேன். என்றுமே என் தோழர்கள் அது குறித்து என்னை விமர்சித்ததில்லை, அவர்கள் மாறாக என்னை ஊக்கப்படுத்தினார்கள். லஷ்மி மணிவண்ணன் எங்கள் மன்றத்தில் இருந்தே சு.ராவிடம் சென்று, இன்று ஜெ.மோவுடன் இருக்கிறார்; அதனால் ஒரு எழுத்தாளனாக லஷ்மி மணிவண்ணனை நாங்கள் ஒதுக்குவதோ வெறுப்பதோ இல்லை. என் அரசியல் இன்று வரை உறுதியாக இருக்கிறது, அதே நேரம் என் தோழர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட கண்ணியத்தையே நான் இன்று எதிர்தரப்பிடமும் பின்பற்றுகிறேன், ஆனால் எங்களுக்கு அடுத்த தலைமுறைகளுக்கு, பழைய தலைமுறையில் இருந்து திடீரென சமூகவலைதளத்துக்குள் வந்தவர்களுக்கு இந்த பண்பாடு இல்லை.   


இந்த வெறுப்பரசியலை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.


பி.கு: அகாடெமியின் ஆலோசனைக் குழுவில் உள்ளவர் பரிசைப் பெறலாமா என்பதில் அவர்களுக்கு என நிச்சயமாக ஒரு வழிமுறை, நெறிகள் இருக்கும், அதன்படியே மாலனையும் தேர்ந்திருப்பார்கள் என நம்புகிறேன். பாஜக ஆதரவுக்காக அவர் விருதைப் பெற்றார் எனில் வெளிப்படையாக திமுகவை ஆதரிக்கும் இமையம் எப்படி வென்றார்? இமையம் நம் காலத்தின் தலைசிறந்த புனைவெழுத்தாளர் என்பதால் பரிசு பெற்றார். அவரது அரசியலை அகாடெமி ஒரு வரைமுறையாக வைக்கவில்லை. இதையே மாலன் விஷயத்திலும் கடைபிடித்திருக்கும் என நம்புகிறேன். மேலும் மாலன் மொழியாக்கியுள்ள நூலானஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்ஒரு முக்கியமான புத்தகம். எதையும் பரிசீலிக்காமல் நம்மைப் போல சாகித்ய அகாடெமியினர் கும்மியடிப்பதில்லை.

Comments

/எதையும் பரிசீலிக்காமல் நம்மைப் போல சாகித்ய அகாடெமியினர் கும்மியடிப்பதில்லை./ அப்படியெனில் இதுவரை சாகித்திய அகாடெமி விருது பெற்றிருக்கும் எல்லோருமே நியாயமாகவும் அவர்களின் படைப்பின் தரத்திற்காகவும் மட்டுமே விருது பெற்றிருக்கிறார்கள்; அதில் பாரபட்சம் அரசியல் எதுவும் இல்லை என்கிறீர்களா? அப்படி நீங்கள் நம்பினால் மிக்க சந்தோஷமே.....!

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...