3. உங்களுக்கு வாசிப்பில் எப்போது ஆர்வம் வந்தது? 4. குடும்பச் சூழலில் உங்களிடம் கிடைத்த
புத்தகங்கள் என்னென்ன? பள்ளிப் பருவத்தில் எதெல்லாம் வாசிக்கக் கிடைத்தது?
பதில்: கதைகளை ஓரளவுக்கு வாசிக்கக் கற்றுக் கொண்டது எட்டு, ஒன்பது வயதில் என நினைக்கிறேன். அப்போது நாளிதழ்களின் இணைப்பாக வரும் குழந்தைகளுக்கான பத்திரிகைகளையும், ராணி காமிக்ஸ் போன்ற புத்தகங்களையுமே படித்தேன். நான் ஊனமுற்றவன் என்பதால் வெளியே சென்று விளையாட அம்மா அனுமதிக்கவில்லை. படிக்க நிறைய நேரம் இருக்கும். ஒரே காமிக்ஸை அலுக்க அலுக்க திரும்பத் திரும்ப படிக்கும் அளவுக்கு. பிறகு எனக்கு நானே கதை சொல்ல ஆரம்பித்தேன். அதாவது தனிமையில் இருந்து எனக்கே நான் சொல்லிக் கொள்வேன். அதை பகற்கனவு என வகைப்படுத்தி விட முடியாது - துவக்கம், பல பிரச்சனைகள், தீர்வுகள், முடிவைக் கொண்ட சாகசக் கதைகள். பள்ளியில் என் நண்பர்களிடம் அக்கதைகளை எழுதிப் படிக்கக் கொடுப்பேன். அப்படித்தான் என் கற்பனை வளர்ந்தது. பிறகு எனக்கு பன்னிரெண்டு வயதிருக்கும் போது என் அப்பாவின் வங்கிக் கிளையில் ஒரு நூலகம் ஆரம்பித்தார்கள். அங்கு செய்திப் பத்திரிகைகளில் இருந்து வணிக நாவல்கள் வரை வரும். அவற்றை அவர் வீட்டுக்கு கொண்டு வருவார். அப்படித்தான் நான் பரவலாக படிக்க ஆரம்பித்தேன். கல்கி, அகிலன், சிவசங்கரி, அனுராதா ரமணன், பாலகுமாரன் எல்லாம் அறிமுகமானார்கள். “பொன்னியின் செல்வனை” அப்பா, அக்கா, நான் மூவரும் ஆளுக்கு ஒரு மணிநேரம் என வகுத்துக் கொண்டு படித்தது நினைவுள்ளது. எனக்கு ஏனோ கல்கியை விட அகிலனை அந்த காலத்தில் மிகவும் பிடித்திருந்தது. “சித்தரப் பாவை” நாவலை உருகி உருகிப் படித்தேன். வளர்ந்த பிறகு அது எவ்வளவு பொய் எனப் புரிந்து போனாலும் நாவலின் நாயகனான அண்ணாமலை மீதுள்ள பிரேமை ஒரு போது மறையவில்லை. குறிப்பாக அவன் தோட்டத்தில் கிடக்கும் ஒரு பூவை எடுத்து ரசித்து விட்டு அதைப் பற்றி சிலாகிக்கவோ ஒரு ஓவியம் வரையவோ செய்வோன். நாவலுக்கு முக்கியமில்லாத காட்சி தான். ஆனால் அது ரொம்ப முக்கியமாக எனக்குப் பட்டது. அது தான் அவனுடைய காதல். நாயகி ஆனந்தி மீதான காதல் அதன் நீட்சி என நினைத்தேன். அகிலனின் மற்றொரு சிறுகதையில் ஒரு நாடோடி எதேச்சையாக ஒரு நாய்க்குட்டியை எடுத்து வளர்த்து பின்னர் அது இறந்து போக அவன் மனம் உடைவதாக வரும். அந்த கதையையும் என்னால் ரொம்ப காலத்துக்கு மறக்க முடியவில்லை. இன்னொரு சிறுகதையில் நாயகன் தன் இஸ்லாமியன் நண்பனின் தங்கையை காதலிப்பான் என நினைக்கிறேன். புர்கா அணிந்த அழகான இஸ்லாமிய பெண். பின்னர் என் பதின்பருவத்தில் அப்படி ஒரு பெண்ணை நானும் காதலித்தேன். என் வாழ்வின் மகத்தான கட்டமாக அது அமைந்தது. இப்படி அகிலன் என் இளமை முழுக்க என்னோடு இருந்திருக்கிறார்.
அதன் பிறகு என்னுலகினுள் பாலகுமாரன் வந்தார். எனக்கு அப்போது சுஜாதாவை விட பாலகுமாரனையே பிடித்திருந்தது. சுஜாதாவின் மொழி நுணுக்கங்கள், பாத்திர அமைப்பின் லாவகம் அப்போது எனக்குள் இறங்கவில்லை. ஆனால் பாலகுமாரனின் அன்னியோன்யமான குரல், பெரிய உலகம், மத்திய வர்க்க வாழ்வு, அதன் லட்சியவாதம், பெண் உளவியல், தன்னை ஏற்றுத் தகவமைக்கும் ஒரு பெண்ணுருவுக்கான ஒரு ஆணின் தவிப்பு, ஆன்மீகம், இளைஞர்களை நோக்கிய போதனை இதெல்லாம் பிடித்திருந்தது. முக்கியமாக பாலுணர்வுக்கென ஒரு கவித்துவத்தை, கம்பீரத்தை, நெகிழ்வை அவர் உருவாக்கினார். மேலும் அவர் சித்தரித்த ஆண்கள் நான் பார்த்த ஆண்களைப் போலில்லை. அவர்கள் சுலபத்தில் உடைந்து போகிறவர்களாக, பெண்களால் தேற்றப்பட வேண்டியவர்களாக இருந்ததும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் இப்போது யோசிக்கையில் பாலகுமாரனின் உலகில் பெண்களே இல்லை, முழுக்க பெண்ணுடல்கள் மட்டுமே, பெண்ணாளுமையை அவரது ஆண்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள், ஆணாளுமையை பெண்கள் கொண்டிருந்தார்கள் எனத் தோன்றுகிறது. இந்த உலகம் எனக்கு அப்போது வெகுநெருக்கமாக இருந்தது. அப்போது சாதிக் எனும் ஒரு நண்பர் வாய்த்தார். அவர் என் அக்காவின் கணவரின் நண்பர். தீவிரமான பாலகுமாரன் உபாசகர். இருவருமாக பாலகுமாரனைப் பற்றி சலிக்க சலிக்கப் பேசுவோம்.
பதிமூன்று வயதில் எனக்கு பரிசாக பாரதியார் கவிதைகள் நூல் கிடைத்திருந்தது. அதை ஒரு நூறு முறையாவது படித்து மனனம் செய்திருப்பேன். அதன் பிறகு அதே போல வைரமுத்து, மு. மேத்தாவின் கவிதைத்தொகுப்புகள் பரிசாகக் கிடைத்தன. நான் வானம்பாடிகளின் தீவிர விசிறியானேன். வைரமுத்துவின் உருவக மொழி என்னை ஆச்சரியப்படுத்தியது. பள்ளிப் படிப்பு முடிந்ததும் வைரமுத்துவை போய் சந்தித்து அவரது உதவியாளனாக வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டேன். பிறகு என் பதினைந்து வயதில் எங்கள் ஊரில் ஹாமீம் முஸ்தபா எனும் தோழர் களஞ்சியம் எனும் நூலகம் ஆரம்பித்தார். அங்கு புத்தகங்களின் பெரும் உலகம் எனக்கு அறிமுகமானது. அங்கேயே குடியிருப்பேன். அங்கே எனக்கு கலை இலக்கியப் பெருமன்ற நண்பர்கள் அறிமுகமாகி நான் மரபுக் கவிதை எழுதுவது, மரபிலக்கியம்.
வானம்பாடி இலக்கியம் படிப்பது ஆகியவற்றில் இருந்து விடுபட்டு நவீன இலக்கியம், நவீன
சிந்தனைகள், கோட்பாடுகள் நோக்கி சென்றேன். குறிப்பாக சாதிக் எனக்கு பசுவய்யாவின் கவிதைகளை அறிமுகப்படுத்தினார், எப்படி பூடகமான சொல்லப்பட்ட விசயங்களை கற்பனையாலும் அறிவாலும் திறந்து படிக்க வேண்டும் எனக் காட்டித் தந்தார். நட. சிவகுமார் அண்ணனுடனான உரையாடல் நவீன கவிதையை புரிந்து கொள்ளவும், வாழ்க்கையில் இருந்து கவிதையை எடுக்கவும், வட்டார வழக்கில் எந்த அலங்காரமும் இன்றி எழுதவும் தூண்டியது. எனக்கு ஒரு முற்றிலும் புதிய உலகை அடைந்ததைப் போலிருந்தது. மெல்ல மெல்ல வைரமுத்துவையும் மு.மேத்தாவையும் அடுத்தடுத்த ஸ்டாப்பில் இறக்கி விட்டு நவீன இலக்கியம் நோக்கி பயணித்தேன். நவீன கவிதைகளை எழுத முயன்றேன். ரொம்ப பிடிவாதமாக அதை அப்போது செய்தேன் என இப்போது தோன்றுகிறது. ஏனென்றால் அப்போது நான் நவீன இலக்கியத்தின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் அதை ஒரு வடிவமாக மட்டுமே பார்த்தேன் எனத் தோன்றுகிறது.
தமிழில் மட்டும் தான் பதினைந்து வயது வரைப் படித்திருந்தேன். ஆங்கிலத்தில் சொந்தமாக எதைப் படித்தாலும் புரியாது. ஒரு நாவலின் ஒரு பக்கத்தை படிக்க எனக்கு பல மணிநேரங்கள் ஆகும். அதன் பிறகு முயற்சி எடுத்து என் ஆங்கில அறிவை விருத்தி செய்து உலக இலக்கியங்களை ஆங்கிலத்தில் நேரடியாக படிக்க
ஆரம்பித்தேன். தற்செயலாக, என் விருப்பத்தையும் மீறி நான் இளங்கலை ஆங்கில இலக்கியப் படிப்பில் சேர்க்கப்பட்டது அதற்கு ஒரு முக்கிய காரணமாகியது.
கல்லூரியில் சேர்ந்தால் தமிழ் இலக்கியமே படிக்க வேண்டும் என பதினைந்து வயதிலேயே முடிவு செய்தேன். என்னுடைய பெரியம்மாவின் மகள் தமிழில் முனைவர் படிப்பு முடித்து ஒரு விரிவுரையாளராக இருந்தார். அவரைக் கண்டு நானும் தமிழ் தமிழ் ஆசிரியராக வேண்டும் என ஆசைப்பட்டேன். அந்த வயதிலேயே ஆசிரியப்பா, வெண்பா எல்லாம் எழுதிக் கொண்டிருந்தேன். சங்கக் கவிதைகள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் வாசித்திருந்தேன். சரி தமிழ் இலக்கியம் படிக்க முழுமையான தகுதி பெற்று விட்டோம் என நினைத்திருந்தால் வீட்டில் நான் பொறியியலே படிக்க வேண்டும் என்றார்கள். அது இல்லாவிட்டால் அறிவியல் பாடம் என்றார்கள். எனக்கு கணிதம் என்றாலே கசக்கும். அதனாலே பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல், கணிதப் பாடங்களில் குறைவான மதிப்பெண் எடுத்தேன் (இல்லாவிட்டாலும் அவ்வளவு தான் எடுத்திருப்பேன்.). நியாயமாக நான் அப்பாடங்களில் தோற்றிருக்க வேண்டும். எப்படியோ தேறி விட்டேன். ஆனால் மொழிப்பாடங்களில் மட்டும் அதிக மதிப்பெண்கள் பெற்றேன். சரி நாம் இலக்கை நெருங்கி விட்டோம் என பெருமிதமாக இருந்தேன். என்னுடைய அம்மாவும் ‘சரி இலக்கியம் என்றால் அதையே படித்துத் தொலை’ என்று என்னை ஒரு கல்லூரிக்கு அழைத்து சென்றார். அங்கே பார்த்தால் நான் தமிழ்த்துறை அல்லாமல் ஆங்கிலத் துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். “முடியவே முடியாது” என்று முரண்டு பிடித்தால் அம்மா “நீ தமிழ் படிப்பதற்கு வீட்டிலேயே கிட” என்று சொன்னார்கள். அவருக்கு நான் தமிழ் இலக்கியம் படித்தால் வேலை கிடைக்காமல் போய் விடும் என பயம். இப்படி ஆங்கில இலக்கியம் இளங்கலைப் பட்டப்படிப்பில் சேர்ந்து முதல் ஒரு மாதம் மனம் உடைந்து, ஈடுபாடின்றி வகுப்பில் வெளியேயே பார்த்தபடி இருந்தேன். பிறகு சனியன், இதில் சேர்ந்தாகிற்று, இதையாவது ஒழுங்காகப் படிப்போம் என ஆர்வம் செலுத்தினேன்.
ஒரு விதத்தில் ஆங்கிலப் படிப்பில் சேர்ந்ததே எனக்கு உலக இலக்கியத்தை அறிமுகம் பண்ணிக் கொள்ளவும், கோட்பாடுகளை, தத்துவங்களைக் கற்கவும் உதவியது. இன்னொரு பக்கம் கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டங்களின் வழியாக எனக்கு தமிழ் நவீன இலக்கியமும் பரிச்சயமாகி வந்தது. தோழர்கள் என் சமூக அரசியல் பார்வையை, இலக்கிய நோக்கை, ஆளுமையை வெகுவாக செதுக்கினார்கள். எங்கள் வீடருகே இருந்த ஜெயமோகனின் பழக்கம், எங்கள் கல்லூரியை ஒட்டி வாழ்ந்த சுந்தர ராமசாமியின் நட்பு என்னை மேலும் செறிவுபடுத்தியது.
சு.ரா நமது ஆளுமையை மிக நுட்பமாக தன் உரையாடல்கள் வழி செதுக்கக் கூடியவரே அன்றி நமது வாசிப்பை நேரடியாக திசைமாற்ற முயல்பவர் அல்ல. ஒரு மனிதன் தனக்கான பாதையை தானே கண்டறிய வேண்டும் என நம்பியவர் அவர். நான் போய் சுத்த அபத்தமாக பேசிக் கொண்டிருந்தாலும் கவனித்துக் கேட்டு விட்டு இயல்பாகப் புன்னகைத்து கடந்து விடுவார். ஆனால் ஜெயமோகனோ ரோட்டில் போகிற ஒருவரையே கையைப் பிடித்திழுத்த நவீன இலக்கியம் பற்றி மணிக்கணக்காகப் பேசி மனம் திருந்த வைக்கிற பிடிவாதக்காரர். அவரை ஒரு புத்தகக் கடையில் பார்த்து என் அறியாமையால் சண்டை போட்டு விட்டு பிறகு அவரது “ரப்பரைப்” படித்து விட்டு அவரது நடையிலும் சித்தரிப்புகளிலும் மயங்கி மீண்டும் சந்திக்க சென்றேன். அது ஒரு முக்கியமான சந்திப்பு. ஏனென்றால் அவர் அன்று தல்ஸ்தாய் பற்றி நிறைய பேசினார். அது ஒரு மாலைப் பொழுது. எங்களை மறந்து பேசிக் கொண்டிருந்தோம். இல்லை, அவர் பேசிக் கொண்டே இருந்தார், நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மின்சாரம் போனது. அவர் அந்த இருட்டிலும் அதே உணர்வெழுச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த சித்திரம் என் மனதை வெகுவாக பாதித்தது. அது நீண்ட காலம் என் நெஞ்சில் இருந்தது. நான் முதிர்ந்து ஒரு படைப்பாளியானதும் இதே லட்சிய ஆவேசத்துடன் இலக்கியத்தில் இருக்க வேண்டும், நடைமுறைப் பிரச்சனைகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான் என்று முடிவெடுத்தேன்.
அடுத்த நாளே நான் என் கல்லூரி நூலகத்தில் இருந்து “போரும் வாழ்வும்” நாவலின் தமிழ் மொழியாக்கத்தை எடுத்து வாசித்தேன். அந்த நாவல் தான் என்னை ஒரு வாசகனாக புரட்டிப் போட்டது. பாலகுமாரனில் இருந்து விடுவித்தது. வெகுஜன நாவல்களில் காட்டப்படுவது சுத்த முட்டாள்தனம் என நினைக்க வைத்தது. அப்படி ஒரு அட்டகாசமான உலகம், பிரம்மாண்டம், துல்லியமான உளவியல் சித்தரிப்புகள் அந்நாவலில் இருந்தது. முக்கியமாக அந்நாவல் வாழ்க்கையைப் பற்றி, காலத்தைப் பற்றி நேரடியாகப் பேசியது - அதாவது வரலாற்றின் வழியாக. நான் அதுவரைப் படித்த நாவல்கள் ஒன்று ஒரு தனிமனிதனின் வாழ்வை, வாழ்வின் சவால்களை மிகச்சுருக்கமாக, நெகிழ்வாக, கவித்துவமாக அலசியவை. ஆனால் இங்கு ஒரு எழுத்தாளர் அனாயசமாக நேரடியாக காலத்தைப் பற்றி ஜனங்களின் அகவுலகங்களை முன்வைத்தும், வரலாற்றை புனைவாக சித்தரித்தும் எழுதுகிறார்! என்னால் அந்த வியப்பைக் கடந்து சுலபத்தில் வர முடியவில்லை. அதன் பிறகு சு.ரா, அசோகமித்திரன், தி.ஜா, தஸ்தாவஸ்கி, காப்கா ஆகியோரை அந்நாட்களில் வாசித்த போதும் தல்ஸ்தாய் மீதான பிரமித்து இவர்களைக் குறைவாக மதிப்பிட வைத்தது. என்ன இருந்தாலும் தல்ஸ்தாய் ஒரு அத்தியாத்தில் பேசிப் போகிறவற்றைத் தானே இவர்கள் மொத்த நாவலிலும் பேசுகிறார்கள், அற்ப மானுடனர்கள் என நினைத்தேன். தல்ஸ்தாய்க்கு அடுத்த படியாக மார்க்வெஸ், கோர்த்தஸார், போர்ஹெ உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க படைப்பாளிகள் என்னைக் கவர்ந்தார்கள். அவர்களிடம் இதே போல ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தத்துவார்த்தமாக நோக்குகிற போக்கு, பிரம்மாண்டம், மாய எதார்த்தம் இருந்தது ஒரு முக்கிய காரணம் என நினைக்கிறேன். மேலும் அந்நாட்களில் எனக்கு எதார்த்த நாவல்கள் மீது ஒரு ஒவ்வாமை இருந்தது. அ. மாதவன், நீல பத்மநாபன், தோப்பில் என யாரையும் பிடிக்கவில்லை. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒவ்வொரு வகையான நாவலையும் அதன் வடிவத்தையும் நோக்கையும் பொறுத்து வாசிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன். அன்று எனக்கு முக்கியமல்லாதவர்களாகப் பட்டவர்களெல்லாம் இப்போது முக்கியமான எழுத்தாளர்களாகத் தோன்றுகிறார்கள். தல்ஸ்தாய் என் மதிப்பில் பலமடங்கு உயர்ந்து தல்ஸ்தாய் விழுந்து விட்டார். ஆனால் முதன்முதலாக ஒரு இலக்கிய மதிப்பீட்டை உருவாக்க எனக்கு “போரும் வாழ்வுமே” உதவியது. ஒரே ஒரு எழுத்தாளர் பற்றின மதிப்பீடு மட்டும் நிலைக்கிறது - ஜெயகாந்தன். அவரை என் 17 வயதில் இருந்து இப்போது வரை பலமுறைப் படித்தும் அவர் ஒரு புனைவெழுத்தாளரே அல்ல, அவருக்கு சிறுகதை, நாவல் ஆகிய கலைவடிவங்கள், உலக இலக்கியம் பற்றி ஒன்றும் தெரியாது, ஒரு ஒழுக்க போதகர், பேச்சாளர், முரட்டுத்தனமான கதைசொல்லி என்று தோன்றுகிறது.
அந்நாட்களில் நான் எதை வாசித்தாலும் என் கேள்விகளை தொகுத்து எடுத்துக் கொண்டு ஜெயமோகனைக் காணச் செல்வேன். அனேகமாக தினமும் அவரை சந்தித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய முடிவுகள் தவறென்று அவர் ஒவ்வொன்றாக உடைத்துக் கொண்டே இருந்தார். ஆவேசமான வாசிப்பில் கவனிக்கத் தவறும் நுட்பமான பகுதிகளை கவனிக்க அவரே அந்நாட்களில் சொல்லித் தந்தார்.
அது மட்டுமல்ல, போகப் போக கல்விப்புலத்தில் ஆங்கில இலக்கிய வாசிப்பும், நடைமுறையில் நவீன இலக்கியமும் என்னுடைய ரொமாண்டிக்கான பார்வையை மாற்றி வேறொரு நுண்ணுணர்வை அளித்தது. என்னுடைய சிந்தனை உணர்ச்சிகரமாக அன்றி விலகி நின்று தர்க்கரீதியாக அணுகுவதாக மாறியது. அதுவே பின்னர் என் புனைவு, அபுனைவிலும் தாக்கம் செலுத்தியது என நினைக்கிறேன். கடந்த ஏழாண்டுகளில் கிடைத்த பின்னமைப்பியல் வாசிப்பு என்னுடைய அந்த விட்டேந்தியான சிந்தனாமுறையின் போதாமையை உணர வைத்தது.
இது தான் என் வாசிப்பின் பயணம்.


கருத்துகள்