முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இது தாங்க எங்களுக்கு சோலியே!

(நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை - பகுதி 3)


வேளாவேளைக்கு சாப்பிடுவது என்று சொல்லுவார்கள். இது ஒரு வாழ்க்கை முறை என்றால் தோணும் போது தோணுகிற மாதிரி சாப்பிடுவது இன்னொரு வாழ்க்கை முறை. ஊரில் என்னுடைய அண்டை வீட்டில் ஒரு வயதான தம்பதி. நான் அவர்களுடைய தினசரி நடைமுறையை என் ஜன்னலில் இருந்தே கவனிப்பேன். காலை ஆறுமணி என ஒன்று உண்டெனில் சரியாக அப்போது அவர்கள் இருவரும் சுடச்சுட காபி குடிப்பார்கள். இரண்டு மணிநேரம் கழித்து எட்டு மணிக்கு காலை உணவு, பத்து மணி சத்துமாவுக் கஞ்சி அல்லது ஏதாவது ஒரு சிற்றுண்டி. பன்னிரெண்டரைக்குள் மதிய உணவு சோறு, கூட்டு, பொரியல் சகிதம், மூன்று மணிக்கு தேநீரும் நொறுக்குத்தீனியும், ஐந்தரை மணிக்குள் மீண்டும் தேநீர், சரியாக ஏழு மணிக்கு இரவுணவு. கடிகாரம் தவறினாலும் இந்த அட்டவணை மாறி நான் கண்டதில்லை. எனக்கு இவர்கள் வாழ சாப்பிடுகிறார்களா அல்லது சாப்பிட வாழ்கிறார்களா என குழப்பம் ஏற்பட்டதுண்டு. ஆனால் இன்று பல உணவுமுறை பயிற்சியாளர்கள் இதுதான் சரியான வாழ்வு முறை என்கிறார்கள். அதாவது அந்த வயதான தம்பதி எந்த புத்தகத்தையும் படிக்காமல் மிக ஆரோக்கியமாக சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறார்கள். அந்த தாத்தா 90 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார். எண்பது வயதில் அவர் மாமரத்தில் ஏறுவதைக் கண்டிருக்கிறேன். அந்த பாட்டி இன்னும் நன்றாக இருக்கிறார்

இவர்கள் மட்டுமல்ல என்னுடைய சொந்த பாட்டியும் இப்படித்தான் - எங்கே போய் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவருக்கு ஐந்து வேளை உணவுகளும் கிடைத்து விட வேண்டும். எட்டு மணி என ஒன்றிருந்தால் கடிகாரம் பார்க்காமலே அவர் காலை உணவுக்கு தயாராகி விடுவார். என்னுடைய ஊரில் கடந்த தலைமுறைக்கு முந்தின தலைமுறையினர் இன்னமும் இப்படித் தான் சாப்பிடுகிறார்கள். இன்று உணவுமுறை பயிற்சியாளர்கள் சரியான நேரத்தில் சாப்பிடுவது, சாப்பாட்டுக்கு இடையில் இரண்டு மணிநேரம் இருக்கும்படி பார்த்துக் கொள்வது ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கவும், உடல் சத்துக்களை உள்வாங்கவும் அவசியம் என்கிறார்கள். ஆனால் என்னுடைய தலைமுறையில் தான் நிறைய பேர் அவசர வாழ்க்கை முறைக்கேற்ப உணவுப் பழக்கத்தையும் மாற்றிக் கொண்டு அவஸ்தைப்படுகிறோம். சான்றிதழ் பெற்ற ஒரு டயட்டீஷியன் வந்து கட்டணம் வாங்கிக் கொண்டு எப்படி நம் முன்னோர்களைப் போல சாப்பிடுவது என எங்களுக்கு சொல்லித் தர வேண்டி இருக்கிறது.


நான் இதைப் போல நேரம் குறித்துக் கொண்டு சிறிய அளவில், சீரிய இடைவெளியில் ஐந்தாறு தவணைகளாக உண்ண முயன்றிருக்கிறேன். ஆனால் ஒன்பதரை மணிக்குள் இரவுணவை முடிப்பதே எனக்கு பெரிய பிரயத்தனமாக இருக்கிறது. ஏனென்றால் என்னுடைய ஒருநாளைக்குள் நூறு விசயங்களை செய்து முடிக்க நினைக்கிறேன். திட்டவட்டமாக இந்த நேரத்தில் இதைத் தான் செய்வேன் என வகுத்து வைத்து நான் வாழ்வதில்லை. நிறைய பேர் நகரங்களில் என்னைப் போலத்தான் இருக்கிறார்கள்.  


நேற்று ஒரு நண்பரைப் பார்க்கப் போயிருந்தேன். மாலை ஆறு மணியிருக்கும். ஒரு டப்பாவில் இருந்து சப்பாத்தி, குறுமா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

 “என்னங்க இப்போ போய் லஞ்ச் சாப்டுறீங்க?”

 “அதெல்லாம் அப்படித்தாங்க.” என்று அவர் சாதாரணமாக சொன்னார்


ஒவ்வொருவருக்கும் ஒரு நெருக்கடி, அலைகழிப்பு இருக்கும். சிலருடைய வாழ்க்கை நிலையே அவர்களுக்கு ஒரு ஒழுங்கை உணவுமுறையில் கொண்டு வர அனுமதிக்காது. இடைவேளை இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிற அலைச்சல், தொடர்ச்சியான சந்திப்புகள், ஓய்வில்லாத வேலைகள் என ஆகும் போது வேளைக்கு நியாபகம் வைத்து சாப்பிட இயலாது. இன்னொரு வகையினருக்கு நேரமிருந்தாலும் மனம் இருக்காது அல்லது பசியிருக்காது. கிடைத்த போதெல்லாம் சாப்பிடுவார்கள்


நான் மேற்சொன்ன இந்த இரண்டு வகையாகவும் (மோசமாக) இருந்திருக்கிறேன். இப்போது தான் ஒரு ஒழுங்குமுறைக்குள் என்னுடைய உணவுப்பழக்கம் வந்திருக்கிறது. நேரத்துக்கு உண்பது, உணவுகளுக்கு இடையே சீரிய இடைவேளையை வைத்துக் கொள்வது, முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படி சாப்பிடுவது, ஒவ்வொரு வேளையும் அளந்து சாப்பிடுவது - இதையெல்லாம் இன்னும் துல்லியமாக செய்ய இயலவில்லை என்றாலும் தினமும் முயல்கிறேன். அதற்கான பலன்களையும் அனுபவிக்கிறேன். குறிப்பாக எடை குறைப்புக்கு இந்தஉணவு ஒழுக்கம்மிக மிக அவசியம்.


கடந்த முறை மனுஷ்யபுத்திரனை சந்தித்து பேசிக்கொண்டிருந்த போதுகரெக்டா  டயட் இருக்கிறது, உடற்பயிற்சி செய்யுறது ஒரு தனிவேலைங்க. அதை வேலை மெனக்கெட்டு கண்ணுங்கருத்துமா செய்யணும். ஏகப்பட்ட வேலைகள் குவியும் போது அதைப் பண்ணவே முடியாது.” என்றார். இது முழுக்க உண்மை


வாழ்க்கைக்காக சாப்பிடாமல் சாப்பிடுவதற்காக வாழ்வதே சிறந்தது என இப்போது தாமதமாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். அதே போல சாப்பாட்டுக்கு இடைஞ்சலாக வரும் வேலைகளை முடிந்தளவுக்கு நாம் குறைத்துக் கொண்டு உண்பதும் அவசியம். எடை குறைப்புக்காக மட்டுமல்ல, இது தான் சரியான வாழ்க்கை என நினைக்கப் பழக வேண்டும். உங்களுக்கு குறைந்தபட்சமான வசதிகள் இருந்தால், அன்றாட வாழ்க்கையில் பண நெருக்கடிகள் பெரிதாக இல்லையென்றால், வேலைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டு டப்பாவைத் திறக்கையில்என்னடா இதுவே பொழப்பா இருக்கோமேஎன உங்களுக்குஅலுப்புவந்தால் நீங்கள் சரியாக வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். போகப் போக அலுப்பே ஆரொக்கியமாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...