முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மறைதல்


திபெத்திய பௌத்த எமன்


நான் சொல்லப் போவது ஒரு பிரபலமான கருத்தாக இருக்கப் போவதில்லை எனத் தெரியும். ஆனால் இவ்விசயத்தில் இது தான் என் பார்வை. ஒருவர் காலமாவது அத்தனை கொடூரமான விசயம் இல்லை. எங்கிருந்தோ, சிலசார்புநிலைகளால்ஆன சூழல்களால் பூமியில் தோன்றியவர் அதே போல போய் விட்டார். காலமின்மையில் இருந்து வந்தவர் காலமின்மைக்குள்ளே போய் விட்டார் என்றே புரிந்து கொள்கிறேன். வாழும் போதும் நாம் அந்த காலமின்மையை உணர தத்தளித்தபடியே இருக்கிறோம், நீருக்குள் மீன் காற்றுக்காக தன் செவுள்களைத் திறந்து திறந்து மூடுவதைப் போல. காலமானவர் நாம் அனுதினமும், ஒவ்வொரு நொடியும் திறந்து திறந்து பார்க்கும் காலம் எனும் ஜன்னலை முழுக்கத் திறந்து அதன் வழி குதித்து விடுகிறார். அல்லது அவர் (ஹைடெக்கர் சொல்வதைப் போல) நம் பார்வையில் படும்படி எங்குமே போகவில்லை. அவர் எங்கு போனார் என்றே கண்டறிய முடியாது போவதே மரணம். எங்கு போனார் என்றறியாத போது ஏன் அழ வேண்டும்? அவரே தான் போவதைக் காண முடியாது, வாழும் எவருமே வாழ்கையில் மரணிக்க முடியாது, சாவின் கணத்தில் இந்த உலகத்தை அவர் தன் உடலால் அறிய முடியாது என்கிறார் ஹைடெக்கர். காலமாகிறவருக்கே முடியாத ஒன்றைப் பற்றி நாம் ஏன் கலங்க வேண்டும், அந்த அபூர்வத்தை கையெடுத்து வணங்காமல்?


சாகக் கூடாது எனும் உயிர்த்துடிப்பு நம்மில் அனைவரிடம் உள்ளது. ஆனால் அதே நேரும் ஒவ்வொரு நொடியும் நாம் சாகத் துடிக்கிறோம். பேச்சில், எழுத்தில், சாப்பிடுவதில், அசைகையில், இயற்கையை ரசிக்கையில், சிரிக்கையில், வெறுமனே எங்கோ அமர்ந்திருக்கையில். இரண்டுமே சேர்ந்தது தான் மனிதனின் இருத்தல், அவனது வாழ்க்கை. அதன் நீட்சி மட்டுமே மரணம். நாம் மரணத்தை ஒருஇழப்பாகமட்டும் காண்பது வாழ்வையும் இழப்பாகக் காண்பதாகும். இது ஒவ்வொரு நிமிடத்தையும் உற்பத்திக்கான உழைப்பாகக் காணும் மேற்கத்திய முதலீட்டிய பார்வையில் இருந்து வருவதென நினைக்கிறேன். அது மட்டுமே வாழ்க்கை அல்ல. பொருளியலைத் தாண்டி தான் நமது இருத்தல் உள்ளது


அதனால் தான் பௌத்தத்தில் காலமாதல் ஒரு ஞானமடைதலாகிறது. அதாவது இருத்தலின் இன்மையை அறிவது. அறிவது என்று கூட சொல்லக் கூடாது. அது இது தான் என்று காண்பது. அது ஒன்றுமில்லை என்று பார்க்க முடிவது. அதனாலே எமனை ஒரு தர்மபாலனாக பௌத்தம் கண்டது. பின்னர் பௌத்தத்தை எதிர்த்து உருவான மதங்கள் எமனை ஒரு தீய கடவுளாக, மக்கள் அஞ்சக் கூடிய கரிய உருவமாக, பாசக்கயிறுடன் எருமையில் ஏறி வருகிறவனாக மாற்றியது. ஆனால் நிஜத்தில் எமன் ஒரு அற்புதமான தெய்வம். அந்த கருமை கூட நிஜத்தில் அருமையான நிறமே. கருமையில், இருட்டில் ஒன்றுமே இருப்பதில்லை. நாம் இருட்டில் தோன்றி இருட்டுக்குள் செல்கிறோம்.


நமது பண்பாட்டில் மரணத்தைக் கொண்டாடும் போக்கு உள்ளது. அதை நாம் நகரமயமாக்கலால் இழந்து வருகிறோம். எப்போதும் மௌனமாக கண்ணீர் வடிக்கிறோம். சத்தமாக அழுவதோ சிரிப்பதோ இல்லை. இரங்கல் குறிப்புகளில் மௌனமாக விசும்புகிறோம். இதுவும் நமது தன்னலம் மட்டுமே. அவர் இருந்திருந்தால் இன்னும் கூடுதலாக அவரால் அடைந்திருக்கலாமே எனும் தன்னலம். நானும் தன்னலத்தால் ஒருவரது மரணத்திற்காக அழுதிருக்கிறேன். ஆனால் பெரும்பாலான நேரங்களில் நான் அப்படி இருப்பதில்லை


ஒருவரை உணர்வுவயப்பட்டு பற்றிக் கொண்டிருப்பது ஒரு நோய்மை. இந்த சமூக வாழ்க்கையில் நம்மால் அதைத் தவிர்க்க இயல்வதில்லை. ஆனால அப்படி தீவிர பற்றுதல் இல்லாத போது நாம் மகிழ்ச்சியுடன் ஒருவரதுகாலமற்று ஆதலைக்கொண்டாட வேண்டும்


மேலே உள்ள கிளையில் தொக்கி நிற்கும் தேன்கூட்டில் இருந்து சொட்டும் தேனை நாம் கீழே நின்றும் துளித்துளியாகப் பருகிக் கொண்டிருந்தோம். இப்போது நம்மில் ஒருவர் அந்த தேன்கூட்டையே நேராகப் போய் அடைந்து விட்டார். நாம் இன்மையாகத் தவிக்கையில் அவர் ஒரு முழுமையைப் பெற்று விட்டாரே? அது எவ்வளவு அழகானது! அது ஒரு சாதனை அல்லவா! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஒருவரது பாடையைத் தூக்கிச் செல்வது எவ்வளவு அற்புதமான ஒரு பண்பாடு. நாம் அதை ஒரு பெரும் சமூக நிகழ்வாக மீட்க வேண்டும். அது முடியாவிட்டாலும் தனித்தனியாக ஒரு புன்னகையுடன், இனிப்புடன், அன்பான சொற்களுடன் நாம் காலமாதலைக் கொண்டாடலாம். அழுவது காலத்திற்கு நாம் செய்யும் அவமரியாதை அல்லவா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...