முன்பெல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளின் ஆசீர்வாதம் பெற்ற கட்சி ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டு தேர்தலில் வெல்லும். காங்கிரஸுக்கு அப்படி புரவலர்களாக முதலாளிகள் இருந்தார்கள். பெரும் பணத்தை காங்கிரஸ் தலைமை தன் குடும்பத்துக்குள்ளும் வைத்துக்கொண்டது. அதைத் தக்க வைக்கவே வாரிசு அரசியலைப் பண்ணியது. ஆனால் பாஜக புரட்சிகரமாக ஒரு மாற்றத்தை செய்தது - அதுவே கார்ப்பரேட் முதலீட்டியமாகியது. அதுவே தேசிய வங்கிகளின் பணத்தை எடுத்து வியாபாரம் பண்ணி, கட்டமைப்புத் திட்டங்களை தானே எடுத்துப் பண்ணி, பொருளாதார முடிவுகளை, வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்களை தனக்கேற்ப அமைத்துக் கொண்டு மிகக்குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து உலகின் முதல் பத்து பணக்காரர்களில் ஒன்றானது - அதாவது அதானி என்னும் தனிமனிதர் அல்ல பெரும் பணக்காரர், அவர் மோடியின் பினாமியும் அல்ல, அவரே பாஜக.
வரும் சில பத்தாண்டுகளில் மிச்சமுள்ள கார்ப்பரேட் முதலாளிகளையும் முழுங்கி பாஜக இந்நாட்டின் மொத்த பொருளாதாரத்தையும், முதலீட்டையும், லாபங்களையும் தனதாக்கும். அம்பானியைப் போன்றோர் கூட இருக்க மாட்டார்கள். நீங்கள் பாஜக கட்டமைக்கும் உலகில் வாழ்ந்து, பாஜக உற்பத்தி செய்பவனவற்றை மட்டும் நுகர்ந்து, அவர்களுடன் அவர்களாகவே இருக்க நேரும். பணமில்லாமல் தேர்தல் அரசியலில் எதுவும் நாட்ட முடியாது. இனி ஊடகங்கள், சினிமா, வியாபாரங்கள், சமூக வலைதளம் என அனைத்தும் அவர்களுடைய உடைமையாகும் - இது நிச்சயமாக நடக்கவே போகிறது. அதனாலே பாஜகவை தேர்தலில் வீழ்த்துவது கிட்டத்தட்ட அசாத்தியம் என்கிறேன் - அதற்கு முதலில் பாஜகவுக்கு வெளியே முதலாளிகள் தோன்ற வேண்டும். அவர்கள் ஒன்றிணைய வேண்டும்.
தேசம் தழுவிய நடையபயணமோ மக்களின் விழிப்புணர்வோ அல்ல பொருளாதார அமைப்பில், முதலீட்டிய அணிவகுப்பில் வரும் மாற்றம் மட்டுமே தேர்தல் முடிவுகளில் மாற்றத்தைக் கொண்டு வரும். ஏனென்றால் பணமின்றி இன்று அரசியலில் ஒன்றுமே பண்ண முடியாது.
தேசிய வங்கிகளை அதானி கொள்ளையடிக்கவில்லை, அவற்றில் உள்ள பெரும் பணத்தை, மக்களின் பணத்தை பாஜக தன் முதலீட்டும் வியாபாரத்துக்கும் தேர்தல் செலவுகளுக்கும் துணிச்சலாக பயன்படுத்துகிறது. அதனாலே அதானி ஒருநாள் எல்லா பணத்தையும் சுருட்டிக்கொண்டு ஓடுவிடுவார் என்று நான் நினைக்கவில்லை. பணம் எப்போதும் பாஜகவுடனே இருக்கும். அதானி ஒத்துவரவில்லை என்றால் மட்டும் பணத்தைப் பறித்துக் கொண்டு அவரை வெளிநாட்டுக்கு துரத்தி விடுவார்கள். அவரிடத்தில் புது அதானி வருவார், அவருடைய முகமாக செயல்பட புது மோடி வருவார். அடுத்த அரை நூற்றாண்டுக்குள் நீங்களோ நானோ வேலை பார்க்கப் போகும் தனியார் நிறுவனத்தின் பிரதான பங்குகளை பாஜகவே வைத்திருக்கும். அந்நிறுவனங்களின் முதலீட்டுக்கான பணத்தை மட்டும் நம்மிடம் இருந்து விதவிதமாக எடுத்துக் கொள்வார்கள். நாமே உண்மையான முதலீட்டாளர்கள், அப்பாவி வாடிக்கையாளர்களாக, நுகர்வோராக இருப்போம் - ஆனால் பணம் மட்டும் கட்சியிடம் இருக்கும். இது போக நம்மை நிர்வகிக்க வரி வேறு விதிப்பார்கள்.
நாம் திராவிட மாடல் பற்றியெல்லாம் பேசுகிறோம், அவர்கள் பேசாமலே ஒரு பினாமி மாடல் தேசிய பொருளாதாரத்தை நிறைவேற்றி வருகிறார்கள். திராவிட மாடலை இது ஒருநாள் முழுங்கி விடும். கருத்தியல் அல்ல பொருளாதாரமே நமது வாழ்வின் ஆதாரம் என்பதை மறவாதீர்கள்.
இந்த பினாமி மாடலை மோடி ரெண்டாயிரத்தில் தனது குஜராத்தில் முதலில் முயன்று பார்த்ததாகவும், அதற்கு ஒரு காரணம் அங்கிருந்த முதலாளிகள் அவருக்கு எதிராக செயல்பட்டதுமே என்று சொல்லப் படுகிறது. இனி முதலாளிகள் இருந்தால் தானே, இனி என் கட்சியே மொத்த முதலீட்டியமாக செயல்படும் என முடிவெடுத்து அவர் அதானியைக் கொண்டு வந்து சில ஆண்டுகளிலேயே மொத்த குஜராத்தின் வளத்தையும் வளைத்துப் போட்டதாக சொல்லப்படுகிறது. இதை வைத்தே குஜராத் ஒளிர்கிறது, மோடி ஒரு நம்பிக்கை நாயகன் எனும் பிரச்சாரத்தை பாஜகவே பண்ணிக் கொண்டது. மோடி பிரதமர் ஆன அரைப் பத்தாண்டுகளிலே அவர் ஒட்டுமொத்தமாக இந்நாட்டின் பொருளாதாரத்தையும் தன் பாக்கெட்டில், அதாவது பாஜகவின் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். பணமதிப்பிழப்பு, தேர்தல் பாண்டுகள், ஆன்லைன் பணப்பரிமாற்றம் என பல புரட்சிகர முடிவுகளை இதற்காகவே எடுத்தார். இன்று தமிழகத்திலும் பல துறைமுக, சாலைக் கட்டமைப்பு சேவை வியாபாரங்கள் பாஜக வசமே உள்ளன. அவர்களுடைய அக்டொபஸ் கரங்கள் பரவாத இடமே இந்தியாவில் இல்லை.
திமுக குடும்பம் வியாபாரம் செய்தால், சொத்து குவித்தால் அதை சாடுகிறோம், ஆனால் பாஜக அதைவிட லட்சம் கோடிகளில் ஊழல் செய்தால், பினாமி முதலீட்டிய அரசியல் மூலம் நம் வங்கிகளை முழுங்கினால் நம்மால் அதை ஊழல் என்று கோர முடியாது. ஏனென்றால் பாஜகவில் நேரடியாக மொத்த பணமும் தனிநபர்களிடம் போகாது. ஒருவர் கட்சியின் பினாமியாக இருப்பதற்கும் தனிநபரின் பினாமியாக இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இவரே பாம் வைப்பாராம், அதை இவரே கரெக்டா எடுப்பாராம் என்பதைப் போல மொத்த வணிகத்தையும் பணப்புழக்கத்தையும் இவர்களே கட்டுப்படுத்தி நடத்தி நம்மையே செலவு பண்ண வைத்து, அச்செலவு எந்தளவுக்கு இருக்க வேண்டும் எனவும் தீர்மானித்து லாபத்தையும் அவர்களே வைத்துக் கொள்வார்களாம்.
எனக்குத் தெரிந்து ஒரு கட்சியே ஒரு நாட்டின் மிகப்பெரிய முதலாளியாக இருந்து வியாபாரம் பண்ணி மொத்த பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்துவது இந்தியாவில் மட்டுமே நடக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் அதானியைக் விமர்சித்துக் கொண்டிருக்கிறோம். அதானியும் மோடியும் இந்த புதிய சிஸ்டத்தின் குறியீடுகள் மட்டுமே. அதானியை ஒரு திசைதிருப்பலாக பயன்படுத்தி பாஜக ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்கிறது என்பதே சூட்சுமம்!
கருத்துகள்