நவீன சமூகத்தில் கடவுள் நம்பிக்கை தளர்ந்து போய் தமன்னா இடுப்பைப் போல் ஆகிவிட்டதாலே மக்கள் அறத்தைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்களோ என ஒரு ஐயம் எனக்குண்டு. ஏனென்றால் வெளிப்படையான பக்திப்பழங்களோ சாமியார்களோ அறம் குறித்து பேசுவதில்லை கோருவதில்லை. ‘நானுண்டு என் கடவுளும் குடும்பமும் சொத்தும் உண்டு’ என்று கமுக்கமாக இருந்துகொள்கிறார்கள். எப்படி ஒரு பக்தனிடம் போய் கடவுளுக்கு என்ன சான்று எனக் கேட்க முடியாதோ அப்படியே அறவாழியான்களிடமும், நீதியாளர்களும், ‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்களிடமும்’ கேட்டால் அதை “அனுபவத்தில உணரணும்” என சொல்வார்கள். இதனாலே பெயர் பெற்ற எழுத்தாளர்களின் பிறழ்வுகள், குற்றங்கள் இவ்வளவு அதிகமாக இவர்களை உலுக்கிறது. மூச்சுவிடாமல் அவர்களைத் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் இந்த எழுத்தாளர்களும் ஏதோ ஒரு சமூக நீதியை, மானுட அறத்தை முன்னெடுத்தவர்களே. இப்போதும் அவர்கள் தீவிர அறவாழியர்களே. சந்தேகமே இல்லை. இந்த முரணைத் தான் மக்களால் ஏற்க முடியவில்லை. ஆனால் என்னைப் போன்ற எளிய ‘மனித மிருகங்களுக்கு’ எந்த அதிர்ச்சியும், வருத்தமும் கோபமும் இல்லை. உங்களுக்குத் தான் இது பிரச்சினை. என் வாழ்க்கையில் சாமி நம்பிக்கையும் இல்லை, அற நம்பிக்கையும் இல்லை. நான் ஒரு சாதாரண விலங்கு.
நீங்கள் அந்த காலத்தில் இருந்து இன்று வரை வருகிற முருகபக்தி, ஐயப்ப சாமி படங்களையும் மனிதநேய படங்களயும் பாருங்கள் - ரெண்டிலும் ஒரே கதையே வரும். ஒருவகை படங்கள் கடவுள் பக்தர்களுக்கானவை, இன்னொரு வகைப் படங்கள் நீதி பக்தர்களுக்கானவை. மரு வைத்தவர், வைக்காதவர்!
கருத்துகள்