வணக்கம் அபிலாஷ்,
எனக்கும் என் மனைவிக்கும் 2016 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு நாங்கள் நிறைவாக குடும்பம் நடத்தினோம். எனக்கு பணிமாறுதல் அறிவிப்பு வரும் வரை எங்கள் குடும்ப வாழ்க்கையில் மிகப்பெரிய விரிசல்களை அது ஏற்படுத்தும் என நான் அறியவில்லை.
நாள் 23 ஜனவரி, நேரம் சுமார் 2.00 மணி
நான் ஹைதராபாத்துக்கு பணிமாறுதல் காரணமாக குடிபெயர்வதாக இருந்தால், தன் பெற்றோரை விட்டு வரமுடியாது என என் மனைவி கூற நான் அவர் தன் பெற்றோரை சந்திப்பதற்காக வசதிகளை நான் பண்ணித் தருவதாக உறுதி சொல்லி அவருக்கு நிலைமையை புரியவைக்க முயற்சி செய்தேன். ஆனால் அவரோ கடுங்கோபம் கொண்டவராக என்னை சாடத்தொடங்கினார். தன்னை தலாக் செய்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, தனக்கு செட்டில்மென்ட் பணம் தருமாறும் என் மனைவி கேட்டார். நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையா, குடும்பமா என தேர்வு வந்த போது நான் பின்னதையே தேர்ந்தேன். புதிய வேலைக்கு செல்லாமல் பெங்களூரை சேர்ந்த நிறுவனத்தில் வீட்டிலேயே இருந்து பணிபுரியலாம் என முடிவெடுத்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்து பணிசெய்யும் உரிமையை ரத்து செய்து நான் அலுவலகம் போய் வேலை செய்தே ஆக வேண்டும் என நிர்வாகம் முடிவு செய்திட நான் நிலைமையை என் மனைவியிடம் விளக்கினேன். ஆனால் அவரோ என்னுடன் பெங்களூருக்கு குடிபெயர்வதையும் விரும்பவில்லை. அதனால் நான் அவரிடம் என் மகனின் முதலாம் வகுப்பு பள்ளி அட்மிஷன் தொடர்பாக பேசினேன். பெங்களூருக்கு செல்ல விருப்பம் இருந்தால் வரலாம் இல்லை என்றால் தன் பெற்றோர் வீட்டருகிலேயே இருந்து கொண்டு என் மகனை அங்கேயே பள்ளியில் சேர்த்து விடுமாறும் நான் தனியாக பெங்களூருவில் வசித்து கொள்கிறேன் என பேசிக்கொண்டிருக்கும் போது என் மனைவி ‘வெகுண்டெழுந்து’ என்னை அடித்து விட்டார். அது வழக்கமே. நான் அவரது கோபம் தணியட்டுமே என இந்த வன்முறையை பொறுத்துக்கொள்வேன். ஆனால் இம்முறை அவரது ஆத்திரம் மட்டுமீறிப் போனதுடன் அவர் இதை ஒரு பெரிய சண்டையாக மாற்ற வேண்டும் எனும் முடிவுடன் இருந்தது தெரிந்தது. என்னை சீண்ட வேண்டும் எனும் நோக்கத்தில் அவர் என்னையும் என் தாயையும் கெட்ட வார்த்தைகளில் திட்டினார். என்னைத் தொடர்ந்து அவர் அடிக்கவும் செய்தார். எனக்கு வேறு வழியில்லாமல் போக நான் என் தாயை உதவிக்கு அழைத்தேன். அப்போது என் தாய் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினார். நான் எவ்வளவோ முயன்றும் என் தாயின் தலை மீது வைத்த கையை எடுக்காததால் நான் என் வலிமையை கொண்டு என் தாயின் உயிரை காப்பாற்றினேன்.
இது சம்பந்தமாக போலீஸ் புகாரை தவிர்க்குமாறு என் மனைவி பெற்றோர் கேட்டு கொண்டதற்கு இணங்க பேச்சு வார்த்தைக்கு சம்மதித்தேன்.
பேச்சு வார்த்தையில் எந்த சுமூக உடன்பாடும் எட்டப்படாததால் நான் என் உயிரையும் என் தாயார் உயிரையும் காப்பாற்றும் பொருட்டு இந்த திருமண உறவில் இருந்து பிரிய முடிவெடுத்திருக்கிறேன். கடந்த ஆறு வருடமாக துன்பத்தில் இருக்கிறேன். உங்கள் அறிவுரை மற்றும் ஆலோசனை வேண்டும். உங்களின் பதிவுகள் ஆறு வருடத்திற்கு முன்னால் கிடைத்திருக்க கூடாதா? இதன் பின் விளைவுகள் என்ன அதை எப்படி சமாளிப்பது?
அன்புடன்
******
அன்பு நண்பரே
உங்களுக்கு நடந்த அவலம் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. கணிசமான விவாகரத்துகள் இதைப் போன்ற அற்ப காரணங்களுக்காகவே முன்னெடுக்கப்படுகின்றன. முன்பு பிழைப்புக்காக மக்கள் ஆப்பிரிக்காவுக்கெல்லாம் புலம்பெயர்ந்து போனதுண்டு. மணமான பின்னர் மனைவி சொந்த ஊரில் இருந்து சொந்தபந்தங்களை விட்டுவிட்டு கணவனின் வீட்டுக்கு வருவது இயல்பான ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று அது ஒரு ‘வன்முறையாக’ பார்க்கப்படுகிறது. அதற்குப் பதிலாக திருமணத்திற்குப் பின்பும் தம் பெற்றோர், உறவினர் அருகிலேயே வசிக்க வேண்டும் என ஒரு பகுதி நவீன பெண்கள் இன்று விரும்புகிறார்கள். கணவன் தன் ஊரில் இருந்து பெயர்ந்து மனைவியின் ஊரிற்கு சென்று, சில நேரங்களில் அவளுடைய பெற்றோரின் வீட்டில் வசிக்கும் பண்பாடும் இன்று நகரங்களில் அதிகரித்து வருகிறது. உங்களுடைய நிலை என்பது இரண்டுக்கும் இடைப்பட்டது எனத் தெரிகிறது. இந்த வகைப் பெண்கள் தன் கணவனுக்கு வேலையில் இடமாற்றம் வரும்போது புலம்பெயர மறுத்து அதை ஒரு பெரிய ஒடுக்குமுறையாக கட்டமைத்து அதற்காக விவாகரத்து கோருவது இயல்பாக நடக்கிறது. இதெல்லாம் ஒரு காரணமா என நீங்கள் யோசித்தால் உங்களைப் போல எத்தனையோ பேர்களுக்கு இம்மாதிரி அற்ப காரணத்துக்காக தம் குடும்பத்தையும் குழந்தையையும் இழக்க நேர்கிறது எனப் புரிந்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு ஆறுதல் அளிக்கும்.
அடுத்து குடும்பத்துக்குள் பெண்கள் தம் கணவரைத் தாக்குவது இன்று பொதுவெளியில் யாரும் அங்கீகரிக்க விரும்பாத ஒரு குடும்ப வன்முறை. ஒன்று இதை ஒரு வேடிக்கையாக கருதி நம் மக்கள் கடந்து விடுகிறார்கள் அல்லது விதிவிலக்கு எனக் கூறுவார்கள். ஒரு பெண்ணால் எந்தளவுக்கு காயங்களை ஏற்படுத்த முடியும் எனக் கேட்கிறார்கள். கணவனின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போகும் பெண்கள், விஷமூட்டிக் கொல்லும் பெண்கள் பலரும் உள்ளனர். நாம் பெண்களை ரொமாண்டிக்காக காண்பதற்கு இது ஒரு இடையூறாக இருப்பதால் நாம் இதை விவாதிப்பதே இல்லை. நீங்கள் இதை நாளை நீதிமன்றத்துக்கு எடுத்துப் போனாலும் அதை நீதிபதியும் பொருட்படுத்த மாட்டார். நீங்கள் ஆதாரம் காட்டினால் கூட உங்கள் மனைவியின் ஜீவனாம்சத்தை குறைக்க மட்டுமே அது பயன்படும். ஏனென்றால் கணவனை அடிக்கும் மனைவியைத் தண்டிக்க சட்டமில்லை. மாமியாரை அடிக்கும் மனைவியைத் தண்டிக்க சட்டமில்லை. ஆனால் அம்மனைவி தன் கணவனும் மாமியாரும் தன்னை சொல்லாலோ பார்வையாலோ துன்புறுத்தினார்கள், அடித்து கொடுமைப்படுத்தினார்கள் என ஒரு வார்த்தை சொன்னால் போதும் கண்வனையும் அவரது அம்மாவையும் தூக்கி இரு ஆண்டுகள் உள்ளே வைத்து விடுவார்கள். ஆகையால் உங்களுக்கு நடந்த துன்பத்துக்கு எந்த பரிகாரமும் இல்லை. மாறாக, உங்கள் மனைவி உங்கள் மீது இன்னும் குடும்ப வன்முறை, வரதட்சிணைக் கொடுமைக்காக போலி வழக்குகள் போடப்படவில்லையே என்று எண்ணி ஆறுதல்படுங்கள்.
அடுத்து, உங்கள் வழக்குக்கு வருகிறேன்.
உங்கள் மனைவி இதுவரை விவாகரத்துக்கு மனு போடவில்லை என்பது அவர் நீங்கள் விண்ணப்பம் போட வேண்டும், அதை வைத்து தன்னை பாதிக்கப்பட்டவர் எனக் காட்டலாம் என எதிர்பார்க்கிறார் எனக் காட்டுகிறது. ஆனால் நீங்களோ அவரோ யார் விவாகரத்துக்குப் போனாலும் அது அவருக்கு மட்டுமே சாதகமாக முடியும். ஏனென்றால் குடும்பநல சட்டங்கள் முழுக்க ஆண்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளன. அதனாலே நீங்கள் நீதிமன்றம் செல்லும் முன்பு ஒரு விசயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்: 6 வருடங்கள் துன்பப்பட்டு விட்டீர்கள். நீதிமன்றத்துக்குப் போனால் இன்னொரு 6 ஆண்டுகள் நீங்கள் துன்புற வேண்டும். சட்டப்படி உங்கள் மனைவி வாழும் ஊரிலேயே வழக்கை நடத்த வேண்டும். ஆக நீங்கள் மாதம் ஒன்றிரண்டு முறைகள் பயணிக்கவும், வக்கீலுக்கு படியளக்கவும் வேண்டும். பெரும்பாலும் வழக்கை ஆரம்பித்து மூன்றாண்டுகளுக்குள் உங்களுக்கு அலுத்து விடும். அலைந்து அலைந்து நிம்மதி போய் விடும். அடுத்து, மாதாமாதம் உங்கள் சம்பளத்தில் இருந்து 25-30% ஊதியத்தை உங்கள் மனைவிக்கு தற்காலிக ஜீவமான்சமாக கொடுக்கும் உத்தரவையும் போட்டுவிடுவார்கள். வாடகை, வீட்டு செலவு, வக்கீல் கட்டணம், அலைச்சல் செலவு, அத்துடன் ஜீவனாம்சம் எனும் போது உங்கள் ஊதியத்தில் ஒன்றுமே எஞ்சாது. ஜீவனாம்ச உத்தரவென்பது “நீ பேசாமல் செட்டில்மெண்ட் கொடுத்து ஓடிப் போய்விடு” எனும் குறிப்பன்றி வேறில்லை. அதன் பிறகும் நீங்கள் முட்டிமோதினால் நிரந்தர ஜீவனாம்சமும் விவாகரத்தும் கிடைக்கும். அதனால் உங்களுக்கு எந்த லாபமும் இல்லை. ஆறாண்டுகள் வக்கீலுக்கு குறைந்தது 4.8-6 லட்சங்களாவது செலவாகும் என்பது எதார்த்தம். ஆயுள் முழுக்க ஜீவனாம்சம் என்பது எவ்வளவு வரும்? அது பெரும் தொகை. உங்களால் தாங்க முடியாத தொகை. 20 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் உடல்நலப்பிரச்சினையால் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு ஜீவனாம்சத்தை கொடுக்காவிடில் அதை நீதிமன்றம் கடுமையாக கையாளும். சிறுநீரகம் செயலிழந்த நிலையில் எழுபது வயதில் ஜீவனாம்சம் கொடுக்கவில்லை எனும் வழக்குக்காக கடும் வலியுடன் நீதிமன்ற பெஞ்சில் காத்திருந்த ஒரு மனிதரைப் பார்த்திருக்கிறேன். இது யாருக்கும் வரலாம் என்பதால் ஜீவனாம்சம் பக்கமே போகாதிர்கள். அது சாகும் வரை உங்கள் தலைமேல் தொங்கும் கத்தி.
நீதிமன்றத்துக்கு சென்று ஆறாண்டுகள் அலைந்து மொத்தமாக வக்கீலுக்கு கொடுக்கும் பணத்துடன் சிறிது பணத்தை சேர்த்து இப்போதே உங்கள் மனைவிக்கு கொடுத்து செட்டில் பண்ணுவதே புத்திசாலித்தனம் என்கிறேன். ஒரு ஆண் குடும்ப நல நீதிமன்றம் போவது கடன்கேட்டு வட்டிக்கடைக்குப் போய் ஆயுள் பரியந்தமும் வட்டிக்கு வட்டி கட்டுவதற்கு சமம்.
அது மட்டுமல்ல உங்கள் மனைவி உங்களுக்கும் உங்கள் அம்மாவுக்கும் எதிராக குடும்ப வன்முறை, வரதட்சிணைக் கொடுமை என போலி வழக்குகள் போட வாய்ப்புகள் ‘பிரகாசமாக’ உள்ளன. அதனால் இனிமேலும் அவரது கோபத்தை சீண்டாமல் பணிந்து போய்விடுங்கள். விவாகரத்து வாங்கிவிட்டால் பின்னர் அவர் போலி வழக்கு போட வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.
அடுத்து செட்டில்மெண்ட் பேச்சுவார்த்தை நடக்கும் போது சற்று கூடுதலாக பணத்தைக் கொடுத்து உங்கள் குழந்தையை நீங்களே வளர்க்கும் உரிமையைப் ‘பெற’ முடியுமா எனப் பாருங்கள். இல்லாவிட்டால் உங்கள் குழந்தையை காட்டவே மாட்டார்கள். அப்படி அவர் ஒப்புக்கொள்ளாவிடில் பேச்சுவார்த்தைக்குப் போகுமுன்னரே குழந்தையை பார்க்கும் உரிமையை வேண்டி நீதிமன்றத்தில் விஸிட்டேஷனுக்கு மனு ஒன்றை சமர்ப்பித்து விடுங்கள். அதன் பிறகு அந்த அழுத்தத்தைக் கொண்டு அவரை சம்மதிக்க வைக்க முடியுமா எனப் பாருங்கள்.
மேலும் சில முக்கியமான விசயங்கள்:
பேச்சுவார்த்தையின் போது எப்போதுமே முரண்டுபிடிக்காதீர்கள். கோபத்தைக் காட்டாதீர்கள். பணிவாக இருங்கள். நீங்கள் தாழ்வான இடத்திலும் அவர்கள் ஆதிக்கமான இடத்திலும் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
அடுத்து நீங்கள் விஸிட்டேஷனுக்கு கேட்டு நீதிமன்றம் போகும் போது அவரும் ஒரு வக்கீலை வைப்பார். பேச்சுவார்த்தைக்குப் போகும் போது அவருடைய அந்த வக்கீலிடம் பேச ஒப்புக்கொள்ளாதீர்கள். நீங்களே நேரடியாக உங்கள் மனைவியிடம் பேசுங்கள். அவர் பேசத் தயாரில்லை என்றால் பொது நண்பர்கள், உறவினர்கள் மூலமாக பேசுங்கள். ஏனென்றால் வக்கீல்கள் பொதுவாக சமரசப் பேச்சுவார்த்தையை விரும்ப மாட்டார்கள். ம்யூச்சுவலில் அவர்களுக்கு லாபமில்லை. மேலும், செட்டில்மெண்டில் அவர்கள் 10% கோருவார்கள் என்பதால் நீங்கள் உங்கள் மனைவிக்கு கொடுக்கப் போகும் பெருந்தொகை வக்கீலுக்கான கட்டிங்கும் சேர்த்து அதிகமாகி விடும். 10 லட்சங்கள் 11 லட்சங்கள் ஆகும், 20 லட்சங்கள் 22 லட்சங்கள் ஆகும், அல்லது தொகையை அதிகரிக்கவில்லை எனில் உங்கள் மனைவிக்கும் குழந்தைக்கும் போக வேண்டிய பணத்தில் ஒரு பகுதியை வக்கீல் முழுங்கி விடுவார். பத்து லட்சத்தில் ஒன்பது மட்டுமே அவருக்கு கிடைக்கும். அதனால் அவர்களைத் தள்ளியே வையுங்கள்.
உங்கள் தரப்பு வக்கீலை அமர்த்தும் போதும் விஸிட்டேஷனுக்கும் ம்யூச்சுவலுக்கும் எவ்வளவு தர வேண்டும் எனக் கேட்டு மொத்தமாக ஒரு தொகையை முன்கூட்டியே பேசிக்கொள்ளுங்கள். அல்லாவிட்டால் பல முட்டுக்கட்டைகள் போடுவார்கள். கேட்கிற தொகையை நீங்கள் கொடுக்காவிடில் உங்கள் பெட்டிஷனைப் போடாமலே கிடப்பில் போட்டுவிடுவார்கள். நீங்கள் நீதிமன்றம் ஏன் இன்னும் உங்கள் மனுவை எடுக்கவில்லை என வியந்து கொண்டிருப்பீர்கள். இப்படி காலதாமதத்தை வக்கீல்கள் ஏற்படுத்துவார்கள். அதனால் கவனம்! அடிக்கடி வழக்கின் நிலை பற்றி ஏதாவது ஒரு சட்டமறிந்த நண்பரை வைத்து விசாரியுங்கள்.
நம்பிக்கையுடன் இருங்கள். உங்களால் இந்த கொடுங்கனவைக் கடந்து வர முடியும். ஒருநாள் வாழ்க்கை மாறும். மகிழ்ச்சி மலரும். இதனிடையே எந்த தவறான முடிவுகளையும் எடுக்காதீர்கள். உறுதியாக இருங்கள்.
அன்புடன்
ஆர். அபிலாஷ்
வணக்கம் அபிலாஷ்
நன்றி. மேலும் சில கேள்விகள்:
1) வழக்கு நடக்கும் போது நான் என் பெயரில் வீடு வாங்கிக்கொள்ளலாமா? அல்லது என் அம்மாவின் பெயரில் வாங்க வேண்டுமா?
2) செட்டில்மெண்டுக்கு எவ்வளவு செலவாகும்?
3) விவாகரத்துக்குப் பிறகு அடுத்த துணையை எப்படி தேர்வு செய்வது?
அன்புடன்
*****
வணக்கம் நண்பரே
1) உங்கள் பணத்தால் நீங்கள் வாங்கும் வீட்டை உங்கள் மனைவியால் கோர முடியாது. இந்தியாவில் இன்னும் அந்த சொத்தைப் பிடுங்கும் சட்டம் வரவில்லை. அதனால் கவலைப்பட வேண்டாம். ஆனால் உங்களால் பேச்சுவார்த்தை நடத்தி ம்யூச்சுவலாக முடிக்க இயலாவிடில், வழக்கு நடக்கும் பட்சத்தில் உங்கள் மனைவி ஜீவனாம்சத்தை நீதிமன்றத்தில் கோரி மனு போவார். அப்போது நீதிமன்றம் உங்கள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க சொல்லும். அப்போது இந்த வீட்டை உங்கள் சொத்தாக கருதி அதிக ஜீவனாம்சம் கொடுக்க கேட்பார்கள். அதனால் இப்போதைக்கு உங்கள் பெயரில் எந்த சொத்தையும் சேர்க்க வேண்டாம்.
2) பெரும்பாலும் உங்களால் கொடுக்க முடியும் தொகைக்கு பத்து மடங்கு அதிகமாக கோரி பேச்சுவார்த்தையின் போது அதில் இருந்து படிப்படியாக குறைத்துக்கொண்டே வருவார்கள். சிலர் உங்கள் மாத சம்பளத்தை 100-150உடன் பெருக்கி வரும் தொகையைக் கேட்பார்கள். இத்தொகையை கேட்டதும் அதிர்ச்சியாகி கோபப்படாமல் உங்களால் தர முடியவில்லை (தர மாட்டீர்கள் என்றல்ல) என்று உணர்த்தி பேரம் பேசி குறைத்து ஒரு நியாயமான தொகையில் முடிப்பது உங்கள் திறமை மற்றும் அதிர்ஷ்டம்.
3) பொருளாதார ரீதியாக உங்களை சார்ந்திருக்கும் ஒரு பெண்ணாக பொறுமையாகத் தேடி தேர்ந்தெடுங்கள். அப்பெண்ணின் பின்னணி பற்றி ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம் வழியாக விசாரியுங்கள். அவசரப்படாதீர்கள். இந்த காயங்களில் இருந்து மீண்டு வர உங்களுக்கு அவகாசம் தேவை.
ஆண்கள் பெண்களை உளவியல் ரீதியாக மிகவும் சார்ந்திருக்கிறார்கள் என அறிவேன். ஆனாலும் உடனடியாக ஒரு பெண் துணையை நாடாமல் ஒரு ஆணுரிமைப் போராளியாக மாறுங்கள்; அடுத்தவர்களின் நீதிக்காக போராடுங்கள்; உங்களைப் போல பாதிக்கப்பட்ட பிற ஆண்களுடன் உரையாடுங்கள், அவர்களுக்கு உதவுங்கள், ஆதரவளியுங்கள், சமூகமாக்கல் செய்யுங்கள். ஒரே ஒருவரையாவது உங்களால் தூக்கி விட முடிந்தால், ஆறுதல் அளித்து தற்கொலையில் இருந்து காப்பாற்ற முடிந்தால் அதை நீங்கள் அனுபவித்த துயரங்களின் பெறுமதி என கருதுங்கள்.
அன்புடன்
ஆர். அபிலாஷ்

கருத்துகள்