முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சில விதைகள் முளைத்தே ஆகும்

கவிதை, நாவலுக்கு மட்டுமல்ல கட்டுரை எழுதுவது, சமூக வலைதளங்களில் சந்தைப்படுத்துவது துவங்கி சும்மா கதை சொல்வதற்கு வரை உலகம் முழுக்க பல்கலைக்கழகங்களில் 1970களில் இருந்தே வகுப்புகள் நடந்து வருகின்றன. இவற்றில் சேர்ந்து எழுத்து முறைமையின் அடிப்படைகளை கற்றுக் கொள்கிறார்கள். விழுந்து அடிபட்டு நீண்ட காலமாக அனுபவத்தின் வழி அறிவதை சுலபத்தில் குறுகின காலத்தில் அறிகிறார்கள். இது நல்லது தானே! ரேமண்ட் கார்வர், கெர்ட் வொனெகட், பிலிப் ராத், ஜான் இர்விங், ஜெ.டி சாலிங்கர், லோர்க்கா, ஜேக் கெரவக், லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ், ஆலன் கின்ஸ்பெர்க், ஆன் சாக்ஸ்டன், சில்வியா பிளாத், ராபர்ட் லாவல், ஹா ஜின், ஸேடி ஸ்மித் ஆகியோர் அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகங்களில் MFA Creative Writing பாடங்களை கற்றுக்கொடுக்கும், கற்றுக்கொடுத்த மகத்தான படைப்பாளிகள். சமகாலத்து படைப்பாளிகள் பலரும் அங்கு படைப்பாக்க கலை ஆசிரியர்களாக பணியாற்றுகிறார்கள். நான் அண்மையில் இங்கிலாந்தை சேர்ந்த படைப்பிலக்கிய பேராசிரியர்கள் சிலரை சந்தித்த போது அங்கு இலக்கியத்தை விட எழுத்துக் கலையை கற்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளதாக தெரிவித்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்கு எழுத்துக் கலையை கற்று அதன் வழியாக பிரசுரமாகி அங்கீகாரமும் விருதுகளும் பெற்று வருகிறார்கள். இந்தியாவில் இப்போது தான் அந்த போக்கு கல்விப்புலத்தில் தோன்றி உள்ளது - நான் இதை ஆங்கிலம் வழி ஒரு தனிப்பாடமாக கடந்த ஐந்தாண்டுகளாக கற்றுக்கொடுக்கிறேன். குமரகுரு கல்லூரியிலும் இத்தகைய பாடத்தை தமிழில் அ.ராமசாமி உருவாக்கி உள்ளார். வரும் ஆண்டுகளில் பல படைப்பாளுமைகள் இப்படி பயிற்சி பெற்று வருவார்கள். 


நான் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்திருந்தால் வெளிநாட்டுக்கு சென்று MFA in Creative Writing தான் கற்றிருப்பேன். இலக்கியம் அல்ல. ஏனென்றால் இலக்கியம் வாசிப்புக்கானது, கற்பதற்கானது அல்ல என நம்புகிறேன். நான் இப்போது பிறந்திருந்தாலும் எழுத்துக் கலையை ஒரு கல்லூரிக்கு சென்றோ பயிலரங்குகள் வழியாகவோ முறையாக கற்றிருப்பேன். எனக்கு கிடைக்காதது இன்றைய இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன்.


தமிழில் எப்போதுமே புதிய முயற்சிகளுக்கு ஒரு பக்கம் பெரும் ஆதரவு இருப்பதைப் போன்றே அபத்தமான எதிர்ப்பும் இன்னொரு பக்கம் இருக்கும். இப்போது கூட 'படைப்புக் கலையை வெளியில் இருந்து ஒருவர்  கற்றுத் தர முடியாது, அது தானே வர வேண்டும், அல்லது அதை புத்தகங்களை வாசித்து கற்க வேண்டும்' என கூறி சிலர் இம்முயற்சிகளை எதிர்க்கிறார்கள். அவர்களுடையது ஒரு தவறான பார்வையாகும்.


 வாசிப்பின் மூலம் நீங்கள் எழுத்தைக் கற்க முடியாது. வாசிப்பின் மூலம் நீங்கள் ஒரு வாசகராகவே முடியும். எழுத்தாளராக எழுத்துக் கலையை கற்க வேண்டும். எழுதி எழுதி தானே பல பிழைகள் செய்து அதில் இருந்து கற்க வேண்டும். அதற்கு சில நேரம் பல ஆண்டுகள் ஆகலாம் அல்லது நீங்கள் சோர்ந்து வெளியேறவும் செய்யலாம். ஒரு எழுத்தாளனாக அனுபவம் உதவும் என்றாலும் அடிப்படைகளை சொல்லித் தரும் கல்வியே ஆரம்ப கட்ட தடைகளை கடக்கவும், விரைவில் எழுதி நிலைப்பெறவும் உதவும். ஒவ்வொரு ஆண்டும் இங்கு பத்து நல்ல புதிய எழுத்தாளர்கள் தோன்றுகிறார்கள் என்றால் முறையான பயிற்சி இருந்தால் அந்த பத்து ஐம்பதோ நூறோ ஆகும். அது தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தும். உலக அளவில் இலக்கியத்தில் என்ன நடக்கிறதென்றே தெரியாத எழுத்தாளர்கள் மட்டுமே இதையெல்லாம் எதிர்ப்பார்கள்.

  

இவர்கள் எதிர்த்தாலும் இல்லாவிடினும் சில விதைகள் முளைத்தே ஆகும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...