பத்ரி சேஷாத்ரி என் நெருக்கமான நண்பர் அல்லவெனினும் எனக்குப் பிரியமான பரிச்சயங்களில் ஒருவர். ஒரு பதிப்பாளராகவும், கிரிக் இன்போ இணையதளத்தின் மூலவர்களில் ஒருவர் எனும் அளவிலும் அவர் மீது எனக்கு மரியாதையுண்டு. அவர் இன்னும் பெரிய உயரங்களுக்கு சென்றிருக்க வேண்டியவர். கிழக்குப் பதிப்பகம் ஒரு வித்தியாசமான பதிப்பகம். வெகுஜன வாசிப்புக்கு குறைந்த விலையில் பல நல்ல அறிமுக நூல்களுக்கு எடுத்துச் சென்றது, நல்ல லாபமும் பார்த்தது. இன்று யுடியூபில் சேனல்கள் செய்கிற அதே காரியத்தை (அறிமுகம்-சுவாரஸ்யம்-பரபரப்பு) அவர் ரெண்டாயிரத்தில் பதிப்பில் செய்து பார்த்தார். முதன்முதலாக காலக்கெடு விதித்து சம்பளம் கொடுத்து எழுத்தாளர்களைக் கொண்டு 150-180 பக்க அளவில் ஒரு தொழிற்சாலையைப் போல புத்தகங்களை உருவாக்கினார். நேர்த்தியான எளிமையான அறிமுக நூல்கள். என்.ஹெச்.எம் செயலியை அறிமுகப்படுத்தினார். என்னால் துல்லியமாக சொல்ல முடியவில்லை எனினும் 2010க்குப் பிறகு பதிப்பாளராக அவரது வீழ்ச்சி மெல்ல துவங்கியது என நினைக்கிறேன். வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைப் பெற்று இந்திய மொழிகளில் அவர் ஏற்கனவே தமிழில் வெற்றிகரமாக செய்த முயற்சிகளை செய்...