முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு தீர்வற்ற தீர்வு

 நம் மனதை மிகவும் அழுத்துகிற துன்பங்களை மறைப்பதோ மனதின் அடியாழத்தில் மேலும் அழுத்தி புதைப்பதோ தவறானது என அறிவேன். ஆனால் நம் கட்டுப்பாட்டில் இல்லாத பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் வேறுவழியிருப்பதில்லை. என் வாழ்வில் அப்படி நேர்ந்த ஒரே துயரம் என் மகனைப் பிரிந்ததுதான். எதாவது ஒரு சிறிய நிகழ்வோ தகவலோ காட்சியோ என் நினைவுகளைத் தூண்டிவிட்டால் நான் கட்டுப்படுத்த இயலாத துயர மனநிலைக்குப் போய்விடுவேன். ஒரு எழுத்தாளனாக நான் நாவலை எழுதும் காலங்களில் குறிப்பாக ஒரு கொதிநிலையில் இருப்பேன். நியாயமாக அது தான் என்னை தனிப்பட்ட துக்கங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும், ஆனால் முரணாக அதுவே தான் என்னை சுலபத்தில் உணர்வுரீதியாக தடுமாறக் கூடியவனாகவும் மாற்றுகிறது. அதனாலே நான் கடந்த சில மாதங்களாக இவ்வகையான பிரச்சினைகள் பற்றி முகநூலிலோ பிளாகிலோ எழுதுவதில்லை. தற்செயலாக எழுதினாலும் அழித்துவிடுகிறேன்.


 இன்றிலிருந்து 10 நாட்களுக்கு முன் என் மகனின் பிறந்தநாள் வந்தது. அன்று அதிர்ஷ்டவசமாக நான் தில்லியில் பயணத்தில் இருந்ததால் அதன் நினைவு என் மனதை உருக்குலைப்பதில் இருந்து தப்பித்துவிட்டேன். ஆனால் பயணம் முடிந்து திரும்பும் போது நான் மனதுக்குள் அழுதுகொண்டே தான் இருந்தேன். ஆனால் அது என்னை அன்றிலிருந்து ஒரு கொலைவாளைப் போல என்னை பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு என் மகனைப் பற்றி வந்த சேதி இது. வேறெதையோ தேடும் போது தற்செயலாக இது என் கையில் சிக்கியது. உடனே என் மனம் உடைந்துவிட்டது: 


His looks don't give away his condition though. He turns 3.5 years tomorrow. No more a toddler. Talking like there is no end to the world. Top performer at preschool. Adored to bits by teachers.


என் மகன் இடைவிடாமல் பேசுகிறான். ஆனால் அதைக் கேட்க வேண்டிய நான் அங்கு இல்லை. அவனுடைய ஒரு சொல்லைக் கூட நான் இத்தனை ஆண்டுகளாக கேட்கவில்லை. அவனுடைய பள்ளி ஆசிரியர்கள், அண்டை வீட்டார், அவனுடன் இருப்போர் கேட்கிறார்கள், ரோட்டில் போகிறவர்கள் கேட்கிறார்கள், ஆனால் நான் கேட்கவில்லை. அவன் நன்றாகப் படிக்கிறான். அனைவருக்கும் பிரியமானவனாக இருக்கிறான். ஆனால் அதை நான் ஒருமுறை கூட பார்த்ததில்லை.


வீட்டிலிருக்கையில் ஏதாவது ஒரு உரையாடல் என்னை அந்நினைவை நோக்கி நகர்த்திவிடுகிறது. உடனே புலம்ப ஆரம்பித்துவிடுவேன். வழக்கம் போல யாரும் என்னைப் புரிந்துகொள்வதில்லை என்பதைத் தான். இப்போது எனக்கு ரத்த உறவாகவோ நெருங்கிய நட்பாகவோ இருப்பவர்களில் பெண்களால் எனக்கு நடந்த அநீதியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதைப் பற்றி புலம்புகிறேன். என்னிடம் இருந்து என் மகனைப் பிரித்தது அநியாயமானது என்பதை மட்டும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அது ஏன் என்பது மட்டும் எனக்கும் புரியவில்லை. என்னை விட சிறந்த தகப்பனை நீங்கள் காண முடியாது என்பேன். ஆனால் நான் ஏன் அவனைப் பார்க்கக் கூடாது என்பதை சொல்லாமலே அதெல்லாம் அப்படித்தான், விட்டுவிடு என்பதாக பேசுகிறார்கள், அல்லது பெண்கள் அப்படித்தான், குழந்தையை தன்னுடன் வைத்துதான் அவர்கள் ஆறுதல் பெற முடியும் என்கிறார்கள், அல்லது நான் இதைப் பற்றி பேச்செடுத்தாலே அமைதி கொள்கிறார்கள். ‘ஒரே ஒருமுறை எனக்கு நடந்தது அநீதி என ஒப்புக்கொள்ளுங்கள், ஆறுதல் அடைந்துவிடுவேன்’ என்கிறேன்.


 இது ஒரு பைத்தியக்காரத்தனம் எனப் புரிந்து கொள்கிறேன், ஆனால் என் துயரத்தை யாரும் பகிர்ந்து கொள்வதில்லை என்பது என்னை மிக அதிகமாக அழிக்கிறது. இது நம் சமூகத்தின் பிரச்சினையா அல்லது உலகம் முழுக்க இப்படித்தானா என்று புரியவில்லை. ஒருவர் ஆணாக இருந்தாலே அவரை ‘இருட்டு அறையில்’ இட்டுப் பூட்டிவிடுவார்களோ என்பது புரியவில்லை. ஏனென்றால் ஆண் நண்பர்களிடம் நான் இப்பிரச்சினையைப் பேசினால் அவர்கள் உடனடியாக என் மனநிலையைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் அளவுக்கு சகஹிருதயர்களாக எனக்கு நெருக்கமான பெண்கள் இருப்பதில்லை. உதாரணத்திற்கு நான் என் அம்மாவிடம் இதைச் சொன்னால் அவர் மௌனியாகி விடுகிறார். ஒரு சொல் கூட ஆறுதலுக்கு சொல்வதில்லை. எனில் அவர் மறைமுகமாக எனக்கு நடக்கும் அநியாயத்தை, நான் அனுபவிக்கும் துன்பத்தை ஆதரிக்கிறாரா என யோசிக்கிறேன். ஒருவேளை நான் ஒரு ஆணாகப் பிறக்காமல் பெண்ணாக இருந்து இதே துன்பம் எனக்கு நடந்திருந்தால் இவர்கள் எல்லாரும் எனக்கு ஆறுதலாக இருந்திருப்பார்களோ என யோசிக்கிறேன். ஒருவேளை நான் பெரும்பணக்காரனாக இருந்து என்னை சார்ந்திருக்கும் நிலையில் இருந்திருந்தால் இவர்கள் எனக்கு ஆறுதலாக இருந்திருப்பார்களோ என யோசிக்கிறேன். எனக்கு உண்மையிலே புரியவில்லை. சரி நீங்கள் தான் என்னுடன் இல்லையே, என்னை விட்டுப் போய் விடுங்கள் என்று சொல்லவும் முடியவில்லை. ‘ஆம், உனக்கு நடந்தது ஒரு தவறுதான்’ என்று மட்டும் சொன்னால் போதும், என் மனம் ஆறிவிடும் என்று தோன்றுகிறது.


இப்போது யோசிக்கையில் பிரச்சினை அவர்கள் அல்லர் - எனக்கு நடந்தது ஒரு தற்செயலான அநீதி, அது இந்த உலகம் முழுக்க நடப்பதே, அதற்கு யாரும் எப்போதும் பொறுப்பேற்க மாட்டார்கள், நான் அவர்கள் மூலம் யாராவது இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள விரும்புகிறேன் எனப் புரிகிறது. ஆனால் இதை என் அறிவு மனம் ஏற்றுக்கொள்வதைப் போல என் உணர்வுமனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இப்படி இது ஒரு தீர்வற்ற தீர்வாகி விட்டது.


பி.கு: எனக்குள்ள ஒரே தீர்வு என் துயரத்தை பொதுவெளியில் வைப்பதுதான், உணர்வளவில் கடந்து போவதுதான். ஒரு எழுத்தாளனாக என் மனம் அப்படித்தான் செயல்படுகிறது - எழுதி முடித்ததும் அதை தற்காலிகமாக மறந்துவிடுவேன். புனைவாக மாற்றினால் அனேகமாக முழுமையாக கடந்துவிடுவேன். அதனால் தான் இங்கு எழுதுகிறேன். இம்முறையும் இது எனக்கு உதவும் என நம்புகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...