முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீழ்ச்சியின் காலத்து இசையும் சினிமாவும்






நான் சோர்வுறும் போது கைகொடுத்து தூக்கி விடும் இசை, என்னை நெகிழ வைக்கும் இசை, நான் தன்னம்பிக்கைக்காக நாடும் இசை 50, 60களின் இசைதான். குறிப்பாக எம்.ஜி.ஆர் பாடல்கள், அடுத்து சிவாஜி பாடல்கள். அதே போல என்னைப் புல்லரிக்க வைப்பதும் இவர்களும், அழத் தூண்டுவதும் இவர்களுடைய படங்களே. நான் பார்த்து அழுதுள்ள ஒரே படம் "பாச மலர்". இப்போது பார்த்தாலும் என்னால் அழுகையை அடக்க முடியாது. ஆனால் "கிழக்குச் சீமையிலே" பார்க்க வேடிக்கையாக இருக்கும். ராஜ்கிரணின், சேரனின் படங்கள் எனக்குப் பிடிக்கும் என்றாலும் அவை என் இதயத்தைத் தொடுவதில்லை - ஏனெனில் அவற்றில் ஒரு தாழ்வுணர்வு உள்ளது. நீங்கள் "பாச மலரின்" அவலத்தில் ஒரு கண்ணியத்தை, உறுதிப்பாட்டை, நம்பிக்கையை பார்க்க முடியும். 
இத்தனைக்கும் நான் 90களின் குழந்தை. 80களில் இருந்து துவங்கின படங்களைப் பார்த்து, பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன். மிகவும் ரசிப்பவன். ராஜா, ரஹ்மான், தேவா எல்லாம் இப்போதும் பிடிக்கும், ஆனால் என் ஆன்மாவை அவர்கள் தொடுவதில்லை. இது ஏன் என ரொம்ப நாட்களாக எனக்கே புரியவில்லை. அண்மையில் தான் இதன் காரணம் விளங்கியது - எண்பதுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மெல்லுணர்வுகளின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. எந்த தீவிர நம்பிக்கைகள், சமூகப்பிடிப்பும் இல்லாத ஒருவித மென்மையான மாந்தர்களே கதை மாந்தர்கள் ஆயினர். இவனுக்கு / இவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை, என் குடும்பத்தில் இருந்து யாரையோ தொலைத்துவிட்டேன், வேலை கிடைக்கவில்லை, சின்னச்சின்ன கவலைகள், சின்னச்சின்ன ஆசைகள், சின்னச்சின்ன கசப்புகள் இவற்றை சுற்றியே தமிழ் சுனிமா சுழன்றது. ஒரு கட்டத்தில் தனிமனிதனின் கைவிடப்படல், தனிமை முக்கியமான பேசுபொருளாகிறது, அதற்கு கற்பனாதாவதக் காதல் ஒரு தீர்வாகியது. இதற்கு அடுத்த கட்டத்தில் இன்று நீதிக்கான தவத்தை ஒருவித self-victimizing ஆக மாற்றிவிட்டோம். கடந்த 50 ஆண்டுகளில் சினிமாவும், அதன் இசையும் எவ்வளவுதான் சிறப்பாக, தரமாக இருந்தாலும் அவை தம் பேசுபொருளைப் பொறுத்து உட்சுருங்கிக் கொண்டே வருகின்றன:

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்ததைப் போன்ற "நான் இந்த ஊருக்காக, உலகத்துக்காக எழுந்து நிற்கிறேன், போராடுகிறேன், தியாகம் செய்கிறேன், என்னால் எதுவும் முடியும்" எனும் கருதுகோள்கள் இன்று இல்லை. என்னதான் நான் அணுவணுவாக என் காலத்து சினிமாவையும், இசையையும் ரசித்தாலும் என்னால் ஒன்றிக் கரைய முடிவதில்லை. எனக்கு மிகவும் பிடித்த ரஜினியும் மோகன்லாலும் கூட ஒருவித தொட்டால் உடைந்து போகும் மனிதர்களாகவே படங்களில் சித்தரிக்கப்படுகிறார்கள். ஒருவித முட்டை ஓடுகளைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் ஒரு உருக்கு மனிதர். அவ்வாறே அவர் தன்னை முன்வைத்தார். குடும்பக் கதைகளுக்குள்ளும் சிவாஜி நெகிழ்வானவராக இருந்தாலும் உயர்ந்த விழுமியங்களைக் கொண்டிருந்தார். எனக்கு அவரை நினைத்ததும் கறுப்புவெள்ளையில் அரையிருளில் low angleஇல் அவரைக் காட்டும் பிம்பங்களே நினைவுக்கு வரும். 

சினிமா தவிர்த்த இசையில் என்னதான் எனக்கு கஸலும் கவாலியும் பிடித்தாலும், சாஸ்திரிய சங்கீதத்தின் பிரம்மாண்டமான சிக்கலான அமைப்பின் மீது மயக்கம் உண்டென்றாலும் நான் தனிமையில் கேட்க விரும்பும் பிளே லிஸ்டில் எப்போதும் எம்.ஜி.ஆர் தத்துவப் பாடல்களும் செவ்வியல் மற்றும் சமகால ஹார்ட் ராக், மெட்டாலிக்கா பாடல்களுமே இருக்கும். ராஜாவை எனக்கு மிகவும் பிடிக்குமென்றாலும் அவர் என்னை பலவீனப்படுத்துகிறார். ஒருநாள் இரவில் ராஜா இசையில் ராஜ்கிரண் படப் பாடல்களைக் கேட்டு நான் கண்ணீர் விட்டு மிகவும் சோர்ந்துவிட்டேன். எனக்கு பலவீனமாக இருக்கப் பிடிக்கவில்லை. "விக்ரம் விக்ரம்" மாதிரியான அற்புதமான தன்னம்பிக்கைப் பாடல்கள் பிடிக்கும் என்றாலும் அதில் விக்ரம் மிகவும் தனிமையாக இருப்பதாகத் தோன்றுகிறது. "பாவம் விக்ரம் தனக்குத் தானே பேசிக்கொள்கிறான்" என்று நினைத்துக் கொள்வேன். நான் எழுத ஆரம்பிக்கும் முன் தவறாமல் கேட்பது "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு", "ஏன் என்ற கேள்வி" போன்ற பாடல்களே. 

50-70களின் காதல் பாடல்களும் இன்னும் தன்னம்பிக்கை மிக்கவையாகவும், காமத்தை வெளிப்படையாக கோருபவையாகவும், தனிமையற்றயவையாகவும் தோன்றுகின்றன. எனக்குப் பிடித்த எதிர்பாலினத்தவருக்கு என்னையும் பிடிக்கும் எனும் நம்பிக்கையும் அல்லாவிடில் அதை கண்ணியமாக எதிர்கொள்ளலாம் எனும் உறுதிப்பாடும் இருந்தது. ஏதோ ஒரு கட்டத்தில் நாம் தன்னம்பிக்கையற்ற, பயத்தாலும் தனிமையாலும் பீடிக்கப்பட்டவர்களாகவும் மாறிவிட்டோம் என நினைக்கிறேன். "லவ் டுடே" படத்தில் இதைச் சரியாக பகடி செய்திருப்பார்கள் - ஒரு கையில் விஷக்குப்பியுடன் ஒருவன் ஹீரோயினிடம் வந்து 'என்னை லவ் பண்றியா இல்லை செத்துடவா?' என மிரட்டுவான். இக்காட்சி எனக்கு நான் பார்த்து வந்துள்ள 80கள் துவங்கி இதுவரையிலான காதல் படங்களை நினைவுபடுத்தியது. ஏன் இவ்வளவு நோய்மையாக காதல் மாறியிருக்கிறது? ஏன் இவ்வளவு அவநம்பிக்கை, அச்சம், தாழ்வுணர்வு? ஏன் இந்த கால காதலர்கள் ஒரு தனிமையில் இருக்கிறார்கள்? 50-70கள் வரையிலான படங்களில் நாம் பார்க்கும் காதலர்களும் சமூகம் தம்முடன் உண்டு எனும் நம்பிக்கையும் துணிச்சலும் இருக்கும். இவர்களோ எலிகளைப் போல ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இதை நான் எதார்த்தத்தின் வெளிப்பாடாகப் பார்க்கவில்லை. மாறாக, காதல், தனிமனித தனிமை எல்லாம் இங்கு சமூகம் தன் உபமனதில் உணர்ந்த தாழ்வுணர்வின் உணர்வுகள் தாம் என நினைக்கிறேன். இதை எப்படி இவ்வளவு உறுதியாக் சொல்கிறேன் என்றால் இதே காலகட்டத்தில் வந்த ஹாலிவுட் எதார்த்த டிராமா படங்களிலும் இந்த தாழ்வுணர்வை நாம் காணமுடியும். அவர்களை இதை வன்மேற்கு (வெஸ்டர்ன்), இத்தாலிய மாபியா (காட்பாதர் வகை), சூப்பர் மேன் வகைப் படங்களைக் கொண்டு ஈடுகட்டினார்கள் என்றால் நாமோ நெகிழ்ச்சி, கற்பனாவாதம், கொண்டாட்டம் என இந்த தாழ்வுணர்ச்சியை மறைக்கப் பார்க்கிறோம். 

எது எப்படியோ, சினிமா தவிர்த்து தத்துவத்திலும் ஹார்ட் ராக், மெட்டாலிக்கா தன்மை கொண்ட ஜெர்மானிய தத்துவமே என்னை அதிகமாக உணர்ச்சிவசப்படவும் ஒன்றவும் வைக்கிறது. மற்ற தத்துவங்களை டெக்னிக்கலாக மட்டுமே வாசிக்க முடிகிறது. 

40கள் துவங்கி 70கள் வரையிலான சினிமா வரலாற்றையும் சமூக வரலாற்றையும் படிக்கையில் நான் இன்றைவிட அன்று இன்னும் மகிழ்ச்சியாக் இருந்திருப்பேன் எனத் தோன்றுகிறது. 1920-30களில் பிறந்திருந்திருக்கலாம் என அடிக்கடி நினைத்துக்கொள்வேன். அந்த கால விழுமியங்கள், வரலாற்றின் புயல் வீசிய தருணங்கள், அந்த காலத்து அரசியல், சித்தாந்தங்கள் வீழ்ந்து மறையும் இறுதிக்கட்டம், அந்த காலத்து இசை, சினிமா.... நான் பிறந்து வாழும் காலம் குறித்து ஒரு ஆழமான அதிருப்தி எனக்கு உள்ளது.

இதை ஒரு அந்தரங்கமானத் தேர்வு என்றே சொல்வேன். சினிமா, இசை, தத்துவம் மீதான என் தீர்ப்பு அல்ல இது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...